Language Selection

மணலை மைந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிளப் ஹவுஸ் கொடுமைகள்


தலித்தியத்தின் பெயரால், தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறையை மறுக்கும், யாழ். வெள்ளாளியமும் – கிழக்கு முக்குவ போடிகளும் .

இந்தக் குறிப்பை வாசிக்கப்போகும் ஒரு ஐம்பது பேரில், நாற்பது வாசகர்கள் இதன் தலைப்பை வாசித்து விட்டு எரிச்சல் அடைவார்கள். அதிலும் மேலே குறிப்பிட்டுள்ள சாதிகளை சேர்ந்தவர்களும், இவர்களின் அரசியலை அடிதொழுபவர்களும் கொஞ்சம் அதிகமாகவே எரிவார்கள். இந்த தலைப்பை போலவே எரிச்சலை உருவாக்கவும், கவனத்தை திருப்பவும், அதி புத்திசாலிதனமாக கிளப் ஹவுஸ் என்ற இணைய ஊடகத்தில் தலைப்பிடுகின்றனர் தமிழ் பேசும் நல்லுலகத்தினர்.

 


“தமிழ் ஈழம் தேவையா “,


“புலிகள் செய்த கொலைகள் “,


“பிரபாகர முட்டை போண்டா தமிழீழம் ” ,


”கிரீஸ் டப்பா தமிழ் தேசியம் “,


“தமிழ் தேசியம் நல்லதா-கேட்டதா”


”ஓடுங்கடா அகதி நாய்களே”,


”விட்டுவாங்கி தமிழ் தேசியம் ”


“கம்பி கட்டிய கதைகள் “,


”செம்புருட்டும் தேசியம் “,


“யாழ்ப்பாணத்தில்: கண்டதையும் கதை. கவலையை மற”,


“கட்டுமரம் நமக்கு தேவையா “,


”அண்ணன் சீமானின் தமிழீழ தேசிய கொள்கை “,


“நாம் தமிழரின் நமக்கான (ஈழத்துக்கான) போராட்டம் “,


“பொய்த்துப் போன இடதுசாரிய தேசியம் “,


“செம்படிக்கும் ஈழத்து முற்போக்கு தேசியம் ”

இவை அங்கு நடைபெற்ற இலங்கை சார்ந்த சில விவாத தலைப்புகள்.


இவ் விவாதங்களில் எதிர் எதிராக இயங்கும் இரு “முக்கிய” விவாத குழுமங்களாக இருப்பது, இந்திய திராவிட முன்னேற்ற கழக ஆதரவாளர்கள் மற்றும் ஈழத்து புலம்பெயர்ந்த; சீமானின் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள். சீமானின் ஆதரவாளர்கள் என நான் இங்கு எழுதும் குழுமம்; தம்மை கூடுமான அளவு புலிகள் இயக்கத்தின் அதி உச்ச ஆதரவாளர்களாகவும், கடைசி போரில் தலைவருடன் நின்று விட்டு, ஏதோ அரை மணித்தியாலங்களுக்கு முன்பு தான் ஸ்விசில் வந்திறங்கியவர்கள் போலவும், பாவ்லா காட்டிக் கொள்வார்கள்.

இந்த புலிவேஷம் போட்ட சீமானிய ஆதரவாளர்களை நிலை குலைய வைக்கவும், தமிழ் நாட்டில் புலிகளின் ஆதரவு தளத்தை அழிக்கவும் ஒரே வழி, புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதான பிம்பத்தை உடைப்பதே ! என்று சபதமிட்டு செயற்படுகின்றனர் திமுக ஆதரவாளர்கள்.

இந்த பிம்ப உடைப்புக்கு இவர்கள் பயன்படுத்தி வருவது புலம்பெயர்ந்த “ஈழத்து இலக்கிய வாதிகள் “, “ஈழத்து புத்தி சீவிகள்”, ”ஜனநாயக வாதிகள் “, “பெண்ணிலை போராளிகள் “, “தலித்திய போராளிகள் “, “இடதுசாரிய சிந்தனையாளார் ” என்ற போர்வையில் – பெயரில் வலம் வரும் புலி எதிர்பாளர்களாகும்.

