பகுதி 37

அடுத்த நாள் காலையில் நானும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் வை.கோபால்சாமி MP வீட்டுக்குப் போனோம். வை.கோபால்சாமி எம்.பி டெல்லி வரும்போது அடிக்கடி போய் நான் சந்தித்து பேசுவேன். அதுபோல் செயலதிபர் உமாமகேஸ்வரனும் டெல்லி வரும்போது கோபால்சாமி எம்.பி டெல்லியில் இருந்தால் போய் சந்திப்பார். அவர் விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்தாலும் எங்களோடு நல்ல தொடர்பில் தான் இருந்தார்.

கோபாலசாமி எம்.பி யும், அவரது உதவியாளரும் நமக்கு தேனீரும் பிரெட் டோஸ்ட் போட்டு கொடுத்து உபசரித்தார்கள். திம்பு பேச்சுவார்த்தை பற்றி, பேச்சுவார்த்தை வந்தபோது, உமாமகேஸ்வரன் செயலதிபர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தை சம்பந்தமாக இலங்கைக்குப் போய் வரும் போது அவர் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவருடன் நெருங்கிப் பழகி வைர நெக்லஸ்கள், விலை கூடிய நவரத்தினம், மாலைகள் போன்றவற்றை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டதும் மட்டுமல்லாமல் இந்திய, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எதிராக வேலை செய்வதாகவும் போட்டுக் கொடுத்தார். வை.கோபால்சாமி மிகவும் கோபத்துடன் இவ்வளவெல்லாம் நடந்திருக்கிறதா, நான் விடமாட்டேன் ஒரு கை பார்க்கிறேன் என்று கூறினார். அன்று ராஜ்யசபா பாராளுமன்றத்தில் வை.கோ இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி இலங்கை ஜனாதிபதியின் கைக்கூலி, வைர நெக்லஸ்க்காக விலை போய்விட்டார் என காரசாரமாக பேசினார். அடுத்த நாள் பத்திரிகைகளில் எல்லாம் ரொமேஷ் பண்டாரி வைர நெக்லஸ் வாங்கியதுதான் முக்கியத்துவம் பெற்றன.

 அன்று மாலை ரொமேஷ் பண்டாரியை சந்திக்க போன் செய்தபோது, உடனடியாக ஆறு மணி போல் தனது வீட்டில் வந்து சந்திக்கச் சொன்னார். அவரை சந்தித்தபோது அழாத குறையாக தன்னைப் பற்றி பொய்யான செய்தியை பாராளுமன்றத்தில் வை .கோபால்சாமி பேசி விட்டதாகவும், திம்புவில் நடந்த சம்பவத்தை கூட சித்தார்த்தன் உண்மையை பத்திரிகையில் கூறி இருக்காவிட்டால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, தான் தான் காரணம் என எல்லோரும் எழுதி இருப்பார்கள், சித்தார்த்துக்கு தன் நன்றியைக் கூறச் சொன்னார். எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் உடனடியாக வைர நெக்லஸ் கதையை விடுதலைப்புலிகள் தான் வை.கோவிடம் கூறியிருப்பார்கள், அவர்கள்தான் வை.கோவுடன் நெருக்கம் எனக் கூறினார். அவரும் இருக்கலாம் எனக் கூறி யோசிக்கத் தொடங்கினார். நானும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் எமது ராஜதந்திரத்தை நினைத்து சிரித்து சந்தோசப்பட்டோம். இப்படித்தான் இவர்களை பழிவாங்க வேண்டும் என்றார். எமது இந்த செயல் அந்த அதிகாரியின் பதவிக் காலத்தில் ஒரு கரும்புள்ளி. நவரத்தினங்கள், வைர நெக்லஸ் உடன் வேறு பல பொருட்களும் லஞ்சம் வாங்கினார் என பலரும் நேரடியாக எழுதத் தொடங்கினார்கள். அதற்கு ஆதாரம் வை.கோபால்சாமி பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு என்றார்கள். பாராளுமன்றத்தில் ஆதாரமில்லாமல் பேசியிருக்க மாட்டார் என்றும் கூறினார்கள். இலங்கை இந்திய பத்திரிகைகளில் எமது இயக்கம் பயிற்சி பெறும் இடங்கள் பல பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. சர்வதேச ரீதியில் பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்திய அதிகாரிகள் இதைப் பற்றி என்னிடம் கேட்கும்போது, நான் இதுபற்றி செயலதிபர் உமாவிடம் விபரம் கேட்ட போது, ஈ.பி.ஆர்.எல்.எஃப் அல்லது ஈரோஸ் இந்த செய்தியை கொடுத்திருக்க வேண்டும் என தங்களுக்கு தெரியவந்ததாக அதிகாரிகளிடம் கூற சொன்னார். அதிகாரிகள் நம்பவில்லை. IB ஐபி அதிகாரிகள் எமது இயக்கம் தான் ஷெர்லி கந்தப்பா மூலம் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்கிறது என கண்டுபிடித்து விட்டார்கள். எமது இந்த வேலை தமிழ்நாட்டில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான தோழர்களை பாதித்தது என்பது உண்மை. இப்படியான போட்டுக் கொடுக்கும் வேலைகளை விடுதலைப் புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒருத்தரை ஒருத்தர் போட்டுக் கொடுக்கும் வேலைகளை செய்து வந்தார்கள் என்பது உண்மையே.

