தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான சாவேஸ் முன்வைக்கும் சோசலிசத் திட்டங்களுக்கு ஏற்ப அந்நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தியமைப்பதா, கூடாதா என்பதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. ஏறத்தாழ 90 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வெனிசுலாவில், இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் 45% பேர் வாக்களிக்கவில்லை. எஞ்சிய 55% வாக்காளர்களில் 28% பேர் சாவேசின் திட்டங்களுக்கு எதிராகவும், 27% பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
மயிரிழைப் பெரும்பான்மையில் எதிர்ப்பாளர் தரப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிபர் சாவேசின் திட்டங்கள் இழுபறியில் சிக்கிக் கொண்டுள்ளது.
எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் அதிபரான சாவேஸ், அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்துச் செயல்படுத்த விழைகிறார். எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் தேசிய வருவாயில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார். எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, விவசாயப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கிச் சுயசார்பை நிறுவுவது, பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் எண்ணெய் உற்பத்தி சுத்திகரிப்பு நிறுவனங்களை நாட்டுடமையாக்குவது, அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக ஈரானுடன் சேர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பையும் தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பையும் நிறுவுவது எனும் தனது கனவுத் திட்டங்களைச் செயல்படுத்த விழையும் அதிபர் சாவேஸ், இதனை ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்றும் அறிவித்தார். வெனிசுலா ஒரு கம்யூனிச அரசு அல்ல என்ற போதிலும், வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படவில்லை என்ற போதிலும், தனது நடவடிக்கைகள் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிவரும் உலக மக்களுக்கு பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார், அதிபர் சாவேஸ்.
ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஜனநாயக உணர்வும் கொண்ட அதிபர் சாவேஸ், தனது சோசலிசக் கனவுத் திட்டங்களுக்கு ஏற்ப நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்த மக்களின் ஒப்புதலைப் பெறும் பொருட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்தினார். அதிபர் சாவேசின் பொருளாதாரக் கொள்கைகள் சோசலிசமல்ல; அவை முதலாளித்துவ சீர்திருத்தங்கள்தான் என்ற போதிலும், இந்தக் கருத்துக் கணிப்புத் தேர்தலில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் செய்தி ஊடகங்களும் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து, எதிர்ப்பிரச்சாரத்தை வீச்சாக நடத்தி, தேர்தலில் மயிரிழைப் பெரும்பான்மையில் வெற்றி பெற்று சாவேசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன. இத்தேர்தலில் சாவேஸ் அடைந்துள்ள தோல்வியைச் சாதகமாக்கிக் கொண்டு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பையும், ஜனநாயகத்தையும், மக்கள் நலத்திட்டங்களையும் ஒரேயடியாகக் குழி தோண்டி புதைத்துவிட அவை துடிக்கின்றன.
அதிபர் சாவேஸ், ஆகப் பெரும்பான்மையான வெனிசுலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தனது அதிகாரத்தைக் கொண்டு தனது விருப்பப்படி அரசியல் சட்டத்தைத் திருத்தியிருக்க முடியும். ஆனால், ஜனநாயக உணர்வு கொண்ட அதிபர் சாவேஸ், அரசியல் சட்டத் திருத்தத்திற்கு நாட்டு மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காகவே இக்கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்தினார். நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளைக் கைப்பற்றி நிலச்சீர்திருத்தத்தின் மூலம் விவசாயப் பொருளாதாரத்தையும் சுயசார்பையும் கட்டியமைப்பது, கிராமங்களில் கூட்டுறவு முறை மூலம் கூட்டுச் சொத்துடைமை கவுன்சில்களை நிறுவுவது, ஆலைகளில் 8 மணி வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைப்பது, பெண்களுக்குச் சட்டரீதியாக அனைத்துத் துறைகளிலும் சம உரிமையை நிலைநாட்டுவது உள்ளிட்டு அரசியல் சட்டத்தில் 69 வகையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அதிபர் சாவேஸ் விழைந்தார். இச்சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் அதிகாரம் தேவை என்பதால், ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் அதிபராக முடியாது என்ற கால வரம்பை ரத்து செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தவும் விரும்பினார்.
கருத்துக் கணிப்புத் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் சாவேஸ் அரசியல் சட்டத்தைத் திருத்தினால், அது ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்களுக்கும் பேரிடியாக அமைந்து பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். வெனிசுலா உழைக்கும் மக்களின் வாழ்வு மேம்படும். வெனிசுலாவை முன்மாதிரியாகக் கொண்டு தென்னமெரிக்க கண்டத்து இதர ஏழை நாடுகளும் அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பில் கூட்டுச் சேர்ந்து, மக்கள் நலனும் சுயசார்பும் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியமைக்க விழையும். இதனாலேயே, இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் அரசியல் சட்டத்தைத் திருத்தக் கூடாது என்று அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் செய்தி ஊடகங்களும் மூர்க்கமான பிரச்சாரத்தில் இறங்கின.
வெனிசுலாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளிப்படையாகவே அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது. அமெரிக்கக் கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் அமெரிக்காவின் ""எயிட்'', ""நெட்'' முதலான நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்து பிரச்சாரம் செய்ததோடு, வதந்திகளைப் பரப்பி மக்களைப் பீதியூட்டின. ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சாவேசின் திட்டங்களை எதிர்த்துப் பிரச்சாரம், விளம்பரங்களில் ஈடுபட்டதோடு வீதிகளில் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தன.
வெனிசுலாவின் தரகு முதலாளிகள் சாவேஸ் எதிர்ப்புக் குழுக்களுக்கு வெளிப்படையாக நிதியுதவி செய்ததோடு, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கிச் செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் உருவாக்கினர். வெனிசுலா உழைக்கும் மக்களின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, கட்டாயக் கல்வியின் பெயரால் குழந்தைகளைப் பள்ளிகளில் அடைக்கத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன.
கத்தோலிக்க மதகுருமார்களும் திருச்சபைகளும் சாவேசுக்கு எதிராக அணிவகுத்துப் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இக்கும்பல் நடத்திய சாலை மறியல் போராட்டத்தைத் தடுத்த சாவேஸ் ஆதரவாளர், கிறித்துவ மதவெறி குண்டர்களால் கொல்லப்பட்டார். சாவேஸ் அரசின் ஆளுநர்களும் மாநகராட்சித் தலைவர்களும் ஏகாதிபத்தியாவதிகளால் விலை பேசப்பட்டனர்; அல்லது நடுநிலை வகிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் சாவேஸ் நிரந்தரமாகச் சர்வாதிகாரம் செய்யத் துடிப்பதாக எதிர்த்தரப்பினர் திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டினர்.
அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான வரம்பை நீக்கிவிட சாவேஸ் விழைவதையே இப்படி சர்வாதிகாரியாகத் துடிப்பதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்து அவதூறு செய்கின்றனர். ஆனால் சாவேஸ் அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தனிநபர் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட விழையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட மாற்றுப் பொருளாதார அரசியலமைப்பு முறை தொடர்ந்து நீடிக்கவே விழைந்தார். அத்தகைய கொள்கைகளைச் செயல்படுத்தும் நிறுவனமாக அதிபர் பதவியைக் கருதி, அதனைக் காலவரம்பின்றி நீடிக்க விரும்பினாரே தவிர, தனிநபர் என்ற முறையில் பதவி சுகத்தை வரம்பின்றி அனுபவிப்பவதற்காக அல்ல. ஏகாபத்தியக் கைக்கூலிகளை அதிபராகக் கொண்ட மறுகாலனியாதிக்கக் கொள்கை தொடர்ந்து நீடிப்பதா, அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை அதிபராகக் கொண்ட சுயசார்பான கொள்கை தொடர்ந்து நீடிப்பதா என்பதுதான் இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் மையமான விவகாரம்.
ஏகாதிபத்திய நாடுகளிலும் அதன் அடிமை நாடுகளிலும் "ஜனநாயக' முறைப்படி அதிபர்களும் பிரதமர்களும்தான் மாறுகிறார்களே தவிர, அடிப்படையில் ஏகாதிபத்தியகாலனியாதிக்கத்தின் சர்வாதிகாரம்தான் காலவரம்பின்றி தொடர்ந்து நீடிக்கிறது. அதிபர்கள் மாறினாலும் ஏகாதிபத்தியக் கொள்ளையும் சூறையாடலும் மாறுவதில்லை. இச்சர்வாதிகாரிகள்தான், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுடன் சுயசார்பை நிறுவ விழையும் அதிபர் சாவேசைக் கூசாமல் சர்வாதிகாரி என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏகாதிபத்தியவாதிகள், இப்படி அவதூறு பிரச்சாரம் செய்து சாவேசை சர்வாதிகாரியாகச் சித்தரித்து வந்த நிலையில், போலி சோசலிஸ்டுகளும் போலி புரட்சியாளர்களும் இதற்குப் பக்க மேளம் வாசித்தனர். தமது கைக்கூலித்தனத்தை மூடி