Language Selection

PJ_2008_03 .jpg

பார்ப்பன ஜெயாவின் 'பஜாரி" அரசியல் பதவி-அதிகாரத்தை அடைவதற்காகப் பச்சைப்பொய்யைக் கூடத் துணிந்து சொல்லும ஜாலக்காரிதான் ஜெயா.

 

ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு விநாடியைக் கூட பார்ப்பன பாசிச பயங்கரவாதியான ஜெயலலிதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஆவேசம் அகங்காரத்தோடு பொங்கி விடுகிறார். சென்னை மக்கள் மொழியில் சொல்வதானால் ""பஜாரி'' அரசியல்வாதியாக அவதாரமெடுத்து விடுகிறார்.

 

அதென்ன பஜாரி அரசியல்? பொதுமக்கள் நடமாடும் இடம் என்பதையும் கவனத்தில் கொள்ளாது, தெருச்சந்தியில் நின்று கொண்டு, இழந்துவிட்ட வருமானத்தை மீண்டும் அடைவதற்கான வெறியோடும் ஆத்திரத்தோடும் அருவெறுப்பாகவும் நாராசமாகவும் அரசியல் எதிரிகள் மீது வசவுகளும் அவதூறுகளும் அள்ளி வீசி, ஓங்காரக் கூச்சல் போடுவது.

 

ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தை இழந்ததில் இருந்து, அடுத்த தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் ஆவேசமும், கோயாபல்சுத் தனமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. வலிப்பு நோயும் மனநோயும் ஒருசேரப் பிடித்தவரைப்போல நடந்து கொள்கிறார்.

 

ஜெயலலிதா மீதான வெறுப்பினால் இதை நாம் சொல்லவில்லை. முற்றிலும் ஆதார அடிப்படையிலான உண்மைதான் இது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, தர்மபுரி அதியமான்கோட்டை போலீசு நிலையத்தில் கடந்த மாதம் நடந்த ஆயுதக் கொள்ளை குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை.

 

மக்கள் இயக்கச் செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டு, சினிமா நடிகைகளின் செய்திகளை தலைப்பில் போடும் குஜராத்தி பனியாவுக்குச் சொந்தமான பார்ப்பனச் செய்தி ஏடு "தினமணி'. ஆதாரப்பூர்வமான உண்மைச் செய்திகளை மட்டுமே வெளியிடும் யோக்கிய சிகாமணிபோலக் காட்டிக் கொள்ளும் தினமணி, ஜெயலலிதாவின் கோயாபல்சு அறிக்கையை ""தீவிரவாத அமைப்புகளுக்கு முதல்வர் கருணாநிதி ஆதரவு தருவதாகக் கூறிய ஜெயலலிதா, தமிழகம் ஆயுதக்காடாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார்'' என்று முன்னுரையோடு முதற்பக்கத்தில் முழுமையாக வெளியிட்டுள்ளது. ""தமிழகம் ஆயுதக் காடாக மாறிவிடும் ஜெயலலிதா எச்சரிக்கை'' என்று தலைப்பில் நாலு பத்தியும், ஜெயலலிதா மூஞ்சியை ஒரு பத்தியுமாகப் போட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு உட்பட எதுவுமே கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்று தான் கூறியதை நிரூபிக்கும் விதமாக, 9.2.2008 அன்று அதிகாலை தர்மபுரி அதியமான்கோட்டை போலீசு நிலையச் சம்பவம் அமைந்துள்ளது என்கிறார் ஜெயலலிதா.

 

""அந்த காவல் நிலையத்துக்குள் புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறைப்பூட்டை உடைத்து 6 துப்பாக்கிகள், அவற்றின் குத்துவாள்கள், ஒரு ""வாக்கி டாக்கி''யைக் கொள்ளையடித்துள்ளது. இதை அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர், இரு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது'' என்கிறார், ஜெயலலிதா.

 

இப்படிப்பட்ட சம்பவங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல என்று கூறும் ஜெயலலிதா, 1998இல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் ஈரோடு வெள்ளித் திருப்பூரில் ஆயுதங்களைக் கொள்ளையடித்ததையும், அதே ஆண்டு தர்மபுரி பென்னாகரத்தில் போலீசின் ஓட்டுநரைக் கொன்றுவிட்டு நக்சலைட்டுகள் வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றதையும் எடுத்துக்காட்டுகிறார்.

