கடந்த இயக்க வரலாற்றில் என்.எல்.எப்.ரி என்ற தமிழ் தேசியவாத இடதுசாரிய இயக்கத்துக்கு வெளியில், வலதுசாரிய தமிழ் இயக்கங்களில் இருந்து பெருமளவில் தமிழ் தேசியவாத இடதுசாரியத்துக்கு வந்தவர்கள் புளட்டிலிருந்தே. பிற வலதுசாரிய இயக்கங்களில் இருந்து மிகச் சிறியளவிலேயே, அதுவும் விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழ் தேசியவாத இடதுசாரிகளையே வரலாற்றில் காணமுடியும்.

இயக்கத்திலிருந்து விலகியவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் தத்துவமான இடதுசாரியத்தையும் முன்னிறுத்திப் போராடவில்லை. குறிப்பாக புலி வலதுசாரிய இனவாத பாசிசமானது மூர்க்கமாகிய வரலாற்றுப் பின்னணியில், பல்வேறு இயக்கங்களில் இருந்து விலகியவர்கள் தமக்கான லலதுசாரிய ஜனநாயகத்தை கோரியவர்களே பெரும்பான்மையினர். இவர்கள் தேசியவாத தமிழ் இடதுசாரியத்தை முன்வைத்தவர்களல்ல. யாழ் வெள்ளாளிய மையவாதத்தினைக் கடந்து, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்ந்து அரசியலைக் காணமுடியாது. தமக்கான வலதுசாரி ஜனநாயகத்தை புலிகளிடமும் - தாம் சார்ந்திருந்த இயக்கத்திடமும் கோரியவர்கள், இறுதியில் புலியெதிர்ப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய மறுப்பாக, ஒடுக்கும் தேசிய ஆதரவாக, இலங்கை அரசு சார்பாக மாறியது. புலிக்கு வெளியில் உருவான அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாது இப்படித் தான் புளுத்தது. 

எண்ணிக்கையில் மிகச் சிலரே, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தினர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவமான இடதுசாரியத்தை முன்னிறுத்தி, அந்த மக்களுடன் பயணித்தவர்கள் கூட, படிப்படியாக வரலாற்றிலிருந்து காணாமல் போனார்கள். இப்படி முன்வைக்கப்பட்ட இடதுசாரியமானது அடிப்படையில் சர்வதேசியமல்லாத தேசியவாத தமிழ் இடதுசாரியமாக இருந்த போதும், ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி வலதுசாரியத்துக்கு இதுவே அக்காலத்தில் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

எல்லா வலதுசாரிய இயக்கங்களும் ஒன்றில் வலதுசாரிய கூலிக் குழுக்களாகவோ அல்லது போலி இடதுசாரிய கூலிக் குழுவாகவோ வக்கரித்தபடி வீங்கின. இப்படி உருவான வலதுசாரிய கூலிக் குழுக்கள் வெளிப்படையாகவே மக்;கள் விரோதிகளாக மாறியதுடன், தனது அமைப்பில் இருந்த ஜனநாயகத்தை அழித்தனர். அதேநேரம் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கத் தொடங்கினர். இதற்கு எதிராகவே இயக்கங்களுக்குள்ளான, தமிழ் தேசியவாதம் சார்ந்த இடதுசாரியம் வளர்ச்சியுற்றது. தமிழ் தேசியவாத இடதுசாரியமானது இயங்கங்களுக்குள்ளான மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதுடன், இந்தப் போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். உயிருடன் தப்பிப் பிழைத்தவர்கள் அவ்வமைப்புகளில் இருந்து வெளியேறி சமூகத்தில் தேசியவாத தமிழ் இடதுசாரியத்தின் விதையாகியதுடன், இவர்களே யாழ-;பல்கலைகழகப் போராட்டத்தின் உந்து சக்தியாக இருந்தவர்கள்.

