பகுதி 21

டெல்லியில் எனது வேலைகளை ஆரம்பித்து விட்டேன். முக்கியமாக தமிழ்நாட்டு எம்.பி சந்திப்பதையும், டெல்லிப் பத்திரிகையாளர்களையும் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டேன். பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் டெல்லி செய்தியாளர் சந்திரசேகர் எனது மிக நெருங்கிய நண்பராக விளங்கினார்.

இந்திய வெளிவிவகார இலாகாவில் பங்களாதேஷ் இலங்கை மாலத்தீவு பொறுப்பாளர் துணைச் செயலாளர் திருமதி மீரா சங்கர் என்பவரை சந்தித்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். இவர் பிற்காலத்தில்  இந்தியாவின் அமெரிக்க தூதுவராக இருந்தார்.

எம்.பி களில் குறிப்பிடத்தக்கவர் வாழப்பாடி ராமமூர்த்தி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், எங்கள் மீதும் போராட்டத்தின் மீதும் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமாயின், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தொழிற்சங்க தலைவராக இருந்தபடியால் பண்டிகை காலங்களில் குறிப்பாக தீபாவளி போன்ற தினங்களில், கட்சிக்காரர்கள் மற்றவர்கள் இவரிடம் கொண்டு வந்து இனிப்பு வகைகள் உலர் திராட்சை போன்ற பழவகைகள் பெட்டி பெட்டியாக கொடுத்து இருப்பார்கள். அதை எடுத்து வைத்து என்னைக் கூப்பிட்டு அனுப்பி  என்னிடம் கொடுப்பார். அதற்கு அவர் கூறும் காரணம் குடும்பத்தை விட்டு தாயை விட்டு ஒரு போராட்டத்துக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கும் உங்களுக்கு செய்வது எனக்கு தனக்கு ஒரு மனத்திருப்தி என்று கூறுகிறார். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் பின்பு இன்றைய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் வீட்டில் தங்கியிருந்தார்.

83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என நினைக்கிறேன் சென்னையிலிருந்து உமாமகேஸ்வரன் தொலைபேசி மூலம் தானும் ஓய்வுபெற்ற இலங்கை சுங்கத்துறை அதிகாரி விக்னேஸ்வரர் ராஜாவும் டெல்லி வந்து தமிழ்நாடு இல்லத்தில் திகதியை குறிப்பிட்டு வந்து தங்கப் போவதாகவும், இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

லண்டனில் இருந்து வந்த சக்திதாசன் சென்னை போய் வந்து, அப்போது லண்டன் போக என்னோடு தங்கியிருந்தார். உமாமகேஸ்வரன் டெல்லிக்கு வந்தவுடன் காலையில் போய் நானும் சக்திதாசன் அவர்களும் அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். மாலை ஆறு முப்பது மணிக்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் சந்திப்பு நடக்க இருந்தது. நானும் சக்திதாசனும் போய் விலைகூடிய மலர் கொத்து வாங்கி வந்து உமாமகேஸ்வரனிடம் கொடுத்தோம்.

அவர்கள் போய் பிரதம மந்திரியை சந்தித்து விட்டு வரும் வரை காத்திருந்தோம். அவர்கள் வந்த பின்பு முழு விபரங்களையும் அறிந்தோம். பதினைந்து நிமிட சந்திப்பு. உமாமகேஸ்வரன் பேசியதை இந்திரா காந்தி அம்மையார் கவனமாகக் கேட்டு கொண்டாராம். அதோடு இலங்கையில் நடக்கும் விஷயங்கள் மிகவும் கவலையளிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் உன்னிப்பாக கவனிக்கிறது என்று கூறினாராம். சந்தடி சாக்கில் உமாமகேஸ்வரனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(பிளாட்) தான் பெரிய இயக்கம். நாங்கள் என்றும் இந்திய நாட்டுக்கு உதவியாக செயல்படுவோம். எங்களுக்கு கூடிய அளவு பயிற்சியும் ஆயுதமும் தேவை எனக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர் தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கும் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலாளர் அலெக்சாண்டருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அப்போது எம்.ஜி.ஆர், உமாமகேஸ்வரன் கலைஞர் ஆதரவுநிலை எடுக்க கூடாது என்பதற்காகவே உமாமகேஸ்வரனை தன் பக்கமே வைத்திருக்க பிரதம மந்திரியின் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக அறியக்கூடியதாக இருந்தது.