மறைத்துக் கொண்டு ""ஜனநாயகம்'', ""பன்மைவாதம்'' வேண்டுமென்று சித்தாந்த விளக்கமளித்தனர். உண்மையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பேரால், முதலாளித்துவ நாடுகளில் வர்க்க சர்வாதிகாரம்தான் நீடிக்கிறதே தவிர, அங்கு ஜனநாயகமோ, பன்மைவாதமோ கிடையாது. சொத்து, அதிகாரம் ஆகியவற்றில் முதலாளி வர்க்கத்தின் ஏகபோக ஆதிக்கம் நிலவும்போது அங்கு பன்மைவாதம் என்பது ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. இருப்பினும், ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகளால் உருவாக்கப்பட்ட பன்மைவாதம் என்ற கோட்பாட்டைப் பிதற்றிக் கொண்டு, ஜனநாயக வேடங்கட்டிக் கொண்ட இப்போலி சோசலிஸ்டுகள் சாவேசின் திட்டங்களை சர்வாதிகாரம் என்று சாடி, எதிர்ப்பிரச்சாரம் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
ஆனால், சர்வாதிகாரியாகச் சித்தரிக்கப்பட்ட அதிபர் சாவேஸ், 2002ஆம் ஆண்டில் சாவேஸ் அரசைக் கவிழ்க்க நடந்த எதிர்ப்புரட்சியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவோ தண்டிக்கவோகூட இல்லை. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவுமில்லை. இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் இச்சதிகாரர்கள் பிரச்சாரம் செய்யவும் தடை விதிக்கவில்லை. அந்த அளவுக்கு அதீத ஜனநாயகம் வழங்கி தாராளவாதமாக நடந்து கொண்டார். அவ்வளவு ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்களும் எவ்விதத் தடையுமின்றி எதிர்ப்பிரச்சாரம் செய்ய அனுமதித்தார். இப்படி எல்லையற்ற ஜனநாயகத்துடன் நடந்து கொண்ட அதிபர் சாவேசைத்தான் இவர்கள் "சர்வாதிகாரி' என்று அவதூறு செய்தனர்.
ஏகாதிபத்தியவாதிகள், அவர்களது கைக்கூலிகள், ""பன்மைவாதம்'' பேசும் போலி சோசலிஸ்டுகளின் மூர்க்கமான எதிர்ப்பிரச்சாரம் போராட்டங்களின் விளைவாக இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் அதிபர் சாவேஸ் தோல்வியடைந்துள்ளார். 2006ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் 63% வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த அதிபர் சாவேஸ். இப்போது 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை இழந்துள்ளார். ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப்பிரச்சாரம் ஒருபுறமிருக்க, மக்களிடம் பேராதரவையும் செல்வாக்கையும் பெற்றுள்ள அதிபர் சாவேஸ் இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் தோல்வியடையக் காரணம் என்ன? இம்முறை, அதிபர் சாவேஸ் மீது வெனிசுலாவின் கணிசமான உழைக்கும் மக்கள் அதிருப்தியடையக் காரணம் என்ன?
வெனிசுலாவின் தரகுப் பெருமுதலாளிகளும் வர்த்தக சூதாடிகளும் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் செய்தபோது, அதற்கெதிராக சாவேஸ் அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தட்டுப்பாட்டைப் போக்க பல கோடிகளைச் செலவிட்டு வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்தபோதிலும், ஊழல் மிகுந்த அதிகார வர்க்கத்தின் இழுத்தடிப்புகளால் அவை உழைக்கும் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் உழைக்கும் மக்களிடம் நிலவிய அதிருப்தியானது, தேர்தலிலும் எதிரொலித்தது.
அரசியல் சட்டத்தைத் திருத்தக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில், தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் வெனிசுலாவில் போட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெறப் போவதாக வதந்தியைப் பரப்பி பீதியூட்டின. தனியார் வங்கிகளும் இதற்குப் பக்கபலமாக நின்று நாட்டின் பொருளாதாரத்தையே அச்சுறுத்தின. ஆட்சிக் கவிழ்ப்பு நடக்குமோ எனுமளவுக்குப் பீதி நிலவியது. இருப்பினும், இதற்கெதிராக சாவேஸ் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறியது.
