எந்தவொரு தனிப்பட்ட ஆண், பெண் உறவு குறித்தும், ஒழுக்கம் குறித்துமானதல்ல, "பெண்ணியத்தின்" பெயரிலான ஆணாதிக்க விவகாரம். அது "பெண்ணியத்தின்" பெயரிலான முதலாளித்துவ கோட்பாடு சார்ந்தது.

யாரும் தனிப்பட்ட ஒருவரின் பாலியல் "நடத்தையை" கேள்வி கேட்ட முடியாது. "ஒழுக்கம்" குறித்து பேசவும் முடியாது. இவை அனைத்தும் இந்தச் சமூகத்தில் இருப்பவையே. அதாவது ஆணாதிக்க குடும்ப அமைப்பில் தனிப்பட்ட ஆணின், பெண்ணின் "நடத்தையை" எப்படி கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் முடியாதோ, அதே போல் தான் எல்லா வகையான மனித உறவுகளுக்கும் இது பொருந்தும்;. இங்கு கேள்வி கேட்பது தொடங்கி அதை பாதுகாப்பது வரை, இத்தகைய முதலாளித்துவ ஆணாதிக்க உறவுக் கோட்பாடுகளின் மீதேயொழிய, தனிப்பட்ட நபர்களின் நடத்தை மீதல்ல.

தனிப்பட்ட நபர்களின் சட்டரீதியான விவகாரங்கள் மற்றும் பிறரை தொடர்ந்து ஏமாற்றுகின்ற பின்புலத்தில் மட்டுமே - அதாவது பிறரை பாதுகாக்க தனிப்பட்ட நபர்களை சமூகத்தின் முன் காண்பிப்பதை கடந்து, தனிநபர்களை முன்னிறுத்தி இதை அணுகுவது என்பது கேடானது, தவறானது.

வலதுசாரியமும், ஆணாதிக்கமும் தனிப்பட்ட நபர்களின் நடத்தை மீதானதாக குறுக்கித் தாக்குவதன் (அப்படி நடக்கின்றது) மூலம், பெண்ணியக் கண்ணோட்டங்களை அது இலக்கு வைக்கின்றது. "பெண்ணியமே" இப்படிப்பட்டது என்று கூறுவதன் மூலம், பெண்ணின் சுதந்திரத்தையே இலக்கு வைக்கின்றது. இதை "பெண்ணியத்தின்" பெயரில் உள்ள ஆணாதிக்க கண்ணோட்டத்தைக் கொண்டு, ஐயோ நாம் தாக்கப்படுகின்றோம் என்று கூறுவதன் மூலம் எதிர்கொள்ள முடியாது. மூடிமறைக்க முடியாது. மாறாக இத்தகைய ஆணாதிக்க முதலாளித்துவ நடத்தை "பெண்ணியத்தின்" பெயரிலான ஆணாதிக்கமாக இருக்கின்றது என்பதை சொல்லி, அது எப்படி எந்தக் கோட்பாட்டு வழியில் நடந்தது, நடக்கின்றது என்பதை சொல்லியாக வேண்டும். அதாவது எப்படி "பெண்ணியத்தின்" பெயரில் முன்வைக்கப்படுகின்றது என்பதை, விமர்சனம் சுயவிமர்சனம் செய்வதன் மூலம், பதில் சொல்லியாக வேண்டும்.

"பெண்ணியம்" என்பது ஆண் போன்று பெண்ணின் தனிமனித முதலாளித்துவ சுதந்திரம் என்ற ஆணாதிக்க தனிமனித முதலாளித்துவ "பெண்ணியக்" கோட்பாட்டுக்கு முரணானது. அதாவது ஆண் போல் பெண் சுதந்திரம் என்பது, ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்று. இது ஆணின் ஆணாதிக்கத்தை போல், ஆணாதிக்கத்துக்கு பெண் இணங்கி வாழ்வதல்ல. மாறாக பெண்ணியம் சமூகம் சார்ந்த சுதந்திரத்தின் கூறாக, தனிமனித சுதந்திரத்தை முன்னிறுத்துவது. அதாவது சமூகத்தைக் கடந்த தனிமனித சுதந்திரம் என்பது ஆணாதிக்கமே. இதை அடைவதல்ல பெண்ணியம்.

பெண்ணியம் என்பது சமூகத்தன்மை வாய்ந்தது. அதாவது ஆணாதிக்கம் சமூகத் தன்மையற்ற தனிமனித வக்கிரத்தைக் கொண்டது. தனிமனித வக்கிரங்கள் பெண்ணியமல்ல, ஆனால் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் ஆணாதிக்க வக்கிரம் "பெண்ணியமாகும்" போது ஆணாதிக்க பாலியல் வேட்டைக்கு இரையாவதும், அதை ஆதரிப்பதும் நிகழ்கின்றது. இது தான் "பெண்ணியத்தின்" பெயரில் நடந்தேறியது. முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஆணின் ஆணாதிக்கத்துக்கு இணங்குவது தான் "பெண்ணியம்" என்று, பெண்ணின் முதலாளித்துவ சுதந்திரத்தையே "ஆணாதிக்கம்" பயன்படுத்திக் கொள்கின்றது.