 

""கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி, தமிழ்நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?

 

""கருணாநிதிக்கு இந்த நாட்டின் மீதோ, அரசமைப்புச் சட்டத்தின் மீதோ, இந்திய இறையாண்மையின் மீதோ அக்கறை இல்லை. காவல்துறையை கைவசம் வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதியே தீவிரவாதிகளை ஆதரித்துப் பேசும்போது, நாம் ஏன் நக்சலைட் கும்பலை எதிர்த்துப் போராடி காயம் அடைவதோடு முதல்வரிடம் கெட்ட பெயர் வாங்க வேண்டும் என்று அதியமான் கோட்டை காவல்நிலைய அதிகாரிகள் நினைத்து விட்டனர் போலும்.

 

""வெள்ளித்திருப்பூர் சம்பவத்தில் காவல்துறையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். ஆனால் தற்போது நடைபெற்ற சம்பவத்தில் காவல்துறையால் எதிர்தாக்குதல் நடத்தப்படவில்லை. கருணாநிதியின் சென்ற ஆட்சியை விட தற்போதுள்ள ஆட்சியில் "முன்னேற்றம்' ஏற்பட்டுள்ளது.

 

""தீவிரவாத அமைப்புகளுக்கு கருணாநிதி தொடர்ந்து ஆதரவு கொடுப்பதால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வேண்டுமானால் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்காது. ஆனால், தமிழகம் ஆயுதக்காடாக மாறிவிடும் என்பதை கருணாநிதிக்கு நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

 

""இந்தியாவிலேயே பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவலில் முதன்மை மாநிலம் என்ற பெருமையை தமிழகத்திற்கு கருணாநிதி தேடித்தரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

 

""தமிழகத்தை ஆயுதக் காடாக மாற்றிவரும் கருணாநிதியின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, தமிழக மக்களை தீவிரவாத அமைப்புகளிடமிருந்து காப்பாற்றவும், தமிழகத்தில் தொடர்ந்து பெருகி வரும் வன்முறை கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.'' (தினமணி, 12 பிப்.08)

 

அதியமான் கோட்டை ஆயுதக் கொள்ளைக் குறித்து ஜெயலலிதா வெளியிட்ட இந்த அறிக்கையை ""புதுதில்லி ஆகாஷ் வாணியின் முன்னாள் ஷெய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் ஸ்வாமி'' என்ற தமிழ்க் கொலையாளி, ஜெயா தொலைக்காட்சியில் பலமுறை மேலும் பஜாரித்தனச் சுருதிக் கூட்டி வாசித்தார்.

 

· ஜெயலலிதாவின் இந்த ""பஜாரி'' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல தர்மபுரி அதியமான் கோட்டை ஆயுதக் கொள்ளைக்கும் நக்சல்பாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்தத் துப்பும்ஆதாரமும் கிடைப்பதற்கு முன்பே அவசர அவசரமாக அவர் வழக்கம்போல கோயபல்சுத்தனமாகப் புளுகித் தள்ளிவிட்டார். இதன் மூலம் ""நக்சல்பாரி, தீவிரவாத, பிளவுவாத, பயங்கரவாதப் பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடைவது என்பது பார்ப்பன சதியாக உள்ளது என்ற குற்றச்சாட்டை மீண்டும் ஒருமுறை ஜெயலலிதா நிரூபித்துள்ளார்.

 

· மத்திய அரசியலிலும் அதிகார வர்க்கத்திலும் உள்ள தனது பார்ப்பன சாதி ஆதரவைப் பயன்படுத்தி, கருணாநிதி தி.மு.க. மீது விடுதலைப் புலிகள் ஆதரவு, தீவிரவாதிகள் ஆதரவு சக்தி என்ற அவதூறு செய்து, தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாச்சாரம், துப்பாக்கிக் கலாச்சாரம், வன்முறை வெறியாட்டம் பெருகிவிட்டது என்று புளுகி, ஆட்சியைக் கவிழ்த்து, எப்படியாவது தனது பாசிச ஆட்சியை நிறுவி விடுவது என்ற பார்ப்பன சதிகார அரசியலை மீண்டும் ஒருமுறை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

 

