இலங்கையில் கடல்- அரசியல்.
நியூட்டன் மரியநாயகம்
எனது அம்மாவின் தந்தையர் அவர் இறக்குவரை பறிக்கூடு (fishing trap) வைத்து மீன்பிடித்தார். பறிக்கூடுகளை கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் அளவான தூரத்தில் கொண்டு சென்று அங்குள்ள முருகை, சல்லி, பார் என்று எம்மவரால் அழைக்கப்படும் பவளப்பாறைகளுக்கு இடையில் வைத்து விடுவார். அடுத்த நாள் வெய்யில் நன்றாக எறித்த பின், பறிக்கூடுகளை மரக்கோலின் கொக்கியால் தோணிக்குள் எடுப்பார். மீன்களை பறிகளிலிருந்து எடுத்துவிட்டு, மறுபடியும் அதே இடத்தில் வைத்து விட்டு வீடு திரும்புவார். நான் சிறுவயதாக இருந்த 80-களின் நடுப்பகுதி வரை தீவகத்தை சேர்ந்த எனது உறவினர்கள் இத்தொழிலை புத்தளம், கற்பிட்டி வரை தாணயம் போட்டு மாசி மாதம் தொடக்கம் ஆவணி வரை செய்வார்கள். பிற்காலத்தில் தொழில் அருகிப்போனது. மீன்பிடிபாடு குறைந்து போனதுவும். மீன்களின் வாழ்விடம் அழியத் தொடங்கியதுமாகும் காரணமாகும்.
தற்போது, இலங்கையை சுற்றியுள்ள கரையோர பிரதேசத்தில் மீன்களின் வாழ்விடங்களான பவளபாறைகளை மறு உருவாக்கம் செய்ய, தற்போதுள்ள இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடலில் பேருந்துகளை போடுவதன் மூலம் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. பேரூந்துகளை கடலில் போடுதல் பற்றிய அரசியல் விவாதங்கள் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அரசியல் சார்ந்த விவாதங்களுக்கு அப்பால், பஸ்களை கடலில் போட்டு மீன்பிடியை அபிவிருத்தி செய்யும் திட்டம் பற்றிய சில பக்கங்களை ஆராய்வதே இந்த சிறு கட்டுரையின் நோக்கம்.
கடலில் பேருந்துகளை போடுவதற்காக கூறப்படும் காரணங்கள்.
– மீன்களில் உற்பத்தி அதிகரிக்கும்
– கடலில் அடித்தள தாவர வளர்ச்சி அதிகரிக்கும்
– பவளப்பாறைகள் அல்லது முருகைகள் வளர்ச்சியடையும்
– இதனடிப்படையில் மீனவர்கள் பயனடைவார்கள்.
என்ற நான்கு காரணிகளை இலங்கை அரசாங்கத்தின் மீன்வளத்துறை அமைச்சகம், கடலில் பேருந்துகளை போடுவதற்காக கூறிவரும் காரணங்களாகும்.மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனையிலுதித்த மேற்படி காரணங்களில் அடிப்படையில்; அவர் விடுத்த ஆணையின் பேரில் தாம் வடமராட்சி கடலில் பேருந்துகளை போட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன் இலங்கையின் இரு ஆய்வு நிறுவனங்களின் ஆய்வுமுடிவின் அடிப்படையிலேயே பஸ்களை கடலில் இறக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மேலே கூறப்பட்ட காரணங்களை பார்த்தால்; இதில் எந்தவிதமான தவறுகளும் நடந்ததாகவோ அல்லது பலர் விமர்சிப்பது போல, “தமிழீழத்தின்” கடலடித்தளத்தை அழிக்கவோ செய்யப்பட்ட நடவடிக்கைகளாகவும் தெரியவில்லை. கடலில் பஸ்களை போடும் திட்டத்தை உருவாக்கிய அறிவாளிகள் குழு மேற்படி கூறப்பட்ட நான்கு நலன்கள்-பெறுபேறுகள் கிடைக்கும் என்று உண்மையாகவே நம்பியதன் அடிப்படையிலேயே பஸ்களை கடலிலிட்டுள்ளனர். கடலுக்கும் மக்களுக்கும் முழுமையாக நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலேயே, மந்திரி டக்ளஸ் தேவானந்தா அறிவாளர்கள் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல்; தென்கடலில் போடப்படவிருந்த மேற்படி பேரூந்துகளை, அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தியே வடகடலில் போட ஆவன செய்துள்ளார். இதை அவர் உண்மையாகவே இந்த திட்டத்தால் பயன் கிடைக்கும்- அந்த பயன் தமிழ் மக்களுக்கும் கிடைக்கட்டும் என்ற அவாவிலேயே செய்துள்ளார்.
