மறைமுகமாகவோ, நேரடியாகவோ தி.மு.கவை வெல்ல வைத்தல் பற்றி, பாசிச எதிர்ப்புச் சக்திகள் மத்தியில் பேசப்படுகின்றது. இதே போன்று நேரடியாகவும், மறைமுகமாகவோ பாசிச பா.ஜ.கவை தேர்தல் அரசியல் மூலம் பலப்படுத்தும், தமிழகத்தில் பா.ஜ.க.வை அதிகாரத்துக்கு கொண்டுவரும் பல்வேறு புறநிலைச் சக்திகளையும், தேர்தலின் மூலம் தோற்கடிக்க வேண்டும் என்று பாசிச எதிர்ப்பு சக்திகளால் கோரப்படுகின்றது.

பாசிசத்துக்கு எதிராக வெல்ல வைக்கக் கோரும் தி.மு.க, கட்சியின் குடும்ப அரசியல், ஊழல், பாசிசத்துடனான அதன் சமரச அரசியல், நவதாராளவாத கொள்கைகளை .. முன்வைத்து, அதை எதிர்க்கின்ற பாசிச எதிர்ப்பு சக்திகள் தேர்தலை பகிஸ்கரிக்க கோருகின்றனர். அதாவது தேர்தல் மூலம் பாசிசம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதை, பாசிச எதிர்ப்பு சக்திகள் அலட்டிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று கூறி, தேர்தல் முறையை நிராகரிக்கின்றனர். மக்கள்திரள் பாதை மூலம், வர்க்கப் புரட்சி மூலமே பாசிசத்தை தோற்கடிக்க முடியும் என்கின்றனர்.

இப்படி பாசிசத்துக்கு எதிரான சக்திகளுக்கு இடையிலான விவாதமும் முரண்பாடுகளும், அவதூறுகளும்.. மார்க்சியத்தை முன்வைக்கின்ற அரசியல் தரப்புகளுக்கு இடையில் நடக்கின்றது.

இப்படி இருக்க பாசிச எதிர்ப்பு சக்திகளாக இருக்கக்கூடிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள், சக்திகள் இடையே, இதில் பெரியளவில் குழப்பமில்லை. மார்க்சிய சக்திகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்தக் குழப்பம், கடந்தகால வரட்டுவாத அரசியலின் ஒரு நீட்சியே.

குறிப்பாக ம.க.இ.க அமைப்பை மய்யப்படுத்தி கம்யூனிச இயக்கத்தில் அண்மையில் ஏற்பட்ட பிளவுகளும், பிளவுகளுக்கு முன் வெளியேறியோருக்கும், வெளியேற்றப்பட்டவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள், இந்த விடையத்தை மேலும் ஆழமாக்கி கூர்மையாக்கி இருக்கின்றது. பல சந்தர்ப்பத்தில் அரசியல்ரீதியாக விவாதிக்க வக்கற்று, அவதூறாக இது மாறுகின்றது. இந்தக் கட்சிக்கு வெளியில் இருக்கக்கூடிய பல்வேறு சக்திகளுக்கு இடையில், இதே அடிப்படையில் விவாதங்களும், முடிவுகளும், நடைமுறைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.

ம.க.இ.க அமைப்பை மய்யப்படுத்தி இருந்த "வினவு" (தாங்களே கட்சி என்று கூறும் செயலாளர் தரப்பு. அண்மையில் "வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்டோம்!" "மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ), தமிழ்நாடு 10-வது பிளீன அறிக்கை!" வெளியிட்டு இருக்கின்றது) தேர்தல் புறக்கணிப்பை முன்வைக்கின்றது. "வினை செய்" (தாங்களே பெரும்பான்மைத் தரப்பு என்று கூறும் இடைக்கால கமிட்டி) தேர்தலில் பாசிச பா.ஜ.கவை தோற்கடிப்போம் என்ற கோசத்தை முன்வைக்கின்றது. அதேநேரம் தேர்தலில் பங்குபற்றுவதை அரசியல்ரீதியாக மறுதளிக்கின்றனர். தன்னை தனிநபராக முன்னிறுத்தும் மருதையன் தரப்பு (இடைவெளி) தேர்தலில் பாசிச பா.ஜ.கவை தோற்டிகடிப்போம் என்ற கோசத்தை முன்வைக்கின்றனர். அதேநேரம் தேர்தலில் பங்குபற்றும் அரசியலை மறுதளிக்கின்றனர்.