85 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் லெபனான் பயிற்சிக்கு போக வந்தார் ஒரு தோழர். சங்கானையை சேர்ந்தவர். என்னோடு ஒரே வகுப்பில் படித்த நெருங்கிய நண்பரின் தம்பி. இவரும் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தான் படித்தவர். சின்ன மெண்டிசின் சமவயது நண்பர்கள் தான். அவர்களின் விமான பயணத்துக்கு முதல் நாள் இரவு சென்னையில் இருந்து எனக்கு தொலைபேசியில் கூறினார்கள் அந்த தோழரை அனுப்ப வேண்டாம், அவர் எங்கும் தப்பி போக விட வேண்டாம், இரண்டொரு நாளில் சென்னையிலிருந்து ஆள் வரும், அவருடன் அனுப்பி விடசொல்லி. அந்த சங்கானை தோழரை விசாரித்த போது தன்னை சந்ததியாரின் ஆள் என்று முதலில் சந்தேகித்து விசாரித்தார்கள் என்றும், தன்னை சென்னைக்கு அனுப்ப வேண்டாம், தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நான் செயலதிபர் உமாமகேஸ்வரனிடம் இது பற்றிய விபரத்தை கூற, அவர் தனக்கு தெரியாது தான் விசாரிக்கிறேன் என்றார். நானும் எனது நண்பரின் தம்பி, எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும் தவறான ஆளாக இருக்காது என்று கூற, சரி டெல்லியில் கொஞ்சநாள் இருக்கட்டும் தான் கந்தசாமி இடம் பேசுவதாக கூறினார். நான் சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு மாதவன் அண்ணாவிடம் கந்தசாமி வந்தால் உடன் என்னை தொடர்பு கொள்ள சொல்லச் சொன்னேன். கந்தசாமி தொடர்பு கொண்டபோது விபரத்தைக் கூறி, உதவி கேட்டேன். கந்தசாமி அவன் கழகத்திற்குள் பிரச்சினை பண்ணாவிட்டால் சரி நீ புத்தி சொல்லி வை என்று கூறினார். நான், கந்தசாமி, மாறன் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். கந்தசாமி சாகும்வரை நெருங்கிய நண்பனாக தான் இருந்தார். சங்கானை தோழர் திரும்ப சென்னை போய் இயக்கத்தில் வேலை செய்து இயக்கம் உடைந்தபோது வெளிநாட்டுக்கு போய் விட்டதாக அறிந்தேன். இப்போது அவர் நோர்வே நாட்டில் இருப்பதாக செய்தி.

லண்டனில் இருந்து மகரசிங்கம் என்ற பெரியவர் வந்திருந்தார். அவர் இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய மட்டையை மாட்டிக்கொண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு அருகில் போய் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறினார். ஒரு மாதிரி அவரை தடுத்து, இந்திய நண்பர் சம்பத் அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போய் கன்னாட் ப்ளேஸ் என்ற இடத்தில் நிற்க வைத்தார். ஆர்ப்பாட்டம் செய்து விட்டு வந்த பெரியவர் மகரசிங்கமையா சென்னைக்குப் புறப்பட்டு, பின்பு தஞ்சாவூர் சென்று எமது முகாம் எல்லாம் பார்வையிட்டு திரும்ப லண்டன் போக டெல்லி வந்தபோது அவர் புளொட் கட்டாயம் தமிழீழம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை தனக்கு வந்துள்ளதாக கூறினார்.

எமக்கு பல வெளிநாட்டு தூதரகங்களின் தொடர்புகள் கிடைத்தன. அங்கு வேலை செய்யும் முதன்மைச் செயலாளர் அல்லது இரண்டாம் செயலாளர் உண்மையில் அவர்கள்தான் அந்தந்த நாட்டின் ரகசிய உளவுத்துறை ஆட்கள். அவர்கள்தான் தாங்கள் வேலை செய்யும் நாட்டின் எல்லா விபரங்களையும் எடுத்து தங்கள் நாட்டின் வெளிநாட்டு உளவுத் தறைக்கும், தங்கள் நாட்டு வெளியுறவு அமைச்சுக்கும் ரிப்போர்ட் போடுபவர்கள். தூதுவர் என்பவர் ஒரு அலங்கார பொம்மை. அவரை பப்ளிக்காக யார் வந்தாலும் போய் பார்க்கலாம். ஆனால் முதன்மைச் செயலாளர் அல்லது இரண்டாம் செயலாளர் அவை சந்திக்கும் சந்திப்புகள் மிக ரகசியமாக இருக்கும்.

நாளை டில்லியில் எங்கள் தொடர்பில் இருந்த பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் பற்றிய விபரங்களை தருகிறேன்.

