Language Selection

புதிய ஜனநாயகம் 2008

PJ_2008_02.jpg ஜல்லிக்கட்டிற்கு அண்மையில் உச்சநீதி மன்றம் தடை விதித்ததும் தமிழர்கள் பொங்கியெழுந்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதாகவும் பொது மக்கள் ஆத்திரமடைந்து கருப்புப் பொங்கலாக அறிவித்துப் பொங்கல் விழாக்களைப் புறக்கணித்து விட்டதாகவும் செய்தி ஊடகங்கள் பரபரப்பூட்டின. முரட்டுத்தனமான இந்த விளையாட்டில், மனிதர்கள் மாண்டு போகும் கவலையைவிட, காளை மாடுகள் மீது கரிசனம் கொண்டு,

 ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி சென்ற ஆண்டு ஜூலையில் விலங்கு நல வாரியம் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கில் நீலச்சிலுவை சங்கமும் (புளு கிராஸ்) தன்னை இணைத்துக் கொண்டது.

 

வழக்கை விசாரித்து வந்த உச்சநீதி மன்றம், பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாக ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ""ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் கூறவில்லை'' என்றும், ""அதேநேரத்தில் ரேக்ளா எனப்படும் மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்த எந்தத் தடையுமில்லை'' என்றும் கூறியிருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் ""ரேக்ளா பந்தயத்தை மட்டும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?'' என்று யாரும் கேட்கவில்லை.

 

ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்ததும் ஓட்டுக்கட்சிகள் அனைத்திற்கும் "தமிழன் வீரம்' பற்றிய நினைப்பு வந்து, அறிக்கைகளால் பத்திரிகைகளை நிரப்பி விட்டன.


சி.பி.எம். கட்சியோ ""முழுமையான காவல்பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்'' எனக் கூறி, நிலப்பிரபுத்துவக் கலாச்சாரமான ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக வரிந்து கட்டியது. ஏகாதிபத்தியத்தைக் கட்டிக் காக்க நந்திகிராமம்! நிலப்பிரபுத்துவத்தைக் கட்டிக் காக்க அலங்காநல்லூர்! ஆனால், பெயர் மட்டுமோ "கம்யூனிஸ்ட்' கட்சி!

 

பா.ம.க.வின் இராமதாசு, ""தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் அழியாத சில அடையாளங்கள் இருக்கின்றன. அந்த அடையாளங்களை அழித்து விட அனுமதிக்கக் கூடாது'' என்று சீறினார். தமிழனின் நீரும் நிலமும், உழவும் நெசவும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களால் நாசமாக்கப்பட்டு, அவற்றின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், ஜல்லிக்கட்டுத்தான் தமிழனின் அழியாத அடையாளமாக இந்த மருத்துவருக்குத் தெரிகிறது.

 

ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் உசுப்பேற்றியதும், ஜல்லிக்கட்டு போட்டியை ஆண்டுதோறும் நடத்திவரும் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு வட்டார மக்கள், உச்சநீதி மன்றத் தடையைத் துச்சமாக மதித்து இவ்வாண்டும் ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக அறிவித்தனர். ""காவிரி ஆற்று நீர் சிக்கலில் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு தாவாவில் கேரளமும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதிக்காத போது, நாங்கள் மட்டும் ஏன் தீர்ப்பை மதிக்க வேண்டும்?'' என்று நியாயவாதம் பேசினர்.

 

""அலங்காநல்லூர் வட்டாரத்தில் கருப்புக் கொடி ஏற்றினர். ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திருப்பிக் கொடுக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். கருப்புப் பட்டை அணிந்து தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். மூன்று நாட்களாகக் கடைகள் அடைக்கப்பட்டன'' என்றெல்லாம் "குமுறி எழுந்த தமிழர்களின் கோபாவேசத்தை' ஊடகங்கள் வர்ணித்தன.

 

ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப் பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான். இது ஒட்டுமொத்தத் தமிழர்களின் அடையாளம் என்றால், ஏறு தழுவுதலில் தேவர் சாதிக்காரன் வளர்த்த காளையை அடக்கும் உரிமை தாழ்த்தப்பட்டோருக்கு ஏன் இல்லை? வாடிவாசல் முன் திரண்டு நிற்கும் இளைஞர்கள், சாதி அடையாளத்தைக் குறிக்கும் மஞ்சள் நிறச் சீருடையை அணிவது ஏன்? தாழ்த்தப்பட்டோர் தாங்களாகவே தனியாக ஜல்லிக்கட்டு நடத்தினால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்காமல் தொடர்ந்து நடத்தக்கோரி நீதிமன்றம் சென்றவர்களில் பலரும் தேவர் சாதித் தலைவர்களாகவே உள்ளனரே, அது ஏன்?