இந்த வகையில் வலதுசாரிய இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கமான (ரெலோ) இதற்கு விதிவிலக்கல்ல. ரெலோவை முற்றாகவே இந்தியக் கூலிக் குழுவாகவே இந்தியா உருவாக்கியதுடன், அதற்கு தேவையான இராணுவப் பயிற்சிகளை வழங்கியது. இந்திய இராணுவம் சீக்கிய பொற்கோவில் மீதான தாக்குதலை நடத்திய போது, தனது கூலிக் குழுவான ரெலோவை அதில் ஈடுபடுத்தியது. இதன் மூலம் எதிர்ப்புரட்சிக் குழுவாகவே ரெலோ வெம்பி வீங்கியது. இலங்கையில் பிற ஆயுதக் குழுக்களை கையாள்வதற்;காகவும், இலங்கையின் சுயாதீனத்தை இல்லாதாக்கவும், இந்தியா ரெலோவை வீரியமிக்கதாக மாற்றியதுடன், அதைச் செயற்கையாகவே ஆயுதங்கள் மூலம் வீங்க வைத்தனர்.

1984களின் இறுதிக் காலத்தில் பாரிய ஆயுதத் தளபடங்களுடன் இலங்கை வந்து இறங்கிய ரெலோ, அடுத்தடுத்து பாரிய இராணுவத் தாக்குதல்களை நடாத்தியது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், யாழ்தேவி புகையிரதம் மீதான தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.களாக இருந்த ஆலாலசுந்தரம், தர்மலிங்கத்தை திட்டமிட்டு படுகொலை செய்ததுடன், அதையும் மறுத்தது.

அதேநேரம் பிற இயக்கங்கள் மீதான வன்முறைகளும்;, மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், கொள்ளைகளும் .. ரெலொவின் பொதுவான அரசியல் நடத்தையாக மாறியது. ரெலோ ஆயுதமேந்திய கட்டுப்படுத்த முடியாத வன்முறைக் கும்பலாக மாறி, தமிழ் மண்ணை அதிர வைத்தது. ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்குவதன் மூலம், தன்னை வெள்ளாளிய சமூகத்தின் முன்னணிப் பிரதிநிதியாக முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது. ரெலொவுக்கு எதிரான போராட்டங்கள் தன்னெழுச்சியாக, ஆங்காங்கே மக்கள் நடத்தத்; தொடங்கினர்.

இதே காலத்தில் இதே அரசியல் பண்பைக் கொண்ட அமெரிக்க கூலிக் குழுவாகவே வளர்க்கப்பட்ட புலியின் அதிகாரத்துக்கு, இந்திய சார்பு கூலிக் குழுவான ரெலோ சவாலாக மாறியது. அங்குமிங்குமாக புலி – ரெலோ அதிகார மோதல்கள் நடந்தேறின. இந்த மக்கள் விரோத அரசியல் பின்னணியிலேயே, தமிழ் தேசியவாத இடதுசாரியமானது ரெலோவுக்குள் வெளிப்படத் தொடங்கியது. 1980 க்கு முன் புலி-புளட் உடைவின் போது உதிரியாக சென்ற மனோ மாஸ்ரரே, ரெலோவுக்குள்ளான தமிழ் இடதுசாரியத்தின் முன்னோடியாகவும், அதேநேரம் ரெலோவில் இருந்த தமிழ் தேசியவாத இடதுசாரிக் கூறுகளை மையப்படுத்துபவராhகவும் இருந்தார்.

இவர் உள்ளடங்கிய தமிழ் தேசியவாத இடதுசாரியமானது ரெலோவுக்கு எதிராக மரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தை அடுத்து பல பெண்கள் உட்பட பலர் நாடு திரும்பினர். இதில் சிலர் உதிரியாக தமிழ் தேசியவாத இடதுசாரிய சிந்தனையை முன்வைத்து சமூகத்தில் செயற்பட்டனர். இந்த வகையில் செயற்பட்ட மனோ மாஸ்ட்டரை 22.07.1984 அன்று புலிகள் படுகொலை செய்தனர்.

மரினா கடற்கரை போராட்டத்தில் முன்னணியில் செயற்பட்ட நேரு, தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி) இல் இணைந்தார். நேரு 1985 ஆரம்பத்தில் என்னுடன் (இரயாகரனுடன்) கிளிநொச்சியில் தங்கி இருந்த காலத்தில் - வீதியில் வைத்து ரெலோ இரகசியமாக கடத்திச் சென்றதுடன் - அவரைப் படுகொலை செய்தனர். இது தொடர்பாக "புரட்சி முகத்திரைகளும் கொலை வெறி பிடித்த முகங்களும்" என்ற தலைப்பில், 50000 துண்டுப்பிரசுரங்கள் என்.எல்.எப்.ரியால் 19.02.1985 அன்று வெளியிட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றதன் மூலம், ரெலோ முற்றாக சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பாக மண்டான் சாதி ரீதியான ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய நிலப் போராட்டம், தெல்லிப்பழையில் ரெலோவின் கைது சித்திரவதைக்கு எதிராக ஓடுக்கப்பட்ட சாதி மக்களின் தலைமையில் நடத்திய மறியல் போராட்டங்களை, என்.எல்.எப்.ரியே நடத்தியிருந்தது.