கடற்பார், தூண்டி கல்லு, சல்லி, முருகை, பவளப்பாறை
மேலே கூறப்பட்டுள்ள காரணங்கள் சரியானவையா என்பதை பார்ப்பதற்கு முன்பு, இந்த திட்டம் வெற்றியடைவதற்கு அடிப்படையாக உள்ள முருகை அல்லது பவளம் –பவள பாறைகள் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.
கடற்பார், தூண்டி கல்லு, முருகை போன்ற சொற்கள் இலங்கையில் கடலோடி சமூகத்தில் உபயோகப்படுத்தப்படும் மிகவும் வழமையான சொற்கள். சில வருடங்களுக்கு முன் இந்திய மொழியியல் சமூகம் சார்ந்த இணைய ஊடகங்கள் மூலம், பவளப்பாறை என்ற சொல் பாவனைக்கு வந்துள்ளது. ஆங்கில மொழியில் Coral என்ற சொல்லுக்கு பவளம், முருகை என்ற சொற்களையும் coral reef என்ற சொல்லுக்கு பவளபாறை, முருகைக்கல் தீடை, கடற்பார் என்கிற சொற்களும் பயன்பாட்டிலுள்ளது. நுண்ணிய உயிரியான முருகை அல்லது பவளம் பற்றி இணையத்தில் தேடினால் பல ஆயிரம் கட்டுரைகள் பல மொழிகளில் காணக் கிடைக்கும். தமிழில் பெருமளவில் இல்லை. போதிய நேரமின்மை கருதியும்; எனது தமிழ்மொழி கலைச் சொற்கள் சார்ந்த ஏழ்மை- மொழியியல் வறுமை காரணமாகவும், இங்கு பவளம் அல்லது முருகை என்றால் என்ன என்பதை பற்றிய கடல்சார் ஆய்வுகளையொட்டி, சரிபார்க்கப்பட்ட விக்கிப்பீடியா விளக்கத்தை பதிகிறேன்.
“பவளம் அல்லது பவழம் (coral) என்பது ஒருவகை கடல் வாழ் உயிரினமாகும். இவை நிடேரியா (Cnidaria)தொகுதியைச் சேர்ந்த, அந்தோசோவா (Anthozoa) வகுப்பைச் சேர்ந்தவையாகும். குழியுடலிகளைச் சேர்ந்த இவை சல்லி வேர்கள் போன்ற ஏராளமான கால்களைக் கொண்டவை. நெருக்கமாக அடுக்கப்பட்ட குடியிருப்புகள் போன்ற தோற்றத்தைக் காட்டும் சேர்ந்திருப்பு/சமூக அமைப்பைக் கொண்டிருக்கும். கடல் நீரில் உள்ள பல்வகை உப்புகளைப் பெருமளவில் பிரித்தெடுத்துத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. பவளப் பூச்சிகள் பெரும்பாலும் வெப்ப நீர்க் கடல்களில் காணப்படுகின்றன. இதனால் வெப்பமண்டல கடல்களில் பவளப் பாறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
இவை கடல் நீரிலுள்ள சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சி இவை கால்சியம் கார்பனேற்றைச் சுரப்பதன் மூலம், கடினமான அடிப்படை ஒன்றைத் தோற்றுவிக்கும். இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களை ஒத்திருக்கும். இவற்றைப் பவளக்கொடிகள் என்று கூறுவர். இந்தப் பவளக்கொடித் திட்டுகள் சேர்ந்து இறுகிப் பாறையாகி தீவுகள் ஆகும். இவற்றைப் பவளத்தீவு என்பர்.””பவளப் பூச்சிகள் கடலில் 24°செ. வெப்பநிலையில் உள்ள 40-50 மீ. ஆழப் பகுதிகளில் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவற்றால் 18°செ.குறைந்த வெப்பநிலையில் வாழ முடியாது. இவற்றின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி பரவக்கூடிய தெளிவான கடல்நீர் அவசியம். கடல்நீரில் உப்பின் அளவு லிட்டருக்கு 35 கிராமுக்கு மேல் இருக்கக் கூடாது. பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பப் பகுதிகளில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன.
