PJ_2007 _12.jpg

உழைக்கும் மக்களின் அரசு என்று மார்தட்டிக் கொண்ட மே.வங்க "இடதுசாரி' அரசு இன்று இரத்தக் கவிச்சி வீசும் பாசிச கொலைகார அரசாக நாடெங்கும் நாறிப் போயுள்ளது.

 

நந்திகிராமத்தில் மீண்டும் சி.பி.எம். கட்சியின் பாசிச கொலைவெறியாட்டம். 6க்கும் மேற்பட்டோர் படுகொலை. நூற்றுக்கணக்கானோர் படுகாயம். 5,000க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் நந்திகிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சொந்த

 மண்ணிலேயே அகதிகளாகக்கப்பட்ட கொடூரம். விவசாயிகள் வீடுகள், உடமைகள், கால்நடைகள், பயிர்கள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிய சி.பி.எம். குண்டர்படையின் அட்டூழியம். மனித உரிமைஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இப்பாசிச வெறியாட்டத்தை எதிர்த்த அறிவுத்துறையினர், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீது அடக்குமுறை; இக்கொடுஞ்செயல்களை மூடி மறைக்க கோயபல்சையும் விஞ்சும் அண்டப்புளுகள்; தகிடு தத்தங்கள்.

 

வர்க்க விரோதிகள், மக்கள் விரோதிகள், பாசிஸ்டுகள், கொலைகாரர்கள் என்று உழைக்கும் மக்களாலேயே குற்றம் சாட்டப்பட்டு காறி உமிழப்படுகிறது மே.வங்க "இடதுசாரி' ஆட்சி. மறுகாலனியாதிக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகள் எடுத்துள்ள பாசிச அவதாரம் இன்று நாடெங்கும் சந்தி சிரிக்கிறது.

 

மே.வங்கத்தின் ஹால்டியா வட்டாரத்தில் நிறுவப்படவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களை இழக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராக இப்பகுதிவாழ் மக்கள் கடந்த ஓராண்டுகாலமாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் சேலை செய்ய முடியாமல் நந்திகிராம மக்கள் தடையாக நிற்பதைக் கண்டு ஆத்திரமடைந்த சி.பி.எம். கட்சி, தனது குண்டர் படையை ஏவி கடந்த ஜனவரியில் இக்கிராம மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. ஜனவரி 6ஆம் நாளன்று 250 பேருக்கும் மேலாகத் திரண்டுவந்து, நந்திகிராமம் சோனாசுரா கிராம மக்கள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்திய சி.பி.எம். குண்டர்கள், நாட்டுத் துப்பாக்கியால் கண்டபடி சுட்டு 6 விவசாயிகளைக் கொன்று, பலரைப் படுகாயப்படுத்தினர்.

 

இக்கொலை வெறியாட்டத்தைத் தொடர்ந்து நந்திகிராம வட்டார விவசாயிகள், கொலைகார சி.பி.எம். கட்சிக் கிளை அலுவலகங்களைத் தீயிட்டுக் கொளுத்தியதோடு சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ஆள்காட்டிகள், துரோகிகளை அவர்களது குடும்பத்தோடு சேர்த்து கிராமத்தை விட்டே வெளியேற்றினர். நந்திகிராமத்துக்கு வரும் சாலைகள்பாலங்களைத் துண்டித்து போராட்டதைத் தொடர்ந்தனர். இப்பகுதியில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து முடமாகிப் போனது.

 

""நந்திகிராம அராஜகத்தை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது'' என்று வெளிப்படையாகவே கொக்கரித்த சி.பி.எம். கட்சி கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று 5,000க்கும் மேற்பட்ட போலீசாரையும் சி.பி.எம் குண்டர்களையும் கொண்டு நந்திகிராமத்தைச் சுற்றிவளைத்து கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது. இதில் 14 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாயினர். இவ்வளவு அட்டூழியங்களுக்குப் பின்னரும் நந்திகிராம மக்களின் போராட்ட உறுதியைக் குலைக்க முடியவில்லை.

