மக்களைப் பிளக்கின்ற மதவாதங்களால், பகுத்தறிவோடு அனைத்தையும் கேள்வி கேட்கும் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் மதவாத நச்சுகளைத் திணிக்கும் நிகழ்வுகள்தான், யூனியன் கல்லூரி மீதான அமெரிக்க மிசன் அரங்கேற்றிய வன்முறை. தென்னிந்திய திருச்சபையில் இருந்து பிரிந்த இந்த அமெரிக்க மிசன், இது போன்று மத ரீதியான வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

இது முழு கிறிஸ்துவ சமூகம் சார்ந்த வன்முறையல்ல. கத்தோலிக்க, புரட்டஸ்தான், தென்னிந்திய திருச்சபை மற்றும் வேறு சிறு கிறிஸ்துவ குழுக்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அமெரிக்க மிசனின் தொடர் வன்முறையானது, பல இடங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

கடந்தகால யுத்த வன்முறையால் ஜனநாயகத்தையும் - சிந்திக்கும் சுதந்திரத்தையும் இழந்து போன சமூகமானது, எதையும் முழுமையாக ஆராயாது தீர்ப்புக் கூறவும் - வன்முறையிலும் இறங்குவதையும் - அதை நியாயப்படுத்துவதையும் காணமுடிகின்றது. அப்படித்தான் பழகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

தனிப்பட்ட மனிதனின் "கடவுள்" நம்பிக்கையை மதவெறியாக்கி, அதை மதரீதியான சமூக வன்முறையில் ஈடுபடுத்திய ஒரு நிகழ்வு தான், யூனியன் கல்லூரியில் அரங்கேறியுள்ளது. இலங்கையில் எல்லா மதங்களிடையேயும் மதவெறியானது புகுத்தப்படுவதும், தாம் அல்லாத மதங்களைப் பின்பற்றுபவர்களை இழிவாக பார்ப்பதும் - வன்முறை மனப்பாங்குகளில் சிந்திக்கும் குறுகிய முறைமைகள், எம்மை சுற்றி கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியில் ஒடுக்கும் தரப்புகளும் - அன்னிய சக்திகளும் திட்டமிட்டு இயங்குகின்றனர்.

யூனியன் கல்லூரியில் அரங்கேரிய மதரீதியான வன்முறையும் - வன்முறை நிகழ்ந்த போது, அதற்கு எதிராக பாடசாலையானது, பெரும்பான்மையான இந்து மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட இந்து மதவெறியுடன் அணுகவில்லை. அந்த வகையில் பாடசாலை பொறுப்புணர்வோடு – எடுத்துக்காட்டாக – மாணவர்களுக்கு முன்மாதிரியாக நடந்திருக்கின்றது. இப்படி இருக்க இதை இந்து மதவெறியுடன் அடையாளப்படுத்துவது, பாடசாலை பழைய மாணவர்கள் சிலர் இந்து – கிறிஸ்துவ மதவெறியுடன் அணுகுவதும் - விளக்குவதும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. குறிப்பாக கிறிஸ்துவ மதவெறி பின்னணியில் இருந்து, அதிபரை நோக்கி குற்றம்சாட்டுவது நடந்தேறுகின்றது.

சிவில் சட்ட அமைப்புக்குட்பட்ட நிலம் தொடர்பான பிரச்சனையில், வன்முறையையும் அதை தூண்டிய மதவெறி பாதிரியார்களை குற்றம்சாட்டுவதற்கு பதில், அதிபரை குற்றம் சாட்டுவதும் – கல்லூரியின் "பெறுபேறுகளை" காட்டி எள்ளி நகையாடுவதும் - நடந்தேறுகின்றது. நீங்கள் வைக்கும் "பெறுபேறு" என்ன என்பதை, அதன் வண்டவாளங்களையும் கீழே விரிவாக ஆராய்வோம்.

இரண்டாவது இந்த முரண்பாட்டில் அதிபரை முரண்பட்ட கிறிஸ்துவ குழு ஒன்று பின்னணியில் இருந்து இயக்குவதாகக் கூறுவதன் மூலம் அதிபரை இலக்குவைப்பது நடந்தேறுகின்றது. வன்முறையை நடத்திய மதக்கும்பல், வடக்கில் பல்வேறு தொடர் மத வன்முறைகளில் ஈடுபட்டதையும் - ஈடுபட்டு வருவதையும், எதிர்காலத்தில் தமிழ்மக்களை மதரீதியாக பிரித்து விடுமளவுக்கு, சட்டத்தை மதிக்காத அதன் மத வன்முறைப் போக்கு - எதிர் வன்முறைக்கு காரணமாகிவிடும்;. அதையே தான் அவர்கள் செய்ய விரும்புகின்றார்கள்.