வெவ்வேறு கோணத்தில் தேர்தலை அணுகுகின்றனர். தேர்தல் பகிஸ்கரிப்பை வினவு முன்வைக்க, மற்றைய இருதரப்புகளினதும் கருத்துகளின் ஓத்த தன்மை காணப்படுகின்ற அதேநேரம் மருதையன் தரப்பு தி.மு.க.வை சொல்லி ஆதரிக்க வேண்டும் என்று முரண்படுகின்றார். இப்படி மூன்று அணிகளுக்கும் இடையிலான பொதுத்தன்மை என்பது, தேர்தலில் பங்குகொள்ளும், தேர்தல் வழிமுறையை தொடர்ந்;து நிராகரிக்கின்றது.

தேர்தல் அரசியலில் பங்குபற்றுவதை மறுதளிக்கும் அரசியல் பின்னணியில், அரசியல்ரீதியாக வந்தடையும் எத்தகைய முடிவுகளும் சுயவிமர்சன அடிப்படையிலானதல்ல. ஒருபுறம் இடது வரட்டுவாதமும், மறபுறம் தன்னியல்பு வாதமுமாகும்;.

தேர்தல் அரசியல் குறித்த தவறான முன் முடிவுகளை அடிப்படையாக கொண்டு, தொடரும் வரட்டுவாதமும், மறுபுறம் சூழலுக்கு அமைவாக வந்தடைகின்ற தன்னியல்புவாத முடிவுகளே.

தேர்தல் வழிமுறை மூலம் வர்க்கப் புரட்சியையோ, வர்க்க ஆட்சியின் கூறான பாசிசத்தையோ தோற்கடிக்க முடியாது என்பது, மார்க்சியம் முன்வைக்கக் கூடிய அடிப்படையாகும். இந்த அடிப்படையில் இருந்து மார்க்ஸ், லெனின், டிமிட்ரோ, மாவோ.. தேர்தல் அரசியலை அணுகினர். அவர்கள் தேர்தல் முறையையும், தேர்தலில் பங்குகொள்வதையும் நிராகரிக்கவில்லை. மாறாக வர்க்கப் புரட்சிக்கு தேர்தலை பயன்படுத்துவது, அதற்காக தேர்தலில் பங்குகொள்வது, தாம் அல்லாத வர்க்கங்களை (பிறரை) ஆதரிப்பது.. என்று தேர்தலை தங்கள் வர்க்க புரட்சிக்கு ஏற்ப பயன்படுத்தியவர்கள். இதற்கு பல முன்னுதாரணங்கள், அனுபவங்கள் உண்டு.

1930 களில் பல்வேறு நாடுகளில் பாசிசம் ஆட்சிக்கு வர தேர்தலை பயன்படுத்திய போது, சர்வதேச கம்யூனிச இயக்கம் கையாள வேண்டிய வழிமுறைகள், கையாளத் தவறியதன் மீதான விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள் பலவற்றை, வரலாற்தில் இருந்து இந்தியக் கம்யூனிச இயக்கம் கற்றாக வேண்டும். அன்று சர்வதேச கம்யூனிச இயக்கத்தை தலைமையேற்று வழிநடத்திய டிமிட்ரோ, பாசிசத்துக்கு எதிராக முன்வைத்த ஜக்கிய முன்னணித் தந்திரம் முக்கியமான அரசியல் வழிகாட்டலை முன்வைக்கின்றது.

இந்திய கம்யூனிஸ்டுகளின் வரட்டுத்தனமான முன் முடிவுகளுடனான தேர்தல் குறித்த குறுகிய பார்வை, தவறான முடிவுகளுக்கு தள்ளுகின்றது. பா.ஜ.க வை தோற்கடிக்க எடுத்த முடிவுகளும் இதைக் கடந்ததல்ல.

முதலில் தேர்தலை வர்க்கப் புரட்சிக்கு பயன்படுத்த முடியும் என்ற அரசியல் முடிவை எடுக்காது, எடுக்கப்படும் எந்த முடிவும் தவறானது. தேர்தலை வர்க்கப் போராட்டத்துக்கு பயன்படுத்த முடியும் என்கின்ற போதுதான், அதை எப்படி பயன்படுத்துவது என்ற சரியான அரசியல் முடிவுக்கு வரமுடியும். அப்போதுதான் சரியான வர்க்க கோசத்தை முன்வைக்க முடியும்.

தேர்தல் மூலம் தமிழகத்தில் பாசிசம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்சிக்கு வருவதை தடுக்கக் கூடிய புறநிலையான சூழல் எதார்த்தமானதாக உள்ளது. இதன் பொருள் தி.மு.கவை வெல்ல வைப்பது தான். தி.மு.க. தன்னை பாசிசத்தில் இருந்து தற்பாதுகாத்துக் கொள்ளவே, பெரியாரிய - அம்பேத்கரிய – மார்க்சிய இயக்கங்கள் கடந்த காலத்தில் போராடிய போது முன்வைத்த பல்வேறு கோசங்களை, தான் நிறைவுசெய்வதாக தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்திருக்;கின்றது என்பது இந்தப் பின்னணியில் தான்.