இந்திரா காந்தியை சந்தித்தவர்களில் அமிர்தலிங்கத்தை தவிர ஆயுதக்குழுக்களின் தலைவர்களில் உமாமகேஸ்வரனுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்ததாக அறியக்கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் IB உளவுத்துறை உயரதிகாரிகள் பேசும்போது இப்படியான வாய்ப்பை எல்லாம் பெற்ற உங்கள் இயக்கமும் தலைவரும் எப்படி எல்லாம் சிதறி, கடைசியில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் வலையில் எப்படி விழுந்தார் எனக் கூறி கவலைப்பட்டார்கள்.

பகுதி 22

பாராளுமன்றம் கூட்டம் தொடங்கும் போது ராஜ்யசபாவில் எல்.கணேசன் எம்பியும், வை.கோபாலசாமி எம்.பியும் தி.மு.க சார்பில் இலங்கை பிரச்சினை பற்றி பேச நோட்டீஸ் கொடுத்து விடுவார்கள். இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும் நாளன்று என்னையும் பாராளுமன்றம் அழைத்துப் போவார்கள். அப்படிப் போகும்போது எல்.கணேசன் எம்.பி அவர்கள் வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி விடுவார். நான் டெல்லியில் இருந்த 1988 ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினை சம்பந்தமாக நடைபெறும் விவாத நேரங்களில் லோக்சபாவில் சரி, ராஜ்யசபாவில் சரி தமிழ்நாட்டு எம்.பிக்கள் என்னையும், பார்வையாளராக கட்டாயம் அழைத்து போய் இருக்கிறார்கள்.

1984 ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மரணம். எனது நினைவுகளை ஓரளவு முடிந்தளவு வரிசைப்படுத்தி எழுதி வருகிறேன். அந்த வரிசைபடுத்தலை இன்று நிறுத்திவிட்டு இன்றைய திகதியின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு நாம் முன்பு போட்ட பதிவை இத்துடன் இணைத்து விடுகிறேன்.

மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் எனது நேரடி நினைவுகள்.

1984 ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி டெல்லியின் அன்று காலை பொழுது வழமைபோல் விடிந்தது. அந்தக் காலகட்டத்தில் டெல்லியில் என்னோடு சங்கர் என்ற தோழரும், கவிஞர் ஜெயபாலனும் தங்கி இருந்தனர் என நினைக்கிறேன். நாங்கள் தங்கியிருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு L.கணேசன் அவர்களின் வீட்டிலிருந்து நான் தினமணி பத்திரிகை வாங்குவதற்காக காலை 10 மணிக்கு கன்னாட் பிளேஸ் இடத்துக்குப் போய் இருந்தேன். அங்கு கடைகளை அடைத்து கொண்டும் மக்கள் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தார்கள். என்ன விடயம் என்று விசாரித்தபோது பிரதம மந்திரி இந்திரா காந்தியை சுட்டு விட்டார்கள் என்று கூறினார்கள்.

ஒருவராலும் நம்ப முடியவில்லை நான் திரும்ப வீட்டுக்கு வந்த எல்லோரிடமும் கூறினேன். ரேடியோ தொலைக் காட்சியிலோ எந்த செய்திகளும் வரவில்லை. ஆனால் டெல்லி முழுக்க பரபரப்பாக இருந்தது. நான் தொலைபேசி மூலம் சென்னையில் இருந்த எமது தலைவர் உமாமகேஸ்வரனுக்கு விடயத்தை கூறினேன். அவர் நம்பவில்லை. ஒரு மணி நேரம் கழித்து உமாமகேஸ்வரன் சென்னையிலும் பரபரப்பாக இருக்கிறது, விஷயம் உண்மையாக இருக்கும் போல் தெரிகிறது, தான் மாலை விமானத்தில் டெல்லி வருவதாக கூறி என்னை ஏர்போர்ட்டுக்கு வரச் சொன்னார்.