இப் பாறைகள் பவளப்பூச்சிகள், சில வகை ஆல்காக்கள் ஆகியவற்றின் சுண்ணச் சேர்மங்களான (Calcium compounds) எலும்புக்கூடுகளாலும், எச்சங்களாலுமே உருவாக்கப்படுகின்றன. பவளப் பூச்சிகள் கடலடியில் தனித்தனியாக இல்லாமல் தொகுப்புயிர்களாகவே வளர்கின்றன. இவற்றின் சந்ததிகள் தனியே பிரிந்து செல்லாமல் மரக் குருத்துகளைப் போன்று ஒன்றிணைந்தே தொடர்ந்து வாழ்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்குக் கிட்டுகின்ற இரையானது, தொகுப்புயிர்கள் எல்லாவற்றிற்குமே பயன்படுகிறது. பவளப்பூச்சிகளால் தண்ணீரில்லாமல் வெகுநேரம் உயிர் வாழ முடியாது. எனவேதான் பவளப் பாறைகளின் உயர எல்லை கடல் மட்டத்துடன் நின்று விடுகிறது. பவளத் தொகுப்புயிர்களில் ஒருவகையான செம்பவளத் தொகுப்புயிர், கிளைகள் பல கொண்ட இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள சுண்ணச் சட்டகத்தைக் கொண்டதாகும். இந்தச் சட்டகமானது தொகுப்புயிருக்கு ஆதாரமாக அமைவதுடன் தம்மை உண்ண வரும் எதிரி விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் உதவுகிறது.“பவளபாறைகளானவை உலகின் மத்திய ரேகையை அண்டிய கடல் பிரதேசத்தில் பெரும்பான்மையாக காணப்படுகிறது. பசிபிக் சமுத்திரம் தொடக்கம் இந்து சமுத்திரம் மற்றும் தென் அத்திலாந்திக் சமுத்திர பிரதேசங்களில் இவை பரந்துள்ளன. அபூர்வமாக, நோர்வேஜியன் வட கடலின்/Northsea சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இலங்கையில் வடகடல் தொடக்கம் மன்னாரின் தென் கடற்பகுதிவரை இவை காணபடுகின்றன. இப்பிரதேசத்தில் காணப்படும் பவளபாறைகளானவை அபூர்வமானவையாகவும், கடலடித்தளத்தின் உயிரியல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகவும் ஆய்வுகளில் கண்டடையப்பட்டுள்ளது.
பளப்பாறைகளின் அழிவு
இழுவைப்படகுத் தொழில், வெடிபோட்டு மீன்பிடித்தல், இரசாயன மாற்றத்தை உருவாக்கும் தாவரங்களை உபயோகித்து மீன்பிடித்தல், கடலடித்தள வலைகள் –தங்கூசி வலைகள் உபயோகித்தல் போன்ற மீன்பிடி முறைகள், பவளப்பாறைகளின் அழிவுக்கு நேரடியான காராணிகளாக கண்டடையப்பட்டுள்ளது. இலங்கையைச் சுற்றியுள்ள கரையோர முருகைகளில் பெருந்தொகையானவை இவ்வகை தொழில்களினாலேயே அழிக்கப்பட்டன. அதேவேளை, தொழில் செயற்பாடுகளினால் அழிக்கப்படும் முருகைகள், தம்மை தாமே மாற்றுருவாக்கம் செய்தலினால் ஓரளவுக்கேனும் 1990- ஆம் ஆண்டுவரை முற்றுமுழுதான அழிவிலிருந்து தம்மை காத்துக்கொண்டன.
