தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு ஓர் அவசரச் சட்டம் இயற்றி, அதனைக் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கி விட்டது. அச்சட்டம்தான், ""தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தடைச் சட்டம்''. இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள ஏரிக்கரைகளிலோ, குளத்தின் அருகிலோ மானாவரிப் பயிர் செய்தால் இச்சட்டத்தின்படி 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.
ஏரிகள்குளங்களை ஒட்டி இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கரைகளில் எல்லாம் நீர் வற்றி முழுவதுமாய் அந்நீர் நிலைகள் காய்ந்து போகும் வரை, அப்பகுதியில் நிலமற்றவர்கள் குறுகிய காலத்துக்குச் சாகுபடி செய்து வாழ்வதென்பது பாரம்பரியமாய் நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். ஏழை மக்கள் அனுபவித்து வரும் இந்த உரிமை கூட இனி அவர்களுக்குக் கிடையாது. இதுதவிர, ஊருணிகள், குளங்களில் உள்ளூர் மக்கள் மீன்பிடித்து வந்த பாரம்பரிய உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடெங்கும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல் எனும் பெயரில், பயிரிடப்பட்டிருந்த சாகுபடிகள் எல்லாம் பொக்லைன் எந்திரங்களால் அழிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் ஏரிக்கரையில் போட்டிருந்த கரும்பை பொதுப்பணித்துறை அழித்ததும், மக்கள் கிளர்ந்தெழுந்து மறியல் செய்ய முற்பட்டபோது போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
எதற்காக இந்தக் கடுமையான சட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது?
இதுபற்றித் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால், அண்மைக்காலத்தில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தண்ணீர் சார்ந்த திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.
அமெரிக்காவின் ஃபோர்டு அறக்கட்டளை, தமிழக அரசின் பொதுப்பணித்துறையுடன் இணைந்து 1994இல் இருந்து 2003 வரை தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வளம், கிணறுகளில் ஊறும் நீரின் தன்மை போன்ற அனைத்து புள்ளிவிவரங்களையும் ஆராய்ச்சி செய்து, அவற்றை ஆவணப்படுத்தி உள்ளது. முதலில் மதுரை மாவட்டத்தையும், பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆற்று நீர்வளம், நிலத்தடி நீர்வளம், நீர் குடிக்கத்தக்கதா இல்லையா ஆகிய ஆய்வுத் தகவல்களை ஆவணப்படுத்தி உள்ளனர்.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் நெருங்கிய கூட்டாளியான ஃபோர்டு நிறுவனத்துக்கு தமிழக நீர்வளம் பற்றி அப்படி என்ன அக்கறை?
ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சிக்குப் பின்னர்தான் நெல்லைகங்கை கொண்டானுக்கு கொக்கோகோலாவும், சிவகங்கை படமாத்தூருக்கு பெப்சி கோலாவும் வந்தன என்பதிலிருந்தே அதன் அக்கறையைப் புரிந்து கொள்ளமுடியும்.
ஃபோர்டின் காட்டிக் கொடுப்பு வேலையைத் தவிர, ""நீரியல் திட்டம்1'' எனும் 51.149 கோடி ரூபாய் மதிப்புள்ள உலக வங்கித் திட்டத்தை தமிழக அரசு 1995இல் இருந்து 2003 வரை நடைமுறைப்படுத்தியது. இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள நிலத்தடி நீர்வளத்தையும் நீரோடைகளையும் மேம்படுத்துவது, கிடைக்கும் நீரைச் சுத்திகரிப்பது போன்ற அடிக்கட்டுமான வேலைகளைச் செய்தது.
இத்திட்டம் முடிவடையும்போது மேலும் கூடுதலாக ரூபாய் 52 கோடியை உலக வங்கி வழங்கியது. தமிழக அரசு இந்த நிதியைப் பயன்படுத்தி நீரியல் ஆய்வகங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் தண்ணீர்க் கட்டுப்பாட்டு ஆய்வகங்களை மதுரை, திருச்சி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் நிறுவியது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடெங்கிலும் உள்ள ஆற்று நீரின் வரத்து, கிணறுகளின் நீர்மட்டம் ஆகியன அளவிடப்பட்டன. தொலைதூரக் கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டத்தை அறிந்திட ""நாட்டு நலப்பணித்திட்டம்'' எனும் பெயரில் சில மிசனரி பள்ளிகளின் மாணவர்கள் கூட இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உலக வங்கியும், தமிழக அரசும் இந்தத் தகவல்களைத் தங்களுக்குள் பறிமாறிக் கொள்ள "தகவல் மையங்களை' உருவாக்கிக் கொண்டன.