 

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாத இறுதியில் நந்திகிராமத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான கொலைகாத் திட்டத்தை சி.பி.எம். கட்சி வகுத்துக் கொடுத்தது. போராடும் நந்திகிராம மக்கள் மீது குண்டர் படையை ஏவி சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி, அம்மக்களை வெளியேற்றுவது; ஆள்காட்டிகளாகவும் துரோகிகளாகவும் செயல்பட்டதால் நந்திகிராம மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சி.பி.எம்.கட்சியினரை மீண்டும் நந்திகிராமத்தில் குடியமர்த்துவது; அதன் மூலம் தமது ஆதிக்கத்தை நிறுவி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைப்பது என்கிற நோக்கத்துடன் ""நந்திகிராமத்தை விடுதலை செய்வது'' என்று இத்தாக்குதலுக்குப் பெயர் சூட்டப்பட்து.

 

இதன்படி, ஹால்டியா வளர்ச்சி ஆணையகத்தின் தலைவரும் சி.பி.எம்.கட்சி எம்.பி.யுமான லட்சுமண்சேத் மற்றும் கேஜூரி வட்டாரக் கமிட்டிச் செயலரும் பஞ்சாயத்துத் தலைவருமான ஹிமாங்ஷூதாஸ் ஆகியோர் தலைமையில் கேஜூரியிலுள்ள ஜனனி செங்கற்சூளையில் சி.பி.எம் கட்சிக் குண்டர்களைத் திரட்டி தாக்குதல் விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த செங்கற் சூளையிலிருந்துதான் நந்திகிராமத்தில் கடந்த மார்ச்14 அன்று நடத்த கொலைவெறியாட்டத்துக்குப் பிறகு நடந்த சி.பி.ஐ. விசாரணையின் போது, வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டு சி.பி.எம்.குண்டர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தச் செங்கற்சூளைதான் சி.பி.எம் கட்சியின் பயங்கரவாதப் பாசறை என்று இப்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சதித்திட்டம் வகுக்கப்பட்ட பிறகு, இக்கூட்டத்தில் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' (புரட்சி ஓங்குக!) என்ற முழக்கத்துக்குப் பதிலாக, ""நந்திகிராமத்தைச் சூறையாடு; அனைவரையும் கொன்றொழி; இல்லையேல் நீ கொல்லப்பட்டுவிடுவாய்'' என்று கட்சிக்குண்டர்கள் முழக்கமிட்டுள்ளனர்.

 

திட்டமிட்டபடியே, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து சி.பி.எம்.குண்டர்களும் கூலிப்படையினரும் தனி வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜனனி செங்கற் சூளையில் பதுக்கி வைக்கப்பட்டனர்.

 

நவம்பர் 5ஆம் தேதியிலிருந்து இக்குண்டர்படை தாக்குதலை நடத்தியது. நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், கண்ணி வெடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய இக்குண்டர்படை, நந்திகிராம மக்களில் ஒரு பிரிவினரை பணய கைதிகளாக்கி, அவர்களை மனிதக் கேடயமாக நிறுத்தி ஒவ்வொரு பகுதியாக தாக்குதலை நடத்தியது. இதனை எதிர்கொள்ள முடியாமல், நந்திகிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தப்பியோடியதும், ஒவ்வொரு வீடாகப் புகுந்து சூறையாடிய பிறகு, அவ்வீடுகள், பயிர்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்திய சி.பி.எம். குண்டர்படை, ஒவ்வொரு பகுதியிலும் தமது கட்சிக் கொடியைக் கட்டி வைத்து நந்திகிராமத்தை "விடுதலை' செய்தது. அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த சி.பி.எம். ரௌடிகள் வெற்றி ஊர்வலங்களை நடத்தி வெறிக்கூச்சலிட்டனர். நவம்பர் 10ஆம் தேதிவரை இப்பாசிச வெறியாட்டம் நடந்துள்ளது.

