Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நோர்வேயில் நாடுகடந்த தமிழீழத்துக்கான வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிடும் திருவாளர் பெர்னாண்டோ அவர்கள் தனது பிரச்சார உத்திகளுக்கு தான் கடந்தகாலங்களில் ஆற்றியிருக்கும் சேவைகள் பற்றியும் தான் கலாநிதி? கணபதிப்பிள்ளை சிவராசாவுடன் இணைந்து தொரம்சோவில் செய்த சேவைகள் பற்றியும் தந்த தகவல்கள் பற்றி சிறிது வரலாற்றை புரட்டிப்பார்ப்போம்.

அவர் தந்துள்ள சில விபரங்கள்;

கலாநிதி கணபதிப்பிள்ளை சிவராசாவுடன் இணைந்து ரொம்சோ பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கூட்டுச்செயற்பாடுகள் உருவாக்கப்பட்டு மாமனிதர் துரைராஜா நோர்வே தேசத்துக்கு வந்து ஒப்பந்தங்களினை மேற்கொள்ள பங்களிப்பு செய்தவன். என்கின்றார்.

 

முதலாவதாக கணபதிப்பிள்ளை சிவராசாவுக்கு கலாநிதிப்பட்டத்தை எந்தப் பல்கலைக்கழகம் எந்தத் துறையில் வழங்கியது எப்போது வழங்கியது என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். பிரச்சார உத்திகளுக்காக மக்கள் மத்தியில் பொய்களைக் கட்டமைப்பதை அவர் இதிலிருந்தே ஆரம்பிக்கின்றார்.  எப்படி நோர்வேஜிய நிதிகளை தமிழ்மக்களுக்கான முன்னேற்றப்பணிகளுக்கு என கூறி விண்ணப்பித்து பெற்றுக்கொண்டு அவ்வளங்களை தமது வரவில்  இடலாம் தம் இஸ்டப்படி கையாளலாம் என்ற துறை ஒன்று இருக்குமாயின் அத்துறையில்  திரு கணபதிப்பிள்ளை சிவராசாவுக்கு தனிப்பட்ட ரீதியில் திரு பெர்னாண்டோ கலாநிதிப்பட்டத்தை தானே வழங்கினாரோ தெரியவில்லை.

இவர் குறிப்பிடும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் “மாமனிதர்” துரைராஜா சுவீடனிலுள்ள உப்சாலா பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்திருப்பதை அறிந்து அன்றைய வட நோர்வே தமிழ்ச்சங்கம் அவரை தொரம்சோ பல்கலைக்கழகத்துக்கு அழைப்பது என தீர்மானம் எடுத்தது. இதன் மூலம் தொரம்சோப் பல்கலைக்கழகத்தில் அன்று உபவேந்தராக இருந்த Ole D.Mjøs (ஊல டி மியோஸ்) (சமாதானத்துக்கான நோபல் கமிட்டியின் தலைவராக கடந்தமுறை இவர் இருந்தார்). அவர்களோடு  இரு பல்கலைக்கழகங்களுக்குமிடையில் கல்வித்துறைகளில் பரிமாற்றங்களை ஏற்படுத்த அடித்தளம் இடுவதற்கான முதன்முறையான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு உபவேந்தர் துரைராஜா அவர்களை சுவீடனிலிருந்து தொரம்சோவுக்கு அழைப்பதற்கு விமானப் பயணச் சீட்டுக்கான செலவுக்கு நிதி தேவையாக இருந்தது. மற்றும்படி  திரு.துரைராஜா அவர்கள் இங்கு வந்து செல்வதற்கு தனது நேரத்தை ஒதுக்கி சம்மதமளித்திருந்தார்..

எனவே இந்த விமானப்பயணச் சீட்டுக்கான செலவையும் அவர் ஒரிரு நாட்கள் ஹோட்டலில் தங்குவதற்கான செலவீனங்களையும் சேர்த்த மொத்தச்செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளுமாறு சிவராசா கணபதிப்பிள்ளை அவர்களின் தொழில்ரீதியான காரியாலயத்திற்கு இக்கட்டுரையாளர் வட நோர்வே தமிழ்ச்சங்கத்தின் அப்போதைய தலைவர் என்ற போதாவில் சென்று காத்திருந்து சந்திக்கின்றார். இத்தனைக்கும் Tamil Development of North Norway(TDNN) என்ற பெயரில் அபிவிருத்திப் பணிகளையும் தமிழ்மக்களுக்கான செயற்பாடுகளையும் தாங்கள் முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு அதன் தலைவராக கணபதிப்பிள்ளை சிவராசா இயங்கினார். அதன் அலுவலக நிர்வாகம் பெர்னாண்டோவிடம் இருந்தது. அதன் நிர்வாகக்குழு உறுப்பினராக யார் இருந்தார் எவர் இருந்தார் என்பதெல்லாம் பரமரகசியம். அதேபோலத்தான் அதன் கணக்குவழக்குகளும்.

