Language Selection

புதிய ஜனநாயகம் 2008

PJ_2008_02.jpg

மூன்றாம் முறையாக பாகிஸ்தானின் பிரதமராகி விட வேண்டும் என்ற பேநசீர் புட்டோவின் பேராசை, டிச.27, 2007 அன்று மாலை சூரியன் மறையும் நேரத்தில், நடுவீதியில் நிரந்தரமாக முடிந்து போனது. அவர் துப்பாக்கி ரவைக்குப் பலியானாரா அல்லது மனித வெடிகுண்டுக்கு இரையானாரா என்பது இன்றும் "மர்மமாக' இருந்து வருகிறது. எனினும், பேநசீர் புட்டோ அல்காய்தாவோடு தொடர்புடைய இசுலாமிய

 பயங்கரவாதிகளால்தான் கொல்லப்பட்டார் என பாக். அரசு மட்டுமல்ல, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும், அவரின் இரத்தம் உறைவதற்கு முன்பே உலகுக்கு அறிவித்து விட்டன.

 

புலன் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, குற்றவாளிகளை அடையாளம் காட்டும் இந்த "தீர்க்க தரிசனத்தை' என்னவென்பது? ""அமெரிக்காவின் மதிப்பு வாய்ந்த சொத்தை நாங்கள் அழித்து விட்டோம்'' என அல்காய்தா அமைப்பைச் சேர்ந்த முஸ்தபாஅபு அல்யாசித் கூறியதாக ""தி ஏசியன் டைம்ஸ்'' என்ற நாளிதழில் வெளியான செய்தியும்; ""அல்காய்தா தலைவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்களை ஒட்டுக் கேட்டதில் இருந்து, ""அல்காய்தாவின் தலைவர்களுள் ஒருவரான பைதுல்லா மெஹ்சுத் தான் பேநசீரின் படுகொலைக்குக் காரணம்'' என பாக். அரசு வந்தடைந்துள்ள முடிவும்தான், அல்காய்தாவைக் குற்றஞ்சுமத்துவதற்கு ஆதாரங்களாகக் காட்டப்படுகின்றன.

 

பாகிஸ்தானின் ஓட்டுக்கட்சித் தலைவர்களிலேயே முற்போக்கானவர், மதச்சார்பற்றவர் என வியந்தோதப்படும் பேநசீர் புட்டோவை அல்காய்தா கொலை செய்திருக்கக் கூடும் என நம்பும் பாகிஸ்தானியர்கள் கூட, அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியின்றி இப்படுகொலை நடந்திருக்க முடியாது என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.

 

பேநசீர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என உலகமே நம்பிக் கொண்டிருந்த நிலையில், பாக். அரசு, ""பேநசீர் பயணம் செய்த வேனின் மேற்கூரை ஜன்னலின் இரும்புக் கம்பியில் அவர் மோதிக் கொண்டதால், தலையில் அடிபட்டு இறந்து போனதாக'' புதுக்கதையைப் பரப்பியது. கொலையாளி பேநசீரை நோக்கித் துப்பாக்கியில் சுடும் வீடியோ பட ஆதாரங்களைப் பத்திரிகைகள் வெளியிட்ட பிறகு, தனது கதையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது, பாக். அரசு.

 

சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரிப்பதற்கு முன்பாகவே, ராவல்பிண்டியின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் அந்த இடத்தில் தண்ணீரைப் பீச்சியடித்துச் சுத்தம் செய்துவிட்டனர். இந்தத் தடய அழிப்பை, அதிகாரிகளின் திறமையின்மை எனக் கூறிச் சமாளித்தார், அதிபர் முஷாரப். இதற்கு முன்பாக, பேநசீர் பாகிஸ்தான் திரும்பிய அன்று கராச்சி நகரில் அவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல் நடந்த இடமும், தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, தடயங்கள் அழிக்கப்பட்டன.

 

பேநசீரின் கணவர் கேட்டுக் கொண்டார் என்ற காரணத்தைக் கூறி, பேநசீரின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யாமலேயே அடக்கம் செய்ய அனுமதித்திருக்கிறது, பாக். அரசு.

 

— இவையாவும் பேநசீரின் படுகொலையில் அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பிருக்குமா என்ற பொதுமக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளன.

 

அரசியல் தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுவது பாகிஸ்தானின் அரசியல் களத்தில் புதிய விசயமல்ல. ஆப்கானில் நடந்துவந்த போலி கம்யூனிச ஆட்சியை எதிர்த்து அமெரிக்கா நடத்திய ""ஜிகாதி'' போரில், அமெரிக்காவுக்கு அடியாளாக வேலை பார்த்த பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரி ஜியாவுல்ஹக், அந்தப் பணி முடிந்தவுடன் ஒரு விமான "விபத்தில்' மர்மமான முறையில் இறந்து போனார். இச்சம்பவம் பற்றிய புலன் விசாரணையை அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்.பி.ஐ.தான் ஏற்று நடத்தியது.

