தமிழ்ப் பல்கலைக்கழகம் இயங்குவதற்கு அரசு ஆதரவு வேண்டும், எனவே தமிழனின் ஆட்சியதிகாரமான "சுயாட்சிக்காக" தமிழன் வாக்குப் போட வேண்டும் என்றனர். சுயாட்சிக் கோரிக்கையை இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் பல்கலைக்கழகம் மூலமும், மக்கள் மத்தியில் கொண்டு சென்றது.

இப்படி இலங்கை தமிழரசுக் கட்சியால் முன்வைக்கப்பட்ட சுயாட்சிக் கோரிக்கை, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டதல்ல. மாறாக தமிழினவாதிகளின் தேர்தல் அரசியல் வெற்றிக்கான, தமிழினவாதக் கோரிக்கையாகவே முன்வைக்கப்பட்டது.

இனவாதமற்ற முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை என்பது, இலங்கையின் அனைத்து மக்களையும் இனவொடுக்குமுறைக்கு எதிராக, வென்றெடுக்கும் அரசியல் கோசங்களாலானது. ஒடுக்குமுறைக்கு எதிரான சமவுரிமையிலான அரசியல் கோரிக்கையாகவே இருக்கமுடியும். சமவுரிமை என்பது முரணற்ற ஜனநாயகத்தை குறிக்கின்றது. தனியொரு இனத்துக்கானது என்பது முரணானது மட்டுமின்றி, அடிப்படையில் அது இனவாதக் கோரிக்கையே. இனவொடுக்குமுறையாக இருக்கும் இனவாதத்தை, தன் இனம் சார்ந்து கோருவது இன்னுமொரு ஒடுக்கும் இனவாதமே. இப்படிப்பட்ட எந்த இனவாதக் கோரிக்கையும், வெற்றிபெற முடியாததாக குறுகிவிடும். இலங்கை தமிழரசுக்கட்சி முன்வைத்த சுயாட்சிக் கோரிக்கை, தமிழ் மக்களின் வாக்கைப் பெறுவதற்காக முன்வைக்கப்பட்ட, வெறும் இனவாதக் கோசங்களே. பிற இன மக்களை வென்றெடுக்கும் வண்ணம், குறைந்தது அவர்களின் வாக்கை பெறும் வண்ணமாவது, இனவாதமற்ற முரணற்ற ஜனநாயக கோரிக்கையையோ, செயற்பாட்டையோ தமிழரசுக்கட்சி கொண்டிருந்தது கிடையாது. இனரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக, ஒடுக்கும் இனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை வென்றெடுக்கும் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க மறுத்து, அத்தகைய அரசியல் செயற்பாட்டை "துரோகமாகவே" காட்டியவர்கள். ஒடுக்கப்பட்ட சிங்கள தமிழ் மக்களுடன் ஒன்றிணைக்க முன்னின்று செயற்பட்டவர்களை "எட்டப்பர்களின்" செயற்பாடாக காட்டியதே, இலங்கை தமிழரசுக் கட்சி வரலாறு.

தமிழ் பல்கலைக்கழகம் என்பது இனவாதக் கோரிக்கையாகவும், தங்கள் இனவாத தேர்தல் அரசியலில் தமிழ் மொழி வாக்குகளை பெறும் குறுகிய இனவாத அரசியலுக்காகவுமே முன்வைத்தனர். இது எப்படி, எந்த அரசியல் சூழலில், எப்போதெல்லாம் வைத்தனர் என்பதை வரலாற்று ரீதியான ஆதாரங்களுடன் பார்ப்போம்.