 

""யார் தடுத்தாலும் நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்; ஜல்லிக்கட்டு என்பது வீரத்தின் அடையாளம்'' என்று மீசையை முறுக்குபவரோ ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் கழகம் எனும் லெட்டர்பேடு தேவர்சாதி அமைப்பின் தலைவரான செந்தில் தொண்டைமான். இன்னொருவர், அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனும், தேவர் சாதிய அடையாளத்துடன் தனக்குத்தானே கட்அவுட் வைத்துக் கொள்ளும் கருப்புப் பண சினிமா நடிகனும், "தமிழர் வீரவிளையாட்டுப் பாதுகாப்புக் குழு'வின் தலைவருமான ஜே.கே. ரித்தீஸ். ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால், "தெய்வக் குற்றம்' ஏற்பட்டுவிடும் என்று கூறி, தடையை மீறி சிவகங்கை மாவட்டம் எம்.சூரக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட நாட்டாமைகளும் தேவர் சாதிக்காரர்களே.

 

ஜல்லிக்கட்டு என்பதை தேவர் ஜெயந்திக்கு இணையான சாதிய ஆணவச் சின்னமாகத்தான் தேவர் சாதியினர் பார்க்கின்றனர். ஜல்லிக்கட்டினைப் பாரம்பரியமாக நடத்திவரும் இந்த ஆதிக்க சாதியினர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எங்களைப் பாதிக்கின்றது என்று கூடப் பேரணி நடத்தியிருக்கின்றனர். காளைகளிடம் மட்டும்தானா இவர்கள் விளையாடியிருக்கின்றனர்? மேலவளவு முருகேசனின் தலையைச் சீவி, சாதிவெறியோடு மீசையை முறுக்கி கோரத் தண்டவமும் ஆடியிருக்கின்றனர். இருப்பினும், தேவர் சாதியினரின் குல தெய்வமான முத்துராமலிங்கத் தேவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடச் சொன்ன "சேரிப்புயல்' தொல்.திருமா இதுவும் போதாதென்று, ""ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையானது, இந்த விளையாட்டைப் பாரம்பரியமாக நடத்திவரும் மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது'' என்று வேதனைப்படுகிறார்.

 

ஓட்டுக்காக இக்கட்சிகள் இருவிழி சிவந்து கனற்பொறி தெறிக்க பத்திரிக்கைகளில் அறிக்கைகளை வெளியிடுவது ஒருபுறமிருக்க, 400 ஆண்டுகளாக இவ்வீர விளையாட்டு பாரம்பரியமாக நடந்து வருவதாக தமிழக அரசே உச்சநீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

 

ஏறு தழுவுதல் மட்டும்தான் பாரம்பரியமாக வந்ததா? சாதிதீண்டாமை, வலங்கைஇடங்கை வெறியாட்டங்கள் கடப் பாரம்பரியமாக வந்தவைதான். அதற்காக அவற்றையெல்லாம் ஆதரிக்க முடியுமா? பாரம்பரியமாக நீடித்துவந்த பொட்டுக் கட்டுதலைச் சட்டம் போட்டுத் தடுக்க முற்பட்டபோது, பார்ப்பனஆதிக்க சாதியினர் பதறியதைப் போலத்தான் இருக்கிறது, சாதிவெறியை மறைத்துக் கொண்டு "தமிழன் வீரம்', "பாரம்பரியம்' எனப் பூசி மெழுகிடும் வாதமெல்லாம்.