Tamil Development of North Norway(TDNN) ஆனது வசதிவாய்ப்புக்களுடனும் வாடகைக்கு காரியாலயம் ஒன்றையும் எடுத்து அங்கு கடமையாற்றிய திருவாளர் பெர்னாண்டோவுக்கு ஊழியமும் வழங்கும் வசதி படைத்திருந்தது.

ஆனால் கணபதிப்பிள்ளை சிவராசா அவர்கள் திரு.துரைராஜாவின் வருகை எதுவித பிரயோசனமும் தரப்போவதில்லை என்றும் தன்னுடைய சார்பில் நிதி தருவது சாத்தியமில்லை எனவும் முற்றுமுழுதாக கைவிரித்துவிட்டார்.

இப்போது இந்த விமானப்பயணத்துக்கான செலவை வடநோர்வே தமிழ்ச்சங்கம் தனித்துப் பொறுப்பெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அப்பயணத்திற்கான ஒழுங்குகளை தளராது வட நோர்வேத் தமிழ்ச்சங்கம் (Nordlys பத்திரிகை அறிக்கை நோர்வே மொழியில்) பொறுப்பெடுத்துக் கொண்டது.

வட நோர்வேத் தமிழ்ச்சங்கம் கணக்கறிக்கையிலுள்ள இது சம்பந்தமான செலவு சிகப்பு வளையத்தால் சுட்டப்பட்டுள்ளது.

கணக்கறிக்கையின் முன்னுரை

கணக்கறிக்கை பக்கம் 2

கணக்கறிக்கை பக்கம் 3

யாழ் பல்கலைக்கழகத்துக்கு சேகரித்து அனுப்பபப்பட்ட நூல்களின் முதற்தொகுதி கிடைக்கப் பெற்றமைக்கான கடிதம்

இதுவே உபவேந்தர் துரைராஜாவின் தொரம்சோவிற்கான முதல் வருகையும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாவதற்கான அடித்தளமுமாகும். இதற்கு நிதி தர மறுத்தவர் தான் பெர்னாண்டோவின் கூட்டாளி கணபதிப்பிள்ளை சிவராசா.

இரண்டாவது தடவையாக உபவேந்தர் வந்தபோது அவரை பல்லக்கில் வைத்துத் தூக்காத குறையாக இவர்கள் பெர்ணாண்டோவும் புலம் பெயர்ந்த புலிவாலுகளும் ஓடியாடித் திரிந்தார்கள். ஏன் என்பது அவர்கள் அன்று சேர்த்துக் கொண்ட நிதியைக் குறிவைத்து நடத்தப்பட்டது தான். பல்கலைக்கழகத்துக்கு ஒரு அச்சு இயந்திரம் தேவை என்ற போர்வையில் சேர்க்கப்பட்ட இந்த நிதி எவ்வளவு?  அச்சு இயந்திரம் என்ன பெறுமதி அது என்னானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எந்த விபரமும் இன்று வரையும் வெளியாகவில்லை.

அவருடைய பிரச்சாரப்புள்ளிகளில் இதனை அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ரொம்சோ தமிழ்ச்சங்க தலைவராக பணியாற்றும்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனக்கென ஓர் அச்சுப்பதிப்பு பிரிவினை உருவாக்க தேவையான அச்சு இயந்திரங்களினை ரொம்சோ, பின்மார்க் ஆகிய பிரதேச மக்களின் பங்களிப்புடன் வழங்கியவன்

என்கின்றார்.

பொது நிதியைச் சேகரித்தால்,  பாவித்தால் அதற்காக கணக்குகளை என்றுமே பங்களித்தவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற நேர்மைகள் இவர்களுக்கு இருக்கவே இருக்காது.

இவர் நிர்வகித்த தமிழ்ச்சங்கத்தின் கணக்கு வழக்குகள் நிர்வாகம் கைமாறியபோது உரிய வகையில் மாறிவந்த நிர்வாகத்துக்கு கையளிக்கப்படவில்லை என்பதையும் குறித்துக் கொள்ளவும். Tamil Development Network of North Norway(TDNN) இன் கணக்குவழக்குகள் பிறகெப்படி வெளிச்சத்துக்கு வரும்.

தனது இடதுசாரிப் பாரம்பரியத்தை பின்வருமாறு அவர் குறிப்பிடுகின்றார். தாயகத்தில் இடதுசாரிப் பாரம்பரியத்தில் தமிழ்மக்களின் உரிமைக்காக தோழமையுடன் போராட்டங்களினை முன்னெடுத்தவன் என்கின்றார். கடைந்தெடுத்த வலதுசாரியப் புலிகளின் பாசிசப் போக்குகளை ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை அன்றிலிருந்து இன்றுவரை தோள் கொடுத்து காப்பாற்றிய இவர் போன்றவர்கள் இடதுசாரியத்தை உச்சரிக்கவே தகுதியற்றவர்கள். அதற்கான நேர்மையும் அற்றவர்கள். நாடுகடந்த தமிழீழம் என்பதே வலதுசாரியக் கொள்ளைக்காரர்களின் கூட்டு. இதற்குப்போய் இடதுசாரியத்தால் குஞ்சம் கட்ட முனைவது காரியவாதம்.