1948 களில் தமிழன் பெயரில் தமிழினவாதக் கட்சியை உருவாக்கி, எந்த தூண்டுதலுமின்றி வலிந்த தமிழினவாதத்தை முன்வைக்கத் தொடங்கியது. தமிழ் மக்களின் இனவாத வாக்கைப் பெறுவதை இலக்காகக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் பல்கலைக்கழகத்தை உணர்ச்சிகரமான இன அரசியலுக்காக 1950 இல் முன்னிறுத்தியது. இப்படி இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழை முன்னிறுத்திய போது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனக்கான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, 1959 இல் இந்துப் பல்கலைக்கழகத்தை முன்வைக்கத் தொடங்கியது.

இந்த இரு இனவாத வெள்ளாளியக் கட்சிகளின் அரசியல் முரண்பாடானது, 1972 வரை கூர்மையடைந்தே வந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மொழியை முன்னிறுத்திய இந்து வெள்ளாளியமாக பரிணமிக்க, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இந்து மதத்தை முன்னிறுத்திய தமிழ் வெள்ளாளியமாகவும் பரிணமித்தது.

மதத்தையும், மொழியையும் முன்னிறுத்துவதன் மூலம் தமக்குள் முரண்பட்டுக்கொண்ட இரு கட்சிகளும், இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் அரசியலில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக விடையத்திலும் எதிரும் புதிருமாக முரண்பட்டனர்.

தமிழ் மொழியை முன்னிறுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாதியளவுக்கு, இந்து மதத்தை முன்னிறுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தொடர்ச்சியாக வாக்குகளைப் பெற்று வந்தது. இப்படி இனவாதம் பேசி இரு கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு நிகராகவே, பிற கட்சிகளும் - சுயேட்சைகளும் வாக்குகளைப் பெற்று வந்தனர். தமிழ் மொழி பேசும் மக்கள் எப்போதும் தமிழினவாதத்துக்கும், மதவாதத்துக்கும் முழுமையாக வாக்களித்தது கிடையாது. தமிழனின் பெயரால் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதே, தமிழினவாதமாக வளர்ந்து வந்தது.

1950 களில் கருவாகி வளர்ந்த தமிழ் இனவாதம் முன்வைத்த தமிழ்ப் பல்கலைக்கழகம், 1956 இல் சிங்கள ஆட்சி மொழிச்சட்டத்துடன் அரசியல் ரீதியாக வீரியம் பெற்றது.

தொடர்ச்சியாக தமிழினவாத பிரச்சாரத்தை முன்னெடுக்க, தமிழ் பல்கலைக்கழக கோசத்தை முடுக்கிவிட்டது. சுதந்திரன் 17.03.1957 இல் "இஸ்லாமிய இலக்கிய நூல்கள் பெருமை பெற தமிழ் பல்கலைக்கழகம் அவசியம்" என்ற தலைப்பில் "தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்படுமாயின் சிறப்புமிக்க இஸ்லாமிய நூல்கள் பன்மடங்கு மதிப்பைப் பெறும்" என்று, முஸ்லிம் மக்களை இனரீதியாக, மதரீதியாக தமிழினவாதம் மூலம், தன்னுடன் அடையாளப்படுத்தி வாக்குகளை பெற முனைகின்றது.

சுதந்திரன் 31.03.1957 இல் "பல்கலைக்கழகத்தில் இனத் துவேசம்" என்று சுதந்திரனின் முதல்பக்க தலையங்க செய்தியின் உபதலைப்பாக "தமிழ்ப் பல்கலைக்கழகம் அவசியமென்பதற்கு ஆணித்தரமான எடுத்துக்காட்டு" என்று பல்கலைக்கழகத்தில் பதவிக்கு போட்டியிட்ட "தமிழர்" ஒருவர் வாக்களிப்பில் தோற்க, அப் பதவி அவருக்கு கிடைக்காததை இனவாதமாக முன்வைக்கின்றது. தமிழ் பல்கலைக்கழகம் என்றால் இந்த நிலை ஏற்படாது என்று இனவாத செய்தியை எடுத்துச் செல்கின்றது. இப்படி தங்களுக்கு வாக்களிக்க கோரும் தமிழினவாத கோசத்துக்கு ஏற்ப, தமிழினவாதத்தை தூண்டி அதற்கு கொம்பு சீவி விடுகின்றனர்.