 

பா.ஜ.க.வின் இல.கணேசன், அகண்ட பாரதத்திலிருந்து இறங்கி வந்து "தமிழரின் பாரம்பரியம்' பற்றி அங்கலாய்க்கிறார். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா குண்டர்களோ மதுரையில் ரயில் மறியல் செய்கின்றனர். அதேசமயம், தடை கோரி வழக்கு போட்ட விலங்குநல வாரியத்தை, பா.ஜ.க.வோ, சிவசேனாவோ எதிர்க்கவில்லை. ஏனெனில், இதே விலங்கு நல வாரியம்தான் "கோசாலை'களை (பசு பாதுகாப்பு மையம்) நவீனப்படுத்த நிதியுதவி செய்கிறது. பசுவதை கூடாது என்று சீறும் இந்த இந்துவெறிக் கட்சியினர்தான், காளைகளின் கண்களில் எலுமிச்சை சாறையும் மிளகாய்ப் பொடியையும் தூவி நடத்தப்படும் காளை வதை "பாரம்பரிய' ஜல்லிக்கட்டுக்காக வரிந்து கட்டுகின்றன.

 

இவை ஒருபுறமிருக்க, உச்சநீதி மன்றத்துக்கு காளைகள் மீது திடீர்க் கரிசனை ஏன்? ""இது காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு; இதனால் பலருக்குப் படுகாயங்களும் ஒரு சிலர் பலியாவதும் நடக்கிறது'' என்று அது நியாயவாதம் பேசுகிறது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றால், அதைவிடக் காட்டுமிராண்டித்தனமான சாதியும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவதைத் தடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாசிச ஜெயா ஆடுகோழி வெட்டத் தடை விதித்து கிராமக் கோயில்களைப் பார்ப்பனமயமாக்க முயற்சித்தார் என்றால், நீதிமன்றமோ ஜல்லிக்கட்டு போட்டியை உலகமயமாக்கலுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்ய முயற்சிக்கிறது. அதனால்தான் முதலில் தடை விதித்துவிட்டு பின்னர் எட்டுக் கட்டுப்பாடுகளை விதித்து, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்துள்ளது.

 

""ஜல்லிக்கட்டை மனிதத்தன்மை கொண்டதாகவும், நாகரீகமான முறையில் நடத்தப்படும் நிகழ்ச்சியாகவும் மாற்றப்பட வேண்டும்'' என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம், நீதிமன்றத்திற்கு வேறு உள்நோக்கம் இருப்பதை உணர்த்துகிறது. இதற்கேற்ப மதுரை மாவட்ட ஆட்சியரும், ""ஜல்லிக் கட்டை முறைப்படுத்தி நடத்திட அரசு விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக'' அறிவித்துள்ளார்.

 

இந்த அவசரச் சட்டம் எவ்வாறு இருக்கும்? உலகமயமாக்கலுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டியை மாற்றியமைக்கும் வகையிலே இருக்கும். ""இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் கோக்'' என தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரம் போல, இனி அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டை வழங்குவது பெப்சி, டாடா என்று மாற்றப்படலாம். ""சென்னை சங்கமம்'' போல, "நாட்டுப்புறக் கலை மற்றும் விளையாட்டுக்களை'ப் பாதுகாத்து வளர்த்திட ஃபோர்டு பவுண்டேசன், பில்கேட்ஸ் பவுண்டேசன் என அனைத்து ஏகாதிபத்திய நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் தயாராகவே உள்ளனர். இதனால்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டை ஒழுங்குபடுத்தி "மனிதத்தன்மை நாகரிகம்' கொண்டதாக மாற்றச் சொல்கிறது.

 

இதன்படி, இனி வாடிவாசல் ""பெப்சி'' வாசலாகலாம். ""நைக்'' பனியன் அணிந்த ஜல்லிக்கட்டு வீரர்கள், ""கோக்''கைப் புரவலராகக் கொண்ட மாட்டையும், ரிலையன்ஸ் பிரஷ் வளர்த்த மாட்டையும் அடக்கும் வீர விளையாட்டை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பலாம்.

 

இவை மிகைப்படுத்தல்கள் அல்ல. ஏற்கெனவே ""சென்னை சங்கமம்'' நிகழ்ச்சிகள் நடந்த விதத்தைப் பார்த்தாலே இதனைப் புரிந்து கொள்ள முடியும். சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை பன்னாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொள்ள, இந்நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் விற்கப்பட்டதைப் போல, கடைசியில் தமிழர்களின் "பாரம்பரிய' ஜல்லிக்கட்டும் உலகமயமாக்கலுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

· இரணியன்

 

தமிழகத்தில் கி.மு. 1500 காலத்தில் (அதாவது, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) ""மஞ்சு விரட்டு'' அல்லது ""எருது கட்டுதல்'' என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.

 

நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த ""மஞ்சு விரட்டு'', ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

 

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்.