Language Selection

PJ_2008_02.jpg

மலேசியாவில் கடந்த இரு மாதங்களாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது உரிமைகளுக்காக நடத்திவரும் போராட்டம், மலேசியாவில் நிலவும் இனப் பாகுபாட்டையும் அடக்குமுறையையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட்டது.

 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தோட்டத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கென்று தமிழகத்திலிருந்து தமிழர்கள் மலேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காடுகளைத் திருத்தி ரப்பர் தோட்டங்களாக மாற்றி மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழர்களே. 1957இல் மலேசியா பெயரளவிலான சுதந்திரமடைந்தபோது, அரசியல் சட்ட வரைமுறைகளுக்காக ரீட் என்பவர் தலைமையில் பிரிட்டிஷ் அரசு ஒரு கமிசன் அமைத்தது. அதில் தமிழர்கள் சார்பில் சமத்துவ உரிமைகளுக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பிரிட்டிஷ் அரசு புறக்கணித்து விட்டது.

 

மலேயரும் தமிழரும் சீனரும் கொண்ட மலேசியாவில் 1970களிலிருந்து மண்ணின் மைந்தர் கொள்கை பின்பற்றப்பட்டு, மலாய்காரர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கும் சட்டமியற்றப்பட்டு, தமிழர்களும் சீனர்களும் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டனர். காலனியாதிக்கத்திற்கெதிராகச் செம்படைகளைக் கட்டி ஆயுதப் போராட்டம் நடத்திய மலேசியக் கம்யூனிஸ்டுக் கட்சி தடைச் செய்யப்பட்டு, கம்யூனிஸ்டுகள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டன. பாசிச சர்வாதிகார பிரதமர் மகாதிர் முகம்மது, மலேசியாவை இஸ்லாமிய நாடாக அறிவித்தார். மலாய் மொழியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்த நிலையில் ஆங்கிலம்தான் அரசின் செல்வாக்கைப் பெற்றுள்ளது. தமிழ், அலுவல் மொழியாகக்கூட இல்லை. தமிழ் புறக்கணிக்கப்படுவதால் தமிழ்ப் பள்ளிகூடங்கள் மதிப்பிழந்துள்ளதோடு, அரசு போதிய நிதியுதவி செய்யாததால் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. "மண்ணின் மைந்தர்' சட்டப்படி, சீனரோ தமிழரோ வெளிநாட்டினரோ மலேசியாவில் தொழில் தொடங்கினால். மலேயாக்காரர்களுக்கு 30% பங்கு மூலதனமும், ஊழியர்களில் 30% மலேயாக்காரர்களாகவும் இருக்க வேண்டும்.

 

காலனிய ஆட்சிக் காலத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளியாக உரிமைகளற்ற அடிமைகளாக உழன்ற தமிழர்கள், பின்னர் மகாதிர் முகம்மது ஆட்சிக் காலத்தில் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட்ட பெருந்திட்டங்கள், பாமாயில் பண்ணைகளால் ரப்பர் தோட்டத் தொழிலிலிருந்து பிடுங்கப்பட்டு மாற்று நிலமின்றி நகர்ப்புறங்களுக்கு விரட்டப்பட்டனர். இடம் பெயர்ந்தவர்கள் நகர்ப்புறத்தில் வேலையின்மையாலும், புதிய நிலைமைக்கேற்ப மாறிக் கொள்ள முடியாமலும் ஏமாற்றமும் விரக்தியும் அவர்களைக் கவ்வியுள்ளது. இதன் காரணமாக சம்சு (சாராயம்) மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கிறது. இதனால் தமிழர்கள் என்றாலே மோசமானவர்கள், கிரிமினல்கள் என்ற தோற்றம் மலேசிய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மட்டுமின்றி, பொது இடங்களில் தமிழர்கள் மீதான அணுகுமுறை மோசமாக உள்ளது. தமிழர்களை ""கெலிங்'' என்று நாக்கூசும் கெட்ட வார்த்தையால் மலேசியர்கள் அழைக்குமளவுக்கு அங்கே இனவெறியூட்டப்பட்டுள்ளது.

