ஒடுக்கப்படும் இனங்களுக்கும், ஒடுக்கப்படும் சாதிகளுக்கும் சம்மந்தமில்லாத இன்றைய யாழ்ப்பாணத்து அரசியல் நிகழ்ச்சிநிரலானது, ஒடுக்கும் தரப்புக்காக ஒடுக்கப்பட்ட மக்களை பலியிடுகின்றது.

அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள - தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில், பிளவுவாதமும் பிரிவினைவாதமும் தொடர்ந்து விதைக்கப்படுகின்றது. சாதியவாதங்கள், பிரதேசவாதங்கள், இனவாதங்கள், மதவாதங்கள்.. அனைத்தும், மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கான ஆயுதங்களே.

மணிவண்ணன் நடத்திய நாடகம் "பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும்" கூட்டு இனவாத நாடகமே. யாழ் நகரமே சாக்கடையில் மூழ்கிக் கிடக்கின்றது. நவீன கழிவகற்றல் முறையே கிடையாது. சாதிச் சமூகத்துக்கே உரிய வடிவில், கழிவகற்றலைத் தொடர்பவர்கள், அவர்களைக் கொண்டு பொலிஸ்படை. ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் கழிவகற்றலில் ஈடுபடுவதில்லை. இப்படிப்பட்ட தங்கள் அரசியல் அதிகாரத்துக்கு, இனவாதம் தேவைப்படுகின்றது.

ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் முரணற்ற விடுதலையை முன்வைத்து ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து நின்று போராடுவதற்கு தயாரில்லை. பதிலாக குறுகிய அரசியல் சுயநலனுக்கு ஏற்ப தமிழ் குறுந்தேசியவாதத்தை உசுப்பேற்றி வாக்கு அறுவடை செய்யவே, மாநகரசபை பொலிஸ்சை உருவாக்கி மணிவண்ணன் கைதானார். "துரோகிகளை" அறிவிக்க, "தியாகி" வேசங்கள், வாக்கு அரசியலுக்குத் தேவைப்படுகின்றது. புலி போலவும் புலி இல்லாதது போலவும் காட்டி நடிக்கும் நாடகங்கள். இனவாத அரசு தன்னைக் கைது செய்யும் என்று தெரிந்து - மக்களை ஏமாற்றும் போலி வேசங்கள்.

இனங்களுக்கு, மதங்களுக்கு சமவுரிமையற்ற இலங்கைச் சூழலில், இக் கைது இனவொடுக்குமுறையின் அடையாளமாக மாறி விட, போலித் "தியாகிகளையே" உருவாக்குகின்றது.

மணிவண்ணன் போன்ற போலிகளை உருவாக்க, அருண் சித்தார்த் போன்றவர்களின் அரசு ஆதரவு அரசியல் துணைபோகின்றது. இப்படி இனவாதங்கள் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக, ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றது.

உண்மையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலை என்பது ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலையுடன் கூடியதும் – ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்தும் சாத்தியமானது. இது அல்லாத அனைத்தும் பொய்யானவை மட்டுமின்றி, தோற்கடிக்கப்படும்.

ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை என்பது, ஒடுக்கப்படும் இனவிடுதலையையும் உள்ளடக்கியதே. அப்படி அல்லாத அனைத்தும் பொய்யானவை மட்டுமின்றி, தோற்கடிப்படும்.

மக்களின் விடுதலையையல்ல, தனிநபர்களின் அரசியல் இருப்புக்கான போலித்தனமான முரண்நிலைச் செயற்பாடுகள். இன்று எதிரும் புதிருமாக காய் நகர்த்தும் இத்தகைய அரசியல் என்பது, ஒட்டுமொத்த இலங்கை மக்களின் ஒடுக்குமுறைக்கு ஆதரவானதே.

இன்றைய இத்தகைய அரசியல் 1970 களில் காணப்பட்டது. 1970 களில் குறுந் தமிழ் தேசியம் எப்படி தன்னை முன்னிறுத்திக் கொண்டு செயற்பட்டதோ – அதே போல் சுதந்திரக் கட்சியும், அதனுடன் இணைந்த தேர்தல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கட்சியும் போட்டியாக எதிர் அரசியலை வடகிழக்கில் செய்தது. இன்று இருப்பதைவிட, சரிக்குச் சமமாக மக்கள் ஆதரவு இருந்தது. குறுந் தமிழ் தேசியத்துக்கு எதிரான கைதுகள், சித்திரவதைகள், சிறைத்தண்டனைகள் என்பன போலித் "தியாகிகளை" உருவாக்கியதே ஒழிய, அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம் மறுபக்கத்தில் இருந்த இனவொடுக்குமுறை தான்.

