Language Selection

மணலை மைந்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று 31 மே 2021. யாழ்ப்பாண நூல்நிலையம் எரிக்கப்பட்டு 40 வருடங்கள். இது எரிக்கப்பட்ட காலம் தொடக்கமே, தமிழ் மக்களின் அறிவுக் கருவூலம் அழிக்கப்பட்டதாக பேச்சு நிலவுகிறது. அது மட்டுமல்ல, அக் காலத்தில் ஆசியாவின் மாபெரும் நூலகம் அதுவெனவும் - தமிழ் மக்களின் வரலாற்றைத் தாங்கியிருந்த தூண் எனவும் கருத்து நிலவுகிறது.

பவுத்த-சிங்கள அரசினால் வாசிகசாலையை -நூல்நிலையத்தை கொளுத்தியது மறுக்கமுடியாத கொடுமை. அதைக் கொளுத்தியவர்கள் தமிழரைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் கொளுத்தினார்கள் என்பதிலும் எனக்கு எந்த மாறுபட்ட எண்ணமுமில்லை.
அதேவேளை, அந்த நூல்நிலையம் எரிய முதல்,

1. எத்தனை பறையர், கொட்டடி நளவர், பள்ளர், குருநகர் மற்றும் பாசையூர் கரையார்(சில மெய்ன் ஸ்ட்ரீட் கரையார் தவிர), நாவாந்துறை திமிலர்-முக்கியர்-முஸ்லீம்கள் பயன்படுத்தினார்கள்??????

2.மேற்கூறிய சமூகங்கள் நூலகத்தைப் பாவிக்க எந்த வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டது?

3. அங்கு பணியில் இருந்தோர், தலைமை வகித்தோரெல்லாம் யார்???

எனக்குத் தெரிய, இப்போ இந்த எரிப்பு பற்றி பொங்கும் வேளாள சமூகமே நலன் அடைந்தது ....... அந்த நூல்நிலையம் எல்லா தமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருந்தது என்பது பொய்!

"ஸ்ரீ", வாகனங்களின் இலக்கத் தகட்டில் பதிய வேண்டுமென்ற சட்டம், எல்லாத் தமிழரையும் பாதிக்கும் என எடுக்கப்பட்ட போராட்டம் எவ்வளவு பொய்யோ, அவ்வளவு பொய் யாழ். நூல்நிலையம் எல்லாத் தமிழரின் சொத்தெனக் கூறுவதும். அரசாங்க பஸ்சில் ஏறி கீழ்ச்சாதிகள் தமக்கு அருகில் அமர்ந்து விட கூடாதென்ற நல்ல சிந்தனையில், ஒடுக்கப்பட்ட மக்கள் பஸ்- சில் ஏறுவதை தடுத்தவர்களே «ஸ்ரீ» எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
உயர்கல்வி தரப்படுத்தலினால் அனைத்து தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பது எவ்வவவு பொய்யோ, அவ்வளவு பொய்யே யாழ்.நூல்நிலையம், எரிக்கப்பட்ட காலத்தில் அனைத்துத் தமிழரின் அறிவுக் கருவூலம் என்பதுவும், அடையாளம் என்பதுவும்.

நூல்நிலைய எரிப்புக்கு பின்னால் யாழ். சைவ வெள்ளாள சிந்தனை சார்ந்து கட்டமைக்கப்பட தமிழ் தேசியம், மேற்படி தரப்படுத்தலையும், நூலக எரிப்பையும் தமிழர்கள் அனைவருக்கும் எதிரான சிங்கள- பவுத்த அரசின் செயற்பாடென பிரச்சாரம் செய்தார்கள். இதன் பின்னால், புத்தகமே அறியாத, வெள்ளாளியத்தால் கல்வி மறுக்கப்பட்ட மேற்படி ஒதுக்கப்பட்ட சாதிகள் இயக்கங்களில் இணைந்து உயிரை மாய்த்தார்கள். இன்றும் அந்த வெள்ளாளிய தேசியத்தை தலையில் காவுகிறார்கள்.

வெள்ளாளிய தமிழ் தேசியத்தைக் காவிச் சுமந்து அழிந்து போன பிரபாகரனைக் கூட "அவன் கரையான் என்றதனால் தான் தோற்றான். நாங்கள் தலைமை தாங்கியிருந்தால் வென்றிருப்போம்" என்ற கூட்டம் தொடர்ந்தும் "யாழ். நூல்நிலையம், தமிழ் தேசிய அறிவுக் கருவூலம்" என்ற பொய்யை காவுகிறது.

கவனம் மக்களே! இவர்கள் இனி யாரை பலிகொடுக்க -பலியெடுக்க இப் பொய்களை மறுபடியும் மறுபடியும் காவித் திரி;கின்றார்கள் என என்னால் கணிக்க முடியாது.

ஆனால். இவர்களால்- வேளாளிய தமிழ் தேசியம் - மற்றும் சிங்கள பவுத்த மேலாதிக்க சக்திகளுக்கு இடையிலான போட்டியில் - உற்பத்தியாகி இன்றும் எம் அனைவர் மேலும் திணிக்கப்படும் இனவாத ஒடுக்குமுறைக்கு நாமும் பலியாகி வருகிறோம் என்பது உண்மை.

இதற்கு எதிரான போராட்டம் தேவை என்பதும் உண்மை. ஆனால், எமக்கு வெள்ளாளியத்தின் பொய்யில் உருவாகி -கருவாகி இன்று வளர்ந்து நிற்கும் வேளாளிய தேசியத்தை மறுப்போம். எதிர்ப்போம்!

https://raseriart.wordpress.com/2021/05/31/யாழ்-நூலகம்-தமிழ்-மக்களி/