""நீரியல் திட்டம்1'' இன் ஒரு பகுதியாகத்தான் 200203இல் மழைநீர் சேகரிப்புப் பிரச்சாரம் இங்கே மேற்கொள்ளப்பட்டது. உலகில் எங்கெல்லாம் உலக வங்கியின் மேலாதிக்கம் நிலவுகிறதோ, அங்கெல்லாம் அதே காலகட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, அரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆய்வுக் கூடங்களை அந்தத் துறையின் பொறியாளர்களும், மேலாளர்களும்தான் நடத்துவது வழக்கம். ஆனால், ""நீரியல்1'' திட்டத்தின் ஆய்வுக் கூடங்களை நமது பொறியாளர்கள் உலக வங்கி அதிகாரிகள் தலைமையில்தான் நடத்தி வந்தனர்.
அத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உலக நிதிமூலதனத்தின் மற்றும் ஓர் அவதாரமான ""சர்வதேச மறுகட்டமைப்பு வளர்ச்சி வங்கி'' 2006இல் இரண்டாம் நீரியல் திட்டத்தை வகுத்துத் தந்து, தமிழக அரசுக்கு 20.65 கோடி ரூபாயைக் கடனாகத் தந்துள்ளது.
முதல் திட்டம் நிலத்தடி நீர் மேம்பாடு, பழைய அணைகளின் நீர்க்கசிவு ஆகியவற்றினைப் பொதுவாக ஆராய்ந்துள்ளது. இரண்டாம் திட்டமோ தாமிரபரணி, வைப்பாறு, அக்னி ஆறு ஆகியவற்றைக் குறிவைத்துத் தீட்டப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, காவிரியைக் காக்கும் திட்டம் ஒன்றை உலக வங்கி செயல்படுத்தி வருகிறது. பவானி, ஈரோடு, குமாரபாளையம், திருச்சி, பள்ளிபாளையம் ஆகிய நகரங்களின் வழியே செல்லும் காவிரியில் கலக்கும் கழிவுகளைச் சுத்திகரிக்கிறது அத்திட்டம்.
வைகை, தாமிரபரணி, காவிரியைக் காக்க அந்த ஆறுகளின் கரையோர நகரங்களான மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் பாதாளச் சாக்கடைகளைக் கட்டி வருகிறது, இன்னொரு உலக வங்கித் திட்டம்.
இதனைத் தவிர ஊட்டி ஏரியை ஆக்கிரமித்துள்ள வெங்காயத் தாமøரயை அகற்றி அழகுபடுத்துவதும் உலகவங்கிதான். இதில் கொடுமை என்னவென்றால், நீர் நிலைகளைப் பாழாக்கும் அந்நிய தாவரமான வெங்காயத் தாமரையை இந்தியாவுக்கு 1896இல் வங்காளம் வழியாகக் கொண்டு வந்ததும், அதை அகற்றிடக் கடன் கொடுப்பதும் அந்நிய ஏகாதிபத்தியங்கள்தான்.
இவ்வாறு தமிழகத்தின் நீர்நிலைகள் முழுவதும் உலக நிதிமூலதனத்தின் கைப்பிடிக்குள் சென்று கொண்டிருக்கும்போது, தமிழ்நாடெங்கும் நச்சுக்கொடிகளாகப் படர்ந்திருக்கும் ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனங்களோ நீர்நிலை பற்றிய திட்டங்களில் பிரச்சாரம், கருத்தரங்கு, பேரணி எனப் பொதுமக்கள் மத்தியில் செயல்பட்டு, ""தண்ணீரைத் தனியார்வசம் ஒப்படைப்பதே நியாயம்'' என ஏற்க வைத்து, அதனைப் பொதுக்கருத்தாக மாற்றும் செயலில் இறங்கியுள்ளன.