டில்லியில் விஷயம் ஓரளவு கசிந்து இந்திரா காந்தி அம்மையார்  மறைந்து விட்ட செய்தி  அதிகாரபூர்வமாக வெளிவராவிட்டாலும் அவர் மறைந்த செய்தி எல்லா இடமும் பரவிவிட்டது. டெல்லியில் எல்லா இடமும் சீக்கிய மக்களை, அடித்து உதைத்து கொலையும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் இருந்த மிக பாதுகாப்பான பாராளுமன்ற உறுப்பினரும் குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்த சீக்கிய குடும்பங்களையும் அடிக்கத் தொடங்கினார்கள். அங்கு தங்கி இருந்த பல தமிழ் குடும்பங்கள் தமிழ் எம்.பி மார் பல சீக்கிய குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவு கொடுத்தார்கள்.

எல்லா இடமும் சீக்கிய குடும்பங்கள் பட்டபாடு சொல்லி மாளாது. 1977 ஆம் ஆண்டு, 1981 ஆம் ஆண்டு நடந்த கலவரங்களின் போது சிங்கள பகுதிகளில் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களை நான் நேரடியாகப் பார்த்தேன், அனுபவித்தேன். டெல்லியில் இந்தக் கலவரங்களை பார்க்கும் போது அதே நினைவுதான் வந்தது. இரவு 9 மணி போல் ஸ்கூட்டரில் டெல்லி பாலம் விமான நிலையம் போய் உமாமகேஸ்வரனை அழைத்து வந்தேன். இருவரும் எப்படியாவது இந்திரா காந்தி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துவது என முடிவு செய்து, ஜி.பார்த்தசாரதிக்கு போன் செய்தோம். அவர்தான் மிக பிஸியாக இருப்பதாகக் கூறி, அஞ்சலி செலுத்த வி.ஐ.பி வரிசையில் வருவது கஷ்டம் என கூறினார். பின்பு மனம் மாறி தனது செயலாளர் அய்யாசாமியை போய்ப் பார்க்கும்படி கூறினார். நாங்கள் இருவரும் ஜி.பார்த்தசாரதி ஐயாவின் செயலாளர் அய்யாசாமியை போய் பார்த்தோம். அவர் முன்பே எங்களுக்கு மிக நெருக்கமாக அறிமுகமானவர். அவர் இரவு 11 மணி போல் எங்களை அழைத்துக் கொண்டு போய் அதிகாரிகளிடம் கூறி வி.ஐ.பி வரிசையில் எங்களை விட்டார். நாங்கள் வி.ஐ.பி வரிசையில் போய் அஞ்சலி செலுத்திவிட்டு வர முடிய காலை நாலு நாலரை மணி ஆகிவிட்டது. மனம் மிக வெறுமையாய் இருந்தது. உமா அண்ணாவும் நானும் தூங்காமல் அடுத்து என்ன நடக்கும், எங்கள் போராட்டம் எந்த வழியில் போகும் என பல கதைகளைக் கதைத்து கொண்டே தூங்கி விட்டோம். அன்று பகல் சாப்பாட்டுக்கு மிக கஷ்டப்பட்டோம். டெல்லியில் கலவரங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இரவு உமாமகேஸ்வரன் சென்னை பயணம்.

பகுதி 23

84 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனிலிருந்து சித்தார்த்தன் டெல்லி விமான நிலையம் மூலம் இந்தியா வந்தார். அதேநேரம் உமாமகேஸ்வரனும், காந்தளகம் சச்சிதானந்தன் ஐயாவும் டெல்லி வந்தார்கள். இவர்கள் எல்லோரும் எல்.கணேசன் எம்.பியின் வீட்டில் தான் தங்கினார்கள். சச்சிதானந்தன் ஐயா தனக்குத் தெரிந்த வெளிநாட்டு தூதரகங்களை அறிமுகப்படுத்த உமாமகேஸ்வரனை அழைத்து வந்திருந்தார். இது சம்பந்தமாக நான் முன்பு போட்ட ஒரு பதிவை இதோடு தொடர்ச்சியாக போடுகிறேன்.

தமிழீழ  மக்கள் விடுதலைக் கழகம் சார்பாக நான் தில்லியில்  பொறுப்பாளராக இருந்தபோது

1984 ஜனவரி 27. உமாமகேஸ்வரன் சென்னையில் இருந்து விமானத்தில் வந்தார். வரும்பொழுது ஐ.நா சபை ஆலோசகர்,  மறவன்புலவு க.  சச்சிதானந்தனையும் அழைத்து வந்தார். தி.மு.க தஞ்சாவூர் எல். கணேசன் இல்லத்தில் இருவரும் தங்கினர்.

