திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்ற இளம் பெண், அமெரிக்காவில் வரதட்சிணைக் கொடுமையால் வதைபட்டு, குற்றுயிராகத் திரும்பிய நிகழ்ச்சி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ஜெனிதாவின் பெற்றோர், திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகமான கிறிஸ்டி டேனியல் என்ற அமெரிக்காவில் வேலை செய்யும் கணினிப் பொறியாளருக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் ஜெனிதாவை
மணமுடித்துக் கொடுத்தனர். 50 சவரன் நகையும் பல லட்சம் ரொக்கமாக வரதட்சிணையுடன் அனைத்துச் சீர்வரிசைகளும் செய்து கொடுத்தும்கூட இன்னும் கூடுதலாக வரதட்சிணை கேட்டு வந்த டேனியலும் அவரது பெற்றோரும், அமெரிக்காவில் தொடர்ந்து ஜெனிதாவைச் சித்திரவதை செய்துள்ளனர். கர்ப்பிணி என்றும் பாராமல் ஜெனிதாவைக் காரிலிருந்து தள்ளிக் கொல்லவும் இக்கும்பல் துணிந்துள்ளது. கைகால் எலும்பு முறிந்து நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் கிடந்த ஜெனிதாவை மீட்டு சென்னைக்குக் கொண்டு வந்து, அவரது பெற்றோர் சிகிச்சையளித்து வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வரதட்சிணைக் கொடூரத்தை அறிந்த தேசிய மகளிர் ஆணையம், ஜெனிதாவையும் அவரது பெற்றோரையும் சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளது.
திருச்சியில் செயல்படும் பெண்கள் விடுதலை முன்னணி, ஜெனிதாவின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டியதோடு, வரதட்சிணைக்காக மனைவியையே கொல்லத் துணிந்த டேனியலையும் அவனது பெற்றோரையும் கைது செய்து, தமிழகத்துக்கு இழுத்து வந்து தூக்கிலிடக் கோரி, உடனடியாக சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஏற்கெனவே பெண்களை ஆபாசப் படமெடுத்து குறுந்தகடாக்கி வெளியிட்ட காமவெறியன் லியாகத் அலியைத் தூக்கிலிடக் கோரிப் போராடிய இவ்வமைப்பினர், தற்போது அமெரிக்க மோகம் ஏற்படுத்தியுள்ள பயங்கரத்தை விளக்கி மேற்கொண்டுள்ள இப்பிரச்சாரம், உழைக்கும் மக்களிடம் உற்சாகமான வரவேற்பையும் பேராதரவையும் பெற்றுள்ளது.
பு.ஜ. செய்தியாளர், திருச்சி.