1990- பிற்பட்ட காலத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்: உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனால், கடல் மட்டம் உயர்தல். கடலில் வெப்பநிலை அதிகரித்தல். மனித செயற்பாடுகளால் உருவாகும் மாசடைதல் காரணமாக, கடலில் உயிர்வாயு –ஒக்சிசனின் அளவு குறைத்தல் போன்ற காரணிகள் கடலின் உயிரிகளையும் அதன் இயற்கைகளையும் அழிவுகுள்ளாக்குவது அறியப்பட்டது.
காலநிலை மாற்றம் மற்றும் மாசுபாடு ஆகியவை ஆக்ஸிஜன் அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழிகளிலும் கடல் உயிரினங்களை சேதப்படுத்துகின்றன. கடலில் பிளாஸ்டிக் மாசுபாடு மகத்தான அளவை எட்டியுள்ளது. மேலும் சில மதிப்பீடுகள் 2050 க்குள் கடலில் மீன்களை விட அதிகமான பிளாஸ்டிக் இருக்கலாம் என்று கூறுகின்றன. புவி வெப்பமடைதல் மற்றும் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையானது, வெப்பமண்டல பவளப்பாறைகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் சில தசாப்தங்களில் பெரும்பாலான பவளப்பாறைகள் அழிக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இந்த பின்னணியில் நாம் பஸ்கள் கடலிலிடும் நடவடிக்கையை சிறிது ஆராய்வோம்.
கடலின் மழைக்காடுகளும் –அந்நியப் பொருட்களும்
கடலின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் பவளப்பாறைகள் –முருகைகள் இலங்கையின் கடற்பிரதேசத்தில் பெரிதளவில் இருந்தாலும் அதன் கரையோரப் பிரதேசத்தில் மேற்கூறிய காரணங்களினால் அழிவை கண்டு வருகின்றன. இதை கட்டுக்குள் கொண்டு வந்து அழிவை சரிசெய்யவென்றே மேற்படி பஸ்கள் கடலிலிடுவதாக இலங்கை மீன்வளத்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இப் பேரூந்துகள் கடலிலிடும் வேளை அவற்ரை சுற்றி- பற்றி காலப்போக்கில் முருகைகள் – பவளப்பாறைகள் உருவாக தொடங்கும் என எதிர்பார்க்கின்றனர் மீன்வளதுறையினர். இது எவ்வாறு நிகழ்கிறதென்பதை பார்ப்போம். ஒரு கடலடித்தள பிரதேசத்தில் ஒரு அந்நியப்பொருள் இடப்பட்டால், அதில் முதலில் செழும்பு (உயிரிகள் வாழத்தக்க சேறு) பிடிக்க தொடங்கும். அதனை தொடர்ந்து பவள உயிரிகள் அதில் குடிகொள்ள வருவார்கள்.
நாளடைவில் அந்த அந்நியப்பொருள் கடல் அடித்தள அசைவு மற்றும் இரசாயன மாற்றத்தினால் சிதிலமடைந்து போகையில் பவள உயிரிகள் அப்பொருளை தமது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து விடும். இன்றைய ஆய்வுகளின்படி பிளாஸ்டிக், வாகன இறப்பர் சில்லுகள், இரசாயன பொருட்களை கொண்ட கலங்கள் போன்றவற்றை பவள உயிரிகள் அணுகுவதில்லை. இப் பொருட்கள் பவள உயிரிகளுக்கு நஞ்சாக அமைவதே இதற்கு காரணம். இவ்வாறு ஒரு அந்நியப்பொருளை, பவள உயிரிகள் மொய்த்து அதை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் போது, வளர்ந்த முருகைகளில் பிடித்திருக்கும் சொழிகள், பைட்டோபிளாங்க்டன் (phytoplankton) மற்றும் ஜூப்ளாங்க்டன் (zooplankton) உண்ண மீன்வகைகள் வருகை தந்து, முருகைகளை தமது வாழ்விடமாக்கிக் கொள்கின்றன.
