PJ_2008_02.jpg

அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரு தனிவகை சாதி (caste) என்றார் லெனின். ஒட்டுமொத்த சிவில் சமுதாயத்துக்கும் (நாட்டின் மக்கள் அனைவருக்கும்) பகையான எதிரி சாதி இதுவே ஆகும் என்றார் லெனின்.

 

நாட்டின் அரசு அங்கங்களான, உள்நாட்டுவெளிநாட்டு நிர்வாகிகளாக உள்ள அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதித்துறை, சிறைத்துறை ஆகிய அனைத்துப் பிரிவு அதிகாரிகளையும் இவ்வாறு தனிவகை சாதி என்று லெனின் வகைப்படுத்துகிறார்.

 

நமது நாட்டில் பிறப்பால் தீர்மானிக்கப்படும் பரம்பரைசமூக ரீதியிலான சாதியைப் போன்றதல்ல இந்தச் சாதி. படிப்புபயிற்சி, பதவி இவற்றால் கிடைக்கும் அதிகாரம், சமூகஅரசியல் தகுதி ஆகியவற்றால் இவர்கள் தனிவகைச் சாதியாக அமைகிறார்கள்.

 

இந்தச் சமூகத்தில் சாதி ரீதியாகப் பார்க்கப் போனால் பெரும்பாலும் மேட்டுக்குடி, மேல் சாதியினர், குறிப்பாக பார்ப்பனர் உள்ளிட்ட முற்பட்ட சாதியினரே இந்தப் புதிய வகை சாதியில் இருக்கின்றனர். என்றாலும், வர்க்க ரீதியில் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் இந்தச் சாதியில் சேருவதற்கு மிகவும் ஆசைப்படுகின்றனர்.

 

பிறப்பால் வெவ்வேறு சாதிகளில் இருந்து தனித்தனி நபர்களாகச் சேர்ந்து ஒரு புதிய சாதியாகும் இவர்கள், படிப்புபயிற்சி, பதவிஅதிகாரத்தால் ஒரே வகையான பண்புகளைப் பெறுகிறார்கள். நாட்டையும் மக்களையும் நிர்வகிக்கும் பொறுப்புமிக்க கடமையாற்றுவது என்கிற பெயரில் ஆளும் வர்க்கங்கள், ஆளும் சாதிகளின் சார்பாக நாட்டுக்குத் துரோகம் செய்வதும், பரந்துபட்ட மக்களை ஒடுக்குவதும் இந்தச் சாதியின் கடமையாக உள்ளன. அதற்காகவே இந்தச் சாதி அடிப்படையில் இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டது என்றும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள்தாம் இந்தச் சாதியைத் தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் ஒரு பொய்யான, அரசியலற்ற வாதத்தை ஆளும் வர்க்கங்களும், ஆதிக்க சாதிகளும் அவர்களின் செய்தி ஊடகங்களும் திரும்பத் திரும்ப முன் வைத்து வருகின்றன.

 

""எந்தவொரு பிரச்சினையிலும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் தலையீடு மட்டும் இல்லாமல் இருந்தால், அரசை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளின் கைகள் கட்டப்படாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுவார்களேயானால் எல்லாம் சரியாக இருக்கும்; நிர்வாகம் சரியாக நடப்பது மட்டுமல்ல, நாட்டில் இலஞ்ச ஊழலும், அதிகார முறைகேடுகளும் கூட இருக்காது'' என்று கூறப்படுகிறது.

 

அரசியல் விழிப்புணர்வோ, அரசியல் அறிவோ இல்லாத, படித்தும் பாமரர்களாக உள்ள பிழைப்புவாத நடுத்தர வர்க்கத்தினருக்கும், உதிரித் தொழிலாளர்களுக்கும் இந்த அரசியலற்றவாதம் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதனால்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், ரஜினி போன்றவர்கள் இந்த அரசியலற்றவாதத்தை வைத்து அரசியல் ""பண்ணுகிறார்கள்.''

 

தங்கள் தொழில் சார்ந்த துறையில் மட்டும் குந்திக் கொண்டு அறிவைச் செலுத்தும் அறிவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் கூட அரசியலற்ற பிழைப்புவாதக் கண்ணோட்டம் காரணமாக, அரசு அதிகாரச் சாதி பற்றிய மேற்கண்ட கருத்தையே கொண்டிருக்கிறார்கள். மேலும் இத்தகைய அறிஞர்கள் குடும்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அரசு அதிகார சாதியோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார்கள். ஒன்று, அவர்களின் பெற்றோர்கள் அரசு அதிகாரச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்; அல்லது, அவர்களின் பிள்ளைகளை அரசு அதிகாரச் சாதியில் சேர்த்து விடுகிறார்கள்.

