Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாய் வாலை நிமிர்த்த முடியுமா” என்றொரு பழமொழியை தமிழன் வைத்திருக்கிறான். வளைத்தால் என்ன? எழுப்பினால் என்ன? (வாலை) தமிழனிற்கு என்ன நட்டம் வந்தது என்று நாய்கள் நினைக்கக் கூடும். மிருகங்கள் தேவையில்லாமல் எந்தவொரு அசைவையும் செய்வதில்லை. மனிதர்கள், குறிப்பாக தமிழர் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிற்கு எல்லாமே வளைந்து சுருங்கிப் போய் இருக்கின்றது. இலண்டன் வந்த சோனியாவை உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பு சந்தித்து இலங்கைத்  தமிழ் மக்களை காப்பாற்றுமாறு முறையிட்டதாம். இந்த ஒன்றியம் எதனது வால் என்று எழுதத் தேவையில்லை. இவர்களது அரசியலே அதை தெளிவாக காட்டி நிற்கின்றது.

 

இவ்வளவு மக்களும் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போன பின்னும், இந்திய அரசு என்னும் பிணம் தின்னும் கூட்டத்தின் தலைவியை சந்தித்து, எங்களிற்காக வேண்டிக் கொள்ளும் மாதாவே என்று செபம் சொல்லுகிறார்கள். இவர்களிற்கு கொஞ்சமாவது பகுத்தறிவு, கடந்த கால அனுபவம், வெட்கம் மானம் எதுவுமே இல்லையா? என்று நீங்கள் கேட்கக் கூடாது.  இப்படிக் கேள்வி கேட்பவர்கள் துரோகிகள். காலத்திற்கு காலம் கள்ளரோடும், கொலைகாரர்களுடனும் பேசுபவர்களே உத்தம புத்திரர்கள், தேசபக்தர்கள்.

பாரத மாதா கண்ணீரும் கம்பலையுமாக,  இலங்கைத் தமிழர்களிற்கு பிரச்சனைகள் இருக்கின்றன. நாங்கள் இலங்கை அரசிடம் தமிழ் மக்களிற்காக பேசுகிறோம் என்றாராம். ஆகா! என்ன ஒரு கருணை.  என்ன ஒரு காருண்யம்.  என்ன ஒரு கண்டு பிடிப்பு.  ஜசாக் நியுட்டன் புவியீர்ப்பு விதியை கண்டு பிடித்த பிறகு, அன்னை அரும்பாடு பட்டு தமிழர்களிற்கு பிரச்சனை இருக்கிறது என்று கண்டு பிடித்தது தான், மிகப் பெரிய கண்டு பிடிப்பு. யார் யாருக்கோ எதுவிற்கெல்லாம் விருதுகள் கொடுக்கிறார்களே, இந்தக் கண்டு பிடிப்பிற்காக அன்னைக்கு ஏதாவது பட்டம் கிட்டம் கொடுக்கக் கூடாதா?.

‘இலங்கைத் தமிழரின் பக்கமே நாம் இருக்கிறோம்’ என்று அன்னை தனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னாராம். ஒன்றியத் தலைவர் புல்லரித்துப் போய்ச் சொல்கிறார்.  கேக்கிறவன் கேனப் பயலாய் இருந்தால் எலி ஏரோப்பிளேன் ஓடிச்சு என்று சொல்வார்களாம். நாராயணன் என்ற சோனியாவின் விசுவாசி, தமிழின அழிப்பிற்கு இலங்கை அரசுடன் சேர்ந்து நின்றவன் என்று விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டது. இந்தியாவின் உதவியுடன் யுத்ததை வென்றோம் என்று வாக்கு மூலம் கொடுத்தான் கோத்தபாயா. இதையெல்லாம் மறந்து விட்டு,  மறைத்து விட்டு, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எம் மக்களின் பிணங்களிற்கு மேலாக நடந்து சென்று ; அது போன மாதம் இது இந்த மாதம் என்பது போல அண்ணாச்சி கதையளக்கிறார்.

மேலோட்டமாக பார்த்தால் அரசியல் அனுபவம் எதுவுமற்ற ஒரு கைப்பிள்ளை ஒரு அரசியல் தலைவரை சந்தித்தது போலத் தோன்றுகிறது இந்நிகழ்வு. ஆனால் புலிகளின் முடிவு என்ற சதியினை,  இவை போன்ற சந்திப்புகளின் மூலம் நாம் கண்டறியலாம். புலிகளின் அரசியலை விட்டு விட்டு இராணுவப் பக்கத்தினை மட்டும் பார்த்தோம் என்றால்; அவர்கள் பல வருட அனுபவமும் பல வெற்றிகளையும் கண்ட ஒரு ராணுவ அணியாக இருந்தார்கள். இறுதிப் போரின் போது தமது அனுபவங்களைக் கொண்டு போரினது போக்கினை அவர்கள் நிச்சயமாக விளங்கியிருந்திருப்பார்கள். கிளிநொச்சி விழுந்த பிறகும் கூட,  அவர்கள் பின்வாங்கி தப்பியிருக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே இருந்தன. இந்திய ராணுவத்திற்கு எதிராக பின்வாங்கி மீள்கட்டமைப்பு செய்த அனுபவம் கொண்ட, அவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை. எந்த நம்பிக்கையில் முள்ளிவாய்க்கால் வரை சென்று மடிந்தார்கள். எல்லா தலைவர்களும் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்ற சிறு ராணுவ அனுபவம் கொண்டவரிற்கும் தெரிந்த ஒரு விடயத்தை பற்றி அவர்கள் கவலைப்படாமல் இறுதி வரை ஒன்றாக நின்றது ஏன்?.

