நாம் இறுதி மூன்று சந்திப்புக்களில் இலங்கையுடனான அமெரிக்க, இந்திய, உறவுகள் தேசிய இனப்பிரச்சனை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது எனப் பேசியுள்ளோம். அவர்கள் எம்மைக் கையாளுவதில் தமக்கான ஆதாயங்களைத் தேடுவதைப்போலவே நமக்குள்ளும் ஒவ்வொரு தரப்பும் அவர்களைப் பயன்படுத்த முனைகையில் எமக்கிடையேயான முரண் மேலும் பகை நிலையை வலுப்படுத்த ஏதுவாகிறது.
பலதரப்பட்ட நோக்குகள்
அத்தகைய மோதல் அதியுச்சமடைந்து வீழ்ந்துவிட்ட நிலையில் மீண்டும் தொடங்கும் மிடுக்கு எத்திசை வழி என்பது குறித்தே இன்று பேசவேண்டியுள்ளது. புலிகள் ஜக்கியப்பட மறுத்து, வெகுஜன மார்க்கம் பற்றிய அக்கறையின்றி, முற்றுமுழுதாக ஆயுதத்தை மட்டுமே நம்பி, சர்வதேச பார்வையின்றி ஆதீக்க சக்திகளோடு உறவாடி தமிழீழப் போராட்டத்தை தோல்விக்கு இட்டுச்சென்றாரகள்@ இந்தத் தவறுகளைக் களைந்து புதிய வடிவில் எழுச்சியைச் சாத்தியப்படுத்தினால் தமிழீழத்தை வென்றெடுத்து விட முடியும் என நம்புகிற சக்திகள் நம்மிடையே உண்டு. தமிழீழம் அல்ல, ஏற்கத்தக்க சுயாட்சி வடிவம் வேண்டும் என்போரும் உளர். எதுவும் குறியின்றி வாழ்ந்து தொலைப்போம் என்கிற போக்கிலும் ஏராளம் பேர்.
நமக்குள்ளே இப்படியாக, சிங்கள மக்கள் மத்தியிலும் பல்வேறு சக்திகள். அதுதான் புலிகளை அழித்து ஒழித்தாயிற்றே – இனியும் என்ன இனப்பிரச்சனை பற்றிய பேச்சு ஒரே நாடு, ஒரே தேசியம் என்பதை ஏற்று எல்லோரும் இருக்க வேண்டியதுதானே என்ற ஒரு தரப்பு. தமிழருக்கு மொழிப் பிரயோகம் குறித்த பிரச்சனை உண்டு, அதனைப் புரிந்துகொண்டு தீர்வுகாண வேண்டும் என்போர் இன்னொரு படி நிலை. இலங்கை பல்கலாசார நாடு என்ற உணர்வோடு விட்டுக்கொடுப்புகளுடன் வாழ வேண்டும் என்போர் மற்றொரு நிலை. தேசிய இனப் பிரச்சனை ஆழமானது, சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு தேட வேண்டும் என்போரும் சிங்கள மக்கள் மத்தியில் கணிசமாக உண்டு.
சிறுபான்மையினர் எல்லாம் இனிமேல் அடங்கி வாழப் பழக வேண்டியதுதான் என்ற காட்டுமிராணிக் கடப்பாட்டை பெரிது படுத்தி வியாபாரப்படுத்தும் தமிழ் ஊடகங்கள் தேசிய ஒருமைபாட்டுக்காக முனையும் சிங்கள சக்திகளை இருட்டடிப்புச் செய்யவே முயல்கின்றன. மிகப் பெரும்பாண்மையான சிங்கள மக்கள் சிறுபான்மையினத்தவர்களுடன் புரிந்துணர்வுடன் வாழவே விரும்புகின்றனர். இதற்கும் அப்பால் அரசியல் தீர்வுகள் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதற்கு வழிபடுத்தப்படாமல் இருப்பதற்கு சிங்கள ஊடகங்களும் அதிகார சக்திகளும் மேற்கொள்ளும் உத்திகள் காரணங்களாய் அமைவன.
சிங்களத் திரைப்படம்!
அவற்றை மீறி சிங்கள மக்களை விழிப்புணர்வூட்டி அரசியல் அக்கறை கொள்ளச் செய்யவும், விடுதலை வேட்கை மேற்கிளம்புமாறு தூண்டவுமான முயற்சிகளை சமூக – பண்பாட்டு அரசியல் சக்திகள் மேற்கொண்டவாறேயுள்ளனர். அத்தகைய முன்னெடுப்பில் இன்று தாக்கம் செலுத்துவதாய் “இர ஹந்த யட்ட” என்ற திரைப்படம் விளக்கம் காணலாம்.