""தான் பவுண்டேசன்'' எனும் தன்னார்வ நிறுவனம், மதுரை வட்டாரத்தில் கருத்தரங்குகள் பலவற்றை நடத்தி, ""கிராமக் குளங்க ளில் மீன் பிடித்தல் என்பது பாரம்பரிய உரிமையாக இருக்கலாம். ஆனால் இந்த உரிமைகள் ஒருபோதும் சட்ட உரிமையாகாது. 1994ஆம் ஆண்டு சட்டத்தின்படி இந்த உரிமைகளை மக்கள் இழந்து விட்டனர்'' என மக்களிடம் சட்ட விழிப்புணர்வூட்டி, கடன் வழங்கும் உலக நிதி மூலதன வள்ளல்களிடம், நமது பாரம்பரிய நீர்நி லைகளை மக்களின் எதிர்ப்பேதும் இன்றிக் கைமாற்றி விடுவதற்கு "அகிம்சை' வழியில் வேலை செய்து வருகிறது.
இந்நிறுவனம் தேனி மாவட்டம் ராசிங்கபுரம் கண்மாயில் 3.75 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற அரசுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. ""தான் பவுண்டேசனின்'' உடன்பிறப்பான ""களஞ்சியம்'', ""நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கொடுங்குற்றம்'' என்றும், ""வைகை ஆற்றைக் காப்போம்'' என்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய சென்ற ஆண்டு ஜனவரியில் மதுரையில் ""மாரத்தான்'' ஓட்டத்தை நடத்தியது. கண்காட்சி ஒன்றையும் நடத்தியது. இந்தப் பிரச்சாரத்திற்குப் புரவலராக இருப்பதோ ""வாட்டர் ஃபார் லைஃப்'' எனும் தேசம் கடந்த நீர் மேலாண்மை நிறுவனம். தண்ணீர் வியாபாரியிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு, ""தண்ணீரைப் பாதுகாக்கத் தவறியது நாம்தான்'' என்று நம்மை நம்பச் சொல்லி ஒரு பிரச்சாரம்!
""வைகையைப் பாதுகாக்க வேண்டும்'' என்று முழங்கும் இவர்கள், படமாத்தூர் பெப்சியை என்றும் எதிர்க்க மாட்டார்கள். நீரை விரயமாக்கி வக்கிர நீர் விளையாட்டுக்களை நடத்தி வரும் ""அதிசயம்'' போன்ற உல்லாசப் பூங்காக்களை எதிர்க்க மாட்டார்கள். நீரினைப் பாதுகாக்காமல் விட்ட குற்ற உணர்ச்சியில் மக்களைத் தள்ளிவிடும் வேலையை, வாஜ்பாயியை தனது காலில் விழ வைத்த சின்னப்பிள்ளையும், மதுரை மாவட்ட ஆட்சியரும் தலைமை ஏற்றுச் செய்து வருகின்றனர்.
""நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றச் சட்டமியற்று'' என்று அரசை நிர்ப்பந்திக்கும் நோக்கத்தோடு, பொதுமக்கள் கருத்தை உருவாக்கும் வேலையில் ""தான் பவுண்டேசன்'' மதுரைப் பகுதியிலும், ""சிறு துளி'' நிறுவனம் திருப்பூர் கோவைப் பகுதிகளிலும், ""நீர் எக்ஸ்னோரா'' நிறுவனம் சென்னையை ஒட்டிய பகுதியிலும் செயல்பட்டு வந்தன. ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு முழுவதுமாய் நீர்நிலைகளைப் பன்னாட்டு நீர் வியாபாரிகளிடம் ஒப்படைக்கத்தான் இப்பிரச்சாரங்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இல்லாவிட்டால் ""சிறு துளி'' நிறுவனம், நொய்யல் ஆற்றைச் சாகடித்த ஏகாதிபத்தியத்தையும், அன்னியச் செலாவணியையும் காரணம் காட்டிப் போராடாமல், ""நொய்யல் கெட்டது ஆக்கிரமிப்பால்'' என்று பிரச்சாரம் செய்திருக்குமா? தன்னார்வ நிறுவனங்கள் இவ்வகைப் பிரச்சாரங்களில் இறங்கிய அதேபோதில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்தைப் பலப்படுத்திட பிரான்சு நாடு கடன் கொடுத்துள்ளது. இவை அனைத்துமே "தண்ணீரை தனியார்மயமாக்குதல்' எனும் ஒரே நோக்கில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த செயல்பாடுகள்தான்.
