1980 களில் தமிழ் சமூகத்தின் அக முரண்பாடுகள் சார்ந்த சிந்தனைமுறை வளர்ச்சியுற்றதுடன், தனக்கான தத்துவ மற்றும் கோட்பாட்டு அடிப்படைகளையும் -நடைமுறைகளையும் முன்வைக்கத் தொடங்கியது

.தமிழினவாதத்துடன் முரண்பட்ட தமிழ் தேசியவாதமானது "மார்க்சியத்தை" தனது தத்துவமாக முன்வைக்கத் தொடங்கியது. இனவொடுக்குமுறையை மார்க்சியத்தில் இருந்து அணுகுவதற்கு பதில், தமிழ் தேசியத்தில் இருந்து 'மார்க்சியத்தை" அணுகியது. இப்படி உருவான தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறை, மார்க்சியமாக இருக்கவில்லை, மாறாக தமிழ் தேசியவாத "மார்க்சியமாகவே" இருந்ததனால், தேசியத்தை அணுகுவதில் அக முரண்பாடுகளைக் கொண்டதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது.

இருந்தபோதும் வலதுசாரிய தமிழ் இனவாத தேசியவாதத்திற்கு சவால்மிக்கதாகவும், அதன் எல்லா அடித்தளங்களையும் தகர்க்ககூடிய அரசியல் வீரியத்துடன் காணப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த இந்த தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறை, வலதுசாரிய தமிழ் இனவாத இயக்கங்களின் உடைவுகளிலும், சிதைவுகளிலும், பின்னடைவுகளுக்கும்.. பின்னணியில் இருந்ததை, வரலாற்றில்; காணமுடியும்;.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான ஜனநாயக மறுப்புப் தொடங்கி, அவர்கள் மீதான பாசிசமயமாதல் வரையான எல்லா தமிழ் இனவாத வலதுசாரிய வரலாற்றுப் படிநிலையிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த தமிழ் "இடதுசாரியத்தையே" எதிரியாக முன்னிறுத்தியதே கடந்த வரலாறு. இது எப்படி தமிழின இனவாதத்துக்குள், முரண்பட்ட போராட்ட வரலாறாக மாறியது என்பதை பார்ப்போம்;.

1970 களில் தமிழ் இனவாதமானது வலதுசாரிய தேர்தல் அரசியல் கட்சிகள் முன்மொழிந்த பாராளுமன்ற வழிமுறைக்குப் பதிலாக உருவான தனிநபர் பயங்கரவாதமும், அதைத் தொடர்ந்து அதிலிருந்து 1980 களில் உருவான ஆயுத இயக்கங்கள் வரை, தேர்தல் அரசியல் கட்சிகள் முன்வைத்த அதே இனவாத வலதுசாரி அரசியலை முன்வைத்தன.

தமிழனைத் தமிழன் ஒடுக்கும் சமூக முரண்பாடுகளை அப்படியே பேணும் இயக்கங்களாகவே அவை உருவானது. ஆனால் வன்முறை அரசியலுக்கு வந்த புதிய இளம் தலைமுறையானது பழையதை அப்படியே வழிபடுவது ஒருபுறம் வளர்ச்சியுற, மறுபக்கம் நெருக்கடி சார்ந்து தன் அரசியல் நடத்தைகளை கேள்விக்குள்ளாக்கியது.

நேரெதிரான இந்த இரு போக்குகளைக் கொண்ட வளர்ச்சிக்கு, வரலாற்று ரீதியான காரணங்கள் இருந்தன.

1.1960 களில் தொடங்கி, 1970களில் ஓய்வுக்கு வந்த தீண்டாமைக்கு எதிரான போராட்டமானது, இளம் தலைமுறையினர் மத்தியில் இடதுசாரிய சிந்தனைகளை உருவாக்கியது. இந்த அரசியல் பின்புலத்தில் புதிதாக சமூக விழிப்புணர்வு பெற்ற, ஒரு இளம் தலைமுறை உருவாகி அரசியலுக்குள் நுழைந்தது.