ரெலோவுக்கு எதிராக மரினாக் கடற்கரையில் முன்னின்று போராடிய நாவலன் (கெலன்) பாசறை (கூலி விவசாயிகளை சார்ந்து இயங்கிய குழு) யில் இணைந்து செயற்பட்டதுடன், அன்றைய சமகால தமிழ் இடதுசாரிய செயற்பாடுகளில் அக்கம்பக்கமாக செயற்பட்டவர், அதேநேரம் 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்கும் மாணவனாக வந்த சிறிது காலத்தில் பின் தொடங்கிய விஜிதரன் போராட்டத்தினை, முன்னின்று வழி நடத்துவதில் எம்மோடு தோளோடு தோள் நின்ற முன்னோடி. என்.எல்.எப்.ரியுடன் பல்வேறு மட்டத்தில் தொடர்பு கொண்டிருந்த வேறு சிலரும், ஓடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி சமூகத்தில் இணைந்திருந்தனர்.

இதேநேரம் தாஸ் - ரெலோ பிரச்சனைக்கு பின்னால் இருந்தது, தமிழ் தேசியவாத இடதுசாரியக் கண்ணோட்டமே. தாஸ் - ரெலோ முரண்பாட்டுக் காலத்தில், தாஸ் என்.எல்.எப்.ரியுடன் அரசியல் ரீதியாக தொடர்பை கொண்டிருந்தவர். அவர் இந்தியக் கூலிப்படையாக இருப்பதற்கு பதில் மக்களை சார்ந்து நிற்க விரும்பினார். அவரின் இந்த அரசியல் தேர்வே 11.03.1986 அன்று யாழ் வைத்தியசாலையில் படுகொலையாக அரங்கேறியது. பேச்சுவார்த்தைக்கு என்று தாஸ்சை அழைத்து, ரெலோ படுகொலை செய்தது. தாஸ் கொலை நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின்பாக, புலிகள் 29.04.1986 அன்று ரெலோவை வீதிகளில் உயிருடன் கொழுத்தி வெறியாட்டம் போட்டதுடன் - பாரிய படுகொலைகள் மூலம் ரெலோவை அழித்தனர்.

இப்படி ரெலோவில் இருந்து வந்த விதிவிலக்கான சிலர், தமிழ் தேசியவாத இடதுசாரிய பயணத்தில் தம்மை இணைத்துக் கொண்டதுடன், ஓடுக்கப்பட்ட மக்களுடன் தங்களை அடையாளப்படுத்தியும் இருந்தனர்.

ரெலோவின் இந்த வலதுசாரிய வரலாற்றுக் குறிப்பு, ரெலோவுக்கு மட்டுமானதல்ல. வலதுசாரிய வரலாற்றுப் போக்கில் இருந்து, ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்;) தப்பிவிடவில்லை. ஈரோஸ் வலதுசாரியமானது போலிப் "பொதுவுடமை" பேசியபடி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வலதுசாரிய நடைமுறையைக் கொண்டு இயங்கியது. இந்த வலதுசாரியத்திற்கு எதிராகவே 1980 களிலேயே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பி.ஆர்.எல்.எவ்)யாக உடைந்தது. ஈரோசில் போலிப் பொதுவுடமையை முன்வைத்த வலதுசாரியத்துக்கு மாறாக, போலி இடதுசாரியத்தை முன்வைக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆக உடைந்தது. இந்த அரசியல் பின்னணியில் ஈபி.ஆர்.எல்.எவ் வைச் சேர்ந்த சிலர், ஒடுக்கப்பட்ட சாதிகள் மத்தியில் தீவிரமாக இயங்கினர். ஈ.பி.ஆர்.எல்.எவ். ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க அரசியலுக்குப் பதில், முதலாளித்துவ சோவியத் முன்வைத்த போலி இடதுசாரியத்தை முன்வைத்தது. சர்வதேச ரீதியாக பிரிந்து கிடந்த அமெரிக்க - ருசிய முரண்பாட்டில், இந்தியாவின் ருசிய சார்பு அமைப்பாகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் தன்னை முன்னிறுத்திக் கொண்டது.