மராட்டியத்தில் ""நீரா'' எனும் ஆற்றுக்கு நிதி உதவி செய்து அதனை தனியாருக்கு விற்றுவிடும்படி சொல்லும் உலக வங்கி, அதே வழிமுறையை தமிழ்நாட்டில் கடைபிடிக்கவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன.
ஒன்று: தமிழகத்தில் பாயும் பெரிய ஆறுகள் அனைத்தும் மாநிலங்களிடையேயான சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளன. இரண்டு: இங்கு ஏரிகள், ஏந்தல்கள், தாங்கல்கள், தருவைகள், குளங்கள், கண்மாய்கள் என மிகச் சிறப்பான அடிக்கட்டுமானங்கள் கொண்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை அதிகம்.
அதனால்தான் தமிழகமெங்கும் உள்ள ஏரிகுளங்களை மேம்படுத்துவதற்கென மராட்டியத்தைக் காட்டிலும் அதிகமாய் ஆயிரம் கோடி ரூபாயை உலக வங்கி கடனாகத் தந்துள்ளது. ப.சிதம்பரம் அந்த வங்கியின் ஏஜெண்டாக மாறி, ""இந்நிதியை முறையாகப் பயன்படுத்தி முன்னேறுங்கள்'' எனப் பிரச்சாரம் செய்கிறார்.
இந்தக் கடனுதவியின் பின்னணியில்தான் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி, காலங்காலமாகத் தமிழ் மக்கள் அனுபவித்து வந்த ஏரிகுளங்களின் மீதான உரிமையைப் பிடுங்கி, அதனை உலக வங்கியின் கையில் கொடுத்துள்ளது. பல ஆண்டுகளாகக் குளங்களைத் தூர் வாராமல் போட்டு வந்த அரசுக்கு நீர்நிலைகளின் மீது இன்றைக்கு திடீரென கரிசனம் வந்திருப்பதன் பின்னணி இதுதான்.
எனவேதான் குளம், ஏரிகள் பக்கம் மக்களை அண்ட விடாமல் இருக்கும் வகையில் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நாட்டின் இயற்கை வளமான தண்ணீரைக்கூட விட்டு வைக்காமல் அந்நிய நிதி மூலதனம் கைப்பற்றுவதற்கு இங்குள்ள பொம்மை அரசுகள் சட்டங்களைப் பிறப்பித்து வருகின்றன. இந்தச் சதியைத்தான் நாம் கடந்த 17 ஆண்டுகளாக ""மறுகாலனியாதிக்கம்'' என்று சொல்லி வருகிறோம்.
கடந்த 20 ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும், சமூகவியல் அறிஞர்களும் ""மூன்றாம் உலகப் போர், தண்ணீருக்குத்தான்'' எனச் சொல்லி வந்துள்ளனர். இப்போது போர் தொடங்கி விட்டது.
உலக நிதி மூலதனமும், அதன் எடுபிடிகளான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், ஏகாதிபத்திய கைக்கூலி அரசும், அது இயற்றுகின்ற சட்டங்களும் ஓரணியில் கைகோர்த்து மக்கள் மீது போரைத் தொடுத்து விட்டன என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது.
நமது பாரம்பரிய அறிவினால் உருவாக்கப்பட்ட நமது ஏந்தல்களையும் தாங்கல்களையும் எதிரி போர் தொடுத்து கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது, நாம் என்ன செய்யப் போகின்றோம்?