“சூரிய சந்திரரின் கீழே” எனும் பொருள்படும் அந்தச் சிங்களத் திரைப்படம் இத்தாலியில் இடம்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் பரிசுகள் பெற்ற அதேவேளை வெகுஜன ரசனையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பலதரப்பட்ட மக்கள் தரப்பினரையும் கவர்ந்திழுத்துள்ள அத்திரைப்படம் சூரிய சந்திரரின் கீழுள்ள இந்த மண்ணில் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்ந்தாக வேண்டும் என்பதனை உணர்த்த முயல்கிறது.
திரைப்படம் தொடங்குகையில் “சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எனப்பல்லின மக்கள் வாழும் நாடு இலங்கை” என்ற எழுத்துரு காட்சிப்படும். கூடவே புலிப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையும் நன்றியுணர்வோடு முன்வைக்கும் (அது இல்லாத நிலையில் படம் பெட்டியை விட்டு வெளிப்பட்டிருக்க முடியாதோ என்னவோ?) முப்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவரால் சிறுமியொருத்தி வைத்தியசாலையிலிருந்து பொறுப்பெடுக்கப்பட்டு பிக்கப் வாகனத்தில் கொழும்பிலிருந்து வன்னி நோக்கி பயணிப்பது காட்சியில் கூடவே, வன்னிப் பகுதியில் விடுமுறை பெற்று இராணுவத்தினர் பஸ்கள் சிலவற்றில் தெற்கு நோக்கிய பயணிப்பு (நீண்ட நாட்களுக்குப் பின் அம்மாவை – மனைவி பிள்ளைகளைப் பார்க்கப்போவதாக அவர்கள் கிளம்புவதைக் காட்டும் போதே விடயத்தை முன்னனுமானிக் முடிகிறது). மற்றொரு வாகனம் எல்வ் வண்டி – மரக்கறி ஏற்றப்பட்ட நிலையில், கூட வந்த ஒருவர் வெற்றி முழக்கம் கூறி இறங்குகையில் முழுதாகப் புரிந்துவிடுகிறது அனர்த்தம். ஓய்வெடுத்த இராணுவ வாகனங்கள் மீது தற்கொலைத் தாக்குதலில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்ற செய்தியை, சம்பவம் சற்றுத்தொலைவில் நடப்பதை தேநீர்க்கடையில் தரித்து நின்ற நிலையில் சிறுமியோடு பயணித்தவர் பார்த்ததுடன் தொலைக்காட்சிவாயிலாக சந்தேகமற்றவகையில் அறிந்துகொள்கிறார். இருப்பினும் வடக்கு நோக்கிய பயணிப்பைத் தொடர்கிறார். வன்னியில் இருக்கும் அம்மாவிடம் அந்தச் சிருமியை ஒப்படைக்க வேண்டும்.
வன்னியில் தனது வீட்டில் தோசை சுட்டுக்கொண்டிருக்கும் அம்மா புலிகளின் வானொலி வெற்றிகரமான தாக்குதலைக் கூறிப் பதிலடியாக இராணுவம் தாக்குதல் தொடுக்கலாம் என்று கூறியதைக் கேட்டு அதிர்கிறாள். இறுதிச் சமாதானம் குழம்பப் போகும் தருணம். தெற்கில் மகள் இருக்க வன்னியில் தான் மட்டும் வாழ முடியாது என்ற அலதியில் சைக்கிளில் பறக்கிறாள் அந்த இளம் தாய். சென்றி மூடப்பட்டது. செய்வதறியாது தவித்துப்போய்த் தனித்திருக்கிறாள். புலிக்காவலர் கவனியாத நிலையில் தப்பித்து ஓடுகிறாள். கவனித்தவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தவளை நோக்கி துப்பாக்கிச் சன்னங்களை ஏவுகின்றனர்.
வன்னியை நோக்கி இராணுவ அதிகாரியான சிறுமியின் பாதுகாவலர் இராணுவ சென்றி அனுமதியோடு பயணிக்கையில் செல்லடி தொடங்கிவிடுகிறது. அதிர்ச்சியில் வாகனம் நின்ற நிலையில் சிறுமி இறங்கி ஓட. அவர் பிடிப்பதற்கு ஓட – ஷெல்லடி கண்மூடித்தனமாக – அந்த இடம் புகை மூட்டத்தினுள்.