அப்பொழுதுதான் முதல் முதலாக இலண்டனில் இருந்து சித்தார்த்தன் தில்லிக்கு வந்திருந்தார்.

மறவன்புலவு க.சச்சிதானந்தன் தில்லியில் உள்ள தூதரகங்களுக்கு எம் மூவரையும் அழைத்துச் சென்றார். அவருக்குத் தூதரகங்கள் பலவற்றில் நண்பர்கள் இருந்தனர்.

மொரிசியசுத் தூதரகத்தில் மூத்த அலுவலர் பொன்னுசாமி தமிழர். மறவன்புலவு க. சச்சிதானந்தனின் நண்பர். அவருக்கு அறிமுகமானோம். உமாமகேசுவரன், சித்தார்த்தன், டேவிட் ஐயா, கிருட்டிணண், லண்டண்முரசு  சதானந்தன் யாவரும் சில மாதங்களின் பின்னர் மொரிசியசு செல்வதற்கு இந்தச் சந்திப்பு உதவியது. மொரிசியசில் பிரதமர் முதலாக அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து வந்தார்கள். நிதியும் பெற்று வந்தார்கள். அங்குள்ள தமிழர்களின் ஆதரவையும் பெற்று வந்தோம். இன்று வரை மொரிசியசு அரசும் அங்குள்ள தமிழ் மக்களும் ஈழத் தமிழருக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதற்குத் தொடக்கப் புள்ளி தில்லித் தூதரகச் சந்திப்பே.

தில்லியில் தெற்கு ஏமன் நாட்டுத் தூதரகத்துக்கும் சென்றோம். தெற்கு ஏமன் அரசு அழைத்து ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன், சந்திரகாசன் இருவரும் சென்று வந்தனர். ஒரு வாரம் தங்கி அங்கு குடியரசுத் தலைவர் முதலானோரைச் சநதித்து வந்திருந்தனர். மறவன்புலவு க.சச்சிதானந்தன் இந்தச் சந்திப்புகளை ஒழுங்கு செய்ததால், உமாமகேசுவரனும் தெற்கு ஏமன் செல்ல விரும்பினார்.

தூதரகச் சந்திப்புகளின் பின்னர் தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சுக்கு உமாமகேசுவரன், சித்தார்த்தன், நான், மறவன்புலவு க.சச்சிதானந்தன் நால்வரும் சென்றோம்.

இலங்கை, மாலைதீவு, வங்காளதேசம் என மூன்று நாடுகளுக்கும் பொறுப்பான உதவிச் செயலாளர் மீரா சங்கர். பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவர். உரிய ஆலோசனைகளை நேரடியாகப் பிரதமருக்குக் கூறுபவர். இலங்கை தொடர்பான தகவல்களைத் தன் விரல்நுனியில் வைத்திருப்பவர். அச்சுவேலிக்கும் ஆவரங்காலுக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு எனக் கேட்டால் உடனே சொல்வார். அவரை நான் பல மாதங்களாகச் சந்தித்து வருபவன். எனவே இவர்கள் மூவரையும் அவரிடம் அழைத்துச் சென்றேன்.

மூவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். முதலில் உமாமகேசுவரன் பேசினார்.

போராளிக் குழுக்களுள் நாங்களே பெரிய இயக்கமாக உள்ளோம். இந்தியாவுக்கு நம்பிக்கையாய்  இருப்போம். தமிழீழ விடுதலைக் கழகத்துக்கு ஆயுதங்கள் தாருங்கள், நிதி தாருங்கள். இவ்வாறு உமா மகேசுவரன் மீரா சங்கரிடம் கேட்டார். மீரா சங்கரும் அவர் கூறியதை மிக கவனமாகக்கேட்டார்.

பின்னர் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் கருத்தைக் கேட்டார் மீரா சங்கர்.