ஆணாதிக்கத்தை சமூகத்தில் இருப்பதாக காட்டும் முதலாளித்துவ "பெண்ணியம்", "பெண்ணியத்தின்" பெயரில் ஆணாதிக்கம் இருப்பதை காண்பதுமில்லை, காட்டுவதுமில்லை. அண்மையில் பு.ஜ.கட்சியை மைய்யப்படுத்தி நடந்த பாலியல் விவகாரம் என்பது "பெண்ணியத்தின்" பெயரில் நடந்தது. இந்த "பெண்ணியல்" பாலியல் கண்ணோட்டம் குறித்து, பெண்ணியம் பேசுகின்றவர்கள் பேசத் தயாராகவில்லை. அவர்கள் பாலியல் கண்ணோட்டம் இதற்கு முரணானதாக இல்லை என்பது தான், இதற்கான பொருள்.

இன்னுமொரு விதத்தில் பார்த்தால் இரண்டு பேர் இணங்கிய பாலியல் நடத்தையில், எப்படி தலையிடமுடியாதோ, அதையே கொண்டு "பெண்ணியத்தின்" பெயரில் அரங்கேறியதை மறைமுகமாக அங்கீகரிப்பது, நியாயப்டுத்துவது நடக்கின்றது. நடந்த சம்பவம் ஆணாதிக்கம் என்று கண்டிக்கும் போது, அது எப்படி ஆணாதிக்கம் என்று ஆணாதிக்க முதலாளித்துவ "பெண்ணியத்தால்" கூற முடிவதில்லை. கும்பலோடு கும்பலாக சேர்ந்து பல்லவி பாடுவதுடன் அவர்களின் "பெண்ணியம்" முடிந்து போகின்றது.

இப்படி நடந்து கொள்ளும் ஆணாதிக்க முதலாளித்துவ "பெண்ணியம்", "பெண்கள் மீதான பாலியல் சுரண்டலிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்." என்று கூறி தப்ப முனைகின்றனர்.

"பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்" என்று கூறுவதன் மூலம் பெண் மட்டும் பெண்ணியல்வாதிகள், என்ற, ஆணாதிக்கக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். பெண் என்பதால் "பெண்ணியவாதியாக" இருப்பதில்லை. ஆண் என்பதால் ஆணாதிக்கவாதியாக இருப்பதில்லை. பெண்ணியம் என்பது ஆணாதிக்க சமூக அமைப்பில், பால் வேறுபாடற்ற வாழ்வியல் சார்ந்த சமூகக் கோட்பாடும் நடைமுறையுமாகும். இது பெண்களையும் கடந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் சார்ந்து பெண்கள் போராடுவதற்காக அணிதிரள்வது என்பது, பால் கடந்த பெண்ணியத்தை (சமூகத்தை) உருவாக்கத்தான். ஆணாதிக்க முதலாளித்துவப் பெண்ணாக இருப்பதற்கல்ல.

இங்கு ஆணாதிக்கம் என்பது "பெண்ணியத்தின்" பெயரில் இயங்க முடியும் என்பதும், அது பெண்களின் பெயரிலும் இயங்க முடியும் என்பதை ஏற்றால், அது எப்படி எந்த வடிவில் எத்தகைய கோட்பாட்டில் நடைமுறையில் இயங்குகின்றது என்பதை முன்வைத்தால் மட்டும் தான், அது "பெண்ணியத்துக்கான" சரியான அரசியல் நடைமுறையும் கண்ணோட்டமுமாகும்.

அண்மைய ஆணாதிக்க சம்பவத்தில் "பெண்ணியக்" கோட்பாடுகள் இன்றி நடக்கவில்லை. இதை இன்று பேசும் தலைமுறைக்கு இவை முதல் சம்பவமுமல்ல. கடந்து வந்த காலத்தில் பல சம்பவங்கள், "பெண்ணியத்தின்" பெயரில் அரங்கேறியதும், அதை அனுசரித்தே பெண்ணியமே பேசப்பட்டது. பெரும்பாலும் இந்தப் "பெண்ணியம்" சுயஇருப்புக்கான அடையாளமாக முன்வைக்கப்பட்டது. "பெண்ணியத்தின்" பெயரில் இணங்கிய கட்டற்ற ஆணாதிக்க பாலியல் நடத்தை கேள்விக்கு அப்பாற்பட்டதாக, அது நியாயப்படுத்தப்பட்டது. இத்தகைய ஆணாதிக்க "பெண்ணியம்" மீதான பெண்ணிய விமர்சனம் தான் என்ன? "பெண்ணியல்வாதிகள்" (ஆண்-பெண்) என்று முன்னிறுத்;தும் யாரும் இதற்கு எதிரான "பெண்ணிய" கண்ணோட்டத்தை முன்வைக்கவில்லை. இதன் பொருள் ஆணாதிக்கம் இன்னமும் அரசியல்ரீதியாக "பெண்ணியத்தின்" பெயரில் தொடருகின்றது என்பது தான் பொருள்.