இந்த உண்மைகள் இப்படி இருக்க, திட்டமிட்டு அதிபர் உருவாக்கியதே அன்றைய நிகழ்வு என்று கதைகள் புனையப்படுகின்றது. பாடசாலையில் எப்படி 7.30 மணிக்கு மாணவர்கள் வந்தார்கள், பெற்றோர்கள் வந்தார்கள் என்பது, குதர்க்கவாத தர்க்கம். பாடசாலை அங்கு தொடங்குவது 6.45 என்பதும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கூட்டி வருவதும் அங்கு சர்வ சாதாரணம். இப்படி இருக்க அதிபரை குற்றஞ் சாட்டும் மதவாதிகளின் கற்பனைகளையே கேட்க முடிகின்றது.

 

பாடசாலைக்குரிய – சமூகத்துக்குரிய சொத்தை மதப்பிரிவு ஆக்கிரமிப்பதை அங்கீகரிக்கக் கூடிய இந்த வாதங்கள், பக்கசார்பானது. சட்டரீதியாக காணியின் உரிமை பற்றி பேச மறுப்பதையும், அதை திசைதிருப்புவதையும், காணியை மதவாதிகளுக்கு மறைமுகமாக தாரைவார்க்க கோருதையும் காணமுடிகின்றது.

காணி எதற்கு என்று "கல்வி அக்கறை" வாதத்தை முன்வைப்பது, அதிபரிடம் படிப்பை "கவனி" என்று குதர்க்க வாதங்களை முன்வைப்பது, அடிப்படையில் மதவாதத்துக்கும் - அதன் வன்முறைக்கும் அங்கீகரிக்கக் கோருவது தான். பாடசாலையின் பெயர் "கெட்டுப் போவதாக" முதலைக் கண்ணீர் வடிக்கும் "ஒழுக்க" வாதம், மதவாதத்தையும் - அதன் வன்முறைiயும் தொழுவது தான்.

காணி சட்டரீதியாக பாடசாலைக்குரியது என்றால், அதை யாருக்கும் தாரைவார்ப்பதையும் - வேறு யாரும் பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது. மத வன்முறையில் ஈடுபடும் ஒரு குழுவிடம் - கிறிஸ்துவ வழிபாட்டுக்கு பள்ளிக்கூட மாணவர்களை வழிபாட்டுக்காக அனுப்புவதை தவிர்த்து, யூனியன் சமூகம் மாற்றுத் தீர்வை காணவேண்டிய புதிய சூழல் உருவாகி இருக்கின்றது. மதவெறியை கொண்டவர்களிடமும் - மத வன்முறையில் ஈடுபடுபவர்களிடமும், பிஞ்சுக் குழந்தைகள் மத போதனைiயையும் - மத வழிபாட்டையும் பெறுவதை அனுமதிக்க முடியாது.

அரச காணி என்ற வகையில், அதிபர் கல்லூரிச் சொத்து தொடர்பாக சட்ட ரீதியான அவரின் கடமையையே செய்தார். இதைச் செய்யத் தவறின் அதை, அதிபருக்கு எதிராக குற்றம் சாட்ட முடியும். அதிபரின் பாத்திரம் சரியானது. அவர் சட்டரீதியாக பொலிஸ், கல்வி திணைக்களத்திற்கு இதை கொண்டு சென்றதுடன், சட்ட ரீதியான கல்லூரியின் உடமை என்ற அறிவித்தலின் கீழ் தான், அவரின் செயற்பாடுகள் அமைந்து இருந்தது. இப்படி இருக்க, அதிபரை கேள்விக்கு உட்படுத்த முடியாது. அதிபர் முன் இதுதான் சாத்தியமான சட்ட ரீதியான, ஜனநாயக ரீதியான அணுகுமுறையாகும்.

காணியின் உரிமை தமக்கானது என்று குறித்த மதப் பிரிவு (2007 இல் உருவான இந்த திடீர் மதக் குழு) கருதும் பட்சத்தில், அதை சட்ட ரீதியான விதிமுறைகளில் உரிமை கோர முடியுமே தவிர, அடாத்தாகவும், வன்முறை வடிவிலும் அல்ல. இந்த வகையில் பாடசாலையின் சட்டரீதியான அதன் அணுகுமுறையைப் போற்றவும் - அதன் அணுகுமுறை முன்மாதிரியான எடுத்துக்காட்டாக இருப்பதற்காக, பாடசாலைச் சமூகம் பெருமைப்பட வேண்டும்.

