நீதியின் நேசவல்லவர்கள் கூடுதலும்
நீசர் ஆட்சியின் நெட்டூரம் காணுதலும்
கால ஓட்டத்தில் கைகோர்த்து நிற்றலும்
தேச வழமையாய் ஜெனிவாவில் ஆனது
நாதியற்று அநாதைகளாய்
குண்டுகள் வீழ வீழ
நம்பியார் அழைப்பெடுத்து நம்புதற்கோ
நம் உயிர்கள் துடித்தழித்தோம்
எல்லையிட்ட ஈழத்தின் மண்
சொந்த மகவுகள் அலறலில் வெந்துபோனது
இழப்புக் கணக்கெடுத்து ஏதுசெய்வீர்
கொழுப்பெழுந்த தேசங்களே
குருதி ஆற்றில் மிதந்ததெலாம்
செய்மதியில் பதிவிட்டு பார்த்திருந்தீர்
ஏன் வரவில்லை
சிரியாவுக்காய் எழும் முனைப்பு
ஈரானின் மேலிருக்கும் பரிதவிப்பு
ஏன் எழ வில்லையெனப் பார்த்தோம்
வாருங்கள் உலகவல்லவர்கள்
முள்ளிவாய்க்கால் வரைக்குமாய்
கொன்று குவித்தழித்த உடலங்களால்
எண்ணைக் கசிவு ஊற்றெடுக்கப்போகிறது
அமெரிக்கப் பிதாவே
இந்தியச்செம்மறி வழிதெரியாமல் தடுமாறுகிறது
வீழ்ந்தமக்கள் எழுந்திடமுன் வாருங்கள்
-கங்கா 26/02/2012