தமிழினவாதிகளினதும் - இந்துத்துவவாதிகளினதும் தேர்தல் முரண்பாடுகளைக் கடந்து, தமிழ் பல்கலைக்கழகத்தை தாமே உருவாக்கும் இனவாத நடைமுறைக் கோசமாக்கியது. 1960களில் இனரீதியான தமிழ் பல்கலைக்கழகத்தைக் திருகோணமலையில் கட்டத் தொடங்கினர். தமிழினத்தின் பெயரில் நிதியை திரட்டினர். இப்படிக் கட்டிய தமிழ் பல்கலைக்கழகம், வரலாறு கடந்து காணாமல் போய் இருக்கின்றது.

இன-மத அடிப்படையில் 1950 களில் பல்கலைக்கழகத்தை கோரியவர்கள், 1960 களில் தாம் கட்டத் தொடங்கிய தமிழ் பல்கலைக்கழகத்துடன், தங்கள் இனவாத கோசத்தை முன்வைக்க முடியாது கைவிட்டனர். 1965 இல் அரசுடன் இணைந்து ஆட்சியமைத்த காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது, மீளவும் இனவாத தமிழ் பல்கலைக்கழக கோரிக்கையை முன்வைத்தனர். இந்த இனவாத பல்கலைக்கழக கோசம் மூலம் அரசுடன் முரண்பட்டு வெளியேறும் அரசியல் நாடகத்தை தொடங்கிய போது - 1960 கட்டிக் காணாமல் போன தமிழ் பல்கலைக்கழகம் குறித்து இவர்கள் மூச்சே விடவில்லை. வரலாற்று அறிவற்ற இனவாதத் தமிழன், தமிழ் பல்கலைக்கழகம் குறித்து தங்கள் கடந்தகாலம் எதையும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவர் செல்வநாயகம் 1947 முதல் வெளியிட்டு வந்த சுதந்திரனே, தமிழ் இனவாதத்தையும் - தமிழரசுக்கட்சி அரசியலையும் பிரச்சாரம் செய்து வந்தது. இப் பத்திரிகையிலிருந்து, இவர்கள் உருவாக்கிய இனவாத தமிழ் பல்கலைக்கழகக் குறிப்புகளையும் - ஆதாரங்களையும் பெருமளவில் பெற முடிகின்றது.

சுதந்திரன் (09.10.1960) "தமிழ்ப் பல்கலைக்கழகம் நமது காலத்தில் நிச்சயம் வந்தே தீரும்" என்ற தலையங்கத்தின் கீழ், காணாமல் போன தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று இருந்ததற்கான பல தரவுகளைப் பெருமை பேசும் தமிழினவாதக் கண்ணோட்டத்தில் பட்டியலிட்டு இருக்கின்றது.

தமிழ் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து முன்னெடுக்கவென புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் சின்னத்தம்பி, தனக்கு முன்பாக பேராசிரியர் மயில்வாகனம் முன்னெடுத்த முயற்சிகள் குறித்த தகவல்களைப் பட்டியலிட்டுள்ளார்.

இதன் சாரம் "1956 யூன் 6 தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வேண்டும் என்ற கோரிக்கைகளை இல்லாதாக்கினர். திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தோற்றுவித்து, தமிழ் பேசும் மக்கள் வாழ் பிரதேசங்கள் எங்கும் பரப்பப்பட்டு, இதை அமைக்க பிரதேச குழுக்கள் உருவாக்கப்பட்டது." 1956 யூன் 6 திகதி தான், இலங்கையின் ஆட்சிமொழியாக சிங்களம் அறிவிக்கப்பட்டது. அன்று தான் இனவாத தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கும் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டது. அன்றைய தினம் இலங்கை மக்களை பிளக்கும் இரு இனவாதமும், ஒன்றையொன்று தம்மை முன்னிறுத்திக் கொண்டது.

