Language Selection

PJ_2008_02.jpgஇரத்தக் கவிச்சு வீசும் இந்துவெறி கொலைகாரர்களின் வாக்குமூலங்கள் வழியாக, 2002இல் நடந்த குஜராத் இனப்படுகொலையை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது, ""டெகல்கா'' ஆங்கில வார இதழின் நவம்பர் மாத சிறப்பு வெளியீடு. ஒரு கிரிமினல் குற்ற விசாரணைக்குத் தேவைப்படும் துல்லியத்துடன் இந்துவெறி பயங்கரவாதிகளின் வாக்குமூலங்களை உயிரைப் பணயம் வைத்துப் பதிவு செய்திருக்கிறார், ""டெகல்கா''வின் சிறப்புச் செய்தியாளர் அசிஷ்கேதான்.

எனினும், மைய அரசோ, நீதித்துறையோ இந்து வெறியர்களின் இந்த ஒப்புதல் வாக்குமூலங்களை பொருட்படுத்தவில்லை. செய்தி ஊடகங்கள் கட்டுப்பாடாக இப்புலனாய்வை இருட்டடிப்பு செய்தன; அல்லது இதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டின.

 

தமிழக மக்களில் பலருக்கு இந்துவெறி பயங்கரவாதிகள் அளித்த வாக்குமூலங்கள் பற்றிய உண்மைச் செய்திகள் இன்னும் போய்ச் சேரவில்லை. பார்ப்பன எதிர்ப்புப் போராட்ட மரபைக் கொண்டுள்ள தமிழக மக்களிடம் இவற்றைக் கொண்டு செல்வதன் மூலம், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டத்துக்கு வலுசேர்க்க முடியும் என்பதால், சற்றே சுருக்கியும் கட்டமைப்பு மாற்றம் செய்தும் ""டெகல்கா'' சிறப்பிதழை மொழியாக்கம் செய்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சி கிளை வெளியிட்டுள்ளது.

 

""குஜராத்: திட்டமிட்ட இனப்படுகொலை'' என்ற இந்த மொழியாக்க நூலின் அறிமுகக் கூட்டம் திருச்சிசந்தன மகால் அரங்கில் கடந்த 5.1.08 அன்று மாலையில் நடைபெற்றது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட அமைப்பாளரான வழக்குரைஞர் ஆதிநாராயணமூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கர்நாடக உயர்நீதி மன்ற வழக்குரைஞர் எஸ்.பாலன், ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர், இந்துவெறி பாசிச பயங்கரவாதத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையுமின்றிச் சரணடைந்துவிட்ட இந்திய அரசியலமைப்பு முறையின் தோல்வியை விளக்கியும், மீண்டும் குஜராத்தில் பயங்கரவாத மோடி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்துத்துவ பாசிச பரிவாரங்களுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் கூடுதல் வேகத்துடன் போராட வேண்டிய அவசியத்தை விளக்கியும் சிறப்புரையாற்றினர். திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ரூ. 20 விலையுள்ள இந்நூல் பரபரப்பாக விற்பனையானதோடு, ஓரிரு வாரங்களில் மறுபதிப்பு செய்யுமளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.