"பெண்களாகிய" நாம் "தாக்கப்படுகின்றோம்" என்று கூறுவது, வரலாற்றில் முதல் தடவையல்ல. இப்படிக் கூறுவதன் மூலம் "பெண்ணியத்தின்" பெயரில் இயங்கும் ஆணாதிக்கத்தை மூடிமறைக்க முடியாது.

இதேபோல் இனவாதிகளால் நாம் ஒடுக்கப்படுகிறோம் என்று மறுதலையில் இனவாதத்தை முன்வைப்பவர்கள் கூறுகின்றனர். பிரதேசவாதத்தால் நாம் ஒடுக்கப்படுகின்றோம் என்று பிரதேசவாதிகள் முன்வைக்கின்றனர். வர்க்க ரீதியாக சுரண்டப்படுவதாக வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட "கட்சிகள்" கூறுகின்றன. ஆணாதிக்கத்தால் பெண்கள் ஓடுக்கப்படுவதாக "பெண்ணியத்தின்" பெயரில் முதலாளித்துவ "பெண்ணியல்" வாதிகளால் கூறப்படுகின்றது. "முற்போக்கு" அரசியல் - இலக்கியத்தில் இதுதான் புளுத்துக் கிடக்கின்றது. ஒடுக்குமுறையைச் சொல்லி அதே ஒடுக்குமுறையை வேறு வடிவில் ஆதரிப்பது நடக்கின்றது..

வரலாறு ரீதியில் "நாம் தாக்கப்படுகின்றோம்" என்ற கோட்பாடு, nஐர்மனிய பாசிசத்தினால் 1930 களில் முன்வைக்கப்பட்டது. கோட்பாடு மற்றும் நடைமுறையில், தனித்தனியாகவும் - ஒன்றாகவும் முரணற்றவராக இருக்கும் வரை, "நாம் தாக்கப்படுகின்றோம்" என்பது அர்த்தமற்றதாகி விடுகின்றது. வெறும் கோசங்கள், அடையாளங்கள் மூலம் தங்களை முன்னிறுத்தும் போது, "நாம் தாக்கப்படுகின்றோம்" என்ற முழக்கம் மேல் எழுகின்றது. வெறும் கோசங்கள், அடையாளங்களும் அரசியல் ரீதியாக, ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து விலகி விடுகின்றது.

இன்று விவாதத்துக்கு வந்துள்ள பெண்கள் மீதான பாலியல் வன்முறை "பெண்ணியத்தின்" பெயரில் நடந்ததே ஒழிய, தனித்து – தனிப்பட்ட ஆண்களால் நடந்ததல்ல. முதலாளித்துவ "பெண்ணியக்" கோட்பாட்டு அடித்தளத்தில் பெண்களும் இணைந்து நடந்தேறியது. இது இன்று மட்டும் நடந்ததல்ல. பெண்ணியம் பேசி, பெண்ணிய விளக்கம் கொடுத்து அரங்கேறிய "பாலியல்" நுகர்வுகள், 1980 களிலும் காணமுடியும். அதற்கு முன் இல்லையென்பதல்ல. 1980 களிலும், புலம்பெயர் இலக்கியத்தின் பின்னணியிலும் காணமுடியும். இதனால் தமிழ் தேசியத்தின் பின்னால் நிகழவில்லை என்பதல்ல.

"பெண்ணியம்" பேசி நுகரும் ஆணாதிக்கத்தை, எம்மைத் தவிர வேறு யாரும் கடந்தகாலத்தில் பேசவில்லை. இன்றும் வேறு யாரும் அதைச் செய்யத் தயாராகவில்லை. "பெண்ணியத்தை" முன்வைப்பவர்களுக்கு, பெண்ணிய முதுகெலும்பு கிடையாது. அவர்கள் "பெண்ணியமாக" முன்வைப்பது இத்தகைய முதலாளித்துவ சுதந்திரத்திலான ஆணாதிக்கத்தையே.

புதிய ஜனநாயகக் கட்சி இன்று முன்வைத்த விடையம் பல காலமாக இருந்து (தனியாக அதை ஆராய்வோம்;) வந்ததும், இத்தகைய முதலாளித்துவ பாலியல் நடத்தையை "பெண்ணியமாக" கருதிய பெண்ணிய கண்ணோட்டங்களுக்கு, சமூக போராட்டங்களுக்கு வந்த பெண்களையே இரையாக்கினர். 40 வருட காலத்தில் பொது வாழ்வுக்கு வந்த பெண்கள் இந்த ஆணாதிக்கம் இரையாக்க முனைந்ததையும், இரையாக்கியதையும் "பெண்ணியம்" கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றதா? இல்லை. கேள்விக்குள்ளாக்கி இருந்தால் இன்று இந்த விவகாரம் நடந்திருக்காது. இத்தகைய முதலாளித்துவ சுதந்திர பாலியல் நடத்தையை "பெண்ணியமாக" ஆதரித்ததைத் தாண்டி, இந்த ஆணாதிக்க முதலாளித்துவப் போக்கை பெண்ணியல் கண்ணோட்டத்தில் விமர்சித்தது கிடையாது. "பெண்ணியமாக" இருப்பது முதலாளித்துவ பெண்ணியம்; தான்.