Language Selection

புதிய ஜனநாயகம் 2008

PJ_2008_1.jpg

விசாரணைக்காக கோவையிலிருந்து தஞ்சைக்கு அழைத்து வரப்பட்ட அகிலாண்டேஸ்வரி என்ற பெண், போலீசு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனின் பாலியல் பலாத்காரம் சித்திரவதையால் கொல்லப்பட்டு, ஓட்டல் அறையில் பிணமாகத் தூக்கில் தொங்கிய சம்பவம், கடந்த நவம்பர் மாதத்தில் தஞ்சை நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சையைச் சேர்ந்த ஜானகிராமன், இளையராஜா, கோவையைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார், தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசு நிலைய ஆய்வாளரான சேதுமணி மாதவன். ஏற்கெனவே அதிகார போதைத் தலைக்கேறி ஆட்டம் போட்டு வந்த சேதுமணி மாதவன், வழக்கில் உள்ளவர்களைக் கைது(!) செய்து திருச்சியிலுள்ள குரு லாட்ஜ், கஜப்பிரியா ஓட்டல் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அடித்து உதைத்து மிரட்டி அவர்களிடம் இலட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். அகிலாவிடமும் அவரது பெற்றோரிடமும் பல லட்சங்களைக் கறந்த சேதுமணி மாதவன், அவர்களைத் தஞ்சையில் மேட்டுக்குடி கும்பல்களின் களிவெறியாட்ட விடுதியான ""டெம்பிள் டவர்'' ஓட்டலில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்துள்ளார்.

 

மேலும் பணம் கொண்டுவரச் சொல்லி அவர்களை அனுப்பி விட்டு, அகிலாவை மட்டும் உடனே திரும்பி வரச்சொல்லி மிரட்டி, அச்சுறுத்தியுள்ளார். 16.11.07 அன்று தஞ்சை வந்த அகிலாவை பேருந்து நிலையத்திலிருந்து போலீசு வாகனத்திலேயே ஏற்றிச் சென்று ""டெம்பிள் டவர்'' ஓட்டலில் அடைத்துத் தொடர்ந்து பாலியல் வன்முறையை ஏவியுள்ளார். சேதுமணி மாதவனோடு விபச்சார புரோக்கரும் முன்னாள் அரசு ஊழியருமான பாலு, ஏட்டு கணேசன் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து இந்த அயோக்கியத்தனத்தைச் செய்துள்ளனர். இதற்கு ஜெயலட்சுமி என்ற பெண் போலீசு இன்ஸ்பெக்டர் உதவி செய்திருக்கிறார்.

 

தனக்கு நேர்ந்த கொடுமையை மரண வாக்குமூலம் போல தனது அம்மாவுக்கு 19.11.07 அன்று கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார், அகிலா. அதேநாளில் சேதுமணி மாதவனின் தொடர் பாலியல் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளார். அகிலாவின் பெற்றோரை அவசரமாகத் தொலைபேசியில் அழைத்த சேதுமணி மாதவன், அகிலா அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாகக் கூறி, உடனே புறப்பட்டு வரச் சொல்லிவிட்டு, அகிலா தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டதாக ஜோடித்தார்.

 

அகிலாவின் பெற்றோரிடம் பிணத்தை ஒப்படைக்காமல், ஒப்படைத்து விட்டதாக மிரட்டிக் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு, தஞ்சை ரெட்டிப்பாளையம் சுடுகாட்டில் வைத்து போலீசே முன்னின்று பிணத்தை எரித்துள்ளது. பாலியல் வன்முறையை ஏவிக் கொலை செய்துள்ள தடயங்களை அதிகார பலத்தைக் கொண்டு அழித்துவிட்ட போலீசு கும்பல், அகிலாவின் பெற்றோரை மிரட்டி, ""என் மகள் தற்கொலைதான் செய்து கொண்டாள்; என் மகள் சாவுக்குப் போலீசு காரணம் இல்லை'' என்று வாக்குமூலம் பெற்றுள்ளது.

 

சேதுமணி மாதவன், சீருடை அணிந்த ஒரு ரௌடி. மனித உரிமை மீறல் குற்றவாளி என மதுரை உயர்நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தமிழக அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் போலீசு எஸ்.பி.யான பிரேம்குமார் தஞ்சையில் பணியாற்றியபோது, அவருடன் சேர்ந்து சேதுமணி மாதவன் நடத்திய "மோதல்' படுகொலைகள் ஏராளம். சிவில் வழக்குகளில் தலையிட்டுக் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது, பெண் கைதிகளை மிரட்டிப் பாலியல் வன்முறையை ஏவுவது, விசாரணைக் கைதிகளை அடித்துக் கொட்டடியிலேயே கொல்வது, கைத்துப்பாக்கியை இடுப்பில் சொருகிக் கொண்டு சுட்டு விடுவேன் என்று அதிகாரத் திமிரோடு மக்களை மிரட்டுவது என்பதாக இந்தக் காக்கிச் சட்டை கிரிமினலின் கொட்டம் தலைவிரித்தாடியது. அதிலும், திருவாரூர், தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கு விசாரணைக் குழு, திருச்சி தீவிரவாத எதிர்ப்புப் படைக்குழு ஆகியவற்றில் சேதுமணி மாதவன் அங்கம் வகிப்பதால், உயரதிகாரிகளுடன் நெருக்கம் காரணமாக அதிகார போதையில் ஆட்டம் போட்டு வந்தார்.