பகுதி 38

பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, அல்ஜீரியா சௌத் யேமன், பிரிட்டிஷ், அமெரிக்கா, டென்மார்க், பெல்ஜியம், மொரிஷியஸ், ஸ்விஸ், சிம்பாவே போன்ற நாட்டு அதிகாரிகளையும், பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், நமீபிபிய நாட்டு விடுதலை இயக்கம், ஸ்வப்போ போன்ற விடுதலை அமைப்புகளுடனும் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தோம். மற்ற 50க் கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களுக்கு மாதாமாதம் எமது வெளியீடுகள் அனுப்பி வைப்போம். இதில் குறிப்பிடப்பட வேண்டியவர் சிம்பாவே ஹைகமிஷன் இன் முதன்மைச் செயலாளர் திரு .முகொனோ அவர்கள். இவர் மும்பையில் படித்தவர். படிப்பு முடித்தவுடன் நேரடியாக 1984 ஆம் ஆண்டு கடைசியில் புதுடில்லியில் ஆரம்பிக்கப்பட்ட சிம்பாவே ஹைகமிஷன் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். எங்களை விட இரண்டு மூன்று வயது தான் கூடுதலாக இருப்பார். ஆரம்பத்தில் டெல்லியில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் இவர்களின் ஹைகமிஷன் ஆபீஸ் செயல்பட்டது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஹைகமிஷன் என்பதால் வேறு எந்த ஒரு இயக்கமும் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. எமது இயக்கம் சார்பில் நான் முதலில் இவரை தொடர்பு கொண்டு, டெல்லியில் எமது அலுவலகம் இருக்கும் வரை இருவரும் நல்ல தொடர்பில் இருந்தோம். இவரை வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் சந்திப்போம். என்னோடு வந்திருந்த பரதன், சைமன் போன்றவர்கள் டெல்லி அலுவலகம் சார்பாக தொடர்பு கொண்டவர்கள். இவர்களுடன் நல்ல நட்பாய் பழகியவர். சில வேலைகளில் எங்களை தேடிக் கொண்டு நாங்கள் இருந்த இடத்துக்கு காரில் வருவார். நானும் சித்தார்த்தனும், அவரை சந்திக்கும் போது நமது பகலுணவு அவருடன் 5 ஸ்டார் ஒட்டலில் தான். அடிக்கடி அவருடன் சாப்பிடுவோம். நான் டெல்லியில் இருந்த காலங்களில் நல்ல சாப்பாடு சாப்பிட்டது அப்போதுதான். அடுத்தது விடுதலை இயக்கங்கள் டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்போது வீட்டுக்கும் கட்டிக் கொண்டு வந்துவிடுவோம். அதை நாங்களும் இந்திய தோழர்களும் பங்கிட்டு சாப்பிடுவோம்.

சிம்பாவே ஹைகமிஷன் முகோனோ வசந்த் விகார் என்ற இடத்தில் வீடு எடுத்து மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டி வந்த பின்பு, நானும் சித்தார்த்தனும் அடிக்கடி வீட்டுக்கு டின்னர் சாப்பிட கூப்பிடுவார். இரவு டின்னரில் பியர், அவர்களின் அன்றாட உணவு ரவை உப்புமா போன்று இருக்கும். அடுத்து மாட்டு இறைச்சி எலும்பும் சதையும், கஷ்டப்பட்டு சாப்பிட்டு வருவோம். செயலதிபர் உமாமகேஸ்வரன் வரும்போது அவர் மாலை நேரத்தில் வீட்டில் சந்திப்பார்.கு டிக்க மாட்டார். இறைச்சி சாப்பிட மாட்டார். அதோடு அவருக்கு முன்னால் நாங்களும் சாப்பிடமாட்டோம். குடிக்க மாட்டோம். எங்களின் நிலைமையும் அவர் புரிந்து கொண்டார். எமது செயல் அதிபருக்கு டீயும் பிஸ்கட்டும் எங்களுக்கும் சேர்த்து கிடைக்கும்.

இதே மாதிரி ஃபிரான்ஸ் முதன்மை செயலாளரும் வீட்டில் தான் சந்திக்க விரும்புவார். காரணம் அடிக்கடி எம்பஸ்ஸி அலுவலகத்துக்கு வந்து போவது கண்காணிக்கப்படும். அதனால்தான் அவர் வீட்டில் சந்திப்பார். அவர் வீட்டுக்கு போனவுடன் சின்ன ஒரு அலமாரியை திறந்து, இருக்கும் விதம் விதமான குடிவகைகளில் எது வேண்டுமென்று கேப்பார். எனக்கு குடிவகை பற்றி ஒன்றும் தெரியாததால், ஏதாவது சரி என்றும் கூறுவேன். அவர்தான் குடிப்பதே எனக்கும் கொடுப்பார். ஒருமுறை செயலதிபர் வந்திருக்கும்போது பிரான்ஸ் அதிகாரியை சந்திக்க போனபோது, வழமை போல அவர் அலுமாரியை திறந்து என்னவேண்டும் என்று கேட்க, செயலதிபர் தனக்கு கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் போதும் என்றார். அவருக்கு கூல்ரிங்ஸ். எனக்கு குடிவகையும் கொடுக்க நான் பதறிப் போயிட்டேன். செயலதிபர் கண்ணால் ஜாடை காட்டினார் குடிக்கும்படி. வெளியில் வரும்போது செயலதிபர் கோரினார். இப்படியானவர்களை சந்திக்கும் போது அவர்கள் குடிக்கக் கொடுத்தால் குடியும். அப்பதான் அவர்களோடு மனம் விட்டு பேச முடியும். இல்லாவிட்டால் அவர்களை அவமரியாதை செய்ததாக இருக்கும். அதற்காக வீட்டில் வாங்கி வைத்து எல்லாம் குடிக்கக்கூடாது என்று கூறினார்.

