பகுதி 53

புதுடில்லி சாம்ராட் ஹோட்டலில் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்ற இயக்கங்கள் இடம் இந்திய அதிகாரிகள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக சொல்லி தலைவர்களிடம் எழுத்து மூல உறுதிமொழி வாங்க முயற்சி செய்தார்கள். ஆனால் எல்லா இயக்கங்களும் அமிர்தலிங்கம் உட்பட கூடிப் பேசி, கடைசியில் இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு எப்படி நடைமுறைப்படுத்தும் என்ற கடந்தகால அனுபவங்களின்படி, சந்தேகம் இருந்தாலும் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இந்தியாவை நம்பி, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு இந்தியா தான் பொறுப்பு என்ற நம்பிக்கையில் எல்லா இயக்கங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் இப்ப இருப்பவர்கள் telo செல்வம், ஸ்ரீகாந்தா, tulf சம்பந்தன், endlf ராஜன், புளொட் சித்தார்த்தன், நான் வெற்றிச்செல்வன்.

சுதுமலையில் இருந்து சென்னை வழியாக புதுடெல்லி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் நாங்கள் இருந்த ஹோட்டலுக்கு பக்கத்து அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அங்கு சிறந்த வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரா உளவுத்துறை அதிகாரிகள், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பிரதம மந்திரி அலுவலக அதிகாரிகள் எல்லோரும் சந்தித்து மிகவும் சுமுகமான முறையில் சந்தோசமான முறையில் உரையாடல்கள் நடந்துள்ளன. அதிகாரியின் வடிவில் சனி பெயர்ச்சி நடந்துள்ளது. அந்த அதிகாரி இலங்கை இந்திய ஒப்பந்தங்கள் பற்றி விரிவாக பேசி விட்டு, மற்றைய இயக்கங்கள் எல்லாம் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டு விட்டார்கள் என்று கூறியிருக்கிறார். உடனடியாக பிரபாகரனுக்கு கோவம் வந்து அவர்களுக்கும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக்கும் என்ன சம்பந்தம். அவர்கள் யாரும் இப்போது ஈழப்போராட்டத்தில் இல்லை. இந்திய அரசு எனக்கு கொடுத்த வாக்கின்படி, மற்ற இயக்கங்களையும் ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தி கையெழுத்து வாங்கியது மிகவும் தவறு கோபப்பட்டு உள்ளார். அதன் பிறகு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அவர் சுதுமலையில் ஏற்றுக்கொண்ட எழுத்து வடிவ நிபந்தனைகளில் குறை கண்டுபிடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். அதன் பிறகு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, எம்ஜிஆர் டெல்லி வரமுடியாத நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களும் வந்து கதைத்து ஒன்றும் சரிவரவில்லை.

அசோகா ஹோட்டலில் நடக்கும் விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் பரவத் தொடங்கின. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலங்கை பிரச்சனை தாங்கள் அரசியல் செய்வதற்கு மட்டும்தான் பயன்பட்ட ஒரு பிரச்சனை. உண்மையில் யாரும் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைப்பதில்லை. இது நான் அரசியல்வாதிகளை மட்டும் தான் கூறுகிறேன். தமிழ்நாட்டு மக்களை பற்றி கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு சமாதானம் வந்தால் அது தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கும் அண்ணா திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்த எதிர்க்கட்சிகள். குறிப்பாக திமுகவைச் சேர்ந்த வை.கோபால்சாமி எம்,பி பரபரப்பான அறிக்கைகள் மூலம் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார் பிரபாகரனை பலாத்காரமாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்கிறார்கள், என்ற பிரச்சாரங்கள் மூலம் உண்மையில் நிலமையை சிக்கல் ஆக்கினார். அவர் பிரபாகரனை சந்திக்க போக அதிகாரிகள் விடவில்லை. அதையும் பிரச்சினை ஆக்கினார். பிறகு ஏதோ ஒரு வழியில் பிரபாகரனுக்கு தகவல் அனுப்பி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று செய்தி அனுப்பியதாக பத்திரிகையாளர்கள் மூலம் எங்களுக்கு பலவித தகவல்கள் கிடைத்தன. பத்திரிகையாளர்கள் 24 மணி நேரமும் இரண்டு ஹோட்டல்களிலும் மாறி மாறி வந்து போகும் அவர்களிடம் உண்மை நிலைமைகளை எங்களுக்கு உடனுக்குடன் அறியக்கூடியதாக இருந்தது. இந்திய பிரதமர் விட்டுக் கொடுப்பதாக இல்லை. கடுமையாகவே இருந்துள்ளார். அதன் பின்பு பிரபாகரன் ஏற்றுக்கொண்டு, தங்கள் இயக்கத் தோழர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்துக்கு மாதாமாதம் 50 லட்ச ரூபாய் என நினைக்கிறேன், கேட்டு ராஜீவ் காந்தியும் ஏற்றுக்கொண்டார். அதன் பின்பு பிரபாகரன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட செய்தி கிடைத்தது. இந்திய அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடக்கும் வரை இந்திய அரசு அவர்கள் பேசியபடி பணம் கொடுத்து உள்ளார்கள். உண்மையில் நடந்த பல விடயங்கள் எல்லா இயக்கங்களும் மறைத்துள்ளனர். அல்லது தங்கள் தங்களுக்கு வசதியானபடி நடந்த சம்பவங்களை திரித்து கூறியுள்ளார்கள். நடந்த சம்பவங்களை நேரில் இருந்த பலர் இன்றுவரை மௌனமாகவே இருந்துள்ளார்கள். காரணம் உண்மைகளை கூறி பல பேரை ஏன் தேவையில்லாமல் பகைத்துகொள்ள வேண்டும் என்ற காரணம் தான் என நினைக்கிறேன். அடுத்த நாள் 29/07/1987 அன்று காலை ராஜீவ்காந்தி இலங்கை போய் ஒப்பந்தம் கைச்சாத்து இடுவதாக இருந்தது.

எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு ஒரு பிரச்சனை. சித்தார்த்தன் சிங்கப்பூரில் வாங்கிய மூன்று சூட்கேஸ்கள் நிறைந்த தொலைத்தொடர்பு கருவிகள் டெல்லி வந்து இருந்தன. இலங்கை-இந்திய ஒப்பந்தம் நிறைவேறிய பின் எந்த ஒரு இயக்கங்களும் இந்தியாவில் ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் பாவிக்க முடியாது, கொண்டு போவதும் முடியாது. அடுத்தநாள் ஒப்பந்தத்திற்கு முன் அவை ராமேஸ்வரம் கொண்டு போக வேண்டும். உடனடியாக நானும், சித்தார்த்தனும் ரா உயர் அதிகாரிகளின் உதவியை நாடினோம். அவர்களும் பலத்த சிந்தனைக்கு பின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் காலை பதினோரு மணிக்கு முதல் ராமேஸ்வரம் கொண்டு போகவேண்டும், முடியுமா என்று கேட்டார்கள். நாங்களும் சரி என்று விட்டு, சென்னை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அங்கு லண்டனிலிருந்து கிருஷ்ணன் வந்திருந்தார். PLO பாபு, திருஞானம் இருவரிடமும் விபரங்களைக் கூறி, இரவு பத்தரை மணி டெல்லி சென்னை விமான வரவை எதிர்பார்த்து ஏர்போட்டில் காத்திருக்கும்படி சொல்லி உடனடியாக சூட்கேஸ்கள் ராமேஸ்வரம் கொண்டுபோய் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் ஒப்படைக்கும்படி ஏற்பாடு செய்யும்படி கூறினோம்.

நான் இரவு எட்டு மணி விமானத்தில் மூன்று சூட்கேஸ்களையும் எடுத்துக்கொண்டு டெல்லி விமான நிலையம் சென்றேன். எந்தப் பிரச்சினையும் வராமல் உளவுத்துறை அதிகாரிகள் கவனித்துக் கொண்டார்கள். அதுபோல் சென்னையிலும் விமானநிலையத்தில் பிரச்சினைகள் வராமல் உளவுத்துறை அதிகாரிகள் கவனித்துக் கொண்டார்கள். விமானநிலையத்துக்கு பாபு, திருஞானம், லண்டன் கிருஷ்ணன் போன்றவர்கள் வந்திருந்தார்கள். உடனடியாக சூட்கேஸ்களை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் விரைந்தார்கள். திருஞானம், லண்டன் கிருஷ்ணன், நான் மூவரும் கேகே நகரில் இருந்த வாசுதேவாவின் வீட்டில் இரவு கொஞ்ச நேரம் அங்கிருந்த தோழர்களிடம் கதைத்து கொண்டு இருந்துவிட்டு அதிகாலை ஐந்தரை மணி விமானத்தில் டெல்லி சென்று விட்டேன். எனது அலுவலக வீட்டில் குளித்து உடுப்புகளை மாற்றிக்கொண்டு எமது தலைவர்கள் தங்கியிருந்த சாம்ராட் ஹோட்டலுக்கு போய் சேர்ந்தேன். அங்கு ஒரே பரபரப்பாக இருந்தது.

