Language Selection

புதிய ஜனநாயகம் 2008

PJ_2008_02.jpg

2007ஆம் ஆண்டுக்கான மனிதவள மேம்பாடு குறித்த தர வரிசைப்பட்டியலை, ஐ.நா. அமைப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. மனிதவள மேம்பாடு தரவரிசை என்பது, ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களின் நீண்ட, ஆரோக்கியமான வாழ்விற்கும்; முதியோர் கல்வி மற்றும் ஆரம்ப இடைநிலைக் கல்விக்கும்; மக்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பீட்டின்படி, 177 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில், இந்தியா 128 ஆவது இடத்தைத்தான் பிடித்திருக்கிறது.

 

இந்தியப் பொருளாதாரம் இப்பொழுது தான் ""வளர''த் தொடங்கியிருக்கிறது; வல்லரசான பிறகு, மனிதவள மேம்பாட்டிலும் முதலாவது இடத்தைப் பிடித்துவிடும் என்ற நொண்டிக் காரணத்தைக் கூறி, இந்தப் பின்தங்கிய நிலையை நியாயப்படுத்திவிட அனுமதிக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவைவிட மனித ஆற்றலும், வளமும் குறைவாக இருக்கும் நாடுகளும்; இந்தியப் பொருளாதார ""வளர்ச்சி''யை ஒப்பிடும் பொழுது பின் தங்கி இருக்கும் பல ஏழை நாடுகளும் மனித வள மேம்பாட்டில் இந்தியாவை முந்திச் சென்றுள்ளன.

 

· 1980ஆம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரில் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போன எல்சல்வடார் மனிதவள மேம்பாட்டில் 103ஆம் இடத்தில் இருக்கிறது.

 

· தென் அமெரிக்கக் கண்டத்திலேயே மிக வறிய நாடாக அறியப்படும் பொலிவியா, 117ஆம் இடத்தில் இருக்கிறது.

 

· தர வரிசையில் கடந்த ஆண்டு (2006) 131ஆம் இடத்தில் இருந்த போட்ஸ்வானா என்ற ஏழை ஆப்பிரிக்க நாடு, இந்த ஆண்டு (2007) 124ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இந்தியாவோ, கடந்த ஆண்டு 126ஆம் இடத்தில் இருந்து, இந்த ஆண்டு 128ஆவது இடத்திற்குச் சரிந்து விழுந்திருக்கிறது.

 

· இசுரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீனம் கூட, "சுதந்திர' இந்தியாøவிட மனிதவள மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்துவதால் 106ஆம் இடத்தில் இருக்கிறது.

 

· சின்னஞ்சிறு நாடான இலங்கை 99ஆம் இடத்திலும்; கஸகஸ்தான் 73ஆம் இடத்திலும் இருப்பதைப் பார்த்து, நாம் பொறாமைதான் கொள்ள வேண்டும்.

 

· அமெரிக்காவின் பல்வேறு பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வரும் கியூபா 51ஆம் இடத்தில் இருக்கிறது. மனிதவள மேம்பாட்டில் உயர் வளர்ச்சி அடைந்த நாடுகளின் குழுவில் கியூபாவும் இடம் பிடித்துள்ளது. இந்திய அரசோ, தனது குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் கிடைக்குமா, ஜி8 நாடுகளின் குழுவில் இடம் கிடைக்குமா என வெட்டியாய் அலைந்து கொண்டிருக்கிறது.

 

· சியாராலியோன், பர்கினோ ஃபாஸோ, எத்தியோப்பியா ஆகிய பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட மிகவும் வறிய நாடுகளை ஒப்பிடும் பொழுது, சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சான்களாகத் திரியும் குழந்தைகளின் எண்ணிக்கையும்; ஆரம்பக் கல்வி கூடக் கிடைக்காமல் தற்குறிகளாகத் திரியும் சிறுவர்களின் எண்ணிக்கையும் (சதவீதத்தில்) இந்தியாவில்தான் அதிகம் எனக் குறிப்பிடுகிறது, ஐ.நா.வின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம்.

 

இந்தியாவைவிட மனிதவள மேம்பாட்டில் முன்னேறியுள்ள இந்த ஏழை நாடுகளில், எந்தவொரு நாடும் 9 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை எட்டிப் பிடிக்கவில்லை; எந்தவொரு நாட்டிலும் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்தியாவைப் போல் இல்லை; எந்தவொரு நாடும் அணுசக்தி வல்லரசாகவோ, கணினி மென்பொருள் ஜாம்பவானாகவோ இல்லை.

 

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் 40 இலட்சம் ரூபாய் அளவுக்கு அதிகரிப்பதைக் கொண்டாடும் இந்தியாவில்தான், 84 கோடி இந்தியர்களின் தினக்கூலி இருபது ரூபாயைத் தாண்டவில்லை. (ஆதாரம்: தேசிய மாதிரிப் புள்ளிவிவரப் பட்டியல்) என்பதும்; பட்டினிச் சாவிற்குள் சிக்கித் தவிக்கும் 118 நாடுகளில் இந்தியா 94ஆம் இடத்தில் இருப்பதும் (ஆதாரம்: சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், வாஷிங்டன்) கசப்பான உண்மையல்லவா?


· குப்பன்