பரதன் என்ற சாரங்கன் இங்கு இருக்கும் போது என் வியன் சோமு, டி.ஆர்.பாலு, ஆந்திரா கர்நாடகா எம்.பிக்கள், பிரிட்டிஷ் எம்பஸ்ஸி போன்றவர்களை சந்தித்த பின்பு டெல்லி அலுவலகத்துக்கு கொடுத்த குறிப்பு இன்றும் என்னிடம் உள்ளது.

பிரான்சில் இருந்து கப்பலில் வேலை செய்த வினோத் என்பவர் எமது இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்ய டெல்லி ஊடாக சென்னை வந்தார். இவர் விடுதலைப்புலிகளில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபன் அவர்களின் உடன் பிறந்த அண்ணன். அவருடன் பேசும்போது தனது தம்பி திலீபன் தவறான இடத்தில் போய் சேர்ந்து இருக்கிறான் என்று கூறுவார். இவர் வரும்போது பெருந்தொகையான டெனிம் ஜீன்ஸ் கொண்டு வந்தபோது டெல்லி ஏர்போர்ட் தமிழ் அதிகாரி பெயர் சித்தார்த்தன் கஸ்டம்ஸ் அதிகாரி பெருந்தொகையான அளவு டேக்ஸ் போட்டுவிட்டார். கட்ட காசில்லாத தால், ஏர்போட்டில் திரும்ப காசுக்கட்டி எடுப்பதாக கூறி விட்டு வந்துவிட்டார். இந்த சம்பவம் G.பார்த்தசாரதி அவர்கள் செல்வாக்காக இருந்த நேரம் நடந்த சம்பவம். நான் போய் G.பார்த்தசாரதி அவர்களை பார்த்தேன். அவர் உடனடியாக டெல்லி ஏர்போர்ட் சீப் கஸ்டம்ஸ் அதிகாரி சீக்கியர் அவருக்கு தொலைபேசி மூலம் விபரம் கூறி என்னை அனுப்பி வைத்தார். அந்த சீக்கிய அதிகாரி என்னை வரவேற்று நன்றாகப் பேசினார். பின்பு டெக்ஸ் அடித்த விபரங்களை பார்த்த அதிகாரி சும்மாவே கிளியர் பண்ணி இருக்கலாம் என்றார். பின்பு சீக்கிய அதிகாரி மற்ற கஸ்டம்ஸ் அதிகாரி சித்தார்த்தனை கூப்பிட்டு விபரம் கூறி டேக்ஸ் போட வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர் பிடிவாதமாக 2000 ரூபாய் டாக்ஸ் அடித்துதான் டெனிம்ஜீ ன்ஸ்களை கிளியர் பண்ணினார். அந்த நேரம் டெல்லி ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரியாக நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் தம்பியும் இருப்பதைப் பார்த்தேன். அவர் அச்சு அசலாக நடிகர் சுந்தர்ராஜன் போலவே இருப்பார்.

நான் டெல்லியில் இருந்து பல முறை எமது இயக்க தோழர்கள் பயிற்சிக்காக ராணுவ சப்பாத்துக்கள் புதியது குறைந்த விலையில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் சோடிகள் வாங்கி ரயிலில் போட்டு சென்னைக்கு அனுப்பி இருக்கிறேன். ராணுவ சீருடைகள் என்பனவும் வாங்கி அனுப்பி இருக்கிறேன். சென்னையிலிருந்து தொலைத்தொடர்பு, வானொலி கருவிகளுக்கு பார்ட்ஸ் வாங்க சென்னையிலிருந்து உடுவிலை சேர்ந்த சுரேன், வசந்தி என்பவரும் வந்திருந்தார்கள். இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போய் வாங்கி கொடுத்தேன். சுரேன் படிக்கும் காலத்தில் இருந்து எனக்கு தெரியும். அவரின் அண்ணா எனது வகுப்புத் தோழன்.
84 ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்து போகும் முக்கியமான நபர் லண்டன் கிருஷ்ணன் என்பவரை பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

கீழே ஒரு கடித பிரதி போட்டுள்ளேன் முந்திய பதிவுகள் வர வேண்டியது. அதாவது டாக்டர் இல்யாஸ், ஜெயபாலனை டெல்லி அனுப்பவும், அவர்களுக்கு வேண்டிய உதவி செய்யும்படியும் செயலதிபர் உமாமகேஸ்வரன் எனக்கு எழுதிய கடிதம்.

பகுதி 39

லண்டன் கிருஷ்ணன்- சுப்பையா கிருஷ்ணபிள்ளை, ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு லண்டனில் ஆதரவாக இருந்தார். பின்பு உமாமகேஸ்வரன் தலைமையில் இருந்த புலிகளுக்கு லண்டனில் இருந்து உதவிகள் செய்து வந்தார். இவர்தான் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை கொலை உட்பட பல கொலைகளுக்கு முதன் முதலாக உரிமை கோரிய கடிதம் லண்டனிலிருந்து முதன்முதலாக இவரால்தான் அனுப்பப்பட்டது. ஆனாலும் பிரபாகரன் பண விஷயத்தில் இவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை என அறியக்கூடியதாக இருந்தது.