நடந்தது குறித்த திரிபுகளும் - சட்டத்தை மதிக்காத மதவெறித்தனங்களும்

பல திரிபுகள், கட்டுக்கதைகள், விதவிதமான கற்பனைகளில் புனையப்பட்டு இருக்கின்றது. சம்பவம் அன்று நடந்தல்ல அதற்கு முன்பே, சட்டவிரோதமான, அடாவடித்தனமான பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றது. பாடசாலையை நிர்வகிக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிபருக்குரிய கடமை அடிப்படையில், அதிபரால் சட்டரீதியாகவே அனைத்தும் அணுகப்பட்டு இருக்கின்றது. என்ன நடந்தது என்பதை முழுமையாகப் பார்ப்போம்.

20.07.2020 அன்று அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்கள் குறித்த நிலத்தில் இருந்த கட்டிடத்தை இடித்து கல் மண்ணை அகற்ற முனைந்த போது, பாடசாலையால் கேள்விக்குட்படுத்தப்பட்ட – சம்மந்தப்பட்டவர்களை சந்திக்குமாறு அதிபர் கோரிய போது – அவர்கள் சமூகம் அளிக்கவில்லை. இதை அடுத்து அதிபரால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. 24.07.2020 அதிபரால் கல்வி பணிப்பாளருக்கும் - கல்வி அமைச்சு செயலாளருக்கும் சம்பவம் அறிவிக்கப்பட்டது. 14.09.2020 இல் காணிக்குரிய ஆவணங்களும் கல்வி அமைச்சு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

15.09.2020 அன்று அமெரிக்கன் மிசனைச் சேர்தவர்கள் கட்டிட கூரை - ஓடுகளை கழற்ற முயன்ற போது, அதை சம்மந்தப்பட்ட அனைவருக்கும் அதிபரால் அறிவிக்கப்பட்டதுடன், கல்விப் பணிப்பாளர் பாடசாலைக்கு வருகை தந்ததோடு பொலிஸ்சில் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்தோடு இரு தரப்பினரையும் எவ் வேலைகளிலும் ஈடுபடவேண்டாம் என்ற பணிப்புரையை வழங்கினார். இதை 16.09.2020 கல்விப் பணிப்பாளர் கடிதம் மூலம் இரு தரப்பிடம் கோரியும் இருந்தார்.

05.10.2020 கல்வி பணிப்பாளரின் உத்தரவை மீறி அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்கள் பெயர்ப் பலகை ஒன்றை சட்டவிரோதமாக நாட்டினர்;. இந்த நிகழ்வு அதிபரால் 06.10.2020 அன்று கல்வி பணிப்பாளருக்கும் - கல்விச் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டது.

07.12.2020 அன்று கல்விச் செயலாளர் முன்னிலையில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் அதிபருக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டை அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்கள் முன்வைத்தனர். அதில்; "புனித" தேவாலயத்துக்கு அருகில், குறித்த அதிபரால் மலசலகூடம் கட்டப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார். ஆனால் அந்த மலசலகூடம் பத்து வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. மத அவதூறுகளை முன்வைத்து "புனிதம்" என்றவர்கள், தேவாலயத்தின் மலசலகூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளதை, அதை அவர்கள் கட்டி தங்கள் "புனிதமல்லாத" செயலைக் கூறவில்லை. மலசலகூடம் வழிபாட்டு தலத்தில் "புனிதமல்லாத" தாக இருக்க, பாடசாலைக்கு எதிரான போலிப் "புனித" வாதம் முன்வைக்கப்பட்டது.

06.01.2021 அன்று தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மாவட்ட நில அத்தியட்சகரின் அறிக்கையை மேற்கோள் காட்டி, நிலம் பாடசாலைக்குச் சொந்தம் என்று கல்வி அமைச்சரின் செயலாளருக்கும் - சம்மந்தப்பட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பினார்;.