 

பசுமை குலுங்கும் நந்திகிராம வட்டாரமெங்கும் மரண ஓலம்; தீயிட்டு சாம்பலாகிக் கிடக்கும் வீடுகள், கருகி நிற்கும் பயிர்கள் என அப்பகுதியே மயான பூமியாகக் காட்சியளிக்கிறது. ஆக்கிரமிப்போரைப் போன்ற இத்தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நாளேடுகள் குறிப்பிடுகின்றன. கொல்லப்பட்டோரின் பிணங்களை சி.பி.எம். குண்டர் படை உடனடியாக அகற்றி தடயங்களை அழித்து விட்டதால், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

உழுது பயிரிட்டு மே.வங்க மக்களுக்கு உணவளித்த நந்திகிராம விவசாயிகள் இன்று வீடு வாசலை இழந்து, சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாகி நிற்கிறார்கள். நந்திகிராமத்துக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் அடைக்கலமாகியுள்ள இம்மக்கள் இன்று அடுத்த வேளை உணவுக்குக் கையேந்த வேண்டிய நிலையில் உள்ளனர். இம்மக்களுக்கு "இடதுசாரி' அரசு உணவளிக்கக்கூட முன்வராமல் பழிவாங்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளுமே உணவும் மருத்துவ உதவிகளும் செய்து வருகின்றன.

 

போராடும் மக்களை அகதிகளாக்கி நந்திகிராமத்தை "விடுதலை' செய்த பிறகு, இப்போது மத்திய ரிசர்வ் போலீசைக் குவித்து நந்திகிராம மக்களை அச்சுறுத்தும் சி.பி.எம். அரசு, நந்திகிராமத்தில் மீண்டும் சி.பி.எம்.கட்சியினரை குடியமர்த்தியுள்ளது. நந்திகிராம மக்களால் வெளியேற்றப்பட்ட துரோகிகளும் ஆள்காட்டிகளும் மீண்டும் நந்திகிராமத்துக்குத் திரும்பியதும், நந்திகிராமத்தில் இப்போது "அமைதி' நிலவுவதாக சி.பி.எம் அரசு மார்தட்டிக் கொள்கிறது.

 

நந்திகிராமத்தில் சி.பி.எம் குண்டர்கள் தாக்குதல் நடத்துவதை அறிந்து, நவம்பர் 7ஆம் தேதியன்று அங்கு உண்மை நிலவரத்தை அறியச் சென்ற நர்மதா பாதுகாப்பு இயக்கத் தலைவியான மேதாபட்கர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சி.பி.எம் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். வழக்குரைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களோடு போலீசு பாதுகாப்புடன் நந்திகிராமத்தை நோக்கி சென்ற அவரது வாகனம் கேபாஸ்பேரியா கிராமத்தின் அருகே செங்கொடி ஏந்திய சி.பி.எம். குண்டர்களால் தடுக்கப்பட்டது. போலீசார் சமரசம் பேசி, பின்னர் ஒதுங்கிக் கொண்டனர்.

 

""அந்த குண்டர்கள் எங்களது வாகனங்களை அடித்து நொறுக்கினர். எங்களைக் காரிலிருந்து வெளியேஇழுத்துப் போட்டுத் தாக்கினர். எனது முடியையும் சேலையையும் பிடித்து இழுத்து முகத்திலே குத்தினர்'' என்று அந்த தாக்குதலைப் பற்றி மேதாபட்கர் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துள்ளார்.


நந்திகிராமத்தில் சி.பி.எம். கட்சி நடத்திய பாசிச வெறியாட்டத்தை எதிர்த்து மேதாபட்கரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், எழுத்தாளர்களும் கொல்கத்தாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அப்போராட்டத்தில் பிரபல எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, திரைப்பட இயக்குனர் மிருணாள்சென் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்று இப்போலி கம்யூனிச ஆட்சியை ""பாசிச ஆட்சி'' என்று சாடினர்.