பகுதி 54

இலங்கையில் இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது சம்பந்தமான செய்திகள் எங்களுக்கு சொல்லப்பட்டது. அதேநேரம் இலங்கை பிரதம மந்திரி பிரேமதாசா ஒப்பந்தத்துக்கு எதிராக இருப்பதாகவும், அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் செய்திகள் வந்தன. இது உண்மையில் பிரேமதாசா எதிராக இருந்தாரா? அல்லது ஜெயவர்த்தனாவின் ராஜதந்திரம் எனவும் பேசப்பட்டது. தன் மீது திணிக்கப்பட்ட வேறு வழியில்லாமல் தன்னால் திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை, தனது நாட்டிலுள்ள தலைவர்கள் ஏற்கவில்லை என்பதை காட்ட முற்பட்ட சம்பவம் எனவும் பலவித பேச்சுக்கள் இருந்தன.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ராஜீவ் காந்தி குழுவினர் இந்தியா புறப்படும் முன் இந்திய பிரதமருக்கு வழியனுப்பு ராணுவ அணிவகுப்பில் கடற்படை வீரர் தாக்கியது சம்பந்தமாகவும் பல்வேறு கருத்துக்கள் இருந்தன. ஜெயவர்தனா மறைமுகமாக தனது எதிர்ப்பைக் காட்ட அந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. அதேநேரம் இந்திய பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் ராஜீவ் காந்திக்கு பெரிய அனுதாபத்தை பெற்றுக்கொடுத்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் உண்மையில் இலங்கை தமிழர்களுக்காக திட்டமிடப்பட்டு போடப்பட்ட ஒப்பந்தம் இல்லை. விடுதலைப்புலிகளை காப்பாற்ற விடுதலைப்புலிகள் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் எம்.ஜி.ஆர் மூலமும் தனது தனிப்பட்ட முயற்சிகள் மூலமும், இந்தியாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வந்தார் என்பதுதான் உண்மை. இந்தியாவில் ராஜீவ் காந்திக்கும் அவரது அரசுக்கும் போபோஸ் பீரங்கி ஊழல் சம்பந்தமாக மிக நெருக்கடியான நேரத்தில், பாலசிங்கத்தின் அழைப்பு தங்கள் இமேஜை காப்பாற்றிக்கொள்ள, பத்திரிகைகளின் பார்வையை போபோஸ் பீரங்கி பேர ஊழலில் இருந்து திசை திருப்ப வேண்டிய வாய்ப்பாக அமைந்தது.

விடுதலைப்புலிகளால் மற்றைய விடுதலை இயக்கங்கள் தடை செய்யப்பட முன் எல்லா இயக்கங்களும் இலங்கை ராணுவத்தின் முன்னேற்றத்தை ஒவ்வொரு வழிகளில் தடை செய்து பாதுகாப்பு கொடுத்தனர் என்பது உண்மையே. அதேநேரம் விடுதலைப்புலிகளால் மற்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்ட பின்பு இலங்கை ராணுவம் பல வழிகளில் முன்னேறி தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்ல கூடிய சூழ்நிலை உருவாகியது. அப்போது வேறு எந்த ஒரு இயக்கமும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அதோடு மற்றைய இயக்கங்கள் யாரும் இந்தியா தலையிட வேண்டும் என்றும் கேட்கவில்லை. பாலசிங்கம் மட்டும்தான் கேட்டார். அதுவும் எப்படி, இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்ககுள் கொண்டு வந்தால் இந்தியா ஒரு காலமும் இலங்கை அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது, அதனால் உடனடியாக தலையிட்டு விடுதலைப் புலிகளை காப்பாற்ற வேண்டும், தேவையானால் இந்தியா படை எடுக்க வேண்டும் என்று.

அன்று ஜெயவர்த்தனா அரசு பயப்படாமல் சண்டையை தொடர்ந்திருந்தால், இன்று இந்த நிலை வந்திருக்காது.

