நவம்பர் 7, 1917. இப்பூவுலகின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர்ந்த நாள். ஏகாதிபத்தியம் என்பது காகிதப்புலியே என நிரூபித்துக் காட்டி காலனிய நாட்டு மக்களின் மனங்களில் விடுதலைக் கனலை மூட்டிய நாள். ரஷ்யாவில் பாட்டாளிகளின் பஞ்சைப் பராரிகளின் முதல் சோசலிச அரசு உதித்த அந்த நவம்பர் புரட்சிக்கு இன்று 90ஆவது ஆண்டு நிறைவுநாள்.

 

ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் இந்நவம்பர் புரட்சிநாள் விழாவை, நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கும் இந்துவெறி பாசிசத்துக்கும் எதிரான விழாவாகத் தமிழகமெங்கும் நடத்தின.

 

சென்னையில் ரஷ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் 90வது ஆண்டு விழாவை வரவேற்று ஆர்ப்பரித்தது சேத்துப்பட்டு. அங்கு அம்பேத்கர் திடலில் பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் செங்கொடியேற்ற, வேட்டுகளும் பறைமுழக்கமும் இடியென முழங்க, விண்ணதிரும் முழக்கங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்ட தோழர்கள் சமுதாயக் கூட அரங்கில் சங்கமித்தனர். ம.க.இ.க. தோழர் சோமு தலைமையில் தோழர் துரை.சண்முகம் துவக்க உரையுடன் தொடங்கிய விழாவில் இளந்தோழர்கள் தமிழ்ச்சுடர், செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் ரஷ்யப் புரட்சியை பறைகொட்டிப் பாடினர். சிறீராம் ஃபைபர்ஸ் தொழிலாளர்களான பு.ஜ.தொ.மு. தோழர்கள், ""தொழிலாளர்களை இன்று பகத்சிங் சந்தித்தால்...'' எனும் நாடகத்தின் மூலம், அடிமைமோகமும் அரசியலற்ற போக்கும் கொண்ட கணினித்துறை தொழிலாளர்களையும் உணர்வற்றுக் கிடக்கும் ஆலைத் தொழிலாளர்களையும் புதிய சமுதாயத்துக்காகப் போராடும் புதிய மனிதனாக மாற்றிக் காட்டினர்.

 

சினிமா, நாடகத் தொடர்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும் நுகர்வு வெறியையும் மூடத்தனத்தையும் வளர்ப்பதைச் சாடி, ""விளம்பர இடைவேளை எச்சரிக்கை!'' என உணர்த்திய இளந்தோழர் வெண்மணி; காஞ்சி சங்கராச்சாரி ஐயப்பன் கோவில் தந்திரி முதலான கழிசடைகளைக் காறி உமிழ்ந்து தனது பிஞ்சுக் குரலால் பாடி எள்ளி நகையாடிய இளந்தோழர் அனுசுயா; ""நான் பெரியார் பேசுகிறேன்'' என்று பார்ப்பனியத்தைச் சாடிய இளந்தோழர் சங்கரி; ""குஞ்சிதம் குருசாமி பேசுகிறேன்'' என்று மூடத்தனங்களையும், பெண்ணடிமைத்தனத்தையும் சாடிய இளந்தோழர் ஓவியா மற்றும் புரட்சிகரப் பாடல்களை இசைத்த இளந்தோழர்கள் என புதிய தலைமுறையினர் புரட்சிகர உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சினர்.

 

குதிரைக்குப் பிறந்த வருணாசிரமக் கொலைகாரன் ராமனைக் குற்றவாளிக் கூண்டிலேற்றிய இளம் தோழர்களின் ""ராமன்: இரட்டைக் கொலை வழக்கு'' நாடகம் பெருத்த வரவேற்புடன் அரங்கை அதிரவைத்தது. அடுத்து நடந்த கவியரங்கில், ""வர்க்கப் போராட்டத்தில் வார்க்கப்பட்டவர்கள் நக்சல்பாரிகள்; வர்க்கத் தீயை ஓமக்குண்டத்தில் வளர்க்க நினைக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்'' எனக் கவிஞர் தமிழேந்தி தனது குத்தீட்டி கவிதையால் குறிதவறாமல் போலி கம்யூனிஸ்டுகளைச் சாடினார். கவிஞர் கருணாகரன் சமூகக் கொடுமைகளைத் தன் கனல் மணக்கும் கவிதை வரிகளால் சுட்டெரித்துப் புரட்சித் தீயை மூட்டினார். இறுதியாக, பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு, நவம்பர் புரட்சியின் வழியில் நம் நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க அறைகூவினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிறைவுற்ற இவ்விழாவில் இளந்தோழர்களுக்குப் பரிசளிப்புடன் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவும் வழங்கப்பட்டது.