இவர்களின் கதை இனித் திரையில். அவர் கோப்ரலாக இருந்த போது இடம் பெற்ற யுத்தத்தில் மாட்டுப்பட்ட நிலையில் அவரது கப்ரின் இந்த பெண்ணை சந்தித்து தான் அப்போதும் அவள் மீதான காதலுடனேயே இருந்ததை (இறந்ததை) சொல்லப் பணித்ததை ஏற்று அவளை தேடி சமாதான காலத்தில் வன்னியில் கண்டுகொள்ள முடிகிறது. அவள் மூலமாக அவர்களது திருமணத்தை அறிய இயலுமாகிறது. கப்ரினின் தாய் தமிழச்சியை வெறுக்கிறாள் – அக்கா ஒருத்தி, ஏற்புடையவள். மாமியாரது வெறுப்பை தாள முடியாத போது வன்னிக்கு வந்த நிலையிலேயே மகளை பெற்றெடுக்கிறாள். சிறுமியாக வளர்ந்த போது கண்டறிந்த நோய் காரணமாக, அவர்களைச் சந்தித்த கோப்ரல் கொழும்புக்குச் சிறுமியை அழைத்து வந்து வைத்தியம் செய்கிறார். வைத்தியம் முடிந்து பயணிக்கையில் கப்ரினின் தாய்க்கு பேத்தியைக் காட்டுகிறார். தனது மகனின் குழந்தை என்பதால் தனக்கேயுரியவள் என அந்த அம்மா மீட்டெடுத்து கோப்ரல் வடக்கு நோக்கிப் பயணம்.
இங்கே. கப்ரினின் அம்மா பேத்தி தனக்கு வேண்டும் என அரற்றியபடி தமிழச்சியான மருமகள் மீதான திட்டுதல்களுடன். கப்ரினின் அக்கா சொல்வாள் “குழந்தை எங்களுக்குத்தான்”. “எப்படி?” “உனது மருமகளையும் ஏற்கிற நிலையில்!” திகைப்புடன் அந்தத் தாயின் முகமாற்றங்கள் திரையில். ஒரு சிறு புன்னகை – ஏற்பினை வலியுறுத்தியவாறான சிறிய தலையசைப்பு. இப்போது கோப்ரலின் வாகனம் சிறுமியோடு வடக்கு நோக்கிப் பயணிக்கிறது. சூரியர் சந்திரரின் கீழே நாமெல்லோரும் ஒன்று என்பதான பாடலொன்று ஒலித்துக்கொண்டிருக்க அரங்கு ஒளிபெறும். பரவாயில்லை, சாவுகளுடன் படம் முடியவில்லை. பயணத்தோடு, எழுகிறோம்!
நடக்கக்கூடாத என்னவெல்லாமோ நடந்துவிட்டன. அதையெல்லாம் பேசிக் காலம் கழிக்க வேண்டாம். பயணத்தைத் தொடர்வோம். இரும்பு மனங்களும் இழகி சிறுபான்மையினரோடு இணங்கி வாழ முன்வரும் அவசியம் உணர்தல் அந்தக் கலையின் உச்சம். இங்கும் விமர்சனம் உண்டு. புலிப்பயங்கரவாதத்தை மிக வலுவாக வெளிப்படுத்திய திரைப்படம் அரச பயங்கரவாதத்தின் சிறிய சுவட்டையும் காட்ட முனையவில்லை (தனிப்பட்ட இராணுவ அவசரகாரரால் சுட்டுக்கொல்லப்பட்ட நாயகியின் தாய் – தந்தையர் காட்சிப்படுத்தப்பட்ட போது கப்ரினின் நியாய உணர்வுக்கான இடமாக மட்டுமே அது வருகிறத. நாயகியையும் கொல்ல எத்தனிக்கும் சக வீரனிடமிருந்து காப்பாற்றிய பின் – கப்ரினாக பதவியுயர்வு பெற்று வந்த நிலையில் அகதி முகாமில் அவளைச் சந்தித்து திருமணம் செய்கிற அளவிலான கதையோட்டம். தமிழ்க் குடும்பக் கொலை என்ற அந்தக் காட்சிப்படுத்தலும் அரச பயங்கரவாதத்தை உணர்த்தத் தவறியிருந்தது).