இந்த இனவாத தமிழ் பல்கலைக்கழக அமைப்பு «1956.10.11» இல் தாங்கள் அமைக்கும் இனரீதியான தமிழ் பல்கலைக்கழகத்திற்கு அரசாங்க உதவியைப் பெறும் முகமாக, பிரதமரைச் சத்திக்க முடிவு செய்யப்பட்டு 1957.01.14 அன்று, அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவை சந்தித்தனர். தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை இன அடிப்படையில் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த பண்டாரநாயக்க, இனவாதம் அல்லாத பல்கலைக்கழகத்தில் கலாச்சார, மத, மொழி.. பட்டப்படிப்பிற்கான முயற்சிகளுக்;கு ஆதரவு தரமுடியும் என்றார்."

இப்படி இனவாதமற்ற பல்கலைக்கழகத்தை அமைப்பதை ஏற்றுக்கொள்ளாத தமிழ் இனவாதிகள், இனவாத தமிழ் பல்கலைக்கழகத்தையே அமைப்பது என்ற முடிவில் "1957.02.09 நாவலர் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினர். தமிழ் பல்கலைக்கழகத்தை அமைப்பதென முடிவெடுத்தனர். இதற்காக 1957.07.03 நாவலர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது" இப்படி தமிழ் வெள்ளாளிய இந்துத்துவ சாதிய சமூக இயக்கத்தின் முன்னோடியான ஆறுமுகநாவலரின் பெயரில், தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆறுமுகநாவலர் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு கல்வியை மறுத்தவர். இந்த ஆறுமுகநாவலர் தான் வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின், கோட்பாட்டு தந்தையாவார். தமிழினவாதத்தின் பெயரில் தமிழ் பல்கலைக்கழகத்தைக் கோரி, அவரின் பெயரில் அந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட 1950 களில், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு, ஆறுமுகநாவலர் வழிவந்த வெள்ளாளிய சமூகத்தால் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. இவர்கள் கோரிய, முன்னெடுத்த தமிழ் பல்கலைக்கழக ஒடுக்கப்பட்ட சாதிக்கு, நாவலர் வழியில் இடமில்லை, மாறாக ஒடுக்கும் சாதிகளுக்கே.

இந்த தமிழினவாத வெள்ளாளிய தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்கும் தங்கள் முயற்சிக்கு ஆதரவு பெறும் வண்ணம் மீண்டும் "1957.10.18 பிரதமரைச் சந்தித்தனர். இதையடுத்து பிரதமர் கமிசன் ஒன்றை அமைப்பதாக அறிவித்தார். இப்படி பிரதமரால் அமைக்கப்பட்ட கமிசனில், தமிழ் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று 1958.01.23 நாவலர் கழகத்தால் கோரப்பட்டது. 1958 மார்ச் நீஹாம்; கமிசன் (நேநனாயஅ ஊழஅஅளைளழைn) விசாரணையைத் தொடங்கியது. கமிசனில் தமிழ் பேசும் மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது பற்றி, தமிழ் பேசும் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அமைக்க கோரி, நாவலர் கழகத்தின் மகஜர் கமிசனிடம் சமர்ப்பிக்கப்பட்டது."

இனரீதியான, மதரீதியாக பல்கலைக்கழகம் அமைப்பதை மறுதளித்த பிரதமர் "1959 பெப்ரவரியில் கொழும்பில் சிங்கள, பௌத்த மதம் சார்ந்த கற்கை உருவாக்கப்பட்ட போது, அதை திறந்து வைத்து பேசிய பிரதமர் பண்டாரநாயக்க, இது போல் தமிழ், இந்து, முஸ்லிம் கற்கைளை உருவாக்க முடியும் என்றார்."