தமிழ் சமூகத்தின் வெள்ளாளிய சிந்தனை முறையிலேயே இயக்கங்கள் வளர்ச்சியுற்ற போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை "ஈ.பி"யாக குறுக்கி "ஈழத்துப் பள்ளர்" இயக்கம் என்று, பிற வெள்ளாளிய இயக்கங்களும் - வெள்ளாளிய சமூகமும் கூறுமளவுக்கு - தமிழ் இனவாத சமூகம் ஓடுக்கும் - ஓடுக்கப்பட்ட சாதிய சமூகமாக பிரிந்து பிளவுண்டு கிடந்தது. அது "ஈழத்துப் பள்ளர்" இயக்கமாக, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை முத்திரை குத்தியது. அதேநேரம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னிறுத்திய இயக்கமாக இருக்கவில்லை.

ஈபிஆர்எல்எப் இன் வர்க்கத் தன்மையற்ற முதலாளித்துவ போலி இடதுசாரியப் போக்கு, அக முரண்பாட்டை உருவாக்கியது. ஈ.பி.ஆர.;எல்.எப். இன் இந்திய சார்புக்கு எதிராகவும், போலி இடதுசாரியதுக்கு எதிராகவும் வர்க்க அரசியலை முன்வைத்த செழியன் - தாஸ் அணி, ஈபி.ஆர்.எல்.எவ் க்குள் முரண்பாட்டுடன் செயற்பட்டது. குறிப்பாக இந்தக் குழு என்.எல்.எப்.ரியுடன், பிரிந்து வருவதற்காக பல சுற்று அரசியல் விவாதங்களை நடத்தியது.

செழியன் - தாஸ் அணியில் இருந்த சோதிலிங்கம் யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் முன்னின்று இயங்கியதுடன் - மாணவ அமைப்புக் குழுவின் தலைவராக இருந்தார். இதை விட ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐச் சேர்ந்த தனிநபர்கள் பலரும், பல்கலைக்கழக போராட்டத்தில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டனர்.

ஈரோஸ்சைப் பொறுத்த வரையில் இந்திய - புலிப் பினாமியாக இருந்ததுடன், யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை குழிபறிக்கும் உட்குத்துகளிலும் - சதிகளிலும் சதா ஈடுபட்டனர். ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி என்பன சோவியத்தின் போலி இடதுசாரியத்தில் இருந்து நேரடியாக வந்ததால், மக்களுடன் நிற்கக் கூடிய தமிழ் தேசியவாத இடதுசாரியம் அதிலிருந்து உருவாகவில்லை. தனிநபர்களாகக் கூட ஓடுக்கப்பட்ட மக்களுடன் தம்மை இனம் காட்டும் முன்னுதாரணத்தைக் காண முடியாது. தங்கள் போலி இடதுசாரிய அமைப்பை, போலி இடதுசாரிய அரசியல் மூலம் நியாயப்படுத்தக் கூடிய உதிரிகளாகவே தம்மை முன்னிலைப்படுத்தினர். இதைத் தாண்டி ஓடுக்கப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்திய செயற்பாடுகள் இருக்கவில்லை.

1986 மார்கழி மாதம் ஈ.பி.ஆர்.எல்.எவ். புலிகளால் தடை செய்யப்படுவதற்கு முன்பாக, போலி இடதுசாரி கண்ணோட்டத்தில் பிரச்சனைகளை அணுகியவர்கள், 1987 களின் பின் இந்தியக் கூலிப்படையாக வந்திறங்கினர். அதன் போது பாரிய மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டனர். ஈ.பி.ஆர்.எல.;எவ் இல் இருந்து உருவான ஈ.பி.டி.பி இலங்கை அரசின் கூலிப்படையாகவே மாறியதுடன், பாரிய மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.

இந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்தியக் கூலிப் படையாக, இலங்கை கூலிப் படையாக, தனிநபர்களின் புலியெதிர்ப்பாகவே முடங்கியது. ஈரோஸ் புலியின் வாலாக, இந்திய இலங்கை அரசின் எடுபிடியாகவே, எப்போதும் இருக்க முடிந்தது.