 

கொல்கத்தாவில் அரசு சார்பில் நடந்த 13வது திரைப்பட விழாவைப் புறக்கணித்து, எழுத்தாளர்களும் கலைஞர்களும் அறிவுத்துறையினரும் மே.வங்க பாசிச ஆட்சியை எதிர்த்து நவம்பர் 11ஆம் நாளன்று பேரணியை நடத்தினர். அப்பேரணிக்குத் திடீர் தடை விதித்த போலீசு, அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியது. இதை எதிர்த்து சாலை மறியல் மனித சங்கிலி போராட்டத்தில் அவர்கள் இறங்கியதும், திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான அபர்ணாசென், பிரபல கவிஞர் ஷங்கோ கோஷ் உள்ளிட்டு அனைவரையும் போலீசு கைது செய்து லால்பஜார் போலீசு நிலையக் கொட்டடியில் அடைத்தது. இக்கைது நடவடிக்கையை தொலைக்காட்சிகள் படம் பிடித்து ஒளிபரப்பியதும், ஆயிரக்கணக்கான மக்கள் லால்பஜார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின்னரே "இடதுசாரி' போலீசு இக்கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் விடுவித்தது.

 

நந்திகிராமத்தில் சி.பி.எம். கட்சியின் பாசிச வெறியாட்டத்தையும், உண்மையைக் கண்டறிய முற்பட்ட பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீதான இடதுசாரி அரசின் தாக்குதலையும் கண்டு ""அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக''க் கூறி பிரபல வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்வர்த்தன், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், பேராசிரியர் மனோரஞ்சன் மொகந்தி, பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அறிவுத்துறையினர் கையெழுத்திட்டு நவம்பர் 13ஆம் தேதியன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ""நந்திகிராமத்தில் காட்டுமிராண்டித்தனமான வன்முறைக் கட்டவிழ்த்து விட்டு சி.பி.எம் குண்டர்களும் சமூக விரோதிகளும் கூட்டுச் சேர்ந்து வெறியாட்டம் போட்டுள்ளனர். நந்திகிராம மக்களுக்குப் பாடம் புகட்டவும், மீண்டும் நந்திகிராமத்தைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தவும் திட்டமிட்டு நடந்த இக்கொலைவெறியாட்டத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சி.பி.எம் கட்சி மீது ஜனநாயக சக்திகள் வைத்திருந்து நம்பிக்கை அனைத்தையும் இக்கொலைவெறியாட்டம் தகர்த்தெறிந்து விட்டது. நந்திகிராம மக்கள் அனைத்து உடமைகளையும் இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உணவும் மருத்துவ உதவியும் செய்யக் கூட இடது சாரி அரசு முன்வரவில்லை. மனித உரிமை இயக்கத்தினரும் சமூக ஆர்வலர்களும் சி.பி.எம் குண்டர்களாலும் போலீசாராலும் தாக்கப்பட்டுள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் நந்திகிராம மக்களுக்கு என்றும் ஆதரவாக நிற்போம்'' என்று மே.வங்க பாசிச ஆட்சியைச் சாடியுள்ளனர்.


இது தவிர, மே.வங்கத்தின் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் பல்வேறு அமைப்புகளின் தலைமையில் போலிகம்யூனிச பாசிச ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து பேரணிகள்ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தனர். இவற்றுக்கெல்லாம் சிகரமாக கடந்த நவம்பர் 14ஆம் நாளன்று கொல்கத்தா நகரமே குலுங்கும் வகையில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு நந்திகிராமத்தில் சி.பி.எம். கட்சி நடத்திய பாசிச வெறியாட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். சி.பி.எம். கட்சியின் கொலைவெறியாட்டம் நாடெங்கும் அம்பலப்பட்டுப் போயுள்ள பின்னரும், அக் கட்சித் தலைமை பாசிஸ்டுகளுக்கே உரித்தான கோயபல்சு புளுகுடன் எதிப்பிரச்சாரம் செய்து வருகிறது.