வெனிசுலாவின் பணவீக்கம் 18%க்கு மேல் யானைக்காலாக வீங்கிவிட்ட நிலையில் அதைக் கட்டுப்படுத்த சாவேஸ் அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணவீக்கத்தால் சாமானிய மக்களின் வருவாய் வீழ்ச்சியடைந்து, அதிருப்தியே நிலவியது. இதுதவிர, மருத்துவம்சுகாதாரம், குடிநீர் வழங்கல்கழிவுநீர் வெளியேற்றம், சாலைமின்வசதிபோக்குவரத்து முதலான அடிப்படைத் தேவைகள் பல ஆண்டுகளாகியும் இன்னமும் நிறைவேற்றப்படாததால், பல பகுதிகளில் சாமானிய மக்களிடம் அதிருப்தியையே சாவேஸ் அரசு சம்பாதித்தது. தனியார்துறையும், அரசுத்துறையும் கொண்ட கலப்புப் பொருளாதாரம், அதுவே 21ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அதிபர் சாவேஸ் பல திட்டங்களைச் செயல்படுத்த விழைந்த போதிலும், தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுத்து எதிர்த்திசையில் சென்றதால், இக்கலப்புப் பொருளாதார சோசலிசத் திட்டங்கள் முடங்கிப் போயின. எல்லாவற்றுக்கும் மேலாக, சாவேஸ் அரசின் அமைச்சரவையே ஒருங்கிணைந்த கண்ணோட்டமோ, செயல்பாடோ இன்றி அரசியல்சித்தாந்த ரீதியாகப் பிளவுபட்டுப் போயுள்ளது. இவையனைத்தின் விளைவுதான். இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் சாவேசுக்குக் கிடைத்த தோல்வி.
மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்ட அதிபர் சாவேஸ், வரம்புக்குட்பட்ட சில சீர்திருத்தங்களை மேற்கொண்ட போதிலும், அவரது கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கான அரசியல் கட்சி அவருக்கு இல்லை. அவரால் உருவாக்கப்பட்ட ""ஐந்தாவது குடியரசு இயக்கம்'' என்ற கட்சியானது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. அதுவும் சந்தர்ப்பவாதசட்டவாத சக்திகளைக் கொண்டதாகவே உள்ளது.
அதிபர் சாவேஸ் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ளாரே தவிர, அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களான ஏகாதிபத்தியவாதிகளும் தரகு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் வீழ்த்தப்படவில்லை. அவர்களது சொத்துக்கள் நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்யப்படவுமில்லை. இந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் வகையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அரசு எந்திரம் தூக்கியெறியப்பட்டு புரட்சிகர வர்க்கங்கள் தமது அதிகாரத்தை நிறுவவுமில்லை. மக்கள் போராட்டங்களால் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்கள் பின்வாங்கிக் கொண்டுள்ளனவே தவிர, அவற்றின் அதிகாரமும் பொருளாதார பலமும் ஆதிக்கமும் வீழ்த்தப்படவில்லை. கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற ஏழைகளும் அதிபர் சாவேசுக்கு ஆதரவாக உள்ள போதிலும் அவர்கள் புரட்சிகரவர்க்கப் போராட்ட அமைப்புகளில் அணிதிரட்டப்படவில்லை.
இத்தகைய சூழலில்தான் அதிபர் சாவேஸ் தனது வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைக் கொண்டு மக்கள் நலன் கொண்ட சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி, அதனை ""21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்'' என்றழைத்தார். தற்போதைய கருத்துக் கணிப்புத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதும், அவரது சோசலிசம் பொய்த்துப் போய்விட்டதாக ஏகாதிபத்தியவாதிகளால் எள்ளிநகையாடப்படுகிறது. ஏறத்தாழ ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததைப் போல, இக்கருத்துக் கணிப்புத் தேர்தல் மூலம் வெற்றி பெற்றுள்ள ஏகாதிபத்தியவாதிகள், அடுத்த கட்டத் தாக்குதலைத் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர். சாவேசின் வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்களைக் கூட செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அருகி வருகின்றது. இயல்பாகவே சோசலிசத்தின்பால் ஈர்க்கப்பட்ட வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட அதிபர் சாவேசின் சோசலிசக் கொள்கைகளும் திட்டங்களும் செயலிழந்து விட்டதைக் கண்டு அதிருப்தியுற்று, சோசலிசம் என்றாலே வெறுப்பாக பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கக் கட்சியால் தலைமை தாங்கப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் மலர்வதேயின்றி, தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வருவதல்ல. அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்ட ஏகாதிபத்தியவாதிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சொத்துக்களையும், உரிமைகளையும் பறித்து, உழைக்கும் மக்கள் தமது சர்வாதிகாரத்தைச் செலுத்தி அதிகாரம் செய்வதுதான் சோசலிசமே அன்றி, சுரண்டும் வர்க்கங்களுக்கு ஜனநாயகம் பன்மைவாதம் அளிப்பதல்ல. பாட்டாளி வர்க்க சித்தாந்தமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமோ இல்லாமல் சோசலிசத்தை நிறுவ முடியாது; தனிநபரின் உயர்ந்த நோக்கங்களால் சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் முடியாது. இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்திவிட்டு வெனிசுலாவும் அதிபர் சாவேசின் சோசலிசமும் மீள முடியாத நெருக்கடியில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.
· பாலன்