· தர்மபுரி அதியமான் கோட்டை ஆயுதக் கொள்ளைக்கும் நக்சல்பாரி மாவோயிஸ்ட் அல்லது வேறு எந்த ""தீவிரவாத'' குழுவுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஒன்று உள்ளூர் பா.ம.க. கட்சிப் பிரமுகருக்கும் வேறு ஒருவருக்கும் இடையிலான நிலப்பிரச்சினை அல்லது அதியமான் கோட்டை போலீசு நிலைய போலீசுக்காரர்களிடையே ""மாமூல்'' வசூலைப் பங்குபோட்டுக் கொள்வதில் நீண்டகாலமாக நீடித்த பங்காளிச் சண்டையில் ஒரு கும்பலைப் பழிவாங்குவதற்காக மற்றொரு கும்பல் நடத்திய நாடகம்தான். இந்த உண்மை ஆயுதக் கொள்ளை சம்பவம் நடந்த அன்றே தெரிந்து விட்டது. பின்னர் வந்த நாளேடுகள் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசப் பார்ப்பன ""ஜூனியர் விகடன்'' உட்பட வார இதழ்களில் இச்செய்தி வெளிவந்து விட்டது.

 

· தர்மபுரி அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை வழக்கை நேரடியாக விசாரித்த ஜெயலலிதாவின் நீண்டகால விசுவாசியும், வீரப்பன் என்கவுண்டரை அரங்கேற்றிய அதிரடிப் படைத் தலைவருமான கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்தான், போலீசுக்காரர்களே நடத்திய நாடகம்தான் இதுவென்று உறுதிசெய்து, கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை பெரும்பாலும் மீட்டு, ஏழு போலீசுக்காரர்களை இடைக்கால நீக்கம் செய்து, விசாரணை மற்றும் உண்மை அறியும் சோதனை நடத்த சென்னைக்கும் பெங்களூருக்கும் கொண்டு போயுள்ளார். இதன்மூலம் ஜெயலலிதா வெளியிட்ட ""பஜாரி'' அறிக்கை முழுக்க முழுக்கத் தவறானது என்பது உறுதியான பிறகும், அதற்காகக் கொஞ்சமும் வருந்தவோ, விளக்க அறிக்கை வெளியிடவோ இல்லை. கல்லுளி மங்கையைப் போல இறுக்க மூடிக் கொண்டிருக்கவுமில்லை. தொடர்ந்து புளுகு, அவதூறு மூட்டைகளை அவிழ்த்து விட்டு நாற்றமடிக்கிறார்.

 

· ஜெயலலிதா தனது ""பஜாரி அறிக்கை''யில் ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்ட போலீசுக்காரர்களை அப்பாவிகளாகக் காட்டி நீலிக்கண்ணீர் வடித்து எழுதியிருக்கிறார். ஆனால் அவர்களோ வாச்சாத்தி, சின்னாம்பதி, வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மாதேஸ்வரன் மலைப்பகுதி என காமுகக் கும்பலாக மாறி பாலியல் வன்முறையில் தறிகெட்டு ஆடுவது உட்பட என்கவுண்டர் படுகொலைகள், கொட்டடிக் கொலைகள், சித்திரவதைகள், கொலை கொள்ளை வழிப்பறி ஆள்மாறாட்டம் மோசடி; வைப்பாடிகள் கள்ளக்காதலிகள் மனைவிகளைக் கொலை செய்வது உட்பட ஏராளமான கிரிமினல் குற்றவழக்குகளில் சிக்கி அம்பலமாகி வருகின்றனர். அப்படிப்பட்ட போலீசுக்காரர்களைப் பார்த்து, ""பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டவர்கள்'' என்கிறார், ஜெயலலிதா. அவர் மட்டுமல்ல; கருணாநிதிக்கும், பார்ப்பனபிழைப்புவாத அதிகார வர்க்கத்தினருக்கும் போலீசுக்காரர்கள் செல்லப் பிராணிகளாவே உள்ளனர். அவர்களுக்கு இருவரும் மாறி மாறி ஏராளமான சலுகைகளை வாரிவழங்குவது வாடிக்கையாகி விட்டது.