இருப்பினும் அது இன்னொரு தளத்துக்குரியது எனச் சமாதானம் கொள்வது தவிர்க்கவியலாதது. திரைப்படம் உணர்த்த முனையும் கருத்தியலை மனம்கொள்ளும் போது இந்தச் சமாதானத்தை அவசியமற்றதாக எண்ண இடமில்லை. சிங்கள மக்களுக்கான அந்தத் திரைப்படம், தமிழர், முஸ்லிம்களோடு ஒரே குடும்பம் போன்ற பந்தத்தோடு வாழவேண்டும் என்பதனை எத்தனை ஆழமாக வலியுறுத்தியுள்ளது என்பதே இங்கு பிரதானமாகும். ஒரு கலைபடைப்பு எல்லா விடயங்களையம் சாதித்தாக வேண்டும் என்கிற அவசியமில்லை. தனது நோக்கத்தை “இர ஹந்த யட்ட” நிறைவு செய்திருப்பதாகவே படுகிறது.
யுத்தத்திற்கான அடிப்படைக் காரணம்
அரச பயங்கரவாதமே யுத்தத்துக்கான அடிப்படைக் காரணம் என்பதை வேறு சிங்களத் திரைப்படங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. காட்டப்போய் பெரும் சிரமங்களை எதிர்நோக்கின. இன்னும் பெட்டியினுள் முடங்கியுள்ள ஒரு படம் பற்றியும் தகவலுண்டு. சிரமங்களை எதிர் கொண்ட போதிலும் வெற்றிகரமாக வெளிவந்து ஓடிய ஒரு படம் “அலிமங்கட” (ஆனையிறவு). சிங்கள நாவலாக முன்னரே வெளிவந்து ஆங்கில மொழிபெயர்ப்பையும் கண்ட இந்த நாவலின் ஆசிரியர் குடும்பத்தோடு கொல்லப்பட்டார் என்பது கவனத்திற்குரியது. அது சிங்கள இராணுவ வீரர் ஒருவரும் பெண்போராளி ஒருத்தியும் ஆனையிறவிலிருந்து கொழும்பு நோக்கி வருவதைச் சித்தரிப்பது. இருவரிடையேயான விவாதங்களில் பேரினவாத அரச பயங்கரவாதம் தமிழ் போராட்டத்தின் நியாயத்தை வெளிப்படுத்தவல்லது என்பது போதியளவுக்கு காட்டத்தக்கவாறு காட்சிகள் அமைந்திருந்தன.
இவற்றுக்கும் அப்பால், ஏனைய தேசிய இனங்களின் சம உரிமைகளை சிங்கள மக்கள் உணரும்வகையில் பேசும் முயற்சி போதிய வலுவோடு இல்லை எனும் ஆதங்கம் இருக்க முடிகிறது என்பது உண்மைதான். அத்தகைய சக்தியும் சிறிய அளவிலேனும் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றன. இருந்த பலர் முப்பது வருட பயங்கரவாதப் பேயாட்டத்திற்குப் பலியாகிப் போயிருந்தனர். இன்னும் சிலர் நாட்டை விட்டு ஓடவேண்டியிருந்தது. அதைமீறியும் இன்னமும் அத்தகைய சக்திகள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து குரல்கொடுக்கிறார்கள் என்பதுதான் பிரதானமான அம்சம்.
எமது தரப்பில் நாம் என்ன செய்யப்போகிறோம்? அந்நிய சக்திகளிடம் காட்டிக்கொடுக்கும் எத்தனங்களுடன் காவடி தூக்கும் தலைமைகளை கண்டிக்கமாட்டோமா? தமிழ்த் தேசியத்தின் நியாயமான கோரிக்கைகளைப் பிரிவினை வாயிலாக வென்றெடுக்க அவசியமில்லை என்ற முடிவினைத் தெளிவாக முன்னெடுக்க வேண்டாமா?. பிரிவினையல்ல சுய நிர்ணய உரிமை என்பதை உணர்த்தமாட்டோமா?. எவர் மீதும் மேலாதிக்கம் கொள்ள எத்தனிக்காமல், சம உரிமையுடன் எல்லோரும் ஒன்றுபட்டு இலங்கையை மீண்டும் சுயாதிபத்தியம் உள்ள நாடாக கட்டியெழுப்புவதற்காகவே சுயநிர்ணயப் போராட்டம் என்பதை சிங்கள மக்களுக்கு உணர்ந்த முன்வரமாட்டோமா? அவ்வாறு சிங்கள மக்களிடம் எமது நியாயமான கோரிக்கைகளை வெளிப்படுத்த ஏற்ற வடிவங்களைத் தேடமாட்டோமா?