09.03.2021 அன்று கல்வி அமைச்சரின் செயலாளரினால் இரண்டாம் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் பாடசாலைக்குரிய அக்காணியை பயன்படுத்துமாறு அதிபரிடம் கோரியதுடன் - அமெரிக்கன் மிசனைச் சேரந்;தவர்கள் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்வில்லை என்றும் கூட்டத்தில் பங்குபற்றவில்லை என்ற அறிவித்தலைக் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் செயலாளரின் உத்தரவுக்கமைய காணியைப் பண்படுத்த - 11.03.2021 சிரமதானத்தை பாடசாலை தொடங்க முன், 09.03.2021 கூட்ட முடிவை அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்களுக்கு அதிபர் அறிவித்த பின்தான் சிரமதானம் செய்யப்பட்டது அதேநேரம் இக் காணியில் தேசிய தொல்பொருள் திணைக்களத்துக்கு அந்த நிலம் உரிமை உடையது என்று நட்டப்பட்ட பெயர்ப்பலகை இரகசியமாக நடப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்ட சதி மூலம் அதனை அரங்கேற்றி இருந்தனர். நாட்டில் தொல்பொருள் திணைக்களம் மூலம் மதவாதிகள் நடத்தும் இது போன்ற செயற்பாடுகள் போலவே, யூனியன் கல்லூரிக்கும் அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்கள் அரங்கேற்றி இருந்தனர். இதை அடுத்து அதிபர் சட்டரீதியான பாடசாலை ஆவணங்களை தேசிய தொல்பொருள் திணைக்களத்திற்கு கொடுத்து, பெயர்ப்பலகை அகற்றப்பட்டது.

15.03.2021 பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது மாணவர்களின் சைக்கிள் அங்கு நிறுத்தப்பட்டது. இதற்கு எதிராக பொலிசில் முறைப்பாட்டைச் செய்த அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்கள், வாசலை பூட்டுக் கொண்டு பூட்டினர். பொலிசில் முறைப்பாட்டை செய்து வாய் மூலம் தடையொன்றைப் பெற்றனர். 26.03.2021 அன்று கல்வி அமைச்சரின் செயலாளரின் 09.03.2021 கூட்ட அறிக்கையை பொலிசில் சமர்ப்பித்து, காணியை பயன்படுத்துவது குறித்த பொலிசின் அனுமதியை பாடசாலை பெற்றது. 08.04.2021 அன்று தொடர்ந்து மாணவர்கள் சைக்கிளை அங்கு நிறுத்தி வந்தனர். மறுநாள் 09.04.2021 அன்று குறித்த வாசலில் அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர் ஒருவர் வாசலில் கதிரையைப் போட்டபடி சைக்கிள்கள் விடுவதை தடுத்த வணணம் இருந்தார். மாணவர்கள் - மாணவர்களை கூட்டிவந்த பெற்றோர் அவரின் தடையையும் மீறி சைக்கிள்களை உள்ளே கொண்டு சென்று நிறுத்தினர்.

அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்கள் 09.04.2021 அன்று காலை வாசலை அடைத்து கூரைச்சீற்றுகள், கம்பிகள் மற்றும் தடிகள் போட்டு வாசலை முற்றாக தடை செய்திருந்தனர்;. மாணவர்கள் மற்றும் அவர்களை கூட்டி வந்த பெற்றோர், அமெரிக்கன் மிசனைச் சேர்ந்தவர்களிடம் அதனைக் கைவிடக் கோரிய போதும் - அவர்கள் இணங்க மறுத்த நிலையில் - பொலிசார் தலையிட்டுக் கோரிய போதும் அவர்கள் விட மறுத்தனர். அங்கு வந்த உதவிப் பொலிஸ் அதிகாரி இருதரப்பையும் பிரதேச செயலாளர் மத்தியில் சந்திக்க வருமாறு கோரினார். காணி தொடர்பான ஆவணங்களை அதிபர் எடுக்க சென்ற சூழலில், மாணவர்கள் - அவர்களை கூட்டி வந்த பெற்றோர் காணிக்குள் சைக்கிளை கொண்டு சென்றபோது, அவர்கள் மீது வன்முறையை நடத்தினர். அவர்களின் தடை மற்றும் வன்முறையை மீறி மாணவர்களின் சைக்கிள் உள்ளே அன்று நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தினைக் கேள்விப்பட்ட பழைய மாணவர்கள் பாடசாலையில் குவிந்தனர். பொலிசார் மீள வந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர.

இதன்பின் வன்முறையில் ஈடுபட்ட தரப்பு 13.04.2021 அன்று அங்கு இருந்த கட்டிடத்துக்குள் சட்டவிரோதமாக ஒரு குடும்பத்தை, கொண்டு வந்து குடியிருத்தினர். இதை அடுத்து உதவிப் பொலிஸ் அதிகாரி, வலயக்கல்வி அதிகாரிக்கு அதிபரால் அறிவிக்கப்பட்டது. அதேநேரம் பழைய மாணவர்கள் இரவோடு இரவாக திரண்டு - பொலிஸ் துணையுடன் அக் குடும்பத்தை வெளியேற்றினர்.