 

குமுறிக் கொண்டிருந்த மலேசியத் தமிழர்கள், ""இன்று அனுபவிக்கும் புறக்கணிப்புக்கும் இன்னல்களுக்கும் பிரிட்டிஷ் அரசின் காலனியக் கொள்கையே காரணம்; அந்தக் குற்றத்துக்காக பிரிட்டிஷ் அரசு மலேசியத் தமிழர் ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ எட்டேகால் கோடி ரூபாய் இழப்பீடாகத் தரவேண்டும்'' என்று கோரி பிரிட்டன் உயர்நீதி மன்றத்தில் சிவில் வழக்கொன்றை கடந்த 30.8.07 அன்று பதிவு செய்து, இதையொட்டி ஒரு லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்ட மனுவை பிரிட்டிஷ் மகாராணியிடம் சமர்ப்பிக்க மலேசிய பிரிட்டிஷ் ஆணையர் அலுவலகத்தை நோக்கி கடந்த நவம்பர் 25ஆம் நாள் ஊர்வலம் நடத்தத் தீர்மானித்தனர்.

 

மலேசியாவில் எவ்வித ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்த அனுமதியில்லாத "ஜனநாயகம்' நிலவுவதால், தடையை மீறி பல்லாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவிய மலேசிய அரசு, தமிழர்களை அமைப்பாக்கிப் போராடி வரும் ""இந்து உரிமைகள் நடவடிக்கைப் படை'' (ஏடிணஞீணூச்ஞூ)யின் முன்னணித் தலைவர்கள் ஐந்துபேரை ""இசா'' எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துள்ளது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் மீது பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன.

 

இவ்வளவுக்குப் பின்னரும், மலேசியத் தமிழர்கள் சமத்துவமாக நடத்தப்படுவதாகவும் ""ஹிண்ட்ராப்'' அமைப்பினர் சமய ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகவும், கூசாமல் புளுகிய மலேசிய இந்திய காங்கிரசின் தலைவரும் தமிழ் அமைச்சருமான டத்தோ சாமிவேலு அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டு போயுள்ளார். இதே கருத்தோடு, இஸ்லாமிய அரசை முட்டுக் கொடுத்து ஆதரிக்கும் இங்குள்ள சில இஸ்லாமிய அடிப்படைவாத பிற்போக்கு பத்திரிகைகள், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் பெயரில் வரும் இந்துத்துவவாதிகள் ""ஹிண்ட்ராப்'' அமைப்பை நிறுவித் தூண்டிவிட்டுள்ளதாகக் கூசாமல் புளுகுகின்றன. இந்து பெயரில் போராடுகிறார்கள் என்பதாலேயே, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

 

மலேசிய அரசின் அடக்குமுறைகளையும் பிழைப்புவாதிகளின் அவதூறுகளையும் துச்சமாக மதித்து தமிழர்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி வருகின்றனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னணித் தலைவர்களை விடுவிக்கக் கோரி சிறப்புப் பிரார்த்தனைகள், மலேசிய அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து கனடா வாழ் தமிழர்களின் ஆர்ப்பாட்டம், ஹிண்ட்ராப்பின் தலைவர் வேதமூர்த்தி வெளிநாடுகளில் ஆதரவு திரட்டும் முயற்சிகள், தமிழக அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கைகள் முதலானவற்றால் உலகின் கவனத்தை ஈர்ப்பதில், போராடிவரும் மலேசியத் தமிழர்கள் முதற்கட்ட வெற்றியைச் சாதித்துள்ளனர்.

 

அதேசமயம் மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து இந்திய வம்சாவளியினரையும் மலேய, சீன உழைக்கும் மக்களையும் இந்நியாயமான போராட்டத்துக்கு ஆதரவாக அணிதிரட்டி எதிரிகளையும் துரோகிகளையும் தனிமைப்படுத்துவது மலேசியத் தமிழர்களின் உடனடிக் கடமையாகும். தற்போதைய முதற்கட்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவும் அடுத்தகட்ட வெற்றியை அறுவடை செய்யவும் இது மிகவும் அவசியமாகும்.

 

· தனபால்