 

தமிழ்நாட்டிலோ, பார்ப்பனியமயமாக்கப்பட்ட செய்தி ஊடகங்கள், இன்னொரு கோணத்திலிருந்து, இந்த அரசு அதிகாரச் சாதியைப் புனிதப்படுத்துகின்றன. அதாவது, தேசியக் கட்சிகள் தேர்தல்களில் தோல்வியுற்று ஆட்சியதிகாரத்தை இழந்த பிறகுதான் தமிழ்நாட்டில் இலஞ்ச ஊழலும், அதிகார முறைகேடுகளும் பன்மடங்கு பெருகி விட்டன; இராஜாஜி, காமராஜர் ஆட்சிக் காலத்தில் எல்லாம் அரசு அதிகாரிகள் அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்கள்; திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் எல்லாம் கெட்டுப் போய்விட்டன என்று திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றது. அதாவது, தேசியக் கட்சிகள் ஆட்சி செலுத்தியபோது, பார்ப்பன மற்றும் பிற முற்பட்ட சாதியினர் பெரும்பாலும் அரசு அதிகார சாதியின் இடத்தில் ஆதிக்கம் வகித்தபோது, இலஞ்ச ஊழலும் அதிகார முறைகேடுகளும் கிடையாது என்பதுதான் பார்ப்பனமயமாக்கப்பட்ட செய்தி ஊடகங்களின் வாதம்.

 

இன்னொரு தவறான கருத்தும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதாவது, அரசு அதிகாரச் சாதியைச் சேர்ந்தவர்களிலேயே, கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடையேதான் இலஞ்ச ஊழலும், அதிகார முறைகேடுகளும் நடக்கின்றன. நல்ல படிப்பும் பயிற்சியும், தகுதியும் பொறுப்பும் கொண்டவர்களாகிய மேல்மட்டத்தில் உள்ளவர்கள் நேர்மையாகவும், திறமையாகவும் இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கை பரப்பப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரச் சாதியினரும் சம்பந்தப்பட்ட இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மற்றும் பிற கிரிமினல் குற்றங்கள் நடப்பது வெளிவரும் போதெல்லாம் மூத்த, மேல்மட்ட அரசு அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது.

 

ஆனால், நாளும் வெளியாகும் உண்மைத் தகவல்கள் மேற்கண்ட கருத்துக்கள் எல்லாம் தவறானவை என்றே நிரூபிக்கின்றன. அதாவது தமிழ்நாட்டை விட, பிற மாநிலங்களில்; திராவிடக் கட்சிகள் மற்றும் பிற மாநிலக் கட்சிகள் அல்லாத தேசியக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மற்றும் பிற கிரிமினல் குற்றங்கள் ஒன்றும் குறைவானவைகளாக இல்லை. அதே போன்று அரசு அதிகாரச் சாதியின் கீழ்மட்டத்திலுள்ளவர்களை விட, மேல்மட்டத்தினர் அளவிலும் தன்மையிலும் அதிகமான இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகளிலும் பிற கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர்.

 

நாட்டின் அரசுத் துறைத் தலைநகர் தில்லியும், பொருளாதாரத் தலைநகர் என்றழைக்கப்படும் மும்பையும்தான் முறையே நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது கிரிமினல் குற்றத் தலைநகரங்களாக அறியப்படுகின்றன.

மராட்டிய மாநிலத் தலைமைப் போலீசு அதிகாரியும், புதுதில்லி உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியும் கோடிகோடியாய் சொத்துக்களைக் குவிக்கும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தனர் என்ற இரண்டு விவகாரங்கள் மேற்கண்ட உண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளன.

 

பர்வீந்தர் சிங் பாஸ்ரிகா, மகாராட்டிர மாநிலப் போலீசுத் துறையின் முக்கியமான உயர் போலீசு அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளில் 35 ஆண்டுகள் ""பணியாற்றி'' இருக்கிறார். அவற்றுள், மும்பை மாநகர போலீசு ஆணையாளர், இலஞ்ச ஒழிப்புத் துறைத் தலைமை போலீசு அதிகாரி மற்றும் மகாராட்டிர மாநில பொதுத் தலைமை போலீசு இயக்குநர் (டி.ஜி.பி.) ஆகியவை மிகமிக முக்கியமானவை.