2.1960 களில் வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை எதிர்த்த இனவாத தமிழ் வலதுசாரியமானது, தாங்களும் சாதிக்கு எதிரானவர்களாக காட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து இளைஞர்கள் தமது அணிக்குள் முன்னுக்கு கொண்டு வந்தது. 1970 களில் தோன்றிய நான்கு தமது இளைஞர் அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து கொண்டு வந்த இளைஞர்களை (தலைமை பதவிகளைக் கொடுத்தனர்) அரசியலில் முன்னிலைப்படுத்தினர். சாதி ஒழிப்பு தொடங்கி சோசலிச தமிழீழம் குறித்து பேசியதுடன், அதை தங்கள் அரசியல் தீர்மானங்களில் முன்வைத்தனர்.

3.1970 களில் ஆட்சிக்கு வந்த போலி "இடதுசாரி" அரசாங்கம், தங்கள் செயற்பாட்டை "சோசலிசம்" என்றனர். இப்படி தாங்கள் "சோசலிசத்தை" உருவாக்குவதாக கூறி முன்வைக்கப்பட்ட திட்டங்களை, தமிழ் இனவாத கண்ணோட்டத்தில் "சோசலிசம்" எதுவென்ற கேள்வியை முன்னிறுத்தி, பதிலுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் "சோசலிசத்தை" முன்வைத்தனர். இதில் மையப் பொருளாக இருந்தது, இலங்கை அரசின் இனவாதவொடுக்குமுறை "சோசலிசமா" என்ற கேள்வியையும், விவாதத்தையும் - தமிழ் இனவாத வலதுசாரிய கண்ணோட்டத்தில் முன்வைத்தனர். பாராளுமன்றத்தில் சோசலிசம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் "சோசலிச" தொடர் உரைகளை நடத்தினர். தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் 1947 இல் இனவாத அடிப்படையில் தொடங்கிய "சுதந்திரன்" பத்திரிகைளில் தொடர்சியாக முழு பக்கங்களில் இவை பிரசுரமானதுடன், தமிழ் "சோசலிசம்" குறித்து எழுதப்பட்டது. பல தமிழ் பத்திரிகைகளில் இவை செய்தியாகின.

குறிப்பாக 1970 களில் சுதந்திரன் பத்திரிகை இனவாதத்தை அரசியலாக சமூக மயப்படுத்துவதிலும் - தனிநபர் பயங்கரவாத வன்முறையை தூண்டும் இடத்தில் இருந்ததுடன், அரசு முன்வைத்த "சோசலிசத்தை" விமர்சித்து, தமிழ் "சோசலிசம்" குறித்து கட்டுரைகளைத் தாங்கி வந்தது. அதேநேரம் பத்திரிகை சோசலிசத்துக்கு எதிரான இனவாத உள்ளடக்கத்தை முன்னிறுத்தியது. இதேபோன்று 1975 களில் காங்கேசன்துறை இடைத் தேர்தலில் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட போலி "இடதுசாரியத்தை" எதிர்த்து - இனவொடுக்குமுறை சார்ந்து தமிழ் "இடதுசாரியத்தை" வலதுசாரிகள் முன்வைத்தனர்.

4.1960 களில் உருவான இடதுசாரியமானது 1970 களில் நடைமுறைகளில் இருந்து அன்னியமாகியதுடன், இனவொடுக்குமுறைக்கு எதிரான அரசியலில்; ஈடுபடாது இனவொடுக்குமுறை பற்றிப் பேசிய தமிழ் இனவாதத்தை கோட்பாட்டு அடிப்படையில் எதிர்த்தது. இதை எதிர்த்து, தமிழ் «இடதுசாரியம்», வலதுசாரிகளால் முன்வைக்கப்பட்டது. அன்றைய சுதந்திரன் பத்திரிகையில் இதைக் காணமுடியும்;.

