Language Selection

புதிய ஜனநாயகம் 2008

PJ_2008_02.jpg

அடுத்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு மூன்றாண்டுகளுக்கும் மேலாக அவகாசம் இருக்கிறது. என்றாலும் இப்போதே ஓட்டுக்கட்சி அரசியலில் செயற்கையாகச் சூடேற்றி மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. கூட்டணி அரசியல் குட்டை சகிக்க முடியாதவாறு நாற்றமெடுக்கும் அளவுக்குக் குழப்பி விடப்படுகிறது. அதைக் குழப்பிவிட்டு ஆதாயம் அடைவதற்கான முயற்சியில், கடந்த தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்த ஓட்டுக் கட்சிகளும்,

 சந்தர்ப்பவாதக் கூட்டணி போட்டுத் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளக் கனவு காணும் ஓட்டுக் கட்சிகளும் மட்டுமல்ல, பிழைப்புவாத மற்றும் பார்ப்பனமயமான செய்தி ஊடகங்களும் தீவிரமாக இறங்கியுள்ளன.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்றசட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்து மதவெறி பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வும் அதன் இயல்பான தோழமைக் கட்சியான ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும் ஏறக்குறைய தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டன. ஆட்சியை இழந்தவர்கள் ஆத்திரத்தோடு பொங்கி எழுந்தார்கள்; வெற்றி பெற்ற கட்சிகளின் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவுபடுத்திக் கட்சிகளைத் தம் பக்கம் இழுக்கும் நோக்கத்தோடு, பிழைப்புவாத மற்றும் பார்ப்பனமயமான செய்தி ஊடகங்களைப் பயன்படுத்தி ஊகங்களையும் வதந்திகளையும் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பினர். இந்த முயற்சியில் கருணாநிதி தலைமையிலான கூட்டணியில் குழப்பமும் சலசலப்பையும் ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெற்றாலும், நம்பிக்கையான மாற்றுக் கூட்டணியை ஜெயலலிதா தலைமையில் ஏற்படுத்திவிடும் நோக்கம் இன்னமும் ஈடேறவில்லை என்றுதான் கூறவேண்டும்.


இந்த நிலையில் தமிழ்நாட்டின் பிரபல பார்ப்பன பாசிச அரசியல் தரகனான துக்ளக் ""சோ'' பா.ஜ.க.அ.தி.மு.க. கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். குஜராத் இந்து மதவெறி பாசிசக் கொலைகாரன் மோடியை முன்னிறுத்தி இதைச் சாதித்துள்ளார். மோடியைச் சிறப்பு விருந்தினராகக் கொண்டு "சோ' நடத்திய துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது, ""தமிழகத்தில், பா.ஜ.க. அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. கூட்டணி உருவானால் நூற்றுக்கு நூறு வெற்றி பெறும் என்று அரசியல் ஆரூடம் கூறியுள்ளார். இந்தக் கூட்டணியை உருவாக்கும் சகுனி வேலையில் மோடியால் ராஜகுரு என்றழைக்கப்பட்ட "சோ' தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரிகிறது. பா.ஜ.க.அ.தி.மு.க. ஆகியவை மட்டும் கூட்டணி சேர்ந்து தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்ற நிலையில், முன்பு எம்.ஜி.ஆரின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு தமது பார்ப்பன பாசிச நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டதைப் போல, நடிகர் விஜயகாந்தைப் பயன்படுத்திக் கொள்ள இப்போது அவர்கள் எத்தணிக்கிறார்கள்.

 

தேசியக் கட்சிகள் என்றழைக்கப்படும் பா.ஜ.க., காங்கிரசு மற்றும் போலி கம்யூனிஸ்டுகளிடையே கொள்கை, கோட்பாடு என்ற வகையிலான பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. காங்கிரசும் போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இந்துத்துவ மற்றும் இசுலாமிய மதவாத சக்திகளுடன் மாறி மாறி சமரசம் செய்து கொள்பவைகளாக உள்ளன. தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் என்ற துரோகக் கொள்கையை எல்லா ஓட்டுக் கட்சிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கின்றன. குடும்பவாரிசு நலன்களை முன்னிறுத்தி கருணாநிதி நடத்திய கூட்டணி அரசியல் இரண்டு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதை உறுதிப்படுத்தின. இலவசகவர்ச்சிவாத முகங்கொண்ட உலகமயமாக்கல் புதிய பொருளாதாரக் கொள்கைதான் ஓட்டுக்கட்சி அரசியலுக்கு இசைவானதாக இருக்க முடியும். எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பெற்றுத்தரும் கூட்டணி அரசியலுக்கு இடமளிக்காதவாறும் வாக்கு வங்கிகள் சிதறிப் போய்விட்டன. அதாவது, அனைத்திந்திய அளவிலும் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் ஒரு கட்சியின் பெரும்பான்மை ஆட்சி என்பது கூட பழங்கதையாகி விட்டது. இந்த நிலையில் ஓட்டுக் கட்சிகள் தேர்தல்களில் பெறும் சதவீதக் கணக்குகளே கூட்டணியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. இதனால் தேசியம், இந்துத்துவம் போன்றவற்றை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கேலி பேசும் நடிகரின் கட்சிகள், சாதிகளின் கட்சிகள், பிழைப்புவாதிகளின் கட்சிகள் கூட அவர்களே மதிக்கத்தக்க வேண்டிய அரசியல் கட்சிகளாகி விட்டன. நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகத்தின் கீழ் தங்கள் ஆட்சியாளர்களை மக்களே தீர்மானிக்கிறார்கள் என்கிற திரை விலகி, சதவீதக் கணக்கு அடிப்படையில் முடிவாகும் சந்தர்ப்பவாதச் சேர்க்கைகளே தீர்மானிக்கின்றன என்பதாகிவிட்டது.