 

மும்பை மற்றும் மகாராட்டிர போலீசின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து, மற்றவர்களைவிட அதிக அளவு அக்கறை இந்திய தேசிய அறிவு ஜீவிகளுக்கு உண்டு. ஏனென்றால், இவர்கள் மிகவும் பீதியடைந்துள்ள பயங்கரவாதம் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்கள் நிறைந்த இரகசிய உலகம் இரண்டையும் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய ""கடமை'' மும்பை மற்றும் மகாராட்டிர போலீசுக்கு அதிகமாகவே உள்ளது என்று இவர்கள் கருதுகிறார்கள். ""இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக, அதன் நரம்பு மண்டல மையமாகக் கருதப்படும் மும்பையைத்தான் அந்நிய மண்ணிலிருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதிகள் மீண்டும் மீண்டும் குறி வைத்துத் தாக்குகிறார்கள்'' என்று இந்திய தேசிய அறிவுஜீவிகள் நம்புகிறார்கள். அந்தப் பயங்கரவாதிகளுடன் கூட்டு வைத்துள்ள மும்பை மாஃபியா தாதாக்களின் இரகசிய உலகம் மிகவும் சக்தி வாய்ந்த ஆபத்தானது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

 

அவை இரண்டையும் ""அடக்கி ஒடுக்கவேண்டிய பொறுப்புள்ள பதவி வகிக்கும் டி.ஜி.பி. பர்வேந்தர் சிங் பாஸ்ரிகா. பயங்கரவாதிகள் மற்றும் மாஃபியா தாதாக்களின் கூட்டாளிகளான கட்டுமானத் தொழிலதிபர்களின் பங்காளிகளாக மாறி, பலநூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய வீடு மற்றும் வீட்டுமனைத் தொழிலைத் தானே நடத்தி வருகிறார். அதற்காகத் தனது உயர் போலீசுப் பதவியையும் கேடாகப் பயன்படுத்தி வருகிறார். அவரது தொழிலில் கருப்புப் பணம் கரைபுரண்டு ஓடுகிறது.

 

2001ஆம் ஆண்டு மும்பை சட்டம்ஒழுங்கு இணை ஆணையாளராக இருந்தபோது, கோலாப்பூர் நகரில் 8000 சதுர அடி அளவுள்ள, கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தின் 2 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய அடித்தளம் முழுவதையும் 1.16 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதன் தற்போதைய மதிப்பு 6 கோடி ரூபாய் ஆகும். மும்பை நகர ஆணையாளராகப் பதவியேற்ற நாளன்றே 2004ஆம் ஆண்டு ஒளரங்காபாத் நகரில் 3.5 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய 3.25 ஏக்கர் நிலத்தை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதன் தற்போதைய மதிப்பு 10 கோடி ஆகும். 2005ஆம் ஆண்டு மகாராட்டிரா மாநில ஊழல் தடுப்பு பொது இயக்குநராகப் பதவியேற்ற பிறகு மும்பை நகரின் அந்தேரி பகுதியில் 5 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய சுமார் 7000 சதுர அடியுள்ள நான்கு தளங்களை வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு பாஸ்ரிகா வாங்கினார்; அதன் தற்போதைய மதிப்பு 6.5 கோடி ரூபாய் ஆகும். 2004ஆம் ஆண்டே 1.35 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய 4,700 சதுர அடித் தளங்களை 7 கோடி ரூபாய்க்கு வாங்கினார்; அதன் தற்போதைய மதிப்பு 7 கோடி ரூபாய் ஆகும். 2001ஆம் ஆண்டு மும்பை வோர்லி குடிசைப் பகுதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 2000 சதுர அடிகள் பரப்புடைய இரண்டு தளங்களை 96 இலட்சம் ரூபாய்க்கு வாங்கி 1.5 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்; மேலும் இதற்கு ஏராளமாக கருப்புப் பணமாகப் பெற்றுள்ளார்.