1980 களில் புலி-புளட் பிளவுடன் வெளியேறிய நெப்போலியனின் முன்முயற்சியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை என்ற "இடதுசாரி" அமைப்பு உருவாக்கப்பட்டது. இலங்கை வர்க்கப் புரட்சி என்ற அரசியல் கண்ணோட்டத்தை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு, தமிழீழத்தை முன்வைக்கவில்லை. அதேநேரம் நடைமுறையில் தமிழ் தேசியவாத இடதுசாரியாக தம்மை முன்னிறுத்திக் கொண்டு; - குண்டுவெடிப்புகளையும், வங்கிக் கொள்ளைகளையும் முன்னின்று செய்தனர். அம்பாறை சென்றல் காம் பொலிஸ் நிலையத் தாக்குதலை நடத்தினர். அரசியல் ரீதியாக ஓடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் செயற்படுவதில் இருந்து தனிமைப்பட்ட போலி இடதுசாரி வலதுசாரிய குழுவாகவே நடைமுறையில் செயற்பட்டனர். குறுகிய வட்டத்திற்குள் குறுகி, மக்களில் இருந்து அன்னியமாகினர். தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தினை உருவாக்கிய நெப்பொலியனை, 1990 இல் மலையகத்தில் வைத்து ஈரோஸ் கொலை செய்தது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த "இடதுசாரியத்தை" விதைத்தவர்களல்ல.

புலிகளைப் பொறுத்தவரையில் 1980 களில் உடைவுடன், முற்றாக தீவிர வலதுசாரியக் குழுவாகவே உருவாகியது. தங்களை பிற இயக்கங்களுக்கு நிகராக முன்னிறுத்திக்; கொள்ளும் போலி இடதுசாரியத்தை பாலசிங்கம், நித்தியானந்தன் .. போன்றவர்கள் மூலம் முன்னிறுத்திய போதும், அது வெளியிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்காகவே. ஆரம்பகால விடுதலைப்புலிகள் பத்திரிகையில் இதைக் காணமுடியும்;. அமைப்புக்குள் இடதுசாரியத்தைப் பேசவும், முன்வைக்கவும் முடியாது. அப்படிப்பட்டவர்கள் இயக்கத்தில் இருக்க முடியாது. இதுதான் புலி இயக்கத்தின்; இயங்குவிதி.

யாழ் பல்கலைக்கழக விஜிதரன் போராட்டத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குழுவை, இந்த வலதுசாரிய புலிக் குழுவே கட்டுப்படுத்தியது. விஜிதரன் போராட்டம் தொடங்;குவதற்கு சில மாதங்களுக்க முன்பாக, ராக்கிங் தொடர்பான புலியின் அணுகுமுறை மற்றும் வன்முறையை அடுத்து, பல்கலைக்கழகத்தில் இருந்த புலி சார்பு மாணவ தலைமைக்கு எதிரான போராட்டம் தொடங்கியது. இதன் போது பல்கலைக்கழக மாணவர்கள் கூடி புதிய தலைமையை உருவாக்கினார்கள்.

இருந்தபோதும் புலிகள் யாழ் பல்கலைக்கழகத்தினுள் இருந்ததுடன், தமக்கான தங்கும் இடமாக மறுமலர்ச்சி மன்றத்தை பலாத்காரமாக வைத்திருந்தனர். அதில் இருந்தபடி பல்கலைக்கழக மாணவர்களை கண்காணித்தனர். புலிகளின் மாணவ அமைப்பிற்கு தலைவராக இருந்த முரளி பல்கலைக்கழக மாணவனாக இருந்தபடி - பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தினான். விஜிதரன் போராட்டத்தின் போது மேடையேறி போராட்டமே தவறு என்றான். இதைவிட சர்வே, பரா, அன்று புலிகளில் அதிருப்தியுற்று இருந்த சிவரஞ்சித் உள்ளடங்கிய புலிகள் கூட்டம் - போராட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ததுடன் - சக பல்கலைக்கழக மாணவர்களை கண்காணித்தனர்.

பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கான கரு 1985 இன் ராக்கிங்கின் போது உருவாகி இருந்தது. இக் கரு 1986 ஏப்ரல் 29ம் திகதி ரெலோ அழிக்கப்பட்டு பாசிசமாக மாறி வீரியம் பெற்று வந்த சூழலிலேயே, 1986 ராக்கிங்கின் போது வீரியம் பெற்று, 1986 இன் இறுதியில் போராட்டமாக வெடித்தது.

 

 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

 

தொடரும்