பாசிசம் தான் அல்லாத பிற கட்சிகளையும் அழித்து விடுவதன் மூலமே, முழுமையான பாசிசத்தை நிறுவ முடியும்;. இந்த நிகழ்வு 1930களில் nஐர்மனியில் நடந்தது. இது இன்று இந்தியாவில் நடந்து வருகின்றது. இந்தப் பின்னணியில் தேர்தல் கட்சிகள் கூட பாசிசத்தை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டி கட்டாயமும், நிர்ப்பந்தமும் ஏற்படுகின்றது. காங்கிரஸ் கூட இதையே எதிர்கொள்கின்றது. தேர்தல் கோசங்களை பாசிசத்துக்கு எதிராக முன்வைக்கின்றன. வரட்டுக் கோசங்களால், வரட்டு கோசங்களை கொண்டு எடுக்கும் தன்னியல்புவாத முடிவுகளால், சரியான வர்க்கக் கோசத்தை பாசிசத்துக்கு எதிராக முன்வைக்க முடியாது.

இப்படி பல்வேறு பாசிச சூழலை கவனத்தில் கொண்டு கம்யூனிச இயக்கம் இயங்கத் தவறும் பட்சத்தில், 1930 களில் ஜரோப்பாவில் இருந்த மிகப்பெரிய nஐர்மனிய கம்யூனிச இயக்கம் முற்றாக அழிந்து போன அதே வரலாற்று நிகழ்வு, இந்தியாவிலும் மீள நடக்கும்.

முதலில் கம்யூனிச இயக்கம் தேர்தலில் பங்குகொள்வது குறித்த வர்க்க அரசியலை எடுத்தாக வேண்டும். கம்யூனிச இயக்கத்தின் வரட்டுக் கோட்பாடுகளையும், முன்முடிவுகளையும் கடந்தாக வேண்டும்;. இன்று இந்திய கம்யூனிச இயக்கம் வெளிப்படையான சுயவிமர்சனத்தை முன்வைத்தாக வேண்டும்.

ஜனநாயகமும், ஜனநாயக வடிவங்களும் வளர்ந்து கொண்டு இருக்கின்ற சூழலில், அதை புரட்சிக்கும் கட்சி மற்றும் கட்சி வடிவக் கோட்பாட்டுக்கும் பயன்படுத்தத் தவறுவது வரட்டுவாதமாகும். இயங்கியலை மறுப்பதாகும். மாற்றங்களை மறுத்து கட்சியை வரட்டுத்தனமாகக் குறுக்குவது என்பது, கட்சியை தாமாக அழிப்பது தான். புரட்சியில் ஜனநாயகம் என்பது கட்சியை, அதன் தலைமையை பிரதி பண்ணி ஒப்புக்கு முன்வைப்பதல்ல. கட்சி கண்டடையும் முடிவுகளை முன்வைத்து, முன்னோக்கி வளர்த்துச் செல்வது. அதற்கான ஜனநாயக வடிவங்கள் புறநிலையில் வளர்ந்திருக்கின்றன, ஆனால் கட்சியும், கட்சி வடிவங்களும் அதை மறுதளிக்கின்றது. லெனின் காலத்தில் லெனினியக் கட்சியில், முரண்பாடான வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கும் அளவுக்கு விரிவான ஜனநாயகம் இருந்தது. இது மாவோ காலத்திற்கும் பொருந்தும்.

இந்திய கம்யூனிச இயக்கம் ஸ்ராலின் காலத்தில் அவர் கையாண்ட சில தவறான ஜனநாயகமற்ற கட்சி வடிவங்களையே முன்வைப்பதன் மூலம், கட்சி சிதைந்து கொண்டு இருக்கின்றது. இதனால் சூழலின் தன்னியல்புவாதத்துக்குள் கட்சியின் வர்க்க அரசியலை முன்வைக்க முடியாது சீரழிந்து வருகின்றது.

குறிப்பாக பாசிசத்துடன் வர்க்க ரீதியாக மோத வேண்டிய தேர்தல் காலத்தில், தேர்தல் முறையில் பங்குகொள்வதை மறுக்கும் வரட்டுக் கோசத்தில் இருந்து, தங்களை தாங்கள் அரசியல் நீக்கம் செய்கின்றனர்.

பாசிசத்தை தேர்தல் மூலம் தடுத்தல் என்ற கோசத்திலும், தேர்தல் பகிஸ்கரிப்பு என்ற கோசத்திலும், வர்க்க அரசியல் முன்வைக்க வேண்டிய வர்க்க கோசத்தை கொண்டு, மக்களை அரசியல்படுத்தத் தவறி இருக்கின்றனர்.