இந்த வகையில் பேரூந்துகளை கடலிலிடுவதனால் பவளப்பாறைகளை உருவாக்கி, மீன்வளத்தை அதிகரிப்பதுடன் கடலடித்தள சூழலை வளப்படுத்தலாம் என்ற கண்டுபிடிப்பு பிழையான கோட்பாடு/Theori அல்ல. குறைந்தது நூறு வருடங்களுக்கு மேலாக அனுபவரீதியிலும், 1980-வரையான ஆய்வுகளிலும் நடைமுறையில் பரீட்சிக்கப்பட்டு வெற்றியடைந்த கடற் சூழலியல் கோட்பாடு/Theori இதுவாகும்.
இன்று இந்த கோட்பாடு இலங்கை கடலில் வெற்றியளிக்குமா?
இப்பதிவின் மேலே கூறியுள்ளது போல் முருகைகள் தளைத்து வளர விசேடமான கடலியல் சூழல் தேவைப்படுகிறது. 18- 24 செல்ஸியஸ் வெப்பநிலை மற்றும் இதமான இரசாயன நிலையுடன் கூடிய அளவான உப்புச் செறிவுள்ள கடல், முருகைகள் வாழ்வதற்கான சரியான கடலியல் சூழலாகும். இலங்கையில் ஏற்கனவே காணப்பட்ட பவளப்பாறைகள் அழிந்து வருவதற்கும், அவை மீள்வளர்ச்சி கொள்ளாததற்கும் காரணம் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான கடலடித்தள சூழலியலில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட்டதாகும்.
இந்த வகை சூழலியல் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டதற்கான காரணங்களை பார்ப்போமெனில்:
– உலகில் பிளாஸ்டிக் பாவனையிலும் அதனை கடலில் காடாத்துவதிலும் ஐந்தாவது இடத்திலிருப்பது நமது நாடான இலங்கையாகும்.
– உலகத்தின் முக்கிய கடற்போக்குவரத்து தடமான இலங்கை கடலில், கப்பல் போக்குவரத்து சார்ந்த மாசடைவுகள் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கையைச் சூழவுள்ள கடலில்; கப்பல் போக்குவரத்துக்கு மற்றும் எரிபொருள் பாவனையால் உருவாகும் nitric acid and sulfuric acid போன்ற இரசாயனங்களின் கழிவு கடற்கரை நீர் மற்றும் கடலடித்தளத்தில் பரவி காணப்படுகின்றது.
– வங்காள விரிகுடாவை கரையாக கொண்ட நாடுகள்; தமது கழிவுகளை கடலில் செலுத்துதல் மற்றும் கடலை மாசடைய வைக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது. இவற்றுடன், உலகிற்கே பொதுவான பிரச்சனையான உலக வெப்பமயமாதல் என்ற காரணி- மேற்கூறிய காரணங்களின் பாதிப்பை அதிகரிக்கும் ஊக்கியாக செயற்படுகின்றது.
இந்நிலையில், கடலிலிடும் பஸ்களை பற்றி – அவற்றை தன் வளர்ச்சி சூழலாக பயன்படுத்தி எவ்வாறு முருகைகள்/பவளப்பாறைகள் வளர்ச்சியடையும்?
அப்போ, புகையிரத பெட்டிகளை கடலில் போட்டு மீன்பிடிக்கும் அமெரிக்கர்கள் செய்தது தவறா?