 

இருப்பினும், மனோகரன் என்பவர் மீது பொய் வழக்குப் போட்டு பணம் பறித்த சேதுமணி மாதவனுக்கு மனித உரிமை ஆணையம் ரூ. 25,000 அபராதம் விதித்துள்ள விவகாரம் உள்ளிட்டு, அவரது கொலைகளும் அத்துமீறல்களும் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளதாலும், அகிலா கொலையில் அவர் சிக்கியிருப்பது மெதுவாகக் கசியத் தொடங்கியதாலும், வேறு வழியின்றி அவர் மீது, அகிலாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சேதுமணி மாதவனோ, கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் படுத்துக் கொண்டார். போலீசு கும்பலோ புலன் விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறி அவருக்குப் பிணை வாங்க முயற்சித்தது.

 

தண்டனையின்றித் தப்பிக்க கொலைகார சேதுமணி மாதவனும் போலீசு கும்பலும் தகிடுதத்தங்களில் இறங்கத் தொடங்கியதும், தஞ்சையில் இயங்கும் ம.க.இ.க., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், இக்கொலைகார போலீசின் ஆள் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்துச் சித்திரவதை, பணம் பறிப்பு, பாலியல் வன்முறை ஆகிய கொடிய குற்றங்களுக்காகக் கைது செய்து தண்டிக்கக் கோரி நகரெங்கும் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டன. அகிலாவின் கடைசி கடிதத்தைச் சுவரொட்டியாக அச்சிட்டு ஒட்டி, கொலைக் குற்றவாளி சேதுமணி மாதவன்தான் என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திக் காட்டியது.

 

இதைத் தொடர்ந்து, ம.க.இ.க., பு.மா.இ.மு., மனித உரிமை பாதுகாப்பு மையம், ஆதித் தமிழர் பேரவை, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் அமைப்புகளும் இணைந்து ""கோவை அகிலா காவல் கொலைக்கு நீதிகோரும் கூட்டமைப்பு'' நிறுவப்பட்டு, அக்கூட்டமைப்பின் சார்பில் பிரசுரம், சுவரொட்டி, தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக நகரெங்கும் வீச்சாகப் பிரச்சாரமும் அதன் தொடர்ச்சியாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன.

 

மனித உரிமை பாதுகாப்பு மையம், கீழமை நீதிமன்றத்தில் இக்கொலைகாரனுக்குப் பிணை வழங்கக் கூடாது என்று மனு செய்ததோடு, உயர்நீதி மன்றத்தில் இக்குற்றவாளியைத் தப்புவிக்கும் வகையில் நடக்கும் போலீசு விசாரணைக்குத் தடை கோரியும், மையப்புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்தக் கோரியும் மனு செய்தது. அதன்படி, கொலைகார சேதுமணி மாதவனுக்குப் பிணை மறுக்கப்பட்டு, மருத்துவமனையிலிருந்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். போலீசு விசாரணைக்குத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதி மன்றம், நீதித்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

 

உழைக்கும் மக்களை அணிதிரட்டி இக்கூட்டமைப்பும் இதர ஜனநாயக சக்திகளும் தொடர்ச்சியாக மேற்கொண்ட பிரச்சாரம் மற்றும் போராட்டங்களால்தான் சீருடை அணிந்த கிரிமினல் சேதுமணி மாதவன் இப்போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரே தவிர, அரசின் நடுநிலையான சட்டம் நீதியினால் அல்ல. இது தஞ்சை மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி. முன்னுதாரணமிக்க இப்போராட்ட வெற்றியைச் சாதகமாக்கிக் கொண்டு, கொலைகார சேதுமணி மாதவனின் கூட்டாளிகளான சாதிவெறியர்கள், சமூக விரோதிகள், ஓட்டுக்கட்சி கிரிமினல்கள், ஓட்டல் அதிபர்கள், போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு அனைவரையும் தண்டிக்கக் கோரி, மனித உரிமை ஜனநாயக உரிமைகளுக்காக உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலமே, போலீசு பயங்கரவாதிகளின் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.


பு.ஜ. செய்தாளர்கள், தஞ்சை.