 

நந்திகிராமத்தில் நடந்துள்ள பாசிச பயங்கரவாத வெறியாட்டங்கள், "நக்சல்பாரி பயங்கரவாதி'களுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த விபரீதங்களோ, உணர்ச்சிவசப்பட்ட கட்சி ஊழியர்களின் அத்து மீறிய அசம்பாவிதங்களோ அல்ல. இதே பாணியில்தான் சட்டிஸ்கர் மாநிலத்தில் மறுகாலனியச் சூறையாடலுக்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்கள் மீதும் பயங்கரவாத தாக்குதல் ஏவிவிடப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களால் கட்டியமைக்கப்பட்டு தீனிபோட்டு வளர்க்கப்படும் சல்வாஜூடும் எனும் குண்டர்படை, தாதுவளம் நிறைந்த பகுதிகளிலுள்ள பழங்குடியினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி, அவர்களது மண்ணிலிருந்து வெளியேற்றி அகதிகளாக்குகிறது. சல்வாஜூடும் குண்டர் படையைக் கொண்டு சட்டிஸ்கர் அரசு நடத்திவரும் இப்பயங்கரவாதத்தை மூடிமறைக்க, நக்சல்பாரி பீதியூட்டி பெருங்கூச்சல் போடுகிறது.

 

நந்திகிராமத்திலும் அதே வழியிலான பயங்கரவாத வெறியாட்டம். சல்வாஜூடும் படைக்குப் பதிலாக சி.பி.எம். கட்சியின் குண்டர் படை. சட்டிஸ்கரைப் போலவே நந்திகிராமத்திலும் மண்ணின் மைந்தர்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்படும் கொடூரம். சட்டிஸ்கரைப் போலவே நந்திகிராமத்திலும் இப்பயங்கரவாதத்தை நியாயப்படுத்த நக்சல்பாரி பீதியூட்டல்கள். ஒரேயொரு வேறுபாடு சல்வாஜூடும் குண்டர்படை செங்கொடி ஏந்திக் கொண்டு இத்தகைய பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்ததுவதில்லை.

 

மறுகாலனியாக்கத்தின் கீழ் புரட்சி சவடால் அடித்துக் கொண்டே சந்தர்ப்பவாதிகளாகவும் துரோகிகளாகவும் வலம் வந்து கொண்டிருந்த போலி கம்யூனிஸ்டுகள், உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்துவிட்டதை நந்திகிராமத்தில் நடந்துள்ள வெறியாட்டங்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டன. மறுகாலனியாக்கத்தின் விசுவாச அடியாட்படையாகச் சீரழிந்துவிட்ட இப்பாசிசக் கட்சியை புரட்சிகரஜனநாயக சக்திகள் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும். இக்கட்சியிலும் அதன் தலைமையிலான மக்கள் திரள் அமைப்புகளிலுமுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள் உடனடியாக கலகத்தில் இறங்கி பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட துரோகத் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். இத்தனைக்கும் பிறகும் ஒருவர் இப்பாசிசக் கட்சியில் இன்னமும் நீடித்தால், ஒன்று அவர் விவரம் தெரியாத ஏமாளியாக இருக்க வேண்டும்; அல்லது பாசிசத்துக்குப் பல்லக்குத் தூக்கும் பிழைப்புவாதியாகத்தான் இருக்க முடியும்!