நியூயோர்க் நகரம் 70-80 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உலகத்திலேயே பெரிய அளவிலான குப்பைகளை உருவாக்கும் நகரமாக இருந்து வந்தது. குப்பைகளை அகற்ற நிலத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதனால், கடலில் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி வந்தது. 80-களின் இறுதியில் இது பாரிய கடல்சார் சூழல் பிரச்சனையை ஏற்படுத்தியது. சூழலியல் மற்றும் மீனவ செயற்பாட்டாளர்களின் போராட்டத்தினால் மத்திய அரசு குப்பைக் கிடங்காக கடலை உபயோகிப்பதனை தடுத்து நிறுத்தியது. அப்படியிருந்தும் சட்டத்தின் சில ஒட்டைகளை பயன்படுத்தி 2010 வரை, கடலடித்தள சூழலை மேம்படுத்துகிறோம் என்று கூறிக்கொண்டு – வேறு வகையில் அகற்றுவதற்கு பல கோடி டொலர்கள் செலவை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட ரயில் பெட்டிகளை- பெரிய செலவுகள் எதுவுமில்லாமல் கடலில் போட்டது நியூயோர். மற்றும் சில மாநில அரசுகள் தற்போது செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில், போராட்டக்காரர்கள் கூறியது போல கடலிலிட்ட அப்பெட்டிகள் பெரியளவில் கடலடித்தளத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
அதேவேளை, அவற்ரை கடலிலிட்ட மாநில அரசுகள் கூறியது போல் ரயில் பெட்டிகள் கடலுக்கோ அதன் உயிரிகளுக்கோ அல்லது மீனவர்களுக்கோ பெரிய நன்மை எதையும் தந்துவிடவில்லை. சில நூறு செப்பலி, பருந்தி மற்றும் சில மீன்வகைகளும் அங்கு வாழ்கின்றன. அப் பெட்டிகளின் சூழலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு கடலடித்தள தாவரங்கள் வளரவில்லை. இந்த ரெயில் பெட்டிகள் இடப்பட்டுள்ள இடம் ஏற்கனவே மாசடைவினாலும் இழுவைப்படகு தொழிலினாலும் அழிந்து போன கடல் தளத்தை கொண்டிருந்தது. அந்த வகையில் பாசிகளை உண்டு வாழும் சில மீன்வகைகள் வாழ்வதற்கான இடமாக இப் பெட்டிகள் பயன்படுவதும். பெரிய பாதிப்பை கடலுக்கும் ஏற்படுத்தாததுவுமே இன்றுவரை நடந்துள்ள நன்மைகள். இந்த ரயில் பெட்டிகள் கடலிலிட்ட நிகழ்வு மற்றும் சில இது போன்ற நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி கடலில் போடப்பட்டுள்ள பஸ்கள், நமது கடலுக்கும் அதுசார்ந்த மக்களுக்கும் நன்மை பயக்குமென்பது சந்தேகமே!
கடலிலிட்ட பஸ்கள் மீன்வளத்தை அதிகரிக்காதா?
பொதுவாக கடல்வாழ் மீனினத்தை இரண்டு வகையாக பிரிப்பார்கள்
1. pelagic fish species –கடலில் நடுவிலிருந்து மேற்பகுதியில் வாழும் புலமற்ற மீன்வகை
2. Demersal fish – குறிப்பிட்ட பிரதேசத்தை வாழ்விடமாக கொண்ட நிலத்தடி மீன்வகை.
இலங்கையில் கடல் பிரதேசத்தில் பெருமளவில் பிடிக்கப்படுவது pelagic fish species அல்லது கடல் மேற்பகுதி சார்ந்த மீன்வகையாகும். கூட்டம் கூட்டமாக ஓரிடத்தில் தங்காமல் பாரிய கடற்பிரதேசத்தில் வலம்வந்து கொண்டிருப்பவை இம் மீன்கள். சூரை, சூடை, பாரை, கும்பிளா, சீலா, கட்டா, சிறையா, கயல், ஊளி போன்ற மீன்கள் இதற்கு உதாரணம். கலவாய், திருக்கை, ஓரா, ஒட்டி, விளை, செப்பலி, பருந்தி, மசறி, மதணன், பூச்சை போன்றவை Demersal fish – நிலத்தடி மீன்வகைகளுக்கு உதாரணமாகும்.