400 ஆண்டுகளாக ஆயுதங்களை அறியாதவர் நாங்கள். போர்த்துக்கேயரிடம் தோற்றபின் எம்மக்கள் ஆயுதங்களைத் தொடவே இல்லை. உழவும் தச்சும் கம்மாலையும் அவர்களுக்கு ஆயுதங்கள். எனினும் புத்தகங்களை சார்ந்த அறிவையே மிகப் பெரிய ஆயுதமாகக் கொள்பவர்கள்.

அவர்களிடம் போருக்கான ஆயுதம் கொடுத்தால் விளைவுகள் வேறாக இருக்கும். அதுவும் ஈழத் தமிழ் இளைஞர்கள் வீறு கொண்டவர்கள். சீக்கியர்கள் எப்பொழுதும் கிர்பானுடன் இருப்பவர்கள். எனினும் வன்முறை அவர்கள் வாழ்வல்ல. ஆனால் ஈழத் தமிழர்கள் அத்தகையவர்களல்ல. ஆயுதங்களைக் கொடுத்தால் தமக்குள் மோதுவார்கள். வேலி எல்லைகளுக்காக நீதிமன்ற வழக்குக்குப் போகும் மனப்பாங்குச் சமூகம் நாங்கள். சிறிய சிக்கல்களைப் பெரிய மோதல்களாக்குவோம். ஆயுதம் கொடுத்தால் இவர்கள் தங்களுக்குள்  ஒருவரையொருவர்  அடித்துக்கொண்டு  தாங்களே  அழிந்து விடுவார்கள்.

ஏற்கனவே பஞ்சாப்பில் இந்தியாவுக்குக் கசப்பான அநுபவங்கள். ஈழத்தைத் தாண்டித் தமிழ்நாட்டிலும் ஈழத்து இளைஞர் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடும் பஞ்சாப்பாக மாறிவிடக் கூடும். எனவே ஆயுதங்களைக் கொடுக்காதீர்கள்.

இவ்வாறு சொன்னார் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.

மீராசாங்கர்  திகைப்புடன் கேட்டார், இவர்களுக்கு  முன்னாலேயே  இப்படிக் கூறுகிறீர்களே என.

உடனே சச்சி அண்ணா, தம்பிமார் என்னிலே கோபப்பட மாட்டார்கள். அவர்களிடம் தொடர்ந்து இதையே கூறி வருகிறேன். அவர்களும் இதைப்பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் எனக் கூறினார்.

என்னதான் தீர்வுக்கு வழி எனக் கேட்டார் மீரா சங்கர்.

இந்தியாவுக்குத் தெரியாத வழிகள் இல்லை. புலமையும் ஆற்றலும் நிறைந்தவர்கள் நீங்கள். அமெரிக்காவின் கென்னடி கியூபாவின் காஸ்ரோவை வழிக்குக் கொண்டுவர என்ன செய்தார் என்பதை அறியாதவரல்ல நீங்கள். இலங்கையைச் சுற்றிய வளையத்தில் உங்களைக் கேட்காமல் யார் போக முடியும்? பொருளாதாதரத் தடைகளே இலங்கையை வழிக்குக் கொண்டு வரும். கத்தியின்றி இரத்தமின்றிக் கென்னடி காரியத்தை முடித்தாரல்லவா? இந்தியாவுக்குத் தெரியாத வழிகளா என்றார் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.

பின்னாட்களில்  சித்தார்த்தன் இலண்டனில் இருந்து இந்தியா வருவதற்குப் பலமுறை விசா ஒழுங்கு  செய்து கொடுத்தவர் மீரா சங்கரே. சித்தார்த்தர் இலங்கை பாஸ்போர்ட்டில் பல வருடங்களாக லண்டன் மாணவர் விசாவில் இருப்பவர். அவருக்கு லேசில் இந்திய விசா கொடுக்க மாட்டார்கள். அவர் எனக்கு அறிவிக்க நான் போய் மீரா சங்கரிடம் சித்தார்த்தருடைய விபரம் கூறி விசாவுக்கு உதவி செய்யும்படி கேட்பேன். அவரும் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுப்பார். அண்மையில் அமெரிக்காவில்  இந்திய தூதுவராக  இருந்தவர் மீரா சங்கர்.

