அண்மைக் காலங்களில் செய்திகளில் பரபரப்பாகும் ஒடுக்கும் இரு தரப்புகளின் முரண் அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்தை மீண்டும் படுகுழிக்குள் இட்டுச் செல்ல முனைகின்றது. குறிப்பாக அருண்; சித்தார்த்தன் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் ஒரு தரப்புக்கு சார்பாக முன்னிறுத்தி, மற்றொரு ஒடுக்கும் தரப்பை எதிர்கின்ற அரசியல், எந்த வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானதல்ல.

இதை அரசியல் ரீதியாக விமர்சிப்பது, போராடுவது அவசியமானது. குறிப்பாக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் விடுதலையை முன்னிறுத்தி, அனைத்து ஓடுக்கும் தரப்பை எதிரத்;தாக வேண்டும். இதற்கு மாறாக ஒடுக்கும் தமிழினவாதமானது ஜனநாயக மறுப்பிலும் - அடாவடித்தனத்திலும் இறங்கி இருக்கின்றது.

அனுமதி பெறாத இடத்தில் போராட்டம் என்று, அதிகாரத்தை தூக்கிக் கொண்டு களத்தில் இறங்குகின்றது. இதைத்தான் இலங்கை அரசு பல்வேறு போராட்டங்களின் போது செய்தது, செய்கின்றது.

 

தமிழினவாதிகளின் அனுமதி குறித்த பித்தலாட்டங்கள், ஜனநாயக மறுப்பு அரசியல் அடித்தளத்தைக் கொண்டது. அனுமதி பெற்றுத்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒடுக்கும் தமிழினவாதத்துக்கு சார்பான சிலை எழுப்பினர்;? இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி அண்மையில் இடிக்கப்பட்ட போது, இந்த "அனுமதி" பற்றி வாய் கிழிய பேசும் கூட்டம் எப்படி, எந்த முகத்துடன் நடந்து கொண்டது. அருண்; சித்தார்த்தனின் உண்ணாவிரதம் நடத்தும் இடம் அனுமதி கிடையாது என்று கூறி, அதையும் சட்டத்துக்கு புறம்பான முறையில் முன்வைத்து வன்முறையில் ஈடுபடுகின்றது.

«பொத்துவில் தொடங்கி பொலிகண்டி» வரையான போராட்டத்துக்கு நீதிமன்ற தடையை மீறி சட்டவிரோதமாக ஊர்வலம் போனவர்கள் தான், அருண்; சித்தார்த்தன் போராடக் கூடாது என்கின்றனர். இப்படி ஆயிரம் சம்பவங்களைக் காட்டமுடியும். இப்படி தமிழினவாத வரலாறு முழுக்க துரோகி என்று கூறியதும், மண்டையில் போட்டதன் மூலமும் தங்களை பாதுகாத்த கூட்டம், இன்று மீள முறுக்கெடுத்து நிற்கின்றது. அருண்; சித்தார்த்தனிற்கு எதிராக இந்த வழியைத்தான் தமிழினவாதம் மீள முன்வைக்கின்றது.

ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் புலம்பெயர் நாடுகளில் பணம் பெறும் தமிழினவாத ஊடக வியாபாரிகள், இந்த ஜனநாயக விரோத பின்னணியில் தங்களையும் முன்னிறுத்துகின்றனர். "நடுநிலை" செய்தி என்ற பத்திரிகையின் பொது அறத்தைக் கூட பேண முடியாது, புலம்பெயர் மாபியா கூட்டத்தின் பணத்திற்கு ஏற்ப தாளம் போட்டுக்கொண்டு, அருண்; சித்தார்த்தனின் எதிர்தரப்பாக அரசியல் களத்தில் களமிறங்குகின்றனர்.

தமிழினவாதிகள் கோரும் பொலிஸ் ஆட்சி தமிழினவாதிகளிடம் இருந்திருந்தால், என்ன நடக்கும்!?. புலிகள் பாணியில் ஒரு வெறியாட்டத்தை நடத்தி முடித்து இருப்பார்கள். அரசு எப்படி போராட்டங்களுக்கு எதிரான அவதூறையும் - வெறியாட்டதையும் கையாளுகின்றதோ, அதைவிட மோசமான தமிழினவாத அவதூறுகளையும் - வன்முறைகளையும் காணமுடிகின்றது.

ஒடுக்கும் தங்கள் தமிழினவாதத்தை முன்வைத்து கூச்சல் போடும் இந்தக் கூட்டம், அருண்; சித்தார்த்தனை "கஞ்சாக்காரன்", "ஆவா குழு" "சிங்களக் கைக்கூலி" என்று, பலவிதமாக, அரசியல்ரீதியாக எதிர் கொள்ளமுடியாத தங்கள் வங்குரோத்து அரசியலை முன்வைக்கின்றனர். அதேநேரம் தூசணமும், சாதிய வக்கிரமும், ஆணாதிக்க வக்கிரமும் கொப்பளிக்க, தங்கள் பாசிச வக்கிரத்தில் தஞ்சமடைகின்றனர்.

தமிழினவாதிகளால் கொண்டாடப்படும் புலிகள் சர்வதேச ரீதியாக கஞ்சா கடத்தியவர்கள். வடக்குகிழக்கில் குழந்தைகள் உட்பட, பலரை வாள்களால் வெட்டிக் கொன்றவர்கள். தாக்குதலுக்கு முன் கஞ்சாவை பாவித்தவர்கள். இப்படிப்பட்ட பாசிசக் கும்பலை ஆதரித்துக் கொண்டு,"கஞ்சாக்காரன்", "ஆவாகுழு" என்று பேசுகின்றதன் பின்னால், எந்தகைய மனிதக் கூறும் கிடையாது. "சிங்களக் கைக்கூலி" என்று கூச்சல் போடும் இந்த தமிழினவாதக் கூட்டம், ஏகாதிபத்திய கைக்கூலிகளாக நக்குவதிலும் - இருப்பதிலும் பெருமைப்படுகின்றவர்கள்.

தமிழினவாதழும் புலிகளும் பேரினவாத இராணுவத்துக்கு நிகராகவே, அதேயொத்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களே. ஜ.நா தீர்மானங்கள் புலி – அரசு இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தான், எல்லாத் தீர்மானங்களையும் முன்வைக்கின்றது. இதை மூடிமறைக்க முடியாது. தமிழினவாதிகள் தமிழ்மக்கள் முன் அதை மூடிமறைக்கும் அரசியல் பின்னணியில், எதை மூடிமறைக்கின்றனரோ அதையே அருண் சித்தார்த்தன் தனது அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்.

தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தமிழினவாதிகள் அரசின் மனிதவுரி;மை மீறல்களை மட்டும் முன்வைத்து நடத்துகின்ற ஜனநாயக விரோத அரசியலின் மறுபக்கத்தையே அருண் சித்தார்த்தன் கையில் எடுக்கின்றார். இந்த வகையில் தமிழினவாத, பேரினவாத என்ற இரு இனவாதங்கள் சார்ந்த முரண்பட்ட அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தவில்லை. இரண்டும் அடிப்படையில் பக்க சார்பானதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதுமாகும்.

அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலம் போராட வேண்டிய அரசியல் சூழலும், அதற்கான அரசியல் அடித்தளமும், இரு இனவாதம் சார்ந்த முரண்பாடுகள் மூலம் காணாமல் போகின்றது.