1987 ஆரம்ப மாதங்களில் புளொட் இயக்க முகாம் தோழர்களின் உணவு பிரச்சனை மற்றும் அவர்களை இலங்கை அனுப்புவதற்கான தேவை கருதி, கடைசி கட்ட முயற்சியாக டெல்லியில் வைத்து நான், பவன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரின் முயற்சியால் எமது கழகத் தோழர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கிடைத்தன. இதுபற்றி முன்பே பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த நேரம் இலங்கை-இந்திய ஒப்பந்தம் வருமா என்று கூட யாருக்கும் தெரியாது. உங்களுக்கு 1987 இந்திய பயிற்சிகள் கிடைக்கப் போகிறது என்று தெரிந்தவுடனே செயலதிபர் முக்கியமான தோழர்களை எல்லாம் உடனடியாக இலங்கைக்கு அனுப்பி அங்கு முகாம் போட ஏற்பாடு செய்துள்ளார். அப்படிப் போன நடேசன் விடுதலைப்புலிகளால் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்தம் ஏற்படும் முன்பே எமது இயக்கம் ஆயுதங்கள் மற்றும் பெருமளவு தோழர்களையும் இலங்கையை நோக்கி அனுப்பியாகிவிட்டது. அங்கு மாணிக்கம்தாசன், கந்தசாமி, சேவல்கொடி போன்ற முக்கிய போராளிகள் விடுதலைப்புலிகளுடன் கடும் சண்டை போட்டுக்கொண்டே முன்னேறி செட்டிகுளம், மூன்று முடிச்சு போன்ற இடங்களில் முகாம் அமைத்திருந்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை ராணுவத்தால் துரத்தப்பட்ட புலிகளின் பெரும்பான்மையானவர்கள், வன்னி பிரதேசத்திற்கு வந்து அடைக்கலம் தேடி இருந்தார்கள். இதே நேரம் மற்றைய இயக்கங்களும் இந்தியாவிலிருந்து ஆயுதங்களுடன் வந்தவர்கள் விடுதலைப்புலிகளுடன் சண்டையில் ஈடுபட்டார்கள். ஒரே நேரத்தில் பலமுனைகளில் தாக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இலங்கை-இந்திய ஒப்பந்தம் பாதுகாப்பு கொடுத்தது என்பது உண்மை.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்ட பின்பு இயக்கங்கள் ஆயுதங்கள் கொண்டு போவது தடை செய்யப்பட்டிருந்தது. புளொட் இயக்கம் உட்பட மற்றைய இயக்கங்கள் ஆயுதங்கள் எல்லாம் முதலிலேயே கொண்டுபோய் விட்டனர். எஞ்சிய தோழர்களை எல்லா இயக்கமும் ஐ.பி.கே .எஃப் விமானங்களில் அனுப்பினர். ஒப்பந்தத்தின் பின்பு கடலில் படகு மூலம் ஆயுதங்களுடன் வந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரப்பா குழுவினரை சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த இலங்கை இராணுவம் கைது செய்தது எல்லோரும் அறிந்ததே.

ஒப்பந்தப்படி ஆயுதங்கள் சரண்டர் என்பது இயக்கங்களிடம் இருந்த முழு ஆயுதங்களையும் ஒப்படைப்பது அல்ல. அடையாளத்துக்காக சில ஆயுதங்களை இந்திய படைகளின் முன்பாக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, தாங்கள் இனி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தப் போவதில்லை என்று ஓர் உறுதிமொழி என்று விளங்கபடுத்தப்பட்டது.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எல்லா விடுதலை இயக்கங்களையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது உண்மை. காரணம் இவர்கள் எல்லா தேவைக்கும் இந்திய மண்ணையே நம்பியிருந்தார்கள். ஆயுதம் பயிற்சி போன்றவை. அதோடு யாழ்ப்பாணத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் காப்பாற்றும்படி பாலசிங்கம் நின்றதையும் பார்த்து இந்தியா தான் சொல்வதை விடுதலைப்புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் கேட்கும் என தப்புக் கணக்குப் போட்டார்கள்.

விடுதலை புலிகள் மேல் இருந்த கடும் கோபத்தால் மற்றைய இயக்கங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல், குறிப்பாக புளொட் கடுமையாகத் தாக்கி பலத்த உயிர் சேதத்தை விடுதலைப்புலிகளுக்கு ஏற்படுத்தினார்கள். இந்திய ராணுவ உளவுத்துறையும், ரா உளவு அமைப்பும், இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் என்னை பலமுறை கூப்பிட்டு எச்சரித்தார்கள். விடுதலைப்புலிகள், புளொட் அமைப்பு ஒப்பந்த நேரத்தை பயன்படுத்தி தங்களை பலமாகத் தாக்கி வருவதாகவும், இந்திய அரசு அவர்களை கட்டுப்படுத்தாவிட்டால் தாங்கள் திரும்பவும் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் என்று மாத்தையா இந்திய IPKF உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்துள்ளார். இந்திய அதிகாரிகள் டெல்லியில் என்னிடமும் சென்னையில் சித்தார்த்தன் இடமும் உங்கள் தலைவர் சொகுசாக அத்துலத் முதலியின் ஆதரவில் கொழும்பில் இருந்து கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்க இலங்கை அரசோடு வேலை செய்கிறார் என குற்றம் சாட்டினார்கள். நாங்கள் இதை எங்கள் செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு இந்த செய்தியை கூறும்போது, அவர் எங்களால் தன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிக் கொண்டு இருங்கள் என்று கூறினார்.

இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் இனி இலங்கைத் தமிழர்கள் அமைதியாக வாழக்கூடிய நிலை வரும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை ஒவ்வொரு விடுதலை இயக்கமும் மற்ற இயக்கங்களை கொலை செய்வதும், மற்ற இயக்க அங்கத்தவர்களின் குடும்பங்களை கொலை செய்வதும் கொள்ளை அடிப்பதும் பார்த்து எல்லோரும் கேட்டது ஈழ விடுதலை என்று கூறிவந்த இயக்கங்களின் உண்மையான நோக்கம் என்ன? ஏன் இந்தியா வர வேண்டும் அவர்கள்? உண்மையான மக்கள் மேல் அன்பும் பாதுகாப்பும் கொண்ட இயக்கங்கள் என்றால் இந்தியாவைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் என்முன் முன்வைத்த கேள்வி. இவர்கள் கேட்ட கேள்விகள் மூலம் உண்மையின் இலங்கை தமிழர்விடுதலை இயக்கங்களின் முகமூடிகள் கழன்று விழுந்தன.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் தான் பிரபாகரன் டெல்லியில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்று பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. காரணம் பிரபாகரன் குழுவினரை இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களை சந்திக்க இந்திய வெளிவிவகார அமைச்சு விடவில்லை. இந்தியப்படைகள் முற்றுமுழுதாக இலங்கை வட கிழக்கு பகுதியில் நிலை கொள்ளும் வரை, பிரபாகரன் குழுவினரை அங்கு அனுப்ப விரும்பவில்லை என்பதே உண்மை.

இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பதை விட, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையை ஓரளவு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவே விரும்பினார்கள். இதில் வெற்றி பெற்றால் இந்தியாவில் ராஜீவ் காந்தியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று கணக்கு போட்டார்கள். எங்கே இந்தியா ஒப்பந்தத்தின் முழு பொறுப்பையும் இலங்கையின் இந்திய ஹை கமிஷனர் டிக்சித் ஏற்றுக் கொண்டு எல்லா இயக்கங்களையும் அலட்சியப்படுத்தி தான் ஒரு சுப்பர் பவர் போல் நடந்து கொண்டார். இதுவும் குழப்பத்துக்கு ஒரு காரணம். மற்றும் இன்றுவரை எதற்கெடுத்தாலும் இந்திய ரா உளவுத்துறை தான் எல்லாத்துக்கும் காரணம் என்று எழுதுகிறார்கள். உண்மையில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷிய உளவுத்துறைகள் போல் ரா உளவுத்துறை தன்னிச்சையாக இயங்க முடியாது. இந்திய பிரதம மந்திரிக்கு கட்டுப்பட்டு தான் செயல்படும். அதோடு அவர்கள் இந்திய போலீஸ் துறையில் இருந்து மத்திய அரசுக்கு பிரதம மந்திரிக்கு வேண்டிய அல்லது கட்டுப்படக்கூடிய அதிகாரிகளை தான் எல்லா உளவுத்துறைகளின் தலைவர்களாக இந்தியாவில் நியமிக்கிறார்கள். இதனால் இந்தியாவில் அரசியல் தலைமை என்ன விரும்புகிறதோ அதைத்தான் செய்கிறார்கள்.

பகுதி 55

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பு, அடுத்த நாள் சென்னையில் லண்டன் கிருஷ்ணன் தன்னிச்சையாக முடிவெடுத்து டுமால், ராஜா என்ற இரு இயக்க உறுப்பினர்களிடம் இயந்திரதுப்பாக்கியை கொடுத்து, நுங்கம்பாக்கத்தில் இருந்த இலங்கை தூதுவராலயத்தில் போய் சுடச் சொல்லியிருக்கிறார். அவர்களும் முட்டாள்தனமாக போய், வெளியிலிருந்து இலங்கை தூதுவராலயத்தை நோக்கி சுட்டு இருக்கிறார்கள். அங்கு காவலுக்கு இருந்த தமிழ்நாடு காவல்துறையினர் அவர்களை கைது செய்து உள்ளார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஜெயிலில் இருந்தார்கள்.

லண்டன் கிருஷ்ணன் இதற்கு சொன்ன காரணம், ராஜீவ் காந்தியை கொழும்பில் கடற்படை வீரர் தாக்கியது அறிந்து புளொட் இயக்கம் கோபம் கொண்டதாகவும், அதனால் இந்த இருவரும் தன்னிச்சையாக போய் இலங்கை தூதுவர் ஆலயத்தை தாக்கியதாகவும், இந்த செய்தி அறிந்தால் இந்திய மக்களும் இந்திய அரசும் சந்தோஷப்படுவார்கள். எங்களுக்கும் கூடுதலாக உதவி கிடைக்கும் என்று தான் நம்புவதாக கூறினார். இந்த டுமால் பிற்காலத்தில் வவுனியாவில் செய்த அநியாயங்கள் பற்றி பல கதைகள் உண்டு. இந்த டுமல், உமாமகேஸ்வரன் கொலை பற்றிய உண்மைகளை மறைக்க சுவிஸில் இருந்த ராபின் மற்றும் அவரின் மனைவியோடு ஆறு மாதத்துக்கு மேல் ஒரு சகோதரன் போல் பழகி அவர்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு நன்றாக பழகி ஒரு நாள் ராபின் வேலைக்கு போய் இருக்கும்போது, ராபின் கர்ப்பிணி மனைவியை சமைக்கச் சொல்லி சாப்பிட்டுவிட்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து பின்பு ராபின் வர அவரையும் கொலை செய்து விட்டு, இலங்கை வவுனியா போய் சேர்ந்து இவரின் இந்த வீர செயலுக்காக வவுனியா இராணுவ பொறுப்பாளர் பதவியை பெற்றுக் இருக்கிறார். வவுனியாவில் தான் செய்த பாலியல் பலாத்காரம் கொலை பற்றி பெருமையாக பேசியது, சில நல்ல தோழர்களால் எங்களுக்குச் சொல்லப்பட்டது. சுவிஸில் நடந்த கொலைகள், பாலியல் பலாத்காரங்கள் அப்போது சுவிஸ் புளொட் பொறுப்பாளரும் இன்னொருவரும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள்.