சென்னையிலிருந்து இந்திய பயிற்சிகள் எடுக்க எமது இயக்கமும் மற்றைய இயக்கங்களும் தமது இயக்கத் தோழர்களை அனுப்புவது நடந்து கொண்டிருந்தது. இது சம்பந்தமான செய்திகளும் எனக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. இதேநேரம் நாங்களும் லெபனானில் நடைபெற்ற PFLP  பயிற்சிக்கு எமது தோழர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். 1985 ஆம் ஆண்டு வரை டெல்லி ஊடாக கிட்டத்தட்ட அறுபது தோழர்களை அனுப்பியுள்ளேன். முதல் முறை கஷ்டப் பட்டது போல் பிறகு கஷ்டப்படவில்லை. 10 பேர், ஐந்து பேர் என பிரித்து தான் அனுப்பியுள்ளோம். லண்டனிலிருந்து நியூடெல்லி டமாஸ்கஸ் ( சிரியா) லண்டன்/டமாஸ்கஸ், டெல்லி சிரியன் ஏர் லைன்ஸ் ரிட்டர்ன் டிக்கெட் வரும். எத்தனை டிக்கெட் வருதோ அதற்கான தோழர்களை சென்னையிலிருந்து அனுப்புவார்கள். அவர்கள் டெல்லி வந்த பின்பு அவர்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து இலங்கை கள்ள பாஸ்போர்ட் செய்து அவர்களை அனுப்புவோம். டெல்லியில் இருந்த ஒரு இலங்கை நண்பர், அவர் எமக்கு தேவையான பாஸ்போர்ட் சேவை தேவைகளை ஒரு ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாகவே செய்து கொடுத்தார். பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார். அவர் கூறுவார் எங்களது ஈழப்போராட்டத்தில் இதன் மூலம் தனது சிறு உதவியும் சேரட்டும் என்று. இவரின் உதவியும் மற்றும் பலரின் உதவியும் எமது வெளிநாட்டு பயிற்சி எடுப்பதற்கு உதவி புரிந்தன என்றால் மிகையாகாது.

நாங்கள் கள்ள பாஸ்போர்ட்டில் தோழர்களை அனுப்புவதாலும், அவர்கள் அதே பாஸ்போர்ட்டில் திரும்ப வரும்போதும் டெல்லி ஏர்போர்ட்டில் பிரச்சினையில் இருக்கக்கூடாது என்பதற்காக, நான் முதல் நாளே போய் ஜி.பார்த்தசாரதி அய்யாவிடம் போய் உண்மையான விபரத்தைக் கூறி, அவர்கள் பயிற்சிக்கு போகும்போதும் பயிற்சி முடிந்து வரும் போதும் ஏர்போர்ட்டில் பிரச்சினை வராமல் இருக்க உதவி கேட்பேன். அவரும் சிரித்துக் கொண்டே  உங்களால் ரொம்ப பிரச்சனை என திட்டி டெல்லி ஏர்போர்ட் முதன்மை இமிகிரேஷன் அதிகாரியுடன் பேசி என்னை போய் அவரை சந்திக்க சொல்வார். எதுவும் பாஸ்போர்ட் பிரச்சனை வந்தால் முதன்மை இமிக்ரேஷன் அதிகாரி உடனடியாக உதவி செய்வார். அதை இன்று நினைக்க மிகவும் மலைப்பாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. இப்படியெல்லாம் எங்களுக்கு உதவிகள் கிடைத்ததா என்று.

பகுதி 24

உமாமகேஸ்வரன் சென்னைக்கு போகும் முன், என்னிடம் சித்தார்த்தன் சென்னை வந்து திரும்ப  லண்டன் போகும் போது எமது தொடர்புள்ள முக்கியமான இந்திய ஆட்களை அறிமுகப்படுத்த சொன்னார். சித்தார்த்தனை அவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது, தமிழர் விடுதலைக் கூட்டணி இருபத்தைந்து ஆண்டுகால இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் லண்டனில் எமது இயக்கத்துக்கு வேலை செய்பவர் என அறிமுகப்படுத்த சொன்னார். அப்படி அறிமுகப்படுத்தினால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகன் மார்களும் பிளாட் இயக்கத்தை ஆதரிப்பதாக ஒரு இமேஜ் வரும் என கூறினார்.

நானும் எமது தொடர்பில் இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரிகள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், G.பார்த்தசாரதி போன்றவர்களை அறிமுகம் செய்தேன். ஜி.பார்த்தசாரதி, தர்மலிங்கம் mp அவர்களை தெரியும் என்று கூறினார்.