 

இவை தவிர, நாசிக் நகரில் 485 சதுர மீட்டர் அளவு வீட்டுமனையும், நேருல் நகரில் 3,600 சதுர மீட்டர் வீட்டுமனையும், பூனே நகரில் ஒரு ஏக்கர் பரப்புடைய தொழிற்சாலைக்கான மனையும், பேலாப்பூர் நகரில் பிரம்மா வணிக வளாகத்தில் இரண்டு அலுவலகங்களும், மும்பை, சர்ச் கேட் பகுதியில் தில்வாரா குடியிருப்பில் ஒரு தளமும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

 

இவ்வளவு சொத்துக்களையும் தனது மனைவி, மகன், மகள் பெயரில் மட்டுமல்ல, நேரடியாகத் தனது பெயரிலேயே வாங்கிக் குவித்துள்ளார். இவ்வளவு சொத்துக்கள் வாங்கியதையும் குறைவான மதிப்புப் போட்டு வருமான வரிக் கணக்கில் காட்டியுள்ளார். இந்த வருமானத்திற்கே கூட மூலாதாரம் என்னவென்றோ, இவ்வளவு சொத்துக்களை வாங்கிக் குவித்தது குறித்தோ விசாரணையும் தண்டனையும் இன்றி திமிரோடும், ஆடம்பரமாகவும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்.

 

பர்வீந்தர் சிங் பாஸ்ரிகா தனது வீடு வீட்டுமனைத் தொழிலைப் பெருக்கிக் கொள்ளவும், சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கும் போலீசு உயர் பதவியைக் கேடாகப் பயன்படுத்திக் கொண்டு, மும்பை மாஃபியா தாதாக்களுடன் நேரடித் தொடர்புடைய கட்டுமானத் தொழிலதிபர்களைப் பல குற்றவழக்குகளில் இருந்து தப்புவித்தும் வருகிறார்.

 

மேற்கு மும்பையின் பிரபலமான கட்டுமானத் தொழிலதிபர் ""எவர்சைன்'' நிறுவன முதலாளி ராஜ்குமார் ராமச்சந்திரா லுத்வானி. இவர் மும்பை தாதாக்கள் தாவூத் இப்ராகீம் மற்றும் சோட்டா ஷகீல் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து, போட்டியாளர்களை உருட்டி மிரட்டிக் கட்டுமான இடங்களை அடாவடியாகப் பிடுங்கிக் கொள்ளும் வழக்கில் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டார். லுத்வானியை பயாந்தர் போலீசு நிலையத்திலிருந்து தானே மாஜிஸ்ட்ரேட் வழக்குமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, தானே போலீசு மேலாளர் ராமராவ் பவார் மூலமாக தலையீடு செய்த ஊழல் தடுப்புப் பொது இயக்குநர் பாஸ்ரிகா, குறுக்கீடு செய்தார். லுத்வானி மீது மிகச் சாதாரண வழக்கொன்றைப் போட்டு, 24 மணி நேரத்தில் விடுதலை செய்ய வைத்தார். இதற்காக பயாந்தர் போலீசு நிலைய ஆவணப் பதிவேடுகளைத் திருத்தவும், கிழித்தெறியவும் வைத்தார். இவ்வாறு இரகசிய உலகத் தொடர்புடைய கட்டுமானத் தொழிலதிபர், பாஸ்ரிக்காவுக்கு, மும்பை வோர்லி பகுதியில் உள்ள 25 அடுக்குமாடிக் குடியிருப்பில் 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய 7000 சதுர அடி தளத்தை வெறும் 50 இலட்சம் ரூபாய்க்கு வழங்கினார்.

 

மும்பை மாநகர குடிசைப் பகுதி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் எவ்வளவு குடிசைவாசிகள் புனரமைக்கப்படுகிறார்களோ, அதற்கேற்ப வர்த்தக ரீதியிலான கட்டுமான அதிபர்கள் மனைகளைப் பெறலாம். ஊழல்முறைகேடுகளில் ஈடுபடும் இன்னொரு கட்டுமானத் தொழிலதிபர் சைலேஷ் சாவ்லா இந்தத் திட்டத்தின் கீழ், சினிமா நடிகர் சஞ்சய்தத் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பெயரில் 68 குடிசை பகுதிகளை வளைத்துப் போட்டார் சாவ்லா. மாநில முதல்வரின் உத்தரவின் பேரில் நடந்த விசாரணையில் இந்த உண்மை வெளியானது. சாவ்லா தனது ""கார்டியன்'' என்று சொல்லிக் கொள்ளும் டி.ஜி.பி. பாஸ்ரிகா இந்த விசாரணையில் குறுக்கிட்டு முதல்வரிடமே பரிந்துரை செய்து சாவ்லாவுக்கு எதிரான விசாரணையை நிறுத்தி வைத்துள்ளார். மும்பை, வோர்லி பகுதியில் குடிசைப் பகுதி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 2000 சதுர அடி பரப்புள்ள இரண்டு தளங்களைப் பெற்றுக் கொண்ட டி.ஜி.பி. பாஸ்ரிகா, அதற்காக இவ்வாறு கைமாறு செய்துள்ளார்.