ஒப்பந்தத்திற்குப் பின்பு, எல்லாத் தலைவர்களும் டெல்லியை விட்டு போய்விட்டார்கள். சென்னையிலும் மாதவன் அண்ணா இயக்கத்தை விட்டு விலகி விட்டதாக அறிந்தேன். எமது சென்னை அலுவலக வேலைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு, அங்கிருக்கும் தோழர்களின் நலன் காக்க சித்தார்த்தரும், பொறுப்பாளராக ஆனந்தி அண்ணா அதாவது சதானந்தன் இருந்தார்கள். அவர்களுக்கும் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் இருந்து எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.. எனக்கும் எந்த தொடர்பும் எந்த வேலையும் இருக்கவில்லை. இலங்கையில் நடக்கும் செய்திகளை பத்திரிகைகள் மூலமும், பத்திரிகையாளர்கள் மூலமும் அறியக்கூடியதாக தான் மட்டும் இருந்தது. எந்தவிதமான பிரச்சாரத்தை நான் மேற்கொள்வது என தெரியாமல் நான் பேசாமல் இருந்தேன். அக்கால கட்டங்களில் டெல்லி ஊடாக பல ஏஜென்சிகள் மூலம் பல இலங்கைத் தமிழர்கள் பெண்கள், குழந்தைகள் வெளிநாட்டுக்குப் போக வந்து விமான நிலையத்தில் பிடிபட்டு, டெல்லி திகார் ஜெயிலில் கைதியாக இருந்தார்கள். சில ஏஜென்சிகள் பெரும் பணம் கொடுத்து இந்திக்கார வக்கீல்கள் மூலம் தங்கள் ஆட்களை எடுத்து விடுவார்கள். சில ஏஜென்சிகள் சென்னைக்கு ஓடிவிடுவார்கள் வரமாட்டார்கள்.

தற்செயலாக ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த ஒரு இலங்கைத் தமிழரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் ஜெயிலில் இருக்கும் தமிழர்களின் நிலை, பெண்கள் சிறையில் இருக்கும் இலங்கை தமிழ் பெண்கள் குழந்தைகளின் நீ ரொம்ப பரிதாபமாக இருப்பதாக கூறி, அவர்களை வெளியில் எடுக்க முடியுமா என்று கேட்டார். ஒரு ஆள் சிறையிலிருந்து வெளியில் எடுக்க பிணை தொகை அட்வகேட் ஃபீஸ் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 11 ஆயிரம் ரூபாய் ஆகும். நான் ஜெயிலில் இருக்கும் சிலரின் பெயர்களை வாங்கிக்கொண்டு போய் மனு போட்டு பார்த்தேன். தங்களை வெளியில் எடுத்து விடும்படி அழுகிறார்கள். தாங்கள் வெளியில் வந்து பணம் எப்படியும் தருவதாக கூறினார்கள். என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் அவர்களது ஏஜென்ட், அவர்களது சென்னையில் இருக்கும் உறவினர்கள் விலாசம் தொலைபேசி இலக்கங்களை வாங்கி கொண்டு வந்தேன்.

பின்பு ஏஜெண்டுகளை, தொடர்புகொண்டு, சில பேரை பயமுறுத்தி அவர்களை பணம் கொண்டு வரச்செய்து, திகார் ஜெயிலில் இருந்து வெளியில் கொண்டு வந்திருக்கிறேன். பெண்கள் குழந்தைகள் அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்க்கவே சந்தோசமாக இருக்கும். டிராவல் ஏஜெண்டுகள் இடம் நான் முதலிலேயே சொல்லி விடுவேன், ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டுமென்று. ஆனால் அவர்கள் 2000, 3000 கூட தரத் தயாராக இருந்தார்கள். எனக்கும் டெல்லி செலவுக்கு சென்னையிலிருந்து பணம் வராததால், இந்த பணம் எனக்கு மிக உதவியாக இருந்தது. சென்னை அலுவலகத்திலும் பணம் அப்போது இல்லை. 1987 ஆண்டு ஒப்பந்தத்திற்குப் பின்பு 1988 ஆண்டு கிட்டத்தட்ட எட்டாம் மாதம் வரை சென்னை அலுவலகம் நான் பொறுப்பேற்கும் வரை கிட்டத்தட்ட 60 இலங்கை தமிழர் பெண்களை சிறையிலிருந்து வர உதவி செய்துள்ளேன்.