· குமார்

நந்திகிராமப் படுகொலை: ""போலீசின் துப்பாக்கிச் சூடு சட்ட விரோதமானது!''
— உயர் நீதி மன்றத்தின் கண்டனத் தீர்ப்பு

கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று ""நந்திகிராமத்தில் மே.வங்க போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு முற்றிலும் சட்ட விரோதமானது'' என்று கொல்கத்தா உயர்நீதி மன்றம் கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று தீர்ப்பளித்துள்ளது. 172 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், ""நந்திகிராம மக்கள் போலீசு தனது கடமையைச் செய்வதைத் தடுக்கவில்லை; வன்முறையில் ஈடுபடவில்லை; ஆத்திரமூட்டும் செயலில் இறங்கவில்லை; சமூக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக அவர்களது ஆர்ப்பாட்டம் அமையவில்லை. அம்மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்கு இதர வழிமுறைகள் அனைத்தையும் கைவிட்டு, கொல்வதையே குறிக்கோளாகக் கொண்டு போலீசு செயல்பட்டுள்ளது. இம்மக்களை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் கண்மூடித்தனமாக போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதை எந்தச் சட்டத்தின்படியும் நியாயப்படுத்தவே முடியாது.

 

""துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களைத் தூக்கிச்சென்று காப்பாற்ற முற்பட்டவர்கள் மீது போலீசு தடியடித் தாக்குதல் நடத்திய காட்டு மிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பங்களுக்கும் படுகாயமடைந்த 162 பேருக்கும் மே.வங்க அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இத்துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் பற்றிய மையப் புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ.) விசாரணையைத் தொடரவேண்டும்'' என்று நீதிபதிகள் குறிப்பட்டுள்ளனர்.

 

மேலும், ""நந்திகிராம மக்கள் போலீசை நோக்கி கையெறி குண்டுகளை வீசும் போது, கை தவறி அவர்கள் மீதே குண்டு விழுந்ததால்தான் 14 பேர் மாண்டனர்'' என்று போலி கம்யூனிச பாசிச அரசு கூறும் அண்டப்புளுகை இத்தீர்ப்பு நிராகரித்துள்ளது. நந்திகிராம மக்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஆயுதபாணியாக வந்து போலீசைத் தாக்கினர் என்ற "இடதுசாரி' அரசின் கோயபல்சு புளுகையும் இத்தீர்ப்பு கண்டனம் செய்துள்ளது.

 

இத்தீர்ப்பைக் கேட்ட சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரும், மே.வங்க "இடதுசாரி' அரசின் அமைச்சருமான பினய் கோனார், ""நந்நிகிராமத்தில் ரௌடிக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது போலீசார் கங்கை நீரைத் தெளித்து, அவர்களுக்கு கீதோபதேசம் செய்ய வேண்டுமென்று இந்த நீதிபதிகள் எதிர்பார்க்கிறார்களா? வன்முறைக் கூட்டத்தின் முன் போலீசார் சட்டப் புத்தகத்தையா படித்துக் கொண்டிருக்க முடியும்?'' என்று பாசிஸ்டுகளுக்கே உரித்தான மொழியில் ஜனநாயக உரிமைகளின் மீது வெறுப்பைக் கக்கினார்.

 

1980களில் தர்மபுரிவட ஆற்காடு மாவட்டங்களில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் தேவாரம் தலைமையிலான போலீசு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, இதற்கெதிராக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்த போது, ""நக்சல்பாரிகளை ஒடுக்க போலீசார் சட்டப் புத்தகத்தையா படித்துக் கொண்டிருக்க முடியும்?'' என்று இக்கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தினார் பாசிச எம்.ஜி.ஆர்.

 

கிளிப்பிள்ளையின் கூற்றாக பாசிச எம்.ஜி.ஆரின் அதே வார்த்தைகள்; கொலைவெறியாட்டத்தை நியாயப்படுத்தும் எம்.ஜி.ஆரின் அதே பாசிசத் திமிர். எம்.ஜி.ஆரின் பாசிச அரசியல் வாரிசாக தமிழகத்துக்கு ஒரு ஜெயா; மே.வங்கத்துக்கு ஒரு பினய் கோனார்!