 

உதவி வரும், கடைசி நேரத்திலும் கூட  காப்பாற்றி விடுவோம் என்ற உறுதிமொழி வெளிநாட்டில் இருந்தவர்களாலேயே கொடுக்கப்பட்டது. பல உளவு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் சதிகாரர்களினாலேயே; மக்களும், புலிகளும் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப் போயினர். பலநாள் பட்டினியால் ஒட்டி உலர்ந்து போய் காய்ந்து போன வாயை நனைக்க ஒரு துளி நீர் கூட கிடைக்காமல் குழந்தைகள் மடிந்து போன போது, கூட நின்று குண்டு போட்ட கொலைகாரி இன்றைக்கு எதற்க்காக இவர்களை சந்திக்க வேண்டும்?. காட்டிக் கொடுத்த துரோகத்திற்கு நன்றி சொல்லத் தானே. மிச்சமிருக்கும் இலங்கையையும் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் தீட்டத்தானே.

 

தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதை பற்றி கவலைப்படுவதாக நாடகமாடும் சோனியாவின் காங்கிரஸ் அரசினால், இந்தியா முழுவதும் பெண்கள் கொல்லப்படுகின்றனர். மணிப்பூரில், இந்திய ராணுவம் பெண்களை வல்லுறவு கொள்வதை எதிர்த்து சினம் கொண்ட பெண்கள் மணிப்பூர் மாநில சட்டமன்றத்திற்கு முன்பாக நிர்வாணமாக போராட்டம் நடாத்தினர். அதே மணிப்பூரில், அரசபடு கொலைகளை எதிர்த்து ஜரோம் சுந்தர் என்ற பெண் 2000 ஆண்டு கார்த்திகை மாதம் தொடக்கம் பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றார். கனிமங்களை வெளிநாட்டவர்களிற்கு விற்பதற்கு தடையாக இருக்கும் மலைவாழ் மக்களையும், மாவோயிஸ்டுக்களையும் கொல்வதற்கு இந்த தேசபக்தை அனுப்பியிருக்கும் கூலிப்படைகளினால் மலைவாழ் ஏழைப் பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர்.

சோனியாவின் கணவர் போபர்ஸ் பீரங்கி ஊழல் தியாகி ராஜிவ்காந்தி கொலையுண்ட வழக்கில் கைதான நளினி குறித்து, நளினி ராஜிவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே தவிர அவர் கொலையாளி அல்ல; நடக்கப் போவதை திருப்பெருந்தூர் செல்லும் வரை நளினி அறிந்திருக்கவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி தாமஸ் தன் தீர்ப்பிலேயே குறிப்பிட்டார். கோடி கோடியாக ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களும், கொலைகாரர்களும் சுதந்திரமாக திரியும் போது நளினி இவ்வளவு காலமாக சிறையில் இருப்பதைப் பற்றி இவர்கள் பேசுவதில்லை.

ராஜிவ் அனுப்பி வைத்த அழிவுப் படையினரால் ஈழப்பெண்கள் சீரழிந்ததைப் பற்றி, கணவனை, பிள்ளைகளை இழந்து வாழ்நாள் முழுவதும் ஏங்கித் தவிப்பதைப் பற்றியும் உலகத் தமிழர் ஒன்றியத் தலைவர் கேட்டிருக்கலாம். இப்போது விட்ட கண்ணீருடன் அதற்கும் சேர்த்து அன்னை எக்ஸ்ராவாக நாலைந்து துளி கண்ணீர் விட்டு பிரச்சனையை முடித்திருக்கலாம்.

கூட்டமைப்பு மக்களிற்காக மகிந்தாவுடன் பேசுகின்றதாம். இவர்களைப் போன்றவர்கள் உலகம் முழுக்க இருக்கும் மலை விழுங்கி மகாதேவன்களிடம் பேசுகின்றார்கள். மக்கள் தமக்கான போராட்டத்தை தம் கையில் எடுக்கும் போது தான், மக்களின் பெயரைச் சொல்லி மக்களின் மேல் சவாரி செய்பவர்களை விரட்டியடிக்க முடியும்.

விஜயகுமாரன்

25/03/2011