இன்று மீளவும் சட்டரீதியான தலையீட்டுக்குள் இவ் விவகாரம் மீளச் சென்றிருக்கின்றது. இங்கு சட்டவிரோதமான செயற்பாடுகள், வன்முறைகள் மூலம் அனைத்தையும் கையாள நினைக்கும் மதவாதம் மூலம், எதிர் மதவாதத்தை தூண்டிவிட முனைகின்றனர்.

பாடசாலை சரியான சட்ட நடைமுறையில் மதவாதத்துக்குள் இரையாகாது கையாள்வதையும், பழைய மாணவர்களின் தலையீடுகள் எதிர்காலத்தில் மதரீதியான வடிவம் பெறுவதை தூண்டிவிடும் வண்ணமும் - சம்பவங்கள் காணப்படுகின்றது.

குறிப்;பாக கிறிஸ்துவ பின்னணியுள்ள அதிபராக மாற்றினால், இந்த நிலத்தை ஆக்கிரமிக்க முடியும் என்ற கருத்துகள், வாதங்கள் - முயற்சிகள் முன்வைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது எதிர் மதவாதத்தை தூண்டிவிடும் செயலாகவும், சிந்தனையாகவும் இருக்கமுடியும்.

பாடசாலையின் வரலாறும் – வரலாறுப் பின்னணியும்

மத மாற்றத்தைச் செய்யவே அன்று மதம் பரப்புவோர் கல்வியைத் தேர்ந்தெடுத்த போது, யூனியன் கல்லூரியின் வரலாறு தொடங்குகின்றது.

வடக்கின்; முதல் பாடசாலை தான் யூனியன் கல்லூரி, 1940 இல் "யூனியன் கல்லூரி" என்ற காரணப் பெயரைப் பெற்ற போது, கல்லூரி 200 வருட பழமையான வரலாற்றைக் கொண்டது. இந்தப் பாடசாலை 1816 நவம்பர் 9 ஆம் திகதி "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடமாக" நிறுவப்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஐந்தாவது கல்லூரியாகும்.

வடக்கிலே உருவான முதலாவது பாடசாலையானது, ஆசியாவில் முதல் கலவன் பாடசாலையாகவும், இலங்கையில் முதலாவது மாணவர் விடுதியைக் கொண்ட பாடசாலையாகவும், வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது.

1918 இல் ஆறு மாணவர்களைக் கொண்ட இந்த விடுதிப் பாடசாலையில், ஐவர் பெண்கள். அதில் ஒருவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய முதல் பாடசாலையாகவும் வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது. அத்துடன் பெண்களுக்கு கல்வி வழங்கிய முதல் பாடசாலைகளில் ஒன்றாகவும், வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டது.

இந்த வகையில் ஒடுக்கும் சாதியச் சிந்தனையைக் கொண்ட ஆணாதிக்க சாதியச் சமூகத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல் மாணவியாக மிராண்டா செல்லத்துரைக்கு, யூனியன் கல்லூரி கல்வியை வழங்கியது. அது தொடர முடியவில்லை. சாதியச் சிந்தனையைக் கொண்ட சமூகம், ஒடுக்கப்பட்ட சாதிக்கு கல்வி வழங்குவதை எதிர்த்தது.

ஒரு நூற்றாண்டு கடந்து 1901 இல் கல்லூரியின் அதிபரான டிக்சன், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் பாடசாலையில் அனுமதி தந்தார். அதைத் தொடர்ந்து 1905 இல் சம ஆசனத்தையும் வழங்கினார். இதன் மூலம் சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பிற்கு இக் கல்லூரி சவால் விடுத்தது. இதை அடுத்து ஆசிரியர் சின்னப்பா வீடு எரிக்கப்பட்டது. சம ஆசனம் வழங்கியதை எதிர்த்து, ஒடுக்கும் சாதிய சிந்தனையிலான சமூகத்தைச் சேர்ந்த 65 மாணவர்கள் கல்லூரியை விட்டே வெளியேறினர். பெரும்பாலான மாணவர்கள் வெளியேறிய நிலையிலும், டிக்சன் இதற்கு அசைந்து கொடுக்க மறுத்து கல்வி நடவடிக்கையை தொடர்ந்தார். இதன்பின் 45 பேர் திரும்பி வந்து கல்வி கற்றனர். இப்படி ஒரு பெருமைமிக்க வரலாறு யூனியன் கல்லூரிக்கு உண்டு.