 

திருச்சியில் ம.க.இ.க. கிளை சார்பில் காந்திபுரத்திலும் பு.மா.இ.மு. சார்பில் துவாக்குடி பெரியார் திடல், காட்டூர், திருவரம்பூர் ஆகிய பகுதிகளிலும், திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் காளிப்பட்டி கிராமத்தில் வி.வி.மு. சார்பிலும் விண்ணதிரும் முழக்கங்களுடன் செங்கொடியேற்றி, நவம்பர் புரட்சிநாள் உழைக்கும் மக்களின் திருவிழாவாக நடைபெற்றது.

 

ஓசூரில் பு.ஜ.தொ.மு. மற்றும் புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கம் இணைந்து கொத்தகொண்டப் பள்ளியில் செங்கொடியேற்றி நவம்பர் புரட்சி நாளை எழுச்சியூட்டும் விழாவாக நடத்தின. இவ்விழாவில் ""ராமன்: இரட்டைக் கொலை வழக்கு'' நாடகத்தை இளந்தோழர்கள் நடத்திக் கொலைகார ராமனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினர். இப்பகுதிவாழ் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசளித்த இவ்வமைப்பினர், நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி விருந்தளித்தனர். ஓசூரை அடுத்துள்ள பாகலூர், சூளகிரி ஆகிய சிறுநகரங்களிலும் தேன்கனிக்கோட்டை வட்டம் நாட்ராம்பாளையத்திலும் பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள் செங்கொடி ஏற்றித் தெருமுனைக் கூட்டங்கள் மூலம் இவ்விழாவைப் பிரச்சார இயக்கமாக நடத்தின.

 

புதுச்சேரி பு.மா.இ.மு. சார்பில் திருபுவனையில் நடந்த நவம்பர் புரட்சிநாள் விழாவில், சோசலிச ஜனநாயகத்தையும் நம் நாட்டில் நிலவும் போலி ஜனநாயகத்தையும் ஒப்பிட்டுக் காட்டியும், மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்த நவம்பர் புரட்சியின் வழியில் பாட்டாளி வர்க்க அரசமைக்க அறைகூவியும் முன்னணித் தோழர்கள் உரையாற்றினர். இப்பகுதித் தோழர்கள் நடத்திய புரட்சிகர கலை நிகழ்ச்சி அரங்கையே அதிர வைத்தது.


கோவில்பட்டியில் பு.ஜ.தொ.மு. மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் இணைந்து மறவர் காலனியில் தெருமுனைக் கூட்டம் நடத்தி, பகுதிவாழ் மக்களுக்கு இனிப்பு வழங்கி நவம்பர் புரட்சி நாளைக் கொண்டாடின. பின்னர் ""புதிய ஜனநாயகம்'' வாசகர் வட்டம் சார்பாக வள்ளுவர் நகர் சமுதாயக் கூடத்தில் நடந்த அரங்கக் கூட்டத்தில், பு.ஜ.ஏடு தனது புரட்சிப் பயணத்தைத் தொடங்கி 22 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ளதைச் சிறப்பித்தும், புரட்சிகர அரசியல் பிரச்சாரகனாக அமைப்பாளனாகச் செயல்படுவதை விளக்கியும், நவம்பர் புரட்சிநாளின் படிப்பினைகளைத் தொகுத்தும் முன்னணியாளர்கள் உரையாற்றினர். நிகழ்ச்சியின் இறுதியில் திரையிடப்பட்ட ""லெனின்: எதிர்காலத்திற்கான வரலாறு'' எனும் குறும்படம் பார்வையாளர்களுக்கு அரசியல் உணர்வூட்டுவதாக அமைந்தது.

 

சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், விளாத்திகுளம் பகுதிகளில் பு.ஜ.தொ.மு., வி.வி.மு. அமைப்புகளின் சார்பாக நவம்பர் புரட்சியின் வழியில் நம்நாட்டிலும் பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவ உழைக்கும் மக்களை அறைகூவிப் பரவலாகச் சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சாத்தூரில் பு.ஜ.தொ.மு சார்பில் புரட்சிகர பாடல்களை ஒலிபரப்பி, இனிப்புகள் வழங்கி தெருமுனைக் கூட்டத்துடன் விழாவை நடத்திய தோழர்கள், பின்னர் பகுதிவாழ் மக்களைத் திரட்டி ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா நிகழ்ச்சிகளைத் திரையிட்டனர். வேலூரில் தோட்டப்பாளையத்தில் நடந்த நவம்பர் புரட்சி நாள் விழாவில் ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார். பெண்கள் குழந்தைகள் புரட்சிகரப் பாடல்களை இசைத்த இவ்விழா பார்வையாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டுவதாக அமைந்தது.


— பு.ஜ.செய்தியாளர்கள்