Language Selection

புதிய ஜனநாயகம் 2007
PJ_2007 _12.jpg

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரான பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலை உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அதிகாலையில் கிளிநொச்சி பகுதியில் சிங்கள இனவெறி இராணுவ விமானங்களின் குண்டுவீச்சுத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் மற்றும் 5 புலிகள் இயக்கப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

2002ஆம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நடத்தப்பட்ட அனைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டு, தமிழீழத்திலிருந்து பேச்சுவார்த்தைக் குழுவுக்குத் தலைமையேற்றவர்தான் தமிழ்ச்செல்வன். புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆண்டன் பாலசிங்கம் உடல்நலமில்லாத காலத்திலிருந்தே இலங்கை அரசுடனும் அனைத்துலக அமைப்புகளுடனும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த அவர், பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராகி, அதிகாரப் படிநிலையில் இரண்டாமிடத்துக்கு வந்தார்.

 

நார்வே நாட்டுப் பிரதிநிதிகளை நடுவராகக் கொண்டு இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தவரையே இலங்கை இராணுவம் குண்டு வீசிக் கொன்றிருப்பதன் மூலம் சமாதானத்திற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் இலங்கை அரசு குழிதோண்டிப் புதைத்து விட்டது. ""அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்து அமைதிப் புறாவாக இருந்த தமிழ்ச் செல்வனை கோரமாகக் கொன்றதிலிருந்து இலங்கை அரசு போரைத்தான் விரும்புகிறது. அதற்கு நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம்'' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்திருக்கிறார்.

 

ஈழத் தமிழர்களை மட்டுமின்றி, உலகின் பல நாட்டு அரசியல் தலைவர்களையும் தமிழ்ச்செல்வன் மரணம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைவர் ராபர்ட், தமிழ்ச்செல்வன் படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளார். நார்வே, கனடா நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் நடத்திய வீரவணக்கக் கூட்டங்களில் அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து அஞ்சலி செலுத்தியதோடு, சிங்கள இனவெறி பாசிச அரசையும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

 

தமிழகத்தில் பெரியார் தி.க. உள்ளிட்டு தமிழீழ ஆதராவாளர்களும் விடுதலைச் சிறுத்தைகளும் தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கக் கூட்டங்களை நடத்தியதோடு, சிங்கள பேரினவாத அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியும் ""செல்வா நீ எங்கு சென்றாய்'' என்ற தலைப்பில் இரங்கல் கவிதை எழுதி அரசு செய்திக் குறிப்பாக வெளியிட்டார்.

 

உடனே பாசிச ஜெயா, ""இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்கு ஒரு மாநில முதல்வர் கவிதாஞ்சலி எழுதியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கருணாநிதி அரசைக் கலைக்க வேண்டும்'' என்று அறிக்கை விட்டார். அதைத் தொடர்ந்து துக்ளக் சோவும் பார்ப்பன பா.ஜ.க. கும்பலும் இதற்கு ஒத்தூதின.

""ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களின் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இறங்கற்பா பாடுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. தமிழ்ச்செல்வன் அமைதித் தூதுவராக இருந்தவர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று சீறினார் தமிழக காங்கிரசுத் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். காங்கிரசு தலைவர் கிருஷ்ணசாமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ""தேசத்துரோகி கருணாநிதி முதல்வராக நீடிப்பதை மத்திய அரசு கண்டு கொள்ளா விட்டால் உச்சநீதி மன்றம் செல்வோம்'' என்று சாமியாடினார் பாசிச ஜெயா. ""இலங்கையில் கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால் தான் இரங்கல் தெரிவித்தேன்'' என்று பதிலளித்தார் கருணாநிதி. ஒண்ட வந்த பிடாரி ஜெயாவோ, ""நானும் தமிழச்சிதான்'' என்று லாவணி பாடினார்.


இது வெறும் லாவணி அல்ல; இந்த விவகாரத்தை வைத்து தி.மு.க. ஆட்சியைக் காவு கேட்பதற்கான வாய்ப்பாக கருதியே பாசிச ஜெயா கும்பல் பெருங்கூச்சல் போடுகிறது. ஈழ விடுதலையை ஆதரிப்பதும் சிங்கள இனவெறி பாசிச அரசை எதிர்ப்பதும் கூட தேச விரோதச் செயலாகச் சித்தரித்து, பிரிவினைவாதபயங்கரவாத பீதியூட்டி 90களில் நடந்தது போன்ற ஒரு பாசிச ஆட்சியை மீண்டும் நிறுவுவதே பார்ப்பன ஜெயா கும்பலின் நோக்கமாக உள்ளது. இதற்கு பார்ப்பன பத்திரிக்கைகள் தூபம் போட, காங்கிரசு கயவாளிகள் பேயாட்டம் போடத் தொடங்கிவிட்டனர்.