 

பேநசீர் புட்டோ இரண்டாம் முறை பிரதமராக இருந்தபொழுது, அவரது சகோதரர் மிர் முர்தாஸா, அவரது வீட்டு வாசலிலேயே போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இம் ""மோதல்'' கொலை பற்றிய விசாரணையும் ஸ்காட்லாந்து போலீசாரிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகள் பற்றிய உண்மைகள், இதுநாள்வரை வெளியுலகுக்குத் தெரியவில்லை. பேநசீரின் படுகொலை பற்றிய மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப்படாமலேயே எதிர்காலத்தில் மறைந்து போகலாம்.

···

நம்மைப் பொறுத்தவரை அவரது மரணம் குறித்த மர்மங்களைவிட, அவரது அரசியல் ஆளுமை குறித்த கருத்துக்கள் தான் பரிசீலனைக்குரியவை. பெரும்பாலான முதலாளித்துவ பத்திரிகைகள், பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவர்களிலேயே பேநசீர் புட்டோதான் சிறந்த ஜனநாயகவாதி எனப் புகழ்ந்து தள்ளியுள்ளன. அவரைக் கொன்றதன் மூலம், பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் தழைப்பதற்கான வாய்ப்பையே தடுத்து விட்டதாக, இசுலாமிய பயங்கரவாதிகள் மீது குற்றஞ் சுமத்தியுள்ளன.

 

கடந்த அறுபது ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு, அந்நாட்டை ஆண்ட இராணுவ சர்வாதிகாரிகளையும்; ஓட்டுக் கட்சித் தலைவர்களையும்; எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவின் ஜனநாயகத்தையும் தான் குற்றம் சுமத்த முடியுமே தவிர, இசுலாமிய பயங்கரவாதிகள் மீது பழிபோட்டுத் தப்பித்து விட முடியாது. சொந்த நாட்டு மக்களின் மீது பாசிசக் கொடுங்கோன்மையைத் திணிப்பதற்கு, தீவிரவாதத்தைக் காரணமாகக் காட்டுவது இன்று அனைத்துலக அரசியல் விதியாகி விட்டது.

 

பேநசீர் புட்டோவின் அரசியல் அரங்கேற்றம் கூட ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. அவரது தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ தூக்கலிடப்பட்டதையடுத்து, அவரது மகள் என்ற ஒரே தகுதியின் காரணமாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக பேநசீர் முடிசூட்டிக் கொண்டார்; ""பேநசீர் புட்டோவாகிய நான்தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிரந்தரத் தலைவி'' என கட்சி விதியையும் உருவாக்கிக் கொண்டார். எந்த நேரத்திலும் தான் கொல்லப்படலாம் என்ற பயத்தில் வாழ்ந்து வந்த அவர், தனக்குப் பிறகு தனது கணவர் ஆஸிப் அலி ஜர்தாரிதான் கட்சியின் தலைவராக வேண்டும் என உயில் எழுதி வைக்கும் அளவிற்கு, கட்சியைப் புட்டோ குடும்பச் சொத்தாகக் கருதியிருக்கிறார். பேநசீரின் கணவர் ஜர்தாரி மிகப் பெருந்தன்மையோடு, கட்சித் தலைமையை தனது மகன் பிலால் ஜர்தாரிக்கு விட்டுக் கொடுத்து விட்டார். பாகிஸ்தான் அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக இருப்பதால், இந்த வாரிசு அரசியல் எதிர்ப்பின்றி இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

பேநசீர், இராணுவ சர்வாதிகாரி ஜியாவுல்ஹக்கை எதிர்த்துப் போராடியதில் கூட, பொதுநலனைவிட சுயநலமே அதிகம் இருந்தது. புட்டோ குடும்பத்தை அடியோடு அழிக்க ஜியாவுல்ஹக் முயன்றதால், அவரை எதிர்த்துப் போராடினால்தான், தனது அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்ல, தனது குடும்பச் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நிர்பந்தம் அவருக்கு இருந்தது. ஜியாவுல்ஹக் ஆட்சி நடந்த சமயத்தில் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்த பேநசீர் புட்டோ பாகிஸ்தானிய மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், அமெரிக்கா ஜியாவுல்ஹக்கைக் கைகழுவி விட்டுத் தேர்தல் நடத்தவிருந்த சமயத்தில்தான், பாகிஸ்தானுக்குத் திரும்பி வந்து, ஜனநாயகப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.