1962.10.26 அன்றைய வர்த்தகமானி (கசெட்) மூலம் பாடசாலை தேசியமயமாக்கப்பட்ட அறிவித்தல் மூலம், பாடசாலை பெயர் மற்றும் குறித்த காணி உள்ளடங்க பாடசாலைக்கு உரித்தானதாகியது. அரசிடம் உதவி பெற்று தென்னிந்திய திருச்சபை நடத்திய பாடசாலை, அரசுக்கு சொந்தமாக மாறியது.

1962 க்கு முந்திய பாடசாலையைச் சுற்றிய "முற்போக்கான" பக்கங்களின் பின்னால் செயற்பட்டது, மதமாற்றமே. மேற்கில் இல்லாத சாதியப் பாகுபாடுகள், அனைவரையும் பொதுவாகப் பார்க்கும் சமூக மனப்பாங்கு, கடவுளுக்கு முன்னால் அனைவரும் சமன் என்ற நிலைப்பாடு, இயல்பாக, இதற்கு முரணான சாதிய சமூக அமைப்பின் முரண்பாட்டை மதமாற்றத்திக்கு பயன்படுத்தியது. மத மாற்றம் என்பது ஒடுக்கும் சாதிகளின் சாதி அந்தஸ்து இழப்பாக மாறிய சூழலில், ஒடுக்கும் சாதிகளில் இருந்து மத மாற்றம் சாத்தியமற்றதாகியது. இதனால் ஒடுக்கப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதிகள் மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மதமாற்ற செயலுக்காக ஒடுக்கப்பட்டவர்களைக் கொண்டு வரலாற்று ரீதியாக ஏற்படுத்திய மாற்றம், சமூகத்தில் ஏற்படுத்தி பாதிப்பு "முற்போக்காக" காணப்படுகின்றது. மறுபக்கத்தில் மதம் மாற்றியவர்;களின் நோக்கம் அதுவல்ல, அதாவது முற்போக்கு அல்ல.

கல்வியும் தேசிய மயமாக்கமும்

1960 களில் அனைவருக்கும் இலவச தாய்மொழிக் கல்வியை முன்வைத்தே, அரச உதவி பெறும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டது. கல்வியானது கிறிஸ்துவ மத மற்றும் காலனிய ஆங்கில ஆதிக்கம் பெற்று, பல்கலைக்கழக அனுமதியில் கிறிஸ்துவ - ஆங்கில ஆதிக்கம் பெற்று இருந்த வரலாற்றுச் சூழலில், கல்வித் தேசியமயமாக்கமும் - மொழிக் கல்விக்கான வரலாறும் தொடங்கியது. அதற்கு முன் ஆங்கில வழிக் கல்வி, பெரும்பாலும் கிறஸ்துவ மேட்டுக்குடி கல்வியாகவே இருந்தது.

யூனியன் கல்லூரி தேசியமயமாக்கப்பட்டது. அன்று தென்னிந்திய திருச்சபை யூனியன் கல்லூரியைத் தாம் வைத்திருக்க விரும்பி இருந்தால், தனியார் கல்விமுறை மூலம் அரசில் தங்கி இருக்காது வைத்திருக்கும் சுதந்திரத்தை அரசு வழங்கி இருந்தது. வடக்கில் இருந்த கிறிஸ்துவ பின்னணியைக் கொண்ட பல பாடசாலைகள், கல்விக்கூடங்களை நடத்த முடியாது அரசிடம் ஒப்படைத்தன. கல்விக்கூடங்களை நடத்தியது மத மாற்றத்திற்காகவே ஒழிய, சமூக நலனில் இருந்தல்ல.

இப்படித் தான் யூனியன் கல்லூரி தேசியமயமாக்கப்பட்டது. அதேநேரம் அங்கு இருந்த கிறிஸ்துவ ஆலயம், வழிபாட்டு உரிமையை மக்களுக்கும் - மாணவர்களும் வழங்கியது. பாடசாலையில் கல்வி கற்ற கிறிஸ்துவ மாணவர்கள் அனைவரும் வழிபடும் இடமாக மாறியது. இங்கு கத்தோலிக்க, புரட்டஸ்தான், அமெரிக்க - தென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் -அனைவரும் வழிபடும் இடமாக இருந்தது. பொதுமையாகவும் இருந்தது. அதன் அருகில் இருக்கும் கல்லறையில் காணப்பட்டவர்கள் பாடசாலை அதிபராகவும் - பாதிரியாராகவும் இருந்த காரணத்தினால், இரு தரப்புக்குரிய ஒன்றாக - பொதுமையில் இருந்தது. இன்று மதவெறி வன்முறைக் கும்பலின் கீழ், கத்தோலிக்க, புராட்டஸ்தான், தென்னிந்திய திருச்சபை மாணவர்களைப் பொதுமைப்படுத்தி வழிபட அனுப்புவது, கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.