மேற்படி திமுக குழுமம் இவர்களை தமது நிகழ்வில் அறிமுகம் செய்யும்போது, உச்சிக் கொம்பில் ஏற்றி – “ஐஸ்” வைத்து, நன்றாக இந்திய “புகழ்ச்சி எள்ளெண்ணெயை” இவர்களின் தலையில் வைத்து “நச்சு, நச்சு” தேய்ப்பார்கள். பின்பு இவர்களின் புகழை -பெருமையை அடிக்கோடிடும் விதமாக, நன்றாக கத கதப்பான சிறு சிறு கேள்விகள் மூலம் நன்றாக உருவி விடுவார்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பிரபாகரன், புலிகள் இயக்கம், கொலைகள், கொள்ளைகள் பற்றிய கேள்விகளை கேட்பார்கள. திமுக-வினர். கேள்விகளின் ஒரே நோக்கம் எல்லா வகையிலும் புலிகள் இயக்கம் மற்றும் பிரபாகரனின் பிம்பத்தை இழுத்து வீழ்த்துவதையே குறியாக இருக்கும். உருவி விடுதலும், “புகழ்ச்சி எள்ளெண்ணெய் ” கொடுத்த மயக்கமும் கிறங்கடிக்க, நமது ஈழத்து அறிவாளிகள் – அவர்களது மொழியில் சொன்னால் புலிகளை “கட்டுடைப்பார்கள் “.

சரியான தகவல்களை சொல்லி கதைக்க ஆரம்பிக்கும் இந்த புத்தி சீவன்கள், கொஞ்சம் கொஞ்சமாக “நச்சு, நச்சு” என்று திமுக- காரர் தேய்க்கும் தேய்ப்பில் அதி உச்சத்துக்கு போய், பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்து விடுவார்கள். திமுக கும்பல் ஆகா, ஆகா என்றவாறும் “உச்சு ” கொட்டியும் மேலும் மேலும் பப்பா மர உச்சியில் ஏற்றி விடுவர்கள்.இருக்குமிடம் எதுவென நிலை தடுமாறி, தறி கெட்டு, நெறி கேட்டு இந்த புலம்பெயர் ஈழத்து புலியெதிர்ப்பாளர்கள் தமது அதி உச்ச கண்டு பிடிப்பை அறிக்கையிடுவார்கள்:

”தமிழ் தேசியம் என்று ஒன்று இல்லை “.


“சாதிகளாக பிரிந்திருக்கும் யாழ்ப்பாணத்து தமிழர்கள், எவ்வாறு தமிழ் தேசியம் என்ற ஒன்றை கோர முடியும் “.


“பெண்களை ஒடுக்கி வைத்திருக்கும் யாழ்ப்பாணத்தார், தமிழ் தேசியம் என்று கதைப்பது, அபத்தமானது “.

“சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தாரை விட நல்லவர்கள். அவர்கள் தான் கலவரங்கள் நடந்த போது தமிழ் மக்களை காப்பாற்றினார்கள் “.


“முஸ்லீம் மக்கள் இன்றும் யாழ்ப்பாணத்தில் குடியேறுவது தடுக்கபடுகிறது”.


”மலையக மக்களை யாழ்ப்பாணத்தார் தமது வீட்டில் வேலைக்கு வைத்து கொடுமை செய்தார்கள் “.


“லெனினின் சுயநிர்ணய உரிமை கோட்ப்பாடு, யாழ்ப்பாணத்து தேசியத்துக்கு செல்லாது”.


“கிழக்கும் – வடக்கும் இணைவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை . இதை இறுதி தேர்தலில் பிள்ளையானையும், டக்ளசையும், அங்கஜனையும் தேர்ந்து எடுத்ததன் மூலம் தமிழ் மக்கள் உறுதி படுத்தியுள்ளனர் “.