 

பேநசீரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ, ஜியாவுல்ஹக்கால் தூக்கிலிடப்பட்டதற்கு அமெரிக்கா எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், இந்த சொந்த இழப்புகூட பேநசீரை அமெரிக்க எதிர்ப்பாளராக மாற்றவில்லை. மாறாக, அமெரிக்காவிற்கும், இராணுவத்திற்கும் தலையாட்டவில்லையென்றால், தனக்கு அரசியலில் எதிர்காலம் கிடையாது எனப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப மாறிக் கொண்டார், பேநசீர். இளம் வயதில் அவரிடம் காணப்பட்டதாகக் கூறப்பட்ட இடதுசாரிக் கருத்துக்கள், பாம்புச் சட்டையைப் போல உரித்துப் போடப்பட்டன. இந்த மாற்றத்தின் பயனாக, பாக்.மக்கள் கட்சி 1988ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெறவும்; பேநசீர் பிரதமர் நாற்காலியில் அமரவும் பாக். இராணுவமும், அமெரிக்காவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தன. இதற்குப் பிரதிபலனாக, இராணுவத்தின் கையாள் குலாம் இஷாக் கானை அதிபராக்க பேநசீர் சம்மதித்தார்.

 

பேநசீர் புட்டோ, இரண்டு முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்துள்ளார். இடதுசாரித் தன்மை கொண்டதாகவும்; சோசலிசக் கொள்கை கொண்டதாகவும் கூறப்பட்ட அவரது கட்சி உண்மையில் அ.தி.மு.க.வைப் போன்று பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கும் திருட்டுக் கும்பல் என்பது ஆட்சியில் இருந்தபொழுது அம்பலமானது. கமிசன் அடிப்பதற்காகவே, பேநசீரின் கணவர் ஜர்தாரி, பேநசீரின் இரண்டாம் தவணை ஆட்சியின் பொழுது முதலீட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ""திருவாளர் பத்து சதவீதம்'' என நக்கல் செய்யப்படும் அளவிற்கு, அதிகார முறைகேடுகள் அம்பலப்பட்டு நாறின. இலஞ்சம் ஊழலின் மூலம் மட்டும் பேநசீரின் குடும்பம் 150 கோடி அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயின் மதிப்பில் ஏறத்தாழ 6,000 கோடி ரூபாய்) பெறுமானம் அளவிற்கு சொத்து சேர்த்துக் கொண்டதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டது. ஜர்தாரியின் மீது பாகிஸ்தானில் மட்டுமின்றி, இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் ஊழல் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.

 

மத அடிப்படைவாதத்திற்கு எதிரானவர் எனப் புகழப்படும் பேநசீர் புட்டோதான், தனது இரண்டாவது தவணை ஆட்சியின்பொழுது இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பான தாலிபான்கள், ஆப்கானில் ஒரு அதிரடிப் புரட்சியின் இசுலாமிய ஆட்சியை நிறுவுவதற்கு உறுதுணையாக இருந்தார். இதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒத்துழைத்தது தனிக் கதை. காசுமீரின் சுயநிர்ணய உரிமைப் போரை பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூலம், இசுலாமிய மத அடிப்படைவாத ஜிகாதிப் போராகவும் தனிநபர் பயங்கரவாத இயக்கமாகவும் மாற்றியதில் பேநசீர் புட்டோவுக்கு பெரும் பங்குண்டு. பேநசீரின் ""ஜனநாயக'' ஆட்சியில்தான், சட்டவிரோதக் காவல், சித்திரவதை, கொட்டடிக் கொலைகளை நடத்துவதில், பாகிஸ்தான் உலகின் முன்னணி நாடாக மாறியது.

 

1999ஆம் ஆண்டு இராணுவத் தளபதி பர்வேஷ் முஷாரப் அதிகாரத்தைக் கைப்பற்றி கொண்டவுடன், தன் மீது ஊழல் கிரிமினல் வழக்குகள் பாயும் எனப் பயந்து போன பேநசீர், அதிலிருந்து தப்பிக்கவே துபாய்க்குத் தப்பியோடினார். அவர் அங்கிருந்து கொண்டு, முஷாரபின் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எவ்விதப் போராட்டத்தையும் தூண்டிவிட்டு நடத்தவில்லை. மாறாக, அமெரிக்காவின் மூலமாக முஷாரப்போடு சமரசம் செய்து கொள்ள முயன்று வந்தார். அவரது எட்டு ஆண்டு காலத் தவத்திற்கு 2007ஆம் ஆண்டு இறுதியில் பலன் கிடைத்தது.