பகுதி 56

நான் இந்த பதிவுகளை போடுவது, இன்றும் அநியாயம் செய்து தங்கள் பெயர் வந்துவிடுமோ என்று பயப்படும் சிலருக்கு பிடிக்கவில்லை. அதேநேரம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொள்கையில் நம்பி வந்து பாதிக்கப்பட்டு, இன்றும் வறுமைக் கோலத்தில் வன்னிப் பிரதேசத்தில் எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து வேலை செய்யும் உண்மையான உறுப்பினர்களுக்கும் எனது பதிவுகள் கஷ்டமாக இருக்கிறது. என்ன காரணம் என்றால் மற்ற இயக்கத்தவர்களும் பொதுமக்களும் இவர்களைப் பார்த்து கொலைகார புளொட்காரர்கள் போகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் தான். உண்மையில் மற்றைய இயக்கங்களை பற்றி எழுதத் தொடங்கினால் எங்களை விட மோசமாக அந்தந்த இயக்கங்களின் செயல்பாடு இருந்தது என்பது உண்மை. அதில் இருந்தவர்கள் உண்மைகளை எழுதத் தயங்குகிறார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஒரு தவறான இயக்கமல்ல. அதில் அன்றிலிருந்து இன்றுவரை தலைவர்கள்தான் தவறானவர்கள். அதைத்தான் நான் அம்பலபடுத்துகிறேன். உண்மைகளை அம்பலப்படுத்தாவிட்டால் நாளைக்கு இவர்கள் பெரிய தியாகிகளாக தெரிவார்கள். எமது இயக்கத்தின் இன்றும் அடிமட்ட தொண்டர்கள் மாற்று உடுப்பு இல்லாமல், செருப்பில்லாமல் உண்மையாகவே வேலை செய்கிறார்கள். ஆனால் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பதவிகளும், கோடிக்கணக்கான பணமும் கோடிகளில் பெறுமதியான கார்களிலும் வலம் வந்து, இந்த அடிமட்ட தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு போகிறார்களாம். புளொட் இயக்கத்துக்கு அந்த காலத்தில் தளம், பின்தளம் என்று வேலை செய்து கஷ்டப்பட்ட பலநூறு தோழர்கள் இருக்கும்போது, இயக்கத்துக்கு சம்பந்தமில்லாத தலைவர்களுக்கு தெரிந்த அல்லது உறவினர்களை பதவிகளிலும் வசதி வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்து அழகு பார்க்கிறார்களாம். ஒரு எம்.பி பதவிக்காக மக்களிடம் நல்ல பேரை வாங்க தனது பல கோடி பெறுமதியான சொத்துக்களை தாரை வார்த்து, எம்.பி பதவியை பெற்றவுடன் எவ்வளவு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பார்கள். தங்களை ஏற்றிவிட்ட தோழர்களுக்கு தங்கள் சொத்துக்களை விற்று ஏதாவது செய்தார்களா? இன்றும் பல வழிகளில் பாதிக்கப்பட்ட எமது புளொட் இயக்கத் தோழர்கள் வறுமையில் இருப்பது அவர்களுக்கு தெரியாதா. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பதிவை தொடர்கிறேன்.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆர் கடும் சுகவீனமுற்று இருந்த போதும் எம்.ஜி.ஆரை வைத்து சென்னையில் மிக பிரம்மாண்டமான வெற்றிவிழா கூட்டத்தை நடத்தி விட்டனர். தேர்தலை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட விழா. இதே நேரம் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் சண்டை தொடங்கி விட்டது. அதேநேரம் சென்னையிலிருந்த கிட்டு எம்.ஜி.ஆரிடம் போய் உதவி கேக்க அந்த நேரத்திலும் எம்.ஜி.ஆர் பல கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். அதே ஆண்டு டிசம்பர் 24 எம்.ஜி.ஆர் மரணம் அடைந்து விட்டார்.

எனக்கும் சென்னையிலிருந்து பிரச்சாரத்துக்கு உரிய செய்திகள் படங்கள் வந்தன. அதாவது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை புளொட் இயக்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்திய அரசு ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட எமது இயக்க தலைவர்கள் சித்தார்த்தன், வாசுதேவா ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியப் படைகளை வரவேற்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்ற பத்திரிகை செய்திகள் படங்கள், அமைதிப்படையின் ஆதரவுடன் தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்களின் திருமணங்கள் பற்றிய விபரங்கள், படங்கள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நான் அதை பிரச்சாரத்துக்காக இவற்றை பயன்படுத்திக் கொண்டேன். அதோடு இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப எனது பிரச்சாரத்துக்கு ஏற்ப லண்டன் கிளையிலிருந்து அல்லது சென்னையிலிருந்து செய்திகள் வரும் . குமரப்பா, புலேந்திரன் தற்கொலை பற்றி பிரச்சாரம் செய்யும்போது, இந்தியப் படைகளுடன் இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிப் பழகியதால், அதோடு குமரப்பாவின் திருமணம் இந்திய படைகளின் உதவியுடன் நடந்ததால், பிரபாகரன் இவர்கள் மேல் கடுங்கோபத்தில் இருந்ததாகவும், அந்தக் கோபத்தை மாத்தையா மூலம் சயனைட் கொடுத்தனுப்பி தீர்த்துக் கொண்டதோடு, இந்திய அமைதிப்படையும் இதில் சிக்கவைத்து இரண்டு வெற்றிகளை பெற்றார் என எனது பிரச்சாரங்கள் இருக்கவேண்டும் சொல்லப்பட்டது.