இப்படித்தான் தமிழ் "மார்க்சியம்" கருக் கொண்டது. இன்று வரை இந்த தமிழ் "மார்க்சியம்" நீடிக்கின்றது. 1960 களில் தீண்டாமை இயக்கத்தில் கருக்கொண்ட மார்க்சியம், 1970 களில் அரசியல் நடைமுறை வழிகாட்டலின்றி சிதைய, உதிரிகளாக தமிழ் தேசியத்தின் பின்னால் - பலர் தம்மை இணைத்துக் கொண்டனர்.

வலதுசாரிய தமிழினவாத தேசியம் தேர்தல் அரசியல் சந்தித்த நெருக்கடிகளும், அக முரண்பாடு சார்ந்து அதன் முடிச்சுமாற்றித் தனம், அக முரண்பாட்டை தனக்குள் வளர்வதற்கு ஏதுவாக்கியது. தமிழ் "மார்க்சியம்" கருக்கொண்டது.

இதன் வளர்ச்சி தான் 1980 களில் இயக்க அக முரண்பாடுகள் தோன்றவும், அது இயக்க உடைவுகளுக்கும் - இயக்க முரண்பாடுகளுக்கும் - இயக்க சிதைவுக்கும் வித்திட்டது. இதைத் தடுக்க இயக்கத்தில் இருந்த தமிழ் "இடதுசாரி" நபர்களை கொல்கின்ற அளவுக்கு வளர்ச்சியுற்று, சமூக பொது வெளியிலும் இடதுசாரியத்தை வேட்டையாடத் தொடங்கியது.

சமூக ஒடுக்குமுறைகள் சார்ந்த இயக்க அக முரண்பாடும், இம் முரண்பாடுகள் மீதான வன்முறையும், விவாதப் பொருளாக மாறியது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் யாருக்கானது என்பது தொடங்கி, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தரப்பு குறித்த கேள்விகளும் - அரசியலும், எல்லா நிலையிலும் எங்கும் பிரதிபலித்தது.

1980 க்கு முன் புலிகள் பிளவடைந்து புளட் உருவாக இதுவே காரணமானது. இதே போல் 1980 களில் ஈரோஸ் உடைந்து ஈ.பி.ஆர்.எல.;எவ் உருவாக இதுவே காரணமானது. 1980க்கு முன்பே பிரபாகரன் புலிகளை விட்டுவிட்டு ரெலோவுக்கு செல்லவும் இதுவே காரணமாhனது.

இந்த அரசியல் நெருக்கடி எல்லா இயக்கங்களையும் விரும்பியோ விரும்பாமலோ வர்க்க விடுதலையையும், சாதி ஒழிப்பையும், பெண் விடுதலையையும் தங்கள் திட்டத்தில் முன்வைக்க நிர்ப்பந்தித்தது. சமூகத்தில் நிலவும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளை ஒழிப்பதை இயக்கங்கள் திட்டமாக முன்வைத்தனர். இயக்கத்தை நோக்கி சென்ற இளைஞர்களும்;, மாணவர்களும் இப்படித் தான் சிந்தித்தனர். இதை முன்வைப்பதன் மூலம் தான், ஆயுதப் போராட்டத்துக்கான மனித சக்திகளை திரட்ட முடியும் என்ற பொது உண்மையே - எங்குமானதாக இருந்தது.

யாழ் பல்கலைக்கழகமும் - மாணவர்களும் இதையே பிரதிபலித்தனர். தமிழ் இனவாதம் சார்ந்து சமூகத்தில் இயங்கிய ஆணாதிக்கம், பிரதேசவாதம், ஒடுக்கும் சாதியக் கண்ணோட்டம், வர்க்க ஒடுக்குமுறையை.., களைவதாக, அதுவே தமிழ் தேசியம் என்றனர். தங்கள் இயக்கத் திட்டத்தில் அதை முன்வைத்தனர்,

ஆனால் இதற்கு எதிராக போராட்டத்தை முன்நகர்த்த முடியாது – ஜனநாயகமற்ற வலதுசாரியமாக மாறிய முரண்பாடானது, வன்முறை மூலம் தீர்வு காணத் தொடங்கியது.