1983 ஆண்டு இவரை புளொட்டுக்கு வேலை செய்யும்படி செயலதிபர் கேக்க உடனடியாக வெளிநாடுகளில் புளொட் கிளைகள் அமைக்க, பணம் சேகரிக்க, லெபனான் பயிற்சிபெற,(லெபனான் பயிற்சி மகா உத்தமன் மூலம் கிடைத்ததாகவும் ஒரு செய்தி உண்டு)போன்ற பல வேலைகளை குறுகிய காலத்தில் செய்து வெளிநாடுகளில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வளர்ச்சி பெற லண்டன் கிருஷ்ணரும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. அவருடன் கூட இருந்த சித்தார்த்தன், சீனிவாசன் போன்றவர்களும் கிருஷ்ணனுக்கு உதவி செய்தவர்கள். வெளிநாடுகளில் இருந்த பழைய பெரியவர்களுக்கு தர்மலிங்கம் எம்.பி யின் மகன் சித்தார்த்தன் என்பது எமக்கு ஆதரவு கூட ஒரு காரணம்.

லண்டன் கிருஷ்ணன் பலமுறை டெல்லி வழியாக சென்னை போயிருக்கிறார். லண்டன் கிருஷ்ணன் வரும்போது ஏர்போர்ட்டுக்கு ஆட்டோ கொண்டு போக கூடாது, டாக்ஸி தான் கொண்டு போக வேண்டும். அந்தக் காலத்தில் குடிதண்ணீர் பாட்டில் வாங்கி வைக்க வேண்டும். பல சொகுசு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர் வந்து போகும் போது கொஞ்சம் பயம் தான். காரணம் அவருக்கு செய்து கொடுக்கும் வசதிகளில் கொஞ்சம் குறைந்தால், எங்களை தனது அடிமைகளை போல் நினைத்து கண்டபடி திட்டுவார்.

இவர் வந்து போகும் போது இவரின் செயல்கள் பற்றி ரிப்போர்ட்டாக போட்டால், செயலதிபர் உமாமகேஸ்வரன் என்னிடம் இதைப் பற்றி நீர் பெரிதுபடுத்த வேண்டாம். நான் கிருஷ்ணனிடம் பேசுகிறேன் என்று கூறுவார்.

கிருஷ்ணன் சென்னைக்குப் போனால் அங்கு முக்கிய தோழர்களை நட்பு பிடித்து அவர்களை உயர்தர கடைகளில் சாப்பிட அழைத்து போவது, நல்ல உடுப்புகள் வாங்கிக் கொடுப்பது போன்ற தனிப்பட்ட நட்புக்களை வளர்த்துக் கொள்வது போன்ற செயல்களை செய்வது பற்றி சந்ததியார் பலமுறை கிருஷ்ணனை கண்டித்திருக்கிறார். சந்ததியார் பலமுறை செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களையும் வெளிநாட்டுக் கிளைகளின் சார்பாக தனிப்பட்ட நபர்கள் வந்து இயக்க கட்டுக்கோப்புகளை மீறி செயல்பட விட வேண்டாம் என கூறியுள்ளார். அதனால் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் திரும்ப போகும்போது சந்ததியாரை திட்டிக் கொண்டே போன சம்பவங்கள் பல உண்டு. அதோடு எல்லா வெளிநாட்டுக் கிளைகளும், சேகரித்த பணத்தை லண்டன் கிருஷ்ணன் இடமே கொடுக்கச் சொல்லியும் ஏற்பாடு.

வெளிநாட்டுக் கிளைகளின் அவர்களின் செயல்பாடுகளும் சேகரித்த பணம் செலவழித்த தொகை போன்ற எந்த விபரங்களும் நேரடியாக செயலதிபர் உமாமகேஸ்வரன் இடமே கொடுக்கப்பட்டது. ஆனால் இயக்க பொருளாளர் இடம் வெளிநாட்டுப் பணம் சம்பந்தமாக எந்த விபரமும் கொடுக்கப்பட்டது இல்லை. சந்ததியார் தீர்க்கதரிசி போல அன்று கூறினார் , வெளிநாட்டு கிளைகள் ஆல் குறிப்பாக லண்டன் கிளையை இயக்கத்தின் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால், எமது இயக்கம் மோசமான விளைவுகளை சந்திக்கும் என்றார். அன்று சந்ததியாரை நாங்கள் எல்லாம் செயலதிபர் மேல் உள்ள பொறாமையால் வெறுப்பால் சொல்லுகிறார் என நினைத்து சந்ததியாரை வெறுப்பாக பார்த்தோம் .அவர் கூறியது 1989ஆம் ஆண்டு உண்மையாகிவிட்டது.