இன்று சரச்;சைக்குரிய நிலத்தில் வீடானது அதிபர் - பாதிரியாரும், இரண்டும் ஒருவராக இருந்;ததால் பொதுமையில் இருந்தது. 1940 களில் யூனியன் கல்லூரி உருவான காலத்தில் அதிபரான ஐ.பி.துரைரத்தினம் அங்கு தான் வசித்தார். அவர் பாதிரியார் அல்ல. அவர் அதிபர். மதம் பின்னே போய் பாடசாலையாக பரிணமித்து வந்த சூழலில், அதிபர் தங்குமிடமாக இன்று சர்ச்சைக்குரிய இடமாக மாறியது.

யூனியன் கல்லூரி மதம் பரப்பும் இடத்தில் இருந்து, கல்வி கற்பிக்கும் முழுமையான பாடசாலையாக உருமாறி இருந்தது. அது வணக்க இடமல்ல, கல்வி கற்கும் இடமாக மாறி இருந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியில் அதிபர் தங்குமிடம் பாடசாலைக்குரியதாக இருந்தது. பல்வேறு காலகட்டத்தில் அதிபர்கள் தங்காமல் இருந்த சூழலில், அது மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்குமிடமாகவும் இருந்து இருக்கின்றது.

1962 இல் தேசியமயமாக்கத்தினால் தங்குமிடத்தை பாடசாலைக்குரியதாகவே கொண்டிருக்கின்றது. இதற்கான சட்டரீதியான ஆவணங்கள் பாடசாலையிடம் உள்ளது. இதை பரம்பரை உரிமை, எங்களுக்கு கல்வி தந்தவர்கள் என்ற எந்த வாதங்கள் மூலமும் மதவாதிகளுக்கு கையளிக்க முடியாது. மதவாதமும், மதவாத வன்முறை கும்பலும், சட்டத்தை மதிக்காதவர்கள். சமூகத்திற்கு கேடானவர்கள். அன்று இருந்த அமெரிக்கன் மிசன் பின்னணியைக் கொண்டவர்கள் அல்ல இன்றைய அமெரிக்கன் மிசன்.

கல்வியின் "சித்தி தரத்தைக்" கொண்டு அதிபரைக் குற்றம் சாட்டும் குறுக்குவழியிலான மதவாதங்கள்

கல்வியில் "சிறந்த பேறை" யூனியன் கல்லூரி பெற்று இருந்தால், தர்க்க ரீதியான இந்த மதவாதங்களின் நிலையென்ன? இங்கு இந்த தர்க்கமே தவறானது. அதிபர் குறித்து மாறுபட்ட அபிப்பிராயங்கள் - முரண்பாடுகள் இருப்பதைக் கடந்து, யூனியனின் கல்வி வீழ்ச்சிக்கான பொது சமூக உள்ளடக்கத்தை பரிசீலிக்காது - முட்டையை போடு என்றால் எப்படி முட்டை போட முடியும்;.

உண்மை நிலை என்ன? இலங்கையில் வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களும் கல்வியில் பின்தங்கி (கடைசி நிலையில்) இருக்கின்றது. யுத்தம் ஒரு காரணம் என்று இதை தட்டிக் கழித்துவிட்டு செல்ல முடியாது. மாறாக கல்வி வீழ்ச்சிக்கு சமூகமும், புலம்பெயர் சமூகமுமே, பாடசாலைகளின் கண்ணோட்டமுமே முக்கியமான காரணமாக இருக்கின்றது. புலம்பெயர் சமூகம் பணத்தைக் கொடுத்து கல்வியை விலைக்கு வாங்கி, சிறந்த பெறுபேறுகளை பெற்று விடமுடியும் என்ற கண்ணோட்டம் - பல்வேறு கல்விச் சீரழிவுக்கு வித்திட்டு வருகின்றது.

வடக்கின் கல்வி நாட்டிலேயே பின்தங்கி இருக்கும் நிலையில், வடக்கில் சிறந்த பெறுபேறுகளை ஒரு சில பாடசாலைகள் பெறுகின்றது என்றால் - அதன் பின் இருப்பது நேர்மையற்ற குறுக்கு நடைமுறைகளே. அப் பாடசாலைகளின் நிர்வாகமோ, கல்விமுறையோ அல்ல. மாறாக சமச்சீரான கல்விமுறையை அழிக்கும் குறுக்குவழி செயற்பாடுகள் மூலமே, சில பாடசாலைகள் பெறுபேறுகளை பெறுகின்றன.