சாதிரீதியாக குறுந் தமிழ் தேசியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களையே சுதந்திரக் கட்சியும், அதனுடன் இணைந்த தேர்தல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக்கட்சியும் பயன்படுத்தியது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலை என்பது, பேரினவாதத்தைக் கைவிட்டு, சாதிரீதியாக ஒடுக்கும் தமிழினவாதத்தை தோற்கடிப்பது தான். இதை அன்று அவர்களும் செய்யவில்லை, இன்றும் அருண் சித்தார்த்தும் செய்யவில்லை. மாறாக சாதி ரீதியாக ஒடுக்கும் தமிழினவாதம் பலப்படுத்தப்படுகின்றது.

1960 களில் தேர்தல்வாதத்தை நிராகரித்த கட்சி முன்னின்று நடத்திய சாதியப் போராட்டம், குறுந் தமிழ் தேசியத்தை ஆட்டம் காணவைத்தது. அரசு ஒடுக்கப்பட்ட சாதிகளை தனக்குப் பயன்படுத்திய சூழலில், குறுந் தமிழ் தேசியம் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நபர்களை "தியாகிகளாக" முன்னிறுத்தி - அவர்களை பலியிடத் தொடங்கியது.

1970 களில் உருவான குறுந் தமிழ் தேசியவாத இளைஞர் அமைப்புகளின் முக்கிய தலைவர்களாக ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களைக் கொண்டு, குறுந் தமிழ் தேசியம் தன்னை தகவமைத்துக் கொண்டது. இதையே இன்று மாநகர சபை பொலிஸ் படையிலும் காண முடியும்.

மணிவண்ணன் உருவாக்கிய மாநகர பொலிஸ், ஒடுக்கப்பட்ட சாதிய பின்னணியில் இருந்து தான் முன்னிறுத்தப்பட்டு இருக்கின்றனர். மறுபக்கம் அருண் சித்தார்த் ஒடுக்கப்பட்ட சாதியை முன்னிறுத்துவதைக் காண முடிகின்றது. இவை ஒடுக்கப்பட்ட மக்களின் சாதிய விடுதலைக்கானதா எனின், இல்லை.

குறிப்பாக வடக்கில் குறுந் தமிழ் தேசியவாதம் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காக எதையும் செய்ததில்லை, அதைத் தடுக்கும் வண்ணமே சிந்தனை, செயல் அனைத்தும் காணப்படுகின்றது.

1960 களில் நடந்த சாதிய போராட்டங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், அதை தொடர்ந்து குறுந் தமிழ் தேசியவாதத்துக்கு எதிராக செயற்பட்ட அரசு சார்பு அரசியலானது, தேர்தல் அரசியலில் தன்னை முன் நிலைநிறுத்திக் கொள்ள - சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.

ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூக பொருளாதார முன்னேற்றம், குறுந் தமிழ் தேசியவாதத்திற்கு எதிரான அரசு சார்பு தளத்திலேயே பொதுவாக சாத்தியமாகி இருக்கின்றது. இதுதான் கடந்த வரலாறு. புலம்பெயர் உதவிகள் கூட சமூக பொருளாதார அடிநிலையிலுள்ள யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு சென்றடையவில்லை. மாறாக அதற்கு எதிரான சாதி மனநிலைதான், சிந்தனையிலும் செயலிலும் காணப்படுகின்றது.

சாதியம் சார்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதாரத்தை முன்னிறுத்தி குறுந் தமிழ் தேசியவாதத்துக்கு எதிரான அரசு சார்பு அரசியல், தனிப்பட்ட மனிதர்களின் முன்னேற்றத்தை தருமே ஒழிய, ஒடுக்கப்பட்ட சாதிகள் தொடர்ந்து குறுந் தமிழ் தேசியத்தின் அடிமையாகவே இருக்க துணை போகின்றது. அதே நேரம் யாருமே தங்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறமுடியாத, தொடர் ஒடுக்குமுறைக்குள் தள்ளப்படுகின்றனர்.

சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உழைப்பது போராடுவது மற்றொரு ஒடுக்குமுறை சக்திகளுக்கு உதவுவதாக இருக்கக் கூடாது. குறுந் தமிழ் தேசியவாத அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் போது, ஒடுக்கும் பேரினவாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குவது, இருதரப்பு இனவாத அரசியலுக்குமான அடிப்படையாக இருக்கின்றது. மணிவண்ணனின் நாடகமும் - அரசின் கைதும், மக்களை பிளக்க ஒருங்கிணைந்த இனவாத ஒத்திகை தான்.