என் 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கல்கிசையில் ஒரு ஹோட்டலில் வைத்து லண்டன் கிருஷ்ணனும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் மிக மிக மோசமான வார்த்தைகளால் திட்டி கைகலப்பு நடந்திருக்கிறது. செயலதிபர் உமாமகேஸ்வரன் கிருஷ்ணனைப் பார்த்து நீ கோடிக்கணக்கான ரூபாய்களை ஏமாற்றி விட்டாய் என கூற, கிருஷ்ணன் செயலதிபர் உமாவைப் பார்த்து உன் பெயரில் ஸ்விஸ் வங்கியில் போட்ட பணம் என்னவானது என்றவாறு இருவரும் பல உண்மைகள் வெளியில் வர சண்டை பிடித்துள்ளார்கள். இந்த சண்டையில் நேரில் பார்த்த தோழர், பாவம் உண்மையை அறிந்து வெறுத்து போய் இருக்கிறார். இந்த சண்டையின் பின்புதான் செயலதிபர் உமாமகேஸ்வரன் லண்டன் கிருஷ்ணனை சுடச் சொல்லி ஆட்சி ராஜனிடம் பொறுப்பை கொடுத்தார். இதைப் பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன். லண்டன் கிருஷ்ணன் பிற்பாடு இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து கருணாவை அழைத்து கொண்டு இந்தியா, லண்டன் அழைத்துச் சென்றார். தற்சமயம் இலங்கை உளவுத்துறைக்கு உதவி செய்யும் முக்கியமான நபர்களில் 70 வயதுக்கு மேல் சென்றாலும் கிருஷ்ணனும் ஒருவர் என்ற விபரங்கள் வருகின்றன.

சந்ததியார் கூறியதுபோல், ஒரு மாபெரும் இயக்கத்தை செயலதிபர் உமாமகேஸ்வரன் அத்துலத் முதலியின் நட்பால், சிதறுண்டு போக செய்ததைப் போல், லண்டன் கிளை பொறுப்பாளர்கள் செயலதிபர் உமா அழிய காரணமானவர்கள். இன்றும் சிலர் நான் செயலதிபர் உமாவை வேண்டுமென்றே குற்றம் சாட்டி எழுதுவதாக கூறுகிறார்கள். ஆனால் இதுவரை யாரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட ஒரு பெரிய இயக்கம் அழிந்து போனதற்கான காரணத்தை தேடவில்லை. பல உண்மைகள் தெரிந்த பல தோழர்கள் மௌனமாக இருக்கிறார்கள். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சில உண்மைகளை கூறுகிறார்கள். எமது இயக்கம் சிதறுண்டு போவதற்கு முகாமில் இருந்த தோழர்கள் ஒரு காலத்திலும் சம்மந்தம் இருக்கவில்லை. அதே மாதிரி தளத்தில் செயல்பட்ட எமது இயக்கத் தோழர்களும் காரணம் இல்லை. யார் காரணம்.

பகுதி 40

85 ஆம் ஆண்டு 86 ஆண்டு ஆரம்பத்தில் என நினைக்கிறேன். மாணிக்கம்தாசன் தனது தம்பி அசோக்கை டெல்லி அனுப்புவதாகவும் அங்கு சில மாதங்கள் என்னோடு இருக்கட்டும் என்றும் கூறினார். நான் இதுபற்றி செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் தொலைபேசி மூலம் கூறியபோது, அவர் மாணிக்கத்தின் தம்பியை டெல்லியில் சில காலங்கள் இருக்கட்டும் என்றார். டெல்லி வந்த மாணிக்கத்தின் தம்பியை வரவேற்று தங்க வைத்தேன். சின்ன பையன். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் டெல்லியில் இருந்தார். ஆனால் அடிக்கடி சென்னைக்கு போக வேண்டும் என அடம் பிடிப்பார். மாணிக்கம்தாசன் இடம் இது பற்றி தொலைபேசியில் கூறியபோது அவனை அனுப்ப வேண்டாம் எனக் கூற, நான் என்ன பிரச்சனை என்று கேட்க தாசன், தனது தம்பி அடிக்கடி பரந்தன் ராஜன் வீட்டுக்குப் போய் இருக்கிறான். இதனால் தன்னை இயக்கத்தில் சந்தேகப்படுகிறார்கள் என்றார். அப்போது நான் கேட்டேன், ராஜன் வீட்டுக்கு தானே இதனால் என்ன பிரச்சனை என. அப்போதுதான் தாசன் கூறினார், ராஜனுக்கும் பெருசுக்கும்(உமாமகேஸ்வரனுக்கு) இங்கு சிறு பிரச்சனை நிரஞ்சன் கொலை சம்பந்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் தனது தம்பி அங்க போவது மற்றவர்கள் தன்னையும் சந்தேகப்படுகிறார்கள் என்று கூறினார். எனக்கு அப்போது தான் முதல்முறையாக எமது இயக்கத்திற்குள் மறுபடியும் பிரச்சனை என்று தெரியவந்தது.