சாதியப்படித்தட்டுகள் நிலவுவது சமுதாய இயக்கத்துக்கு என்ன தடையைத் தருகின்றது அது தன்பாட்டில் சமூகத்தில் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று என்னோடு வாதம் புரிந்த இநத நபர் தான் இடதுசாரியப் பாரம்பரியம் பற்றி பாடம் எடுக்கின்றார்.

இவர் சிலாகிக்கும், இவரே கலாநிதியாக்கி வைத்த கணபதிப்பிள்ளை சிவராசா கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் வெற்றிகரமாக தொரம்சோப் பல்கலைக்கழகம் ஏற்படுத்திக் கொண்ட கல்விப்பரிமாற்றமும் அதன் ஒரு விளைவாய் கிழக்குப்பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த மருத்துவபீடமும் ஒப்பேறும் வரையும் அதற்கு ஒத்துழைக்க மறுத்தார். ஆனால் அது பலபேர்களின் முயற்சியால் ( ஒரு சில மாதங்களுக்கு முன்வரை தொரம்சோத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து தற்போது ஓய்வுபெற்றிருக்கும் திரு. அன்ரு பிலிப்புப்பிள்ளை அவர்களின் உழைப்பினாலும் ஆர்வத்தினாலும்) கைகூடி வந்தபின்னர் கிழக்கு மாகாண மருத்துவத்துறை அங்குரார்ப்பண விழாவுக்கு தன்னையும் நுழைத்துக் கொண்டு பிரமுகராக அதன் பின்னால் மற்றவர்கள் ஆற்றிய உழைப்பின் கவுரவத்தை அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளும் நோக்கில் பிரசன்னமானார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை ஆரம்பிப்பதானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ துறையினை நாளடைவில் இழுத்து மூடுவதற்கே வழிவகுக்கும் எனவும் இந்த இடங்களை சிங்கள மாணவர்களே நிரப்புவார்கள் எனவும் பலவிதமான எதிர்வாதங்கள் முளைத்தன. எனினும் அந்த துறை இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உருவாவதற்கு பின்னணியில் தாங்களும் உழைத்ததாக இவர்கள் இனி கயிறு விடுவார்கள்.

நாடுகடந்த தமிழீழக்காரர்கள் தாங்கள் மே 18 வரை ஆதரித்து நின்ற ஆயுதப்போராட்டம் மக்களை பணயமாக்கி அதன் பின்னால் தலைவரையும் சரணடைய வைத்து கொலை செய்வித்த பின் தோற்கடிக்கப்பட்டு, அதன் மறுஇரவே அவர்கள் ஜனநாயக ஞானம் பெற்றுக்கொண்டார்கள். அக்கணம் வரைக்கும் அவர்களுக்கு ஜனநாயகத்தை எழுத்துக்கூட்டக் கூடத் தெரியவில்லை. ஆயுதப் போராட்டம் ஆயுதப் போராட்டம் என்று கத்தி தலைவர் சாகும் கணம்வரை தெருவில் இறங்கி நின்றவர்கள் தலைவர் இல்லாமல் போன மறுகணமே ஜனநாயக வழியில் நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். அப்போ இந்த ஜனநாயகவழிக்கு நீங்கள் திரும்புவதற்கு தடையாக இருந்தது தலைவராக இருந்ததால் தான் அவரை சதி செய்து கொலைசெய்வித்தீர்களோ?

நீங்கள் இந்த ஜனநாயக வழியில் நாடுகடந்த தமிழீழம் என்ற பாதைக்கு தடையாக இருப்பார் தலைவர் எனவே அவரை சரணடையப்பண்ணி சாகடித்து இருக்கின்றீர்கள். அண்ணை எப்ப சாவான் திண்ணை எப்ப கிடைக்கும் என்று காத்திருந்து கடைசிவரை நம்பப் பண்ணி இறுதியில் கழுத்தறுத்திருக்கின்றீர்கள் ?

தமிழ்மக்களிடம் போராட்டத்தின் பெயரில் கடைசிக்கணம் வரையும் திரட்டி அபகரித்துக் கொண்ட சொத்துக்களுக்கு வகை சொல்லுங்கள் வல்லூறுகளே. கழுத்தறுத்தவர்களே. அவை தமிழ்மக்களின் பொதுச்சொத்து அதனை அவர்களின் பொது நிதியமாக்குங்கள்  நாடுகடந்த தமிழீழம் என்பது நயவஞ்சகர்களின் கூட்டு. நவீன கொள்ளைக்காரர்களின் கூடாரம்.