சித்தார்த்தன் லண்டன் போய் திரும்ப வந்து போகும் போது (வெளிநாட்டில் எமக்காக வேலை செய்யும் பலர் இயக்க வேலைகளை காரணம் காட்டி இயக்கத்துக்கு சேர்த்த காசில் பல நாடுகளுக்கும், இந்தியா விற்கும் உல்லாசப்பயணம் வந்து போவது வாடிக்கை. இதை உமாமகேஸ்வரனும் கேள்வி கேட்கவில்லை. காரணம் இவர்கள்தான் உமாமகேஸ்வரனுக்கு தனிப்பட்ட சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் பணம் போடுபவர்கள். சந்ததியார் பல கேள்விகளை கேட்டபடியால் இவர்களுக்கு சந்ததியாரை பிடிக்காது) அப்பொழுது இந்திய காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருப்பையா மூப்பனார் பாராளுமன்ற உறுப்பினருக்கு அகில இந்திய ரீதியில் மிகவும் செல்வாக்கு. அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் கூட. 1984 ஆண்டு செப்டெம்பர் மாதம் என நினைக்கிறேன். அன்று இரவு சித்தருக்கு லண்டனுக்கு விமானம். மாலை ஐந்து மணி போல் நானும் சித்தரும் கருப்பையா மூப்பனாரை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் போனோம். எங்களுக்கு ஒரு நப்பாசை, அங்கு இந்திராகாந்தி இருந்தாலும் சந்திக்கலாம் என. நாங்கள் போன போது இந்திரா காந்தி இருக்கவில்லை. மூப்பனாரும் இருக்கவில்லை. அங்கிருந்தவர்கள் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி ஃப்ரீயாக இருப்பதாகவும் வேண்டுமானால் சந்திக்க கூறினார்கள். ஆனால் சித்தார்த்தரும், நானும் எங்களுக்குள் கதைத்தோம். இந்த பேயனை போய் பார்ப்பதில் என்ன பிரயோசனம், ராஜீவ் காந்திக்கு என்ன விளங்கப் போகிறது என்று கதைத்து விட்டு நாங்கள் திரும்பி விட்டோம். 2 மாதத்தில் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் ராஜீவ்காந்தி பிரதமரானார். அதன் பின்பு சித்தார்த்தர் வரும்போது எப்பவும் கவலைப்படுவார். அப்போ போய் சந்தித்து இருந்தால் நாங்கள் தான் இலங்கைத் தமிழர்களில் முதலில் சந்தித்தவர்களாக இருந்திருப்போம். தனிப்பட்ட முறையில் ஒரு தொடர்பும் இருந்திருக்கும். அன்று நாங்கள் விட்ட தவறை நினைத்து வருந்துவோம். சந்தர்ப்பம் ஒருமுறைதான் கதவைத் தட்டும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் உமாமகேஸ்வரன் மொரிசியஸ் நாட்டுக்குச் சென்றார். மொரிஷியஸ் நாட்டு தமிழ்ச் சங்கம் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எங்கள் பிரச்சாரம் மொரிஷியஸ் நாட்டு அரசாங்கமே உமாமகேஸ்வரனை அழைத்தது என்று. உண்மை தெரியாமல் பல பேர் தவறாக  இன்றும் எழுதுகிறார்கள். இந்தப் பயணத்துக்கு அடித்தளம் இட்டவர் காந்தளகம் சச்சிதானந்தன் அவர்கள். செயல்படுத்தியவர் லண்டனை சேர்ந்த லண்டன் முரசு ஆசிரியர் சதானந்தன் என்பவர்.

மொரிஷியஸ் நாட்டு வரவேற்பில் முக்கிய பங்காற்றியவர் மொரிஷியஸ் தமிழ்ச் சங்கத்தின் திருமதி ராதா பொன்னுசாமி. இவர் மொரிசியஸ் நாட்டின் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர். அதோடு மொரிஷியஸ் நாட்டு கல்வி அமைச்சர் பரசுராம். பரசுராம் முயற்சியால் மொரிஷியஸ் பிரதம மந்திரி அனுருத் ஜெகநாத், மொரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி ராம் கூலம் ஆகியோரை உமாமகேஸ்வரனும் அவரது குழுவில் இருந்த நமது இயக்கத் தோழர்கள் டேவிட் ஐயா, சித்தார்த்தன், லண்டன் கிருஷ்ணன் மற்றும் லண்டன் முரசு சதானந்தன் ஆகியோர் சந்தித்தார்கள்.