சில நாட்களின் பின் மாணிக்கம்தாசன் தம்பி அசோக் சென்னை போய் விட்டார். அவர் தற்போது பிரான்சில் இருக்கிறார். ஆனந்த் பெயர். ஒரு நாள் செயலதிபர் உமாமகேஸ்வரன் தொலைபேசி மூலம் எனக்கு ஒரு பாஸ்போர்ட் ரெடி பண்ண சொன்னார். ஜெர்மன் போவதற்கு என்று. நானும் ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள் ஷெர்லி கந்தப்பாவும், திருஞானம் என்ற ரமேஷ் இருவரும் டெல்லி வருகிறார்கள். அவர்கள் ஜெர்மன் போவதற்கு உதவி செய்யும்படி கூறினார். அவர்களது பயண விவரம் யாருக்கும் தெரியக்கூடாது என்றும் கூறினார். இவர்கள் டெல்லி வந்தபோது, திருஞானம் எனது நல்ல நண்பர். அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டேன். அவர் ரகசியமாக மிக ரகசியமாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி செயலதிபர் உமாமகேஸ்வரனை ஜெர்மனியில் ரகசியமாக சந்திக்க விரும்பியதாகவும், எமது இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பநிலையில் செயல் அதிபரால் போக கஷ்டம் என்றும், அதோடு இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எங்களுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும், செயலதிபர் உமா சார்பாக தன்னை அதாவது ரமேஷ் அனுப்புவதாகவும், மிச்சம் எல்லாவற்றையும் ஷெர்லி கந்தப்பா பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார். ஜெர்மனி போய் வந்த பின்பு ரமேஷிடம் விபரம் கேட்டபோது அவர் கந்தப்பா அத்துலத்முதலிடம் தன்னை அறிமுகப்படுத்தி செயலதிபர் உமா சார்பாக வந்திருப்பதாக அறிமுகப்படுத்தி விட தான் தலை காட்டியதாகவும், பின்பு தன்னை விட்டு விட்டு, அவர்கள் இருவரும் இரண்டு நாள் மிக ரகசியமாக மிக அதிக நேரம் பேசியதாகவும், என்ன பேசியதாகக் தனக்குத் தெரியாது என்றும் கூறினார். ஆனால் செர்லி கந்தப்பா மிக மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் கூறினர். அவர்கள் டெல்லி வந்தபோது நானும் கவனித்தேன். ஷெர்லி மிக மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.

ஒரு முறை சித்தார்த்தன், லண்டன் கிருஷ்ணன் ,செயலதிபர் உமாமகேஸ்வரன் மூவரும் டெல்லி வந்து இருந்த போது, நாங்கள் நால்வரும் மிக மகிழ்ச்சியோடு பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். மொக்கு மூர்த்தி, வாமதேவன், கண்ணன், வாசுதேவா போன்றவர்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மொக்கு மூர்த்தியை பற்றி சித்தார்த்தனும், கிருஷ்ணனும் கவலை தெரிவித்தார்கள். அப்போது உமாமகேஸ்வரன் மூர்த்தியின் திறமையைப் பற்றிக் கூறினார். முதன்முதலில் தாங்கள் ஒரு கொலையை செய்து சரியாக புதைக்காது விட்டதனால் ஒரத்தநாட்டில் ஊர் மக்கள் அதைப் பற்றிப் பேச தொடங்கியதால், முகாம் பொறுப்பாளர் பயிற்சிக்காக வந்த தோழர் மூர்த்தி அழைத்துக்கொண்டுபோய் அந்த பிணத்தை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க சொல்ல, அந்தத் தோழர் மூர்த்தியும் அருவருப்புபடாமல் அந்த பிணத்தை தோண்டி எடுத்து சாக்குமூட்டையில் கட்டி பிண நீர் வழிய வழிய தலையில் தூக்கி வைத்து வேறு இடத்தில் வைத்ததாகவும், அப்போதுதான் மூர்த்தியின் விசுவாசமும், துணிச்சலும் தங்களுக்கு தெரியவந்து அவரை எமது விசாரணை (சித்திரவதை முகாம்) பொறுப்புக்கு போட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் தோழர் மூர்த்தி, மொக்குமூர்த்தி ஆகிவிட்டார் என செயலதிபர் சிரிப்புடன் கூறினார். பின்பு எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் வாமதேவனின் திறமையைப் பற்றிக் கூறினார். அதாவது ஒரு ஊரில் பெண்கள் முழுக்க மிகமிக பத்தினியாக வேறு ஆண்களை ஏறெடுத்து பார்க்காதவர்கள் என்று பெயரெடுத்து அந்த ஊரில் வாமதேவன் விட்டால், குறைந்தது 10 பெண்களையாவது பத்தினி தன்மையை இழக்கச் செய்து விடுவார் என்று அட்டகாசமாக சிரித்துக்கொண்டே கூறினார்.

சித்தார்த்தன் கேட்டார், இந்த உளுத்துப் போன திறமையற்ற கண்ணன் என்கிற சோதிஸ்வரனே ஏன் எமது கழக ராணுவ பொறுப்புக்கு போட்டீர்கள் என்று, பரந்தன் ராஜனை ராணுவ பொறுப்புக்கு போட்டிருந்தால், திறமையாக கழக ராணுவத்தை வழிநடத்தி இருப்பார் என்று. அதற்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் மறுத்து தலையாட்டி, அது தனக்கு ஆபத்து என்றும் எல்லா தோழர்களையும் தனது திறமையால் ராஜன் தன் பக்கம் இழுத்து விடுவார். ஆனால் கண்ணன் ஒன்றும் செய்யாவிட்டாலும் தான் சொல்வதைக் கேட்டு நடக்கும் தனக்கு எதிராக ஒருகாலமும் திரும்பாது என்றும் கூற சித்தார்த்தன் விசுவாசத்தை விட திறமை முக்கியம், மாணிக்கம்தாசனை சரி போட்டு இருக்கலாம் தானே என்று கூறினார். அதற்கு செயலதிபர் மாணிக்கம்தாசன் தோழர்களை தலைமைதாங்கி வழிநடத்த தகுதியற்றவர். மாணிக்கம்தாசன் ஒரு சாகச விரும்பி. எப்பவும் எதையாவது சாகசமாக செய்ய விரும்பும் ஆள் என்று கூறினார்.