இன-மத கற்கைகளுக்;கு பதில், இன-மத பல்கலைக்கழகமே வேண்டும் என்று தமிழினவாத நோக்கில் "1959 ஏப்ரலில் திருமலையில் துறைமுக வீதியில் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைக்க காணி வாங்கப்பட்டது. 1959 மே தங்கள் இனரீதியான தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அமைக்க, திருகோணமலையில் அடிக்கல் நாட்டினர். கட்டிட நிதிக்கு நிதி சேகரிப்பு துவங்கப்பட்டது. அதேநேரம் 1959 ஜூலையில் கல்வி மந்திரியை சந்தித்து யாழ்ப்பாணத்தில் ஒரு வைத்தியக் கல்லூரி நிறுவும்படி வேண்டினர்" இப்படி தமிழினவாதிகள் தங்கள் தலைநகர் என்று கூறிக்கொள்ளும் திருகோணமலையில் இனவுணர்வை தூண்ட தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்கத் தொடங்கினர். மறுபக்கத்தில் இனவாதத் தமிழ் யாழ் மேட்டுக்குடிகளைத் திருப்தி செய்ய, யாழ்ப்பாணத்தில மருத்துவ பல்கலைக்கழகத்தைக் கோரினர். தமிழ் காங்கிரஸ் இதற்கு போட்டியாக 1959 நவம்பரில் "இனவாத தமிழ் பல்கலைக்கழகத்திக்கு பதில் இந்துப் பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் அமைக்கக் கோரினர்." வாக்கை குறிவைத்து குறுகிய கண்ணோட்டத்தில் மொழியும், மதத்தையும் ஆளுக்காள் பயன்படுத்தியதே, தமிழினவாதிகளின் கல்விக் கொள்கையாக இருந்தது.

மக்களை இனரீதியாக திரட்ட "1959.11.30 திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரி பிரமுகர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையை நாவலர் கழகம் தொடங்கியது. 1959 டிசம்பரில் அரசு அமைத்த பல்கலைக்கழகக் கமிசன் அறிக்கை வெளியாகியது. அதேநேரம் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் இடப்பட்டு 40 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு இருந்தது. இன்னும் 40 ஏக்கர் வாங்கப்பட உள்ளதாக நவம்பர் 1960 இல் அறிவித்தவர்கள், பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவதற்கான பணத்தை திரட்டும் சீட்டுகள் அச்சிடப்பட்டு, 10 இலட்சம் ரூபா இலக்கு நிர்ணயிக்கப்பட்டதுடன் - நிதி திரட்;டத் தொடங்கினர்"

இப்படி பணம் திரட்டப்பட்டு தமிழ் பல்கலைக்கழகத்திற்கு என்ன நடந்தது என்பதை கேட்பது, தமிழினவாதிகளின் முன் துரோகமாக இருக்கலாம். தங்கள் வரலாற்றை மூடிமறைப்பது, மோசடிகளை இனத்தின் பெயரால் செய்வதே, தமிழினவாதிகளின் அரசியலாக இருந்து வந்துள்ளது. இந்த வகையில் கல்வி, பாடசாலைகள் தேசியமயமாக்கம், தேசிய மொழிக் கல்வி, பல்கலைக்கழகம் குறித்து தமிழ்தேசிய அரசியல் பித்தலாட்டங்களை தெரிந்து கொண்டாலே, சரியான வரலாற்றைக் கற்றுக் கொள்ளவும் - இனவாதமற்ற முரணற்ற மனித சிந்தனையை உருவாக்க முடியும்.

தொடரும்

 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05

1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06

சர்வதேசியத்தின் கருவாக இருந்த என்.எல்.எப்.ரி. - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 07

தேசியமும் - சர்வதேசியமும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 08

இன-மத பல்கலைக்கழகத்தைக் கோரியவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 09

இனவாத காலனியத்தின் நீட்சியாக கோரியதே, தமிழ்ப் பல்கலைக்கழகம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 10