குண்டர்கள்... குண்டுவெடிப்புகள்... அண்டப்புளுகுகள்

நந்திகிராமத்துக்கு அருகேயுள்ள பங்கபோரா பாலத்தருகே நவம்பர் 6ஆம் தேதியன்று குண்டு வெடித்து இருவர் மாண்டு போயினர். உடனே, ""ஐயோ, பயங்கரவாதம்! நிலப் பாதுகாப்பு இயக்கத்தினர் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். வெளியிலிருந்து ஆயுதக் குழுக்களைக் கொண்டு வந்துள்ளனர். பதுங்குக் குழிகள் வெட்டப்படுகின்றன. கண்ணி வெடிகள் புதைக்கப்படுகின்றன. நவம்பர் 6ஆம் தேதியன்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் 2 சி.பி.எம். தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்'' என்று அலறியது சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு.

 

அதே நேரத்தில், நவம்பர் 7ஆம் தேதியன்று வெளியான வங்க நாளேடுகளில், மித்னாபூர் மாவட்ட போலீசு உயரதிகாரிகள், ""இது கண்ணிவெடியா, நாட்டு வெடிகுண்டா என்று தெரியவில்லை; மாவோயிஸ்டுகளின் கைவரிசையா என்று உறுதிப்படுத்த முடியவில்லை; விசாரணை நடக்கிறது'' என்று பேட்டியளித்தனர். மே.வங்க அரசின் உள்துறை செயலரும் ""விசாரணை நடத்தி வருகிறோம்'' என்று அறிவித்தார்.

 

போலீசும் உள்துறை செயலரும் விசாரணை நடப்பதாகக் கூறும் இக்குண்டுவெடிப்பு விவகாரத்தில், மாவோயிஸ்டுகள்தான் குண்டு வைத்தார்கள் என்று சி.பி.எம். கட்சித் தலைமைக்கு எப்படித் தெரிந்தது? அதற்கான ஆதாரங்கள் என்ன? பங்கபோரா பாலம் மற்றும் அதையொட்டியுள்ள மன்சிங்பெரா கிராமத்தில் சி.பி.எம்.மின் கை வலுவாக உள்ள நிலையில் அங்கு எப்படி மாவோயிஸ்டுகள் ஊடுருவ முடியும்? அதுவும் அப்பகுதியில் பெருமளவு போலீசு குவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவோயிஸ்டுகள் எப்படி குண்டு வைக்க முடியும்?

 

உண்மையில், பங்கபோரா பாலத்தருகே குண்டு தயாரிப்பில் ஈடுபட்டு எதிர்பாராத விபத்துக்குள்ளாகி சி.பி.எம்.குண்டர்களும் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக விரோத கூலிப்படையினரும் தாம் மாண்டு போயுள்ளனர். நந்திகிராமத்தில் தாக்குதல் தொடுப்பதற்காகவே இக்குண்டு தயாரிப்புகள் நடந்துள்ளன. இதே போல கேஜூரி வட்டாரத்திலுள்ள ஷேர்கான்சவுக் கிராமத்திலும் சி.பி.எம். குண்டர்கள் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்துக்குள்ளாகி மாண்டு போயுள்ளனர். நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள் என்றால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என்று ஆளும் வர்க்கமும் அதன் ஊடகங்களும் அவதூறு பிரச்சாரம் செய்து வருவதைச் சாதகமாக்கிக் கொண்டு, மாவோயிஸ்டுகள் மீது பழியைப் போட்டு தனது பயங்கரவாதத்தை மூடி மறைக்க எத்தணிக்கிறது, சி.பி.எம். கட்சி.

 

ஈராக் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த ஈராக்கில் மனிதகுல பேரழிவுக்கான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புஷ் அண்டப்புளுகை அவிழ்த்து விட்டார். நந்திகிராமத்தின் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த, மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதாக பயங்கரவாத சி.பி.எம். கட்சி அண்டப்புளுகை அவிழ்த்து விடுகிறது. அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுகளுக்கு உலக மேலாதிக்கப் பயங்கரவாதி புஷ் என்றால், அவரது உண்மையான வாரிசுகள் தாங்கள்தான் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டனர், சி.பி.எம். கட்சியினர்.