ஆட்சிமாற்றங்கள் ஒவ்வொன்றும்
அடுத்து மாற்றம் நிகழப்போவதாய்
வாக்குப்போடுங்கள் தீர்வு வருமென்றார்கள்
பிரிவினை நாடும் ஆயுததாரிகள்
அழிக்கப்பட்டதும் நாடு சொர்க்கபுரியாகும் என்றார்கள்
பயங்கரவாதம் இல்லாதுபோனதாய்
தேசத்தின் மகுடம்
பட்டொழிவீசி மிளிர்வதாய் ஆயுதக்காட்சியாக்கினார்கள்
அழிக்கப்பட்ட பூமியில்
தெருவெங்கும் துப்பாக்கி தாங்கியவர்களும்
அச்சமூட்டும் சப்பாத்துச் சத்தங்களும்
விடுவிக்கப்பட்டதாய் சொன்ன மண்ணை
ஆக்கிரமித்துக்கொண்டபோது
நாங்கள் சொன்னோம் இது சிங்களஇராணுவம்….
புத்தவிகாரை நிர்மாணிப்புகளுமாய்
சிங்களமக்களை குடியேற்றியபோது
நாங்கள் சொன்னோம் இது பௌத்தசிங்களஇனவெறி அரசு…
துட்டகைமுனு என்றோம்
அநாகரிக தர்மபாலவின் வரலாறு சொன்னோம்
மெல்ல மெல்ல தமிழ்தேசியஅடையாளங்கள்
திட்டமிட்டு சிதைக்கப்படுவதை
நாங்கள் சொன்னோம் இது பேரினவாத அரசு……
சிங்கள இராணுவமா
பௌத்தஇனவெறி பேரினவாத அரசா
சிலாபத்தில் மீனவரை சுட்டது…?
விறைத்துப்போனோம்
இப்போ தெளிகிறது
உழைப்பவர் எல்லாம் ஓரினம்
வதைப்பவர் எல்லாம் ஓரினம்
-கங்கா 16/02/2012