 

இவ்வளவு அதிகார முறைகேடுகள் செய்த பின்னரும் எவ்விதப் பாதிப்புமில்லாமல், தொடர்ந்து மகாராட்டிரா போலீசு உயரதிகாரியாகவே நீடித்து வருகிறார். மும்பை மற்றும் மகாராட்டிரா போலீசில் இத்தகைய ஊழல் உயரதிகாரிகள் நீடிப்பது ஒன்றும் வியப்புக்குரியதில்லை. ஏற்கெனவே, மும்பை நகர போலீசு ஆணையாளராக இருந்த சர்மா என்பவர் போலிப் பத்திர பதிவு ஊழல் வழக்கில் மோசடி மன்னன் தெல்ஜியுடன் கூட்டுச் சேர்ந்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். மும்பையில் பல இரகசிய உலகப் பேர்வழிகளை போலி மோதல்களில் (என்கவுண்டர்) கொலை செய்தவன் தயாநாயக் என்ற போலீசு அதிகாரி. இவன் பல கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளான் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மும்பை, மகாராட்டிரா போலீசுதான் இப்படி; மற்ற மாநிலங்களில் இவ்வாறு இல்லை என்பதல்ல. இன்னொரு சான்றாக ஒரிசா டி.ஜி.பி., பி.பி., மொகந்தி என்பவனின் கிரிமினல் குற்றத்தைப் பார்ப்போம். இவரது மகன் பிட்டி மொகந்தி. ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணம் வந்த ஒரு இளம் பெண்ணை, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினான். குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அவன் சிறையிலடைக்கப்பட்டான். தனது மகனது செயலுக்காக வெட்கித் தலைகுனிய வேண்டிய டி.ஜி.பி., பி.பி.மொகந்தி, அதற்கு மாறாக, அவன் சிறைத்தண்டனை அனுபவிப்பது கண்டு துடிதுடித்துப் போனார்.

 

உடனடியாகவே, தனது மனைவியான பிட்டி மொகந்தியின் தாயார் மிக மோசமான உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் இருப்பதாகப் போலி ஆவணங்களைத் தயார் செய்து, தனது சொந்தப் பிணையில் மகனைப் பரோலில் எடுத்து, ஒரிசா தலைநகர் புவனேசுவருக்கு அழைத்துச் சென்றார். அதன் பின் உரிய காலத்தில் ஜெய்ப்பூர் சிறைக்கு அனுப்பி வைக்காமல், தலைமறைவாக இருக்கும்படி செய்தார். ஜெய்ப்பூரில் பிடிவாரண்டு பிறப்பித்தும், பிட்டி மொகந்தியை ஒரிசா, ராஜஸ்தான் போலீசு பிடிக்கவில்லை. டி.ஜி.பி. தன் வீட்டிலேயே கற்பழிப்புக் குற்றவாளியான மகனை ஒளித்து வைத்துக் கொண்டு, தனக்குத் தெரியாது என்று சாதித்தார்.

 

செய்தி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் பரவியபிறகு, டி.ஜி.பி. தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவரும் தலைமறைவானார். ஏழு மாதங்களுக்குப் பிறகு ஒரிசா, ராஜஸ்தான் போலீசு மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடன்பாடு ஏற்படுத்திக் கொண்ட பிறகு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இன்னமும் அவரது கற்பழிப்புக் குற்றவாளி மகன் தலைமறைவாகவே உள்ளான். இந்நேரம் அவன் எந்த வெளிநாட்டுக்கும் ஓடிப்போய் சொகுசாக வாழலாம்.

 

பயங்கரவாதி, தீவிரவாதி என்று முத்திரை குத்தி போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப்படும் இந்தநாட்டில், மாநில டி.ஜி.பி.யே கிரிமினல் குற்றவாளிகளாக அறியப்பட்ட பிறகும், தண்டனையின்றி வாழ முடிகிறது; காரணம், அவர்கள் அரசு சாதியின் செல்லப் பிள்ளைகள்!


· ஆர்.கே.