 

· சேர்த்து வைத்திருக்கும் கள்ளப்பணம் கருப்புப் பணத்தை வீசி ""நீதிபதிகள்'' உட்பட யாரையும் விலைக்கு வாங்குவதும், அதேசயமம் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நாராசமான அவதூறுகளை நாக்கூசாது அள்ளி வீசுவதும் ஜெயலலிதாவின் அரசியல் உத்தியாகவே உள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கலைத்துவிட்டு தன்னை முதல்வராக்கும்படி ஆளுநருக்குத் தூதுவிட்டது; பாலில் விஷம் கொடுத்து ஜானகி எம்.ஜி.ஆரைக் கொன்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டியது; எம்.ஜி.ஆர். சவ ஊர்வலத்தில் புகுந்து அனுதாபம் தேடியது; சட்டசபைக்குள் கருணாநிதியை கிரிமினல் என்று ஏசி, கட்சிக் குண்டர்களை ஏவி கலவரம் செய்து ஒப்பாரி வைத்தது; லாரி மோதியும், கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்தும், கொலைகாரர்களை போயஸ் தோட்டத்துக்குள் பலமுறை ஏவியும் தன்னை கொல்ல முயன்றதாகவும் அடிக்கடி கூப்பாடு போடுவது; ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக புளுகியது; கருணாநிதிதான் ராஜீவ்காந்தியைக் கொலை செய்தார் என்று பிரச்சாரம் செய்தது; அரசுச் சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு நீதிமன்றத்திலேயே பொய் வாக்குமூலங்கள் கொடுத்தது இப்படி ஏராளமான கோயாபல்சுத் தனங்கள் செய்தவர்தான் ஜெயலலிதா.

 

இந்த வரிசையில என்ன வேண்டுமானாலும் புளுகித் தள்ளலாம், யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புவதால்தான் அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை குறித்து ""பஜாரி அறிக்கை''யை எடுத்து விட்டிருக்கிறார்.

 

அப்பட்டமான பார்ப்பனபாசிச ஆட்சி நடத்திவிட்டு, தொடர்ந்து ""துணிச்சலான'' பஜாரி அரசியல் நடத்தும் ஜெயலலிதாவால் எப்படி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர முடிகிறது? அரசியலிலும், அதிகார வர்க்கத்திலும், நீதித்துறையிலும் எங்கும் நிறைந்திருக்கும் பார்ப்பன கும்பல்களும் பிழைப்புவாதிகளும் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர் அல்லது விலைபோகின்றனர். போலி கம்யூனிஸ்டுகள், காங்கிரசு மற்றும் வைகோ, திருமா, ராமதாசு உட்பட பிழைப்புவாத ஓட்டுக் கட்சியினர் அனைவரும் குறுகியசுயநலனுக்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர எப்போதும் தயாராக உள்ளனர்.

 

இதைவிட முக்கியமாக ஜெயாசோசு.சாமி, ராம.கோபாலன் ஆகிய பார்ப்பன கும்பல் கருணாநிதி மீது தீவிரவாத பயங்கரவாதபுலிகள் ஆதரவாளர் என்று அவதூறு பிரச்சாரம் செய்யும்போது, கருணாநிதியின் தி.மு.க. திருப்பித் தாக்குவதற்குப் பதிலாக, கோழைத்தனமான அரசியல் நடத்துகிறது. பார்ப்பன கும்பல் இவ்வாறான குற்றஞ்சாட்டும் போதெல்லாம், அது கைகாட்டுபவர்கள் மீது தானே உறுதியான நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்கிறது. குற்றமற்றவர்கள் மீது பாய்ந்து குதறுகிறது. இது கண்டு பார்ப்பன கும்பல் தனது அவதூறுப் பிரச்சாரத்தைக் குறைத்துக் கொள்ளவோ, நிறுத்திக் கொள்வதோ இல்லை. சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிராக கடற்படைத் துணைத் தளபதி கூறிய கருத்தை மறுத்து டி.ஆர்.பாலு பிரதமருக்கு கடிதம் எழுதியதைக் கூட சட்டவிரோதம், ஆட்சியைக் கலை என்கிறார்.

 

இராமேசுவரத்தில் பசுமாடு செத்துப் போனது, யாரோ இலங்கைக்கு பீடிக்கட்டு கடத்தியது கூட கருணாநிதியின் இந்து விரோத செயல், புலிகளுக்கு உடந்தையானது என்று முத்திரைக் குத்தி, உடனே கருணாநிதி அரசைக் கலைக்க வேண்டும் என்று கோருகிறார், ஜெயா. இதைவிட வேறென்ன பஜாரித்தனம் இருக்க முடியும்!


· ஆர்.கே.