முழுப் பூசனியினை சோற்றில் மறைத்த கதை போல முடிந்து போன நிகழ்வுகளை, திட்டமிட்டு மக்களுக்கு மறைத்து வரும் புலிகளின் நடவடிக்கையினால் பல அப்பாவி புலி ஆதரவாளர்கள் மனதால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தலைவர் இருக்கிறார், வருவார், போராட்டம் மீண்டும் ஒருநாள் தொடரும், சிங்களவனின் திமிரை அடக்கியே தீருவம் என்ற சிந்தனையும் நம்பிக்கையும் பலருடைய மனதிலே பதிந்துள்ளது. தங்கள் சுயநலத்திற்காக இந்த அப்பாவிகளை ஏமாற்றி வரும் புலிகள், கடந்த கால அரசியற் தவறுகளை…, தலைவரின் மரணத்தினை… மறைப்பதன் மூலம், தங்கள் எதிர்கால அரசியலினை நகர்த்தி வருகிறார்கள். உண்மையினை கூறிவிட்டால், தங்களுக்கொன்று எதிர்காலத்தில் அரசியல் எதுவும் இல்லாது போய்விடும் என்ற பயம் இவர்களிற்கு. ஆனால் இவர்களை நம்பி,
இவர்கள் பின்னால் திரியும் அப்பாவி சனங்கள் தான் புலிகளின் இந்த நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தலைவர் மேல் கொண்ட அன்பும், புலி இயக்கத்தின் மீதான கண் மூடித்தனமான விசுவாசமும், இந்த மக்களை எந்த மாற்றச் சிந்தனைக்கும் கொண்டு செல்ல முடியாத முட்டுக் கட்டையாக உள்ளது. தலைவர் இல்லை இறந்துவிட்டார் என்று யாராவது சொன்னால், இவர்களுக்கு கொலை செய்யுமளவிற்கு ஆத்திரம் வந்து விடுகிறது. இது சாதாரண கீழ் மட்டத்தில் மட்டுமல்ல, பல பட்டம் பெற்றவர்களிடமும் இந்த தவறான நம்பிக்கை தான் வேறூன்றியுள்ளது.
சிங்கள எதிர்ப்பையும், தமிழீழத்தினையும் விட்டு சிந்திக்க முடியாத புலிகளின் அரசியல் வறுமையும், பிரதான வேலைதிட்டமான பணசேகரிப்பும் தான், தங்கள் ஆதரவாளர்களையும் இந்த குறுகிய வட்டத்திற்குள் முடக்கி வைத்திருக்க வேண்டிய தேவையாக புலிகளுக்குள்ளது. அதனால் தான் புலிகளுக்கு தலைவரின் விளம்பரமும், புலிக்கொடியும் அவசியமாகிறது. இந்த செயற்பாட்டினை புலிகள் என்றுமே நிறுத்தப் போவதில்லை. இதை நாங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தலைவர் இல்லாவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என்ற தவறான சிந்தனையினை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியானதொரு அரசியல் நிலைப்பாட்டினை இனங்கண்டு செயற்படுவோமானால் எங்களாலும் எதையும் சாதிக்க முடியும். சரியான நிலைப்பாட்டிற்கு எங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் எங்கள் அறிவையும் சிந்தனையினை வளர்த்துக் கொள்வதுடன் எங்கள் சமூகத்தினையும் மாற்றி அமைக்க முடியும்.
தேவன்
7/2/2011