குறிப்பாக யாழ் இந்துக் கல்லூரி, வேம்படி .. என்ற யாழ் மாவட்டத்தில் ஒரு சில பாடசாலைகள், வடக்கில் கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவர்களை தம் பாடசாலைக்குள் அனுமதிக்கும் - கொண்டுவரும் சமச்சீரற்ற கொள்கை, பிற பாடசாலைகளை தரம் தாழ்த்தி வருகின்றது.

அந்தந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மாணவர்களுக்கு அருகில் உள்ள பாடசாலையில் படிக்க வேண்டும் என்ற பொதுக் கல்விக் கொள்கைக்கு மாறாக, "தேர்ச்சித் திறனுள்ள சிறந்த" மாணவர்களை உள்வாங்குகின்ற குறுக்கு வழிகள், பிற பாடசாலைகளின் பொது வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த மாகாணத்தினதும் கல்வி வீழ்ச்சிக்கு வித்திடுகின்றது. யூனியன் கல்லூரி போன்ற பல பாடசாலையில் கற்கும் மாணவர்கள், சமூக பொருளாதார ரீதியாக மிகவும் பினதங்கி - கீழ்நிலையுள்ள மாணவர்களும் - பொது தேர்ச்சியில் பின்தங்கியவர்களுமே கல்வி கற்கின்றனர். உதாரணமாக லண்டனில் "சிமாட்;" பாடசாலைகளை நோக்கி இலங்கைத் தமிழர்;கள் பறக்கின்ற அதே கண்ணோட்டம் தான் யாழ்ப்;பாணத்திலும் காணப்படுகின்றது.

இப்படிப்பட்ட சூழலில் முட்டையில் மயிரைப் பிடுக்க முடியாது. இதை மாற்றி அமைக்க சமூக ரீதியான செயலும், மனித அறமும் அவசியமாகும். அதிபர் - ஆசிரியர்கள் - பழைய மாணவர்கள் - சமூகம் என்று, சமூக ரீதியான உணர்வுபூர்வமான பங்களிப்பு அவசியமானது. பணத்தைக் கொண்டோ, பணத்தைக் காட்டியோ இதை வாங்க முடியாது, உருவாக்கவோ முடியாது. அது என்னவென்பதை சமூக ரீதியாக தேடாது, அதை நோக்கிய பயணம் இன்றி " பரீட்சையில் தேர்ச்சி" பற்றி – பணம் மூலம் சாத்தியம் என்று நம்பும், பொதுச் சூழலில் கல்வி சிதைந்து போய்க் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் குறைபாடு. பணம் மூலம் அனைத்தையும் மதிப்பிடும் கண்ணோட்டம்;.

ஒரு மனிதன் சமூக உணர்வு பெறும் போது தான், கல்வித் தரத்தை உயர்நிலையில் பெற முடியும். அறமற்று வாழ்தல், உழைப்பை நம்பி வாழாது குறுக்கு வழியில் வாழ்தல், எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்ற கண்ணோட்டம், எப்படியும் வாழலாம் என்ற மனப்பாங்கு… கொண்ட சமூகத்தில், குழந்தைகளுக்கு முன்மாதிரிகள் - எடுத்துக்காட்டுகள் இல்லை. சுரண்டி வாழ்வது, ஏய்த்;து ஏமாற்றி வாழ்வது, பிறரில் தங்கி வாழ்வது,… அறமற்ற வாழ்வு, குழந்தைகளின் படிப்பிற்கான அவசியத்தை உணர்த்துவதில்லை.

தன் மீதான சுய வெறுப்பு, பிறரை வெறுப்புடன் அணுகுவது, சமூகம் குறித்து அக்கறையற்ற தன்மை.. குழந்தைகளின் இயல்பை தீர்மானிக்கின்றது. குழந்தைகள் தன்னை தான் முதலில் புரிதல் அவசியம். இதன் பொருள் தன் சமூகம் குறித்து, தன் குடும்பம் குறித்து, தன்னை குறித்து அக்கறை கொள்ள வைத்தல் மூலம் தான், ஏன் கற்க வேண்டும் என்ற சமூக உணர்வை தானாகவே பெறுவார்கள். இவை பாடப் புத்தகத்திற்கு வெளியில், ஒழுங்கு மற்றும் ஒழுக்ககோட்பாட்டுக்கு வெளியில், சமூக அக்கறையில் இருக்கின்றது. இதை நோக்கி பயணிக்காத வரை, மாணவர்களின் கல்வியில் பெரிய மாற்றம் நடக்கப்போவதில்லை.