70 -களின் நடுப்பகுதியில் நவீன இயந்திர மயப்பட்ட மீன்பிடி இலங்கையில் உருவாகுவதற்கு முன்பு வடக்கின் மீன்பிடி சமூகம், பெரும்பாலும் குடாக்கள்- கரைகளை அண்டிய பவளப்பாறைகள் சார்ந்த பகுதியில் வசித்த Demersal fish மீன்களையே பிடித்து வந்தனர். கார்த்திகை -தொடக்கம் மாசி மாத பருவகாலத்தில் மட்டும் கரையோரத்துக்கு வரும் pelagic fish species அல்லது கடல் மேற்பகுதி சார்ந்த மீன்வகைகளை பிடித்தனர். 70-களின் நவீனமயப்பட மீன்பிடி முறைகளினால், பெரும்பான்மையாக pelagic fish species அல்லது கடல் மேற்பகுதி சார்ந்த மீன்வகைகளை பிடிக்கும் தொகை அதிகரித்தது. 1980 ஆம் ஆண்டில் இலங்கையிலேயே அதிகளவிலான தொன் நிறைகொண்ட, இவ்வகை மீன்களை வடபகுதி மீனவர்கள் பிடித்தார்கள். காலநிலை மாற்றம், பவளபாறைகளில் அழிவு, கடல் நீர்மட்ட உயர்வு, தவறான மீன்பிடி முறைகள் போன்றவற்றினால் இன்று Demersal fish -கடலடித்தள மீனின மீன்பிடி அருகிவிட்டது. அருகிவிட்டதென்பதை விட பெருமளவில் Demersal fish மீன்வகைகள் எமது கரைகளில் அழிந்தே விட்டன. இந்நிலையில், கடலிடப்பட்டுள்ள பேரூந்துகள் இந்த அருகிப்போன Demersal fish மீன்களையே அபிவிருத்தி செய்யும் என நம்புகின்றனர், பஸ்களை கடலிலிட்ட கடலியல் விஞ்ஞானிகள்.
நிறைவாக
எனக்கு தெரிந்த ஆய்வுகள் மற்றும் அனுபவத்தில், பெரிய மாற்றமொன்றையும் Demersal fish மீனின வளர்ச்சிக்கு பேரூந்துகள் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதில்லை. நியூயோக் ரெயில் பெட்டிகள் போலவே பாசிகளில் வசிக்ககூடிய சில மீன்வகைகள் பேரூந்துகளை அண்டி உருவாகலாம். அவை பெரிய அளவில் மீனவர்களில் வாழ்வாதாரத்தையோ அல்லது கடலடிதள நிலச் சூழலையே வளப்படுத்தி விடப்போவதில்லை. எனது இந்த Conclusion/முடிவுக்கு மாறாக பேருந்துகளை பற்றிக்கொண்டு முருகைகள்/பவளப்பாறைகள் உருவாகுமானால் இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது போலவே பாரிய நன்மை இயற்கைக்கும் மீனவ மக்களுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை
ஆனால், இன்றுள்ள பூவுலக கடலியல் நிலை மற்றும் இலங்கையில் கடல் மாசடையும் வேகம் எனது முடிவு நிறைவேறுமென்றே அஞ்சுகிறேன். இலங்கை அரசும் அதன் அமைச்சுகளும் (மீன்பிடி அமைச்சு மட்டுமல்ல), தேசத்தின் கரையோரங்களில் நவீனமுறையில் பவள பாறைகள் உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இன்று துருக்கி, அவுஸ்திரேலிய போன்ற நாடுகள் பவளபாறைகளை மீளுருவாக்கம் செய்யும், பெரிய செலவுகளற்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் நல்ல பலனை கண்டு வருகின்றன. கடலில் பஸ்களை போடுவதற்கு பதிலாக, மக்களும் அரசும் இணைந்து கரையோர மாசடைதலை கட்டுப்படுத்தலுக்கு கொண்டுவர முயற்சிப்பதன் மூலம், சிலவேளைகளில் இயற்கையாகவே மறுபடியும் பவளபாறைகள் உருவாக்கமும், மீன்வள அதிகரிப்பும் நிகழ வழிவகுக்கலாம்.
இக் கட்டுரையின் முதலாவது பகுதிக்கான இணைப்பு:
https://raseriart.wordpress.com/2021/06/13/மேலைக்கடலில்-பிளாஸ்டிக்/
பறிக்கூடு போட்டு மீன்பிடித்தல் போய், இப்போ பஸ் போட்டு மீன்பிடித்தல் சாத்தியமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode