Language Selection

புதிய ஜனநாயகம் 2007
PJ_2007 _12.jpg

உலகத் தமிழர் பேரமைப்பு எனும் "தமிழர்' அமைப்பு, கடந்த அக்டோபர் 28ஆம் தேதியன்று தமிழர் தொழில் வணிகச் சிறப்பு மாநாட்டை திருப்பூரில் நடத்தியது. இந்தப் பேரமைப்பின் தலைவரான ""மாவீரன்'' பழ.நெடுமாறன் இம்மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார்.

 

இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். அரைடவுசர் அண்ணாச்சி பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு ""உலகப் பெருந்தமிழர்'' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் பார்ப்பனிய நச்சுக் கருத்துக்களைக் கொண்ட ஒரு பிரசுரம், மகாலிங்கம் வழங்கிய ஏற்புரை என்ற பெயரில் இலவசமாக வழங்கப்பட்டது.

 

அந்தப் பிரசுரத்தில், "தமிழ் ஆய்வு என்ற கட்டை வண்டியில் ஏறிக் கொண்டு போனால், 800 பி.சி. (கி.மு.) வரைதான் போகமுடியும். சமஸ்கிருத ஆய்வு என்ற காரில் ஏறிக் கொண்டு போனால் 8000 பி.சி. (கி.மு.) வரை போக முடியும்'' என்றும், ""தமிழர்களில் ஒரு பிரிவினர் வடக்கிலிருந்து தெற்கே வந்தார்கள்'' என்றும் ""நாம் வாழும் காலம் திரேதாயுகம்'' என்றும் அதற்கு பார்ப்பன சப்தரிஷி பஞ்சாங்கத்திலிருந்து கணக்குப் போட்டுக் காட்டியும், பார்ப்பன புரோகிதர்கள் சங்கல்பம் செய்யும்போது சொல்கிற மந்திரத்தை ஆதாரம் காட்டியும் எழுதப்பட்டுள்ளது. தமிழா நீ வந்தேறி; உன் மொழி, வேசி மொழி; சமஸ்கிருதமே உயர்ந்த மொழி இதுதான் அந்தப் பிரசுரத்தின் சாரம். இதையே பொள்ளாச்சி மகாலிங்கம் தனது ஏற்புரையாகப் பேசியுள்ளார்.

 

கோவையில் இந்து மதவெறி எனும் நச்சுமரம் வளர உரமிட்டவர்தான் இந்த ""அருட்செல்வர்'' மகாலிங்கம். ""ஓம் சக்தி'' எனும் இந்து பக்திஆன்மீகப் பத்திரிகையின் நிறுவனரும் புரவலருமாக இருந்து ஆர்.எஸ்.எஸ்.க்கு சேவை செய்து வருபவர். ""நமது வேத மந்திரங்கள், உபநிடதங்கள் சமஸ்கிருதத்தில் தான் உள்ளன. ஆகவே சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல; அது நமது கலாச்சாரத்தின் சின்னம்'' என்று அப்பத்திரிகையில் தொடர்ந்து எழுதியவர். பார்ப்பனியத்தின் மீதும் வருணாசிரமத்தின் மீதும் மாறாத நம்பிக்கை கொண்டவர். பொள்ளாச்சியில் அவருடைய கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோயிலில் வழக்கமாக இருந்து வந்த "சூத்திர' பூசாரிகளை மாற்றிவிட்டு பார்ப்பன பூசாரிகளை அமர்த்தியவர். பொள்ளாச்சி வட்டாரத்தில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளுக்கு காக்கி அரைடவுசருடன் சென்று நிதியுதவியும் செய்து வருபவர். எல்லாவற்றுக்கும் மேலாக, கோக்பெப்சி ஆகிய அமெரிக்க மூத்திரங்களுக்கு கோவை, ஈரோடு மாவட்ட ஏஜெண்டாகச் செயல்படுபவர். கவுண்டர் சாதிக்காரன் கரும்பு விவசாயியாக இருந்தாலும், கரும்புக்கு அடிமாட்டு விலைபேசி பட்டை நாமம் போடும் சர்க்கரை ஆலை முதலாளிதான், இந்த ""சாதிப்பற்றில்லாத அருட்செல்வர்'' மகாலிங்கம்.

 

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.இன் பாதுகாவலரும் சமஸ்கிருதமே நமது கலாச்சார சின்னம் என்று முழங்கிக் கொண்டு தமிழை இழிவுபடுத்தியவருமான இந்த பெருமுதலாளிக்கு உலகப் பெருந்தமிழர் விருது! இந்த வெட்கக்கேட்டிற்கு ஒரு மாநாடு! அதற்கு ஒரு வரவேற்புக் குழு. அந்த வரவேற்புக் குழுவின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதில் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, சுவரொட்டி சுவரெழுத்து விளம்பர வேலைகளைச் செய்து "புரட்சிப் பணி'யாற்றியுள்ளனர். இம்மாநாட்டில் தமிழால் வயிறு வளர்க்கும் பல அறிஞர்களும், அறிஞர் இயக்கத்தினரும் உலகப் பெருந்தமிழர் விருது பெற்ற பொள்ளாச்சி மகாலிங்கத்தை கல்வித் தந்தை, வள்ளல், தமிழ் ஆய்வாளர், தொழிற்துறை முன்னோடி என்றெல்லாம் துதிபாடினரே தவிர, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றோ, தமிழை இழிவுபடுத்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பவர் என்றோ குறிப்பிடவில்லை.