” பெண்ணிய ஒடுக்குமுறை செய்யும் தமிழ் மக்கள், அதிலிருந்து பெண்களை விடுவிக்காமல் தேசியத்தை பற்றி, தேசிய விடுதலையை பற்றி கதைக்க முடியாது .”


”சாதிய ஒடுக்குமுறையை வைத்திருக்கும் தமிழர்கள், அதை ஒழித்து விட்டே தேசியம் கதைக்க வேண்டும்”.


”எல்லா பிரச்சனைக்கும் காரணம் தமிழ் மக்கள் சாதி பார்ப்பதுதான். அதனாலேயே எல்லா பிரச்சனையும் வந்தது”.


இப்படியே அடுக்கி கொண்டு போவார்கள் . ஒட்டுமொத்தமாக இரு முக்கிய கருத்தை நிலை நிறுத்துவார்கள்.

1. தமிழ் மக்கள் மீது எந்தவித ஒடுக்குமுறையும் இல்லை.சாதி ஒடுக்குமுறையும், பெண் ஒடுக்குமுறை மட்டுமே உள்ளது.

2. இனரீதியான ஒடுக்குமுறை இருக்குமானால் அதற்கு காரணம் அவர்களே- அதாவது தமிழ் மக்களே தம்மீதான ஒடுக்குமுறைக்கு காரணம் ! !!!!


இந்த திமுக நிகழ்வுகளில், புலிகளின் ஆதரவாளர்களாக காட்டிக் கொள்ளும் சீமானிய ஈழத்து போராளிகள் அவ்வப்போது வருவார்கள். பச்சை பச்சையாக பாலியல் வசைகள், அவதூறுகளை பொழிந்து விட்டு போய் விடுவார்கள்.

என் போன்ற சிலரும்- அதாவது “எல்லாவகை ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடியபடி, தேசிய ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தை – முற்போக்கு தேசியத்தை (இனியாவது) கட்டி எழுப்ப வேண்டும் ” என்ற கருத்தை கொண்டவர்களும் பங்கு கொள்வார்கள். ஆனால் எம் கருத்துகள் திட்டமிட்டவகையில் மழுப்பப்படும். திரிபுபடுத்தப்படும். புலிகள் செய்த கொலைகளை, நெஞ்சுருக முன்னிறுத்தி ( ரஜினி, செல்வி ………..) நியாயம் கேட்கப்படும். புலிகளின் (தீவிர) ஆதரவாளர்களாகவும், சாதி வெறியர்களாவும், பெண் ஒடுக்குமுறையாளர்களாகவும், பழமைவாதிகளாகவும் முத்திரை குத்தப்படும். இதனாலேயே பல மாற்று கருத்து கொண்டோர் திமுக நிகழ்வுகளில் பங்குகொண்டாலும் தமது கருத்துக்களை முன்வைக்க துணிவதில்லை.

ஒடுக்குமுறையினால் பாதிக்கப்படும் தமிழ் சிறுபான்மை மக்கள், தமது உரிமைகளை முன்னிறுத்தி, பேரினவாததுக்கு எதிராக போராடும் போது உருவாகும் ஒருமைப்பாடும் – இணக்கமுமே தமிழ் தேசியதின் அடிப்படை என வரையறுக்கும், என்னை போன்ற முற்போக்கு தேசிய சக்திகள் ஒருங்கிணைக்கபடாத தனியர்களாக இயங்கி வருகிறோம்.

இந்நிலையில், இன்று தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் வரலாறு காணாத ஒடுக்குமுறையை மறுக்கும் இந்த நிகழ்வுகள் வெறும் பொழுதுபோக்கானவை என்று கருதாமல், தமிழ் மக்கள் மீதனா ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் சக்திகளை தோற்கடிக்கவாகுதல் நாம் இணைய வேண்டும். எதிர்காலத்தில் முற்போக்கு தமிழ் தேசிய மக்கள் திரள் அமைப்பை உருவாக்க அவ் இணைவு வழிவகுக்கலாம்.

 தலித்தியத்தின் பெயரால், தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறையை மறுக்கும், யாழ். வெள்ளாளியமும் – கிழக்கு முக்குவ போடிகளும் .