டெல்லி வாழ் தமிழர்களும் அங்கு வேலை செய்த பல இளைஞர்களும் எங்களுக்கு பலவித உதவிகள் செய்தார்கள். குறிப்பாக எல்.கணேசனின் எம்.பியின் உறவினர் சித்தார்த்தன் தஞ்சாவூர், வெங்கா எம்.பி மகன் சம்பத், இப்போது, மதுராந்தகத்தில் அட்வகேட் ஆக இருக்கிறார். சைக்கிளில் உலகின் பல பகுதிகளை சுற்றிய கிரி என்ற சென்னை வாலிபர், வெளிநாட்டுக்குப் போகும் முன்பு ஆலடி அருணா எம்.பியின் வீட்டில் எமது ரூமில் இரண்டு மாதம் தங்கியிருந்தார். அடுத்தவர் தஞ்சாவூரை சேர்ந்த எல்.கணேசன் எம்.பி உறவினர் ஞானசேகரன் டெல்லியில் MSc பிசிக்ஸ் படித்துக்கொண்டிருந்த எமது நண்பர், எல்.கணேசன் எம்,பி வீடு விட்டபிறகு என்னோடு மூன்று நான்கு மாதங்கள் தங்கியிருந்து படித்தார். இவர் இப்போது தமிழ்நாட்டில் IAS அதிகாரி. மாவட்ட கலெக்டராக இருக்கிறார். இந்த நண்பர் ஞானசேகரன் கூடப்பிறந்த அண்ணன் ராமலிங்கம் ஜெயலலிதா முதலமைச்சராக வந்த நாள் தொடக்கம் இறக்கும்வரை அவரின் தனிப்பட்ட முதன்மைச் செயலாளர். IAS அதிகாரி. இப்போதும் தமிழ்நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கிறார். இவர்களின் உறவினர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இயக்கத்திற்கு ஆரம்ப காலத்திலிருந்து பெரும் உதவிகள் செய்தவர்கள்.

காலை உணவை எனக்கும், வந்துபோகும் இயக்க தோழர்களுக்கும் கடனாக காலை உணவை தந்துதவிய நோர்த் அவெனு சின்ன பெட்டி கடை வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். அதோடு பகலுணவு இரவு உணவு மாதக் கணக்கில் கடனுக்கு தந்துதவிய சின்னையா மெஸ் நடத்திவந்த தமிழ்நாட்டை சேர்ந்த சின்னையாவுக்கும் கடமைப்பட்டுள்ளேன். அதோடு இந்த சின்னையா நாங்கள் சைவச் சாப்பாடு வாங்கினாலும் அதில் காசு வாங்காமல் மீன், கோழி என அசைவ உணவுகளை மறைத்து வைத்து அனுப்புவார். எங்கள் மேல் மிக பற்று கொண்டவர். அடுத்தவர் கேரளாவைச் சேர்ந்த கே.பி.ராஜன் இவர் டீ கடை வைத்திருந்தவர் இவரும் ஆலடி அருணா எம்பி வீட்டில் பணியாளர் விடுதியில் தங்கியிருந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பு கையில் காசில்லாமல் உணர்ந்தபோது, இவர்தான் காலை உணவு தேநீர் சிலவேளைகளில் இரவு உணவு தேநீர் எல்லாம் ஃப்ரீயாக கொடுப்பார். சிலவேளைகளில் செலவுக்கு பணத்தை எனது சேர்ட் பையில் வைத்து திணிப்பார். சித்தார்த்தன் வந்திருக்கும் போதும் இவர் இலவசமாக உபசரித்துள்ளார். இவர் எனக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்போது வாங்காமல், நீ நாடு கிடைச்சு அங்கு போய் நல்லா வந்து எனக்கு திருப்பி தா என்று கூறினார். இப்பொழுது கேரளாவில் இருக்கிறார். இப்போது கனடாவில் இருக்கும் பரதன் டெல்லியில் இருக்கும் போது இவர்களின் சிலரின் உபசரிப்பை பெற்றுள்ளார்.


தொடரும்.

 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 10

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 11

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 12

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 13

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 14

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 15

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 16