சின்ன உதாரணம் ஒன்றையும் செயலதிபர் கூறினார். எப்படி என்றால் 60 பேர் இருக்கும் ஒரு முகாமுக்கு மாணிக்கம்தாசன் போனால், அங்கு ஒருவருக்கும் சாப்பிட ஒன்றும் இல்லை பட்டினியாக இருக்கிறார்கள் என்று தெரிந்தால், மாணிக்கம்தாசன் தனக்கு வேண்டிய ஒரு சில தோழர்களை வேலை இருக்கிறது என்று கூறி அழைத்துப்போய் அவர்களுக்கு பிரியாணி போன்ற சில உணவுகளை வாங்கிக் கொடுத்து கூட்டிக்கொண்டு வருவார் ரகசியமாக. அதே முகாமுக்கு பரந்தன் ராஜன் போனால் தோழர்கள் பட்டினியாக இருப்பதைப் பார்த்து, உடனடியாக முகாம் பொறுப்பாளரை அழைத்து எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று கேட்டு தன்னிடமிருக்கும் பணம் முழுவதையும், எடுத்துக் கொடுத்து, பணத்துக்கு அளவாக அரிசி, பருப்பு, கிழங்கு வாங்கி வரும்படி கூறி பின்பு அவர்களுடன் இருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்புவார். இப்படி இருந்தால் பயிற்சிபெறும் தோழர்கள் ராஜனுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள். அதனால் தனக்கு எதிராக இன்னொரு ஆள் வளர்வதை வளர விடக்கூடாது என்றார். வாசுதேவாவை பற்றி கூறும் போது வாசுதேவா, கண்ணனை போன்றவர் தான். வளவள என்று பேசுவார். சோசலிசம், தத்துவம், கொள்கை என்று பேசமாட்டார். குழப்பமாக பேசியே மற்றவர்களை குழப்பி விட்டு விடுவார். அதனால் வாசுதேவாவை பற்றி கவலை இல்லை என்று கூறினார். செயலதிபரின் பேச்சைக் கேட்டு நாங்கள் திகைத்து நின்றோம்.

எங்கள் திகைப்பை போக்க ஒரு சிரிப்பு கதையைக் கூறினார், தஞ்சாவூரில் மற்ற இயக்கங்களின் நடவடிக்கைகளை, நடமாட்டங்களை அறிய மூர்த்தியின் உளவுப்படை பல இடங்களில் சுற்றி வருவார்களாம். அப்படிப் போன ஒரு உளவுத்துறை தோழர் ஒரு இலங்கை அரசின் சிங்கள உளவாளி இருப்பதாக மூர்த்திக்கு தகவல் கொடுக்க வேறு சில தோழர்களும் சேர்ந்து சிங்கள உளவாளியை பிடித்துக்கொண்டு வந்து விட்டார்களாம். அவன் பேசிய மொழி தெரியாமல் அரைகுறை சிங்களம் தெரிந்த ஒரு தோழரை அழைத்து வந்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள், அந்தத் தோழரும் திறமையாக விசாரித்து அந்தத் தோழரும் அந்த இலங்கை உளவாளி புளொட் இயக்கத்தை பற்றி அறிய வந்ததாக கூறியதாக மக்களிடம் ஒப்பித்து விட்டு போய்விட்டார். மொக்கு மூர்த்தியும் வழமையாக சித்திரவதை செய்து கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த இலங்கை உளவாளியின் உடுப்புகளை சோதனை செய்தபோது தஞ்சாவூர் லாட்ஜ் சாவி இருந்திருக்கிறது. வேறு சில உளவாளிகளும் இருக்கலாம் அல்லது முக்கியமான உளவு பொருட்கள் இருக்கலாம் என நினைத்துபோக. அங்கு அவர்களுக்கு அவர் இலங்கை உளவாளி அல்ல, வடநாட்டிலிருந்து துணிமணி விக்க வந்த இந்திக்காரன் என்று தெரிய வந்தது. இவர்களுக்கு இந்தியும் புரியாது, சிங்களமும் புரியாது. அவர்கள் வந்து, மொழிபெயர்ப்பு செய்த தோழரை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதைக்கேட்டு சித்தார்த்தன் கொஞ்சம் கடுமையாகவே அந்த இந்திக்காரன் குடும்பம் என்ன பாடுபடும், மூர்த்தி தோழர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும் என்று கூற, தான் அவர்களை கண்டித்து விட்டதாக கூறினார்.

எமது இயக்கத்தின் மறுமுகம் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்குத் தெரிய ஆரம்பித்த நேரம் அதுவாகும். ஆனாலும் அன்று அதை நாங்கள் பெரிய சீரியஸ் விஷயமாக நினைக்கவில்லை என்பதும் உண்மையே. பெரிய விடுதலை இயக்கத்தில் இப்படியான தவறுகள் நடக்கத் தான் செய்யும் என்று எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் கடைசியில் கூறிய வார்த்தைகள் தான் நாங்கள் நம்பியது.

தொடரும்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 10