 

""இராணுவத் தளபதி முஷாரப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பேநசீரும், அவரது கட்சியும் ஒத்துழைக்க வேண்டும்; இதற்குக் கைமாறாக, பேநசீர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமராகவும்; அவர் மீதான ஊழல் வழக்குகளைச் சட்டப்பூர்வமாகத் திரும்பப் பெறவும் முஷாரப் உதவுவார்'' என்ற சமரச ஒப்பந்தத்தின் கீழ்தான் பேநசீர் பாகிஸ்தான் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

 

இராணுவத் தளபதி பதவியைத் ""துறந்து'' விட்ட முஷாரப், தனது அதிபர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள உச்சநீதி மன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ததையும்; அவசரகால ஆட்சியை அறிவித்ததையும் பேநசீர் எதிர்த்துப் போராடவில்லை. முஷாரப் நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு முன்பாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி வில்லியம் ஃபாலோன் முஷாரப்பைச் சந்தித்ததையும்; அதனைத் தொடர்ந்து நெருக்கடி நிலை அறிவிப்பதற்கு முதல் நாள் பேநசீர் துபாய்க்குச் சென்றுவிட்டதையும் தற்செயலானதாகப் பார்க்க முடியாது. ஊழல் வழக்குகளில் இருந்து பேநசீரை மன்னித்து விடுவிப்பதற்காக முஷாரப் கொண்டு வந்த சட்டத்தை ""உச்சநீதி மன்றம் ஆராயும்'' என நீதிபதிகள் கூறியிருந்ததால், இந்த நெருக்கடி நிலையைத் தனக்குச் சாதகமானதாகத்தான் பார்த்தார், பேநசீர்.

 

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்து, தேர்தலில் ஓட்டுப் பொறுக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக நெருக்கடி நிலையை எதிர்த்துப் பேரணி நடத்த முயன்றபொழுதுதான், பேநசீர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்தக் கைதும் கூட, பேநசீரின் அரசியல் கவுரவத்தைக் காப்பாற்றும் நாடகமாகவே பாகிஸ்தானிய மக்களால் பார்க்கப்பட்டது. அமெரிக்க அரசின் துணைச் செயலர் ஜான் நெக்ரோபோண்டே பேநசீரைச் சந்திக்கப் போவதாகத் தகவல் வந்தவுடன், பேநசீர் வீட்டுக் காவலில் இருந்து உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

 

ஆப்கானை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணத்தில், போட்டி அரசாங்கம் நடத்தும் அளவிற்கு, தாலிபான்அல்காய்தா அமைப்புகளின் செல்வாக்கு வளர்ந்து விட்டது. இந்தப் பகுதியில்தான் அல்காய்தாவின் தலைவன் பின்லேடன் ஒளிந்திருக்கக் கூடும் என அமெரிக்கா சந்தேகிக்கிறது. இந்தப் பகுதியில் இருந்து தீவிரவாதிகளை அப்புறப்படுத்த பாக். இராணுவம் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் தோல்வியில் முடிந்துவிட்டன. எனவே, அமெரிக்கப் படைகளையே பாகிஸ்தானுக்குள் இறக்கிவிட அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்து வருகிறது.

 

தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கப் படைகளைப் பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க பேநசீர் ஒத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கானை, அணுகுண்டு தொழில் நுட்பத்தை ஈரானுக்கு இரகசியமாக விற்றக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க பேநசீர் சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பேநசீர் புட்டோ அழித்தொழிக்கப்பட்டுள்ளார். அவர் உயிருடன் இருந்திருந்தால், அவரின் சுயநல பிழைப்புவாத அரசியலும்; அமெரிக்க அடிவருடித்தனமும் மேலும் மேலும் அம்பலமாகியிருக்கும். எனவே, இந்த அமெரிக்கக் கைக்கூலியின் அகால மரணத்திற்காக உழைக்கும் மக்கள் அனுதாபப்படத் தேவையில்லை.

 

பாக். அதிபர் பர்வேஸ் முஷாரப் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து, செல்லாக்காசாகிவிட்ட போதிலும், அமெரிக்கா அவரைக் கைவிடத் தயாராக இல்லை. தேர்தலை நடத்தி, ஒரு ஜனநாயக முகமூடியை மாட்டிவிட்டு, முஷாரபின் இராணுவ சர்வாதிகார ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் அமெரிக்கா விரும்புகிறது. பேநசீர் இறந்து போய்விட்ட நிலையில், அந்த முகமூடி யார்? பேநசீரின் கணவர் ஜர்தாரியா? அல்லது, பாக். உளவு நிறுவனத்தால் வளர்க்கப்பட்டவரும், பாக். முசுலீம் லீக் (என்) பிரிவு தலைவருமான நவாஸ் ஷெரீப்பா என்பதுதான் இப்பொழுது அமெரிக்காவின் முன்னுள்ள பிரச்சினை. பேநசீரின் மரணத்தைவிட, இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தான் மக்களின் வெறுப்பை, போராட்டத்தை ஓட்டுக் கட்சிகள் அறுவடை செய்து வருவதுதான் துயரமானது!


· ரஹீம்