· இரணியன்
'பெபப்"சியின் தண்ணீர்க் கொள்ளை
புவிப் பரப்பெங்கிலும் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகள் எப்போதும் ஒரே தடத்தில் ஓடிக் கொண்டிருப்பதில்லை. நிலத்தடியில் நிகழும் புவித்தட்டு நகர்வு, நில நடுக்கம் போன்ற இயற்கையின் இயக்கப் போக்கால், புவிப்பரப்பின் ஏற்ற இறக்கங்கள் தாறுமாறாவதும் அதனால் ஆறுகள் தங்கள் தடத்தை மாற்றுவதும் புவியின் இயக்கவியல்.
இவ்வாறு ஆறுகள் தங்கள் தடங்களை மாற்றிக் கொண்டாலும் பழைய தடத்தின் அடிப்பரப்பில் அதன் இன்னொரு நகலாக, அதே ஆறு நிலத்தடி நீராக பல கோடி காலன் நீரைச் சேகரித்து வைத்துள்ளன. இதனை செயற்கைக் கோள் படங்கள் மூலம் அறிந்து கொள்வது இன்றைக்கு சாத்தியம்.
செங்கல்பட்டை ஒட்டி இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கும் பாலாறு முன்னொரு காலத்தில் சென்னைக்கு வடக்குத் திசையில் எண்ணூர் மீஞ்சூர் பகுதிகளில் ஓடியிருப்பதை 20 ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தனர். சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கென்று அப்பகுதிகளில், பத்துக்கும் மேற்பட்ட மிகப் பெரிய கிணறுகள் தோண்டப்பட்டன. அவற்றின் பயன்பாட்டை 80களின் இறுதியில் நிறுத்திக் கொண்ட அரசு, "அங்கு நிலத்தடி நீர் முழுக்க உறிஞ்சப்பட்டு விட்டதாக' அதற்குக் காரணம் சொன்னது.
ஆனால், அதே பகுதியில் இன்று ""பெப்சி''யின் ""அக்வா பீனா'' தண்ணீர் நிறுவனம் தனக்கென்று ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. இது தற்செயலாக நடந்ததா? அல்லது அரசின் காட்டிக் கொடுத்தலால் நடந்ததா?
அண்மையில், சென்னை மாநகரில் குடிநீருக்கு மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இனிமேல் குடிநீர் இணைப்புகளுக்கெல்லாம் ஒரே மாதிரியான கட்டணம் இல்லை. ஒவ்வொரு இணைப்பிற்கும் ஒரு மீட்டர் பொருத்தப்படும். முதல் பத்தாயிரம் லிட்டர்களுக்கு ரூபாய் 250ம், அதற்கு அதிகமான அளவில் பயன்படுத்தும் நீருக்கு மின்கட்டணத்தைப் போல அடுக்குமுறை (ஸ்லாப்)யினையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். வள்ளுவர் கோட்டம் பகுதியில் மட்டும் சுமார் 15 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் இவ்வாறு மாற்றப்பட்டு விட்டன.
பத்தாயிரம் லிட்டர்தானே என நமக்கு எண்ணத் தோன்றலாம். ஆனால் 4 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்றின் சராசரி மாதப் பயன்பாடென்பது இந்த அளவினை விட அதிகமாகவே உள்ளது. ஆக, சென்னையில், குளிக்க, குடிக்க, சமைக்க வேண்டுமானால் நீருக்கு மட்டும் 250 ரூபாயை மாதா மாதம் செலவழித்தாக வேண்டும் எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ரூ. 250/ என்ற அளவில் வசூலிக்கப்படும் இக்கட்டண விகிதம், படிப்படியாக பின்னர் உயர்த்தப்பட்டு விடும் என்பதற்கு தென்னாப்பிரிக்க அனுபவம் சான்றாக உள்ளது. 1978இலேயே உலக வங்கி, இத்தகைய மீட்டர்கள் பொருத்த வேண்டும் என்று சட்டத்தை இயற்றச் செய்துதான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கடன் கொடுத்தது. அச்சட்டத்தை இப்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இனி படிப்படியே செல்போன் இணைப்புகளைப் போல ""பிரிபெய்டு'' கார்டுகளையும் குடிநீர் இணைப்புக்குக் கொண்டு வரப் போகின்றனர். தண்ணீர் என்பது இனியும் தாகத்துக்கல்ல. லாபத்துக்குத்தான் என்பது விதியாக்கப்பட்டு விட்டது.