இதனால் இதற்கு எதிராக சமூகத்தை முன்நோக்கிப் பார்க்கும் சுயாதீனமான வரலாற்றுப் போக்கு, இயக்கங்களுக்குள்ளும், இயக்கங்களுக்கு இடையிலும், சமூகத்திலும், இளைஞர்கள் - மாணவர்கள் மத்தியில் மேலோங்கியது.

கருத்துகள், நடைமுறைகள் என்று பன்முகம் கொண்ட விவாதமானது, போராடும் இயக்க அக முரண்பாடாக - இயக்க முரண்பாடாக, தங்களை தாங்களே ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பதற்கான நடைமுறை அரசியலை நாடவைத்தது.

இந்த பின்னணியில் இதற்கு சமாந்தரமாக 1980 - 1981 இல், இந்தியா இயக்கங்களுக்கு பயிற்சி, ஆயுதம், பணம் தருவதாகக் கூறி ஊடுருவத் தொடங்கியது. ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை, இந்தியப் பயிற்சி, ஆயுதம், பணத்தைச் சார்ந்து போராட முடியும் என்ற புதிய போக்கு - வலதுசாரி தமிழினவாதத்தை - அரசியல் அரங்கில் பலம்பொருந்தியதாக மாற வழிகாட்டியது.

சகல சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்தும் - நடைமுறையும் - போராட்டமும் அவசியமில்லை, பயிற்சி, ஆயுதம் பணம் இருந்தால் இன விடுதலை பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை இந்தியா உருவாக்கியது.

இனவாதம் மேலெழுந்து, சமூகம் சார்ந்த ஒடுக்குமுறைகளைப் பேசுவதை போராட்டத்துக்கு எதிரானதாக, இந்தியா வழங்கிய பயிற்சியும் - ஆயுதமும் - பணமும் வழிகாட்டியது. இப்படி 1981 இல் மெதுவாக தொடங்கி பேசிவந்த இந்திய ஆயுதப் பயிற்சித் திட்டம், 1983 இல் கூர்மையடைந்து - 1984 இல் வீரியம் பெற்றது.

இதற்கு அமைவாக 1983-1984 நடந்த மாற்றங்கள், 1980 களில் நடந்த சமூகம் குறித்த விவாதங்கள் எதிர் முரண்பாடாக மாறியது. சமூகம் குறித்து சிந்திப்பது இனத்திற்கு எதிரானதாகவும் - அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒன்றாக, இந்தியாவிடம் பயிற்சி பெற்ற அனைத்து இயக்கங்களின் கொள்கையாக மாறியது.

இயக்க உட்படுகொலைகள், இயக்கத்தை விட்டு தப்பியோடுதல், சமூகத்தை களையெடுத்தல்.. எங்கும் நடந்தேறியது. இந்த முரண்பாடும், எதிர்வினைகளும் 1980 களில் யாழ்பல்கலைக்கழகத்தில் கூர்மையாகி – தமிழ் "இடதுசாரியம்" ஒரு தனி அணியாக மாறி தனிமைப்பட்டு இருந்தது.

1985-1986 களில் இந்த சமூக முரண்பாடுகளுடன் புதிதாக பல்மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01கலைக்கழகம் வந்த மாணவர்களின் வருகையுடன் - ஒருங்கிணைந்த போராட்ட வடிவமாக மாறிய வரலாற்று நிகழ்வு நடந்தேறியது. 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது. இது கற்பனையல்ல, திரிபுமல்ல, காலம், இடம், சம்பவங்கள் ஒருங்கிணைந்த தரவுகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் மூச்சு விடுவதற்காக எழுந்த இந்தப் போராட்டத்தை, அனைத்தும் திரிக்கப்படும் நிலையில் வரலாறாக பதிய வேண்டி இருக்கின்றது.


தொடரும்

மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01