மொரீசியஸ் நாடு இந்த காலகட்டத்தில், இப்போதும் கூட இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. மொரிசியஸ் பயணத்துக்கான அழைப்பு கிடைத்த போது, டமஸ்கஸ் ஊடாக லெபனான் போவதற்காக டெல்லி வந்திருந்தார். அப்போது பாஸ்போர்ட் செய்வதற்காக கோர்ட், டை கட்டி போட்டோ எடுத்தோம். கீழே உள்ள படம் அப்போது எடுத்ததுதான். தான் திரும்பப் பம்பாய் வருவதாகவும் அப்போது அங்கு வேறு பாஸ்போர்ட் செய்து எடுத்து  வந்து சந்திக்கும்படியும், அதோடு மொரிஷியஸ் பயணம் பற்றிய விபரங்களையும் அவரது பாஸ்போர்ட் பற்றிய விபரங்களையும் ஜி.பார்த்தசாரதி அவர்களிடம் கூறவும் சொன்னார். நான் ஜி.பார்த்தசாரதி அவர்களிடம் விபரத்தை கூறியபோது அவர் வாழ்த்துக் கூறி, வெளிநாடுகளின் ஆதரவைப் பெறுவது நல்ல விடயம் என்றார். உண்மையில் இந்தியா, இலங்கை பிரச்சனை வெளிநாடுகளிலும் பரவ வேண்டும் என விரும்பியது. இந்தியா ஆதரித்தபடியால் தான் உமாமகேஸ்வரனை மொரீசியஸ் பிரதம மந்திரி ஜனாதிபதி சந்தித்தார்கள் என்பதுதான் உண்மை. (இப்போதும் சிலர் எழுதுகிறார்கள் இந்தியா எதிர்த்ததாகவும் ஆனால் உமாமகேஸ்வரனுக்கு மொரிஷியஸ் நாட்டு அரசாங்கம் வரவேற்பு அளித்தது என்று).

நான் குறிப்பிட்ட நாளில் பம்பாய் போய், மான்சரோவர் ஹோட்டலில் தங்க அதே ஓட்டலில் உமாமகேஸ்வரனும் வந்து தங்கினார். பம்பாயில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர்கள் எங்களுக்கு பலவித உதவிகள் செய்தார்கள். சென்னையிலிருந்து டேவிட் ஐயா, சித்தார்த்தனும் என நினைக்கிறேன் மும்பை வந்தார்கள். விடியற்காலையில் மும்பையிலிருந்து மட்டும்தான் மொரிசியசு விமானம் இருந்தது. அவர்கள் மொரிஷியஸ் பயணமானார்கள். உமாமகேஸ்வரன் லெபனானில் இருந்து கொண்டு வந்திருந்த பல பொருட்களை சென்னையில் கொடுப்பதற்காக நான் சென்னை பயணம் செய்ய முயன்றபோது, எந்த ரயில் டிக்கெட்டும் கிடைக்கவில்லை. கடைசியில் பெங்களூருக்கும் மும்பையில் இருந்து பஸ் டிக்கெட் கிடைத்தது. கிட்டத்தட்ட முப்பது மணி நேர பஸ் பயணம். நான் பெங்களூர் வந்த போது பெங்களூரில் காவேரி பிரச்சனை சம்பந்தமாக தமிழருக்கு எதிராக பெரிய கலவரம். அங்கிருந்து எந்த ஒரு பஸ்ஸும் தமிழ்நாட்டுக்கு ஓடவில்லை. கிட்டத்தட்ட மூன்று நாள் அங்கு தங்கியிருந்து, கலவரம் ஓரளவு அடங்க தமிழ்நாட்டுக்கு சில பஸ்கள் விட்டார்கள். அதில் நான் சென்னை வந்து சேர்ந்தேன். சென்னையில் 2 நாள் இருந்து விட்டு திரும்ப புதுடில்லி போய்ச் சேர்ந்தேன்.

தொடரும்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6