 

இப்படி எல்லோரும் மகாலிங்கத்துக்கு முதுகு சொறிந்து கொண்டிருந்த நிலையில், ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த நீலவேந்தன், ""சேரித் தமிழன் இன்னமும் அவலத்தில் உழலும்போது, எந்தத் தமிழனின் தொழில்வணிகச் சிறப்பைப் பற்றிப் பேச முடியும்'' என்று கேட்டு, சாதி ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், ""இந்த மேடையிலேயே தமிழை இழிவுபடுத்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்குவது தகுதியுடையதல்ல'' என்றும் ""பொள்ளாச்சியில் அரசுக் கல்லூரி வந்தால் தனது கல்வி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அதைத் தடுத்து, சேரி இளைஞர்களோடு சேர்த்து தன் சாதி ஏழை இளைஞர்களுக்கும் துரோகமிழைத்துக் கொண்டிருப்பவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது தருவதை அங்கீகரிக்க முடியாது'' என்றும் குறிப்பிட்டு, மகாலிங்கத்தின் வேட்டியை விலக்கி அவரது காக்கி அரைடவுசரை அடையாளம் காட்டினார். பெரியார் தி.க.வின் கோவை இராமகிருஷ்ணனும், மற்றவர்கள் பேசத் துணியாத நீலவேந்தனின் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ளார்.

 

உடனே "மாவீரன்' நெடுமாறனுக்கு "தமிழ் வீரம்' பொங்கியெழுந்துவிட்டது. ""இது தனிப்பட்ட அரசியல் மேடை அல்ல; உலகத் தமிழர்களுக்கான பொது மேடை. இங்கு அனைவரும் பங்கேற்பார்கள். கருத்து வேறுபாடு உள்ளவர்கள் வராமலேயே இருந்திருக்கலாம். அந்தத் தம்பி (நீலவேந்தன்) பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பண்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். நான் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த நண்பர் அதியமானைத்தான் பேச அழைத்திருந்தேன். அவர் அனுப்பியதாகக் கூறிக் கொண்டு யாரோ வந்து என்னென்னவோ பேசியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்துக்களோடு இனி யாரும் இங்கே வரவேண்டியதில்லை'' என்று எச்சரித்து, காக்கி அரைடவுசர் வெளியே தெரியாமல் மகாலிங்கத்துக்கு வேட்டியைச் சரி செய்து கட்டிவிட்டார். நெடுமாறன் இப்படிப் பேசி முடித்தவுடன், ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தோரும், கோவை இராமகிருஷ்ணனோடு வந்த பெரியார் தி.க.வினரும் அரங்கை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் பின்னாலேயே வந்த கவுண்டர் சாதிவெறியர்கள் சிலர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, ""வள்ளல் மகாலிங்கத்தைப் பற்றி எப்படித் தவறாகப் பேசலாம்?'' என்று கேட்டு வாக்குவாதம் செய்ததோடு, கைகலப்பிலும் இறங்கியுள்ளனர்.

 

தமிழை இழிவுபடுத்தி சமஸ்கிருதம் உயர்வானது என்று பகிரங்கமாக மேடையிலேயே மகாலிங்கம் அறிவித்துள்ளாரே, அதுதான் நெடுமாறனைத் தலைவராகக் கொண்டுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் நிலைப்பாடா? அவரவர் கருத்துக்களை அவரவர் மேடையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றால், மேடைக்கேற்ப சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்வதுதான் நெடுமாறன் கற்றுத் தரும் புது அரசியலா? ஆர்.எஸ்.எஸ். ""ஷாகா''வுக்கு காக்கி அரைடவுசருடன் செல்லும் இந்துவெறியர்களின் புரவலருக்கு, உலகப் பெருந்தமிழர் விருது வழங்குவதை விமர்சிக்கக் கூடாதா?

 

""இப்படி உள்விவகாரங்களையெல்லாம் நோண்டக் கூடாது. தமிழனா என்று பார்! அப்படியானால் இது நம்ம ஆளு!'' இதுதான் நெடுமாறனின் புதிய சித்தாந்தம். நெடுமாறன் மட்டுமல்ல; பல வண்ணத் தமிழினவாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலையும் பிழைப்புவாத வாழ்வியலையும் இணைத்து ஒரு வீரிய ஒட்டுரக சித்தாந்தத்தை உருவாக்கி வளர்த்து வருகிறார்கள். வர்க்கக் கண்ணோட்ட÷மா, சாதிஎதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்புக் கண்ணோட்டமோ இன்றி, ""தமிழன் சூத்திரன்'' என்ற பெயரால் எல்லாவகையான அயோக்கியர்களையும் துரோகிகளையும் ஆதரித்து நிற்பதும், ""தமிழன்தமிழினம்'' என்ற கூப்பாடு போட்டு இவற்றை மூடிமறைத்து நியாயம் கற்பிப்பதும் இப்பிழைப்புவாதிகளின் கைவந்த கலையாகி விட்டது. அதன் அடுத்த பரிணாமம்தான் ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கு விருது!


— பு.ஜ. செய்தியாளர்கள், திருப்பூர்.