 

""இன்று தமிழ்ச்செல்வன்; நாளை பிரபாகரன்'' என்று முழக்க தட்டியை வைத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரசுத் தலைவரான கதிர்வேல், தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு வக்கிரமாக இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியுள்ளார். இன்னும் பல இடங்களில் காங்கிரசு கழிசடைகள் தமக்குள் இனிப்புகள் வழங்கி குதூகலித்துள்ளன. கடந்த நவம்பர் 24 அன்று கோபியில் நடந்த காங்கிரசு ஊழியர் கூட்டத்தில் பேசிய இளங்கோவன், தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் செலுத்திய அமைப்புகளையும் இரங்கற்பா எழுதிய கருணாநிதியையும் கடுமையையாக சாடி ஊழியர்களை உசுப்பேற்றியுள்ளார்.

 

பின்னர், காரில் ஏறிச்சென்ற காங்கிரசு குண்டர்படை, முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வான வெங்கிடுவின் டீக்கடையில் தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் செலுத்தி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் கிழித்தெறிந்தது. தி.மு.க.வினரும் பெரியார் தி.க.வினரும் இதை எதிர்க்க, அவர்களைத்தாக்கி விட்டு இக்கும்பல் தப்பியோடியுள்ளது. கீழ்த்தரமான இச்செயலைக் கண்டு ஆத்திரமடைந்த தன்மானமுள்ள இளைஞர்கள் கோபியில் இளங்கோவனின் கொடும்பாவியை முச்சந்தியில் தொங்க விட்டனர். இதை எதிர்த்து கோபியிலும் சென்னையிலும் காங்கிரசு கழிசடைகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.

 

ஈழ ஆதரவாளர்களின் செயல்பாடுகள், பாசிச ஜெயாகாங்கிரசு கும்பல் விரித்துள்ள சதித்திட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் செல்வதைக் கண்டு கருணாநிதி பீதியடைந்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள, ""விடுதலைப் புலிகள் உட்பட தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலம், பொதுக்கூட்டம், உள்ளிருப்பு கூட்டம், இரங்கல் கூட்டங்கள் நடத்துபவர்கள்; பிரசுரம், சுவர் விளம்பரம் செய்பவர்கள்; ஆர்ப்பாட்டம், உருவப் பொம்மை எரித்தல், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று போலீசு தலைமை இயக்குனர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமன் பாலம் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பின்வாங்கியதைப்போலவே இப்போதும் பார்ப்பன பாசிச கும்பலுக்கு அஞ்சி பம்மிப் பதுங்குகிறார்.

 

காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழ மக்களை கொன்றொழித்து வரும் இலங்கை அரசுக்கு ரேடார் சாதனங்களையும் ஆயுதங்களையும் வழங்கியுள்ளது. போரினால் வாழ்விழந்த ஈழத்தமிழர்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களையும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்பும் முயற்சிகளையும் தடுத்து வருகிறது. பதவிக்காக இக்கூட்டணி அரசில் பங்கேற்கும் கருணாநிதி, இந்திய அரசின் இக்கேடு கெட்ட கொள்கைகளுக்கு எதிராக வாயே திறப்பதில்லை. தமிழன், தமிழினம், தன்மானம் என்றெல்லாம் சவடால் அடிக்கும் கருணாநிதி, வீரமணி, இராமதாசு முதலானோர் தம்மையும் தமது ஆட்சியையும் சொத்துக்களையும் பாதிக்காத வகையில் மிகவும் பொதுவான சவடால் அறிக்கைகளோடு பதுங்கி விடுவார்கள்; மீறினால் ஒடுக்கவும் செய்வார்கள் என்பதற்கு அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கையே சான்று கூறப் போதுமானது.

 

ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இன்னமும் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் இந்திய அரசோ சிங்கள பேரினவாத பாசிச அரசுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதோடு, ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் தமிழர்களின் நியாயவுரிமையைக் கூட பயங்கரவாதப் பீதியூட்டி ஒடுக்கி வருகிறது. அதற்கு தி.மு.க. அரசும் துணை நிற்கிறது.

 

காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு நினைவு தினமும், ஹிட்லருக்கு வீரவணக்கமும் செலுத்துகிறான் ஆர்.எஸ்.எஸ்.காரன். அதை அனுமதிக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தக்கூடாதாம். இதுதான் தேசியம்!


· தனபால்