அமெரிக்கா இதுவரை காலமும் உலகுக்கு தன்னை முன்னிறுத்தி எதை ஜனநாயகம் என்று கூறிவந்ததோ, அது பொய்யானது, மோசடியானது, பித்தலாட்டமானது என்று - இன்னும் ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் கூறுகின்றார்.

 அவரை இந்த பதவிக்கு நான்கு ஆண்டுக்கு முன் கொண்டு வந்ததும், இந்த தேர்தல் முறைதான். பைடன் பெற்ற வாக்குகள், தன்னிடம் இருந்து திருடப்பட்ட வாக்குகள் என்கின்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் முடிவுகள் வரமுன்பே, பதவியை விட்டுக் கொடுக்கமாட்டேன் - எந்த வழியிலாவது அடுத்த ஜனாதிபதி தானே என்று, அமெரிக்க மக்கள் முன் சவால் விடுத்துள்ளார்.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உறுப்பாக அரச முறை இருப்பது, இனி அவசியமற்றது என்பதே டிரம்ப் கூறிய செய்தி. தான் தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகிப்பதை திருடுவதற்கே, தேர்தல் துணை போகின்றது என்று கூறுகின்றார். இன்று இதை டிரம்ப் மட்டும் கூறவில்லை - பெரும்பாலான நாடுகளில் தேர்தல் ஜனநாயகத்தை தமது பாசிச தன்மைக்கு ஏற்ப திரிப்பது நடதேறுகின்றது. மக்கள் தேர்தல் ஜனநாயகத்துக்காக போராடுவது அதிகரித்து வருகின்றது. இதுவே இன்று அமெரிக்காவில் அம்மணமாகி இருக்கின்றது.

உலகை மிரட்டும் அமெரிக்கக் கொள்கையும் - அதன் மனநிலையும், தேர்தல்முறை மீது தாவி இருக்கின்றது. அடாத்தாகவே தேர்தல் முடிவுகளை மறுதளிக்கின்றது. இந்த அடாவடித்தனம் மூலம், பிரிந்து கிடந்த அமெரிக்க மக்களைப் பிளந்து விட்டிருக்கின்றது. இனவெறி, மதவெறி, நிறவெறி, வர்க்க ரீதியாக ஒடுக்கும் மனநிலை .., 2020 தேர்தல் மூலம் அதிகமாக்கப்பட்டு, இன்று தேர்தல் முடிவுகளை மறுக்கும் ஜனநாயக விரோத பாசிசம் மூலம் சொந்த மக்களையும் - உலகத்தையும் பிளந்துவிட்டு இருக்கின்றது. உள்நாட்டு யுத்தம், வன்முறை என்ற எல்லையைத் தொடுமளவுக்கு, மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றது. மக்கள் தன்னியல்பாகவே இரண்டு அணியாக பிரிந்து – தேர்தல் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் - தேர்தல் முடிவை மறுதளித்ததன் மூலம் வன்முறையை நோக்கி இயல்பாகவே பயணிக்கின்றனர்.

தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கியமாக இன, மத, நிறவெறிக்கு எதிராக வாக்களிப்பும், மறுபக்கம் இதற்கு ஆதரவான வாக்களிப்பும் நடந்தேறியது. ஒடுக்குபவர்களினதும் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களினதும் என்ற இரு வேறு கண்ணோட்டம், இந்த தேர்தலில் மூலம் எதிர் எதிராக வளர்ச்சி பெற்று இருக்கின்றது.

தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் - மிரட்டல்கள் மூலம் தங்கள் ஜனநாயக வடிவத்தையே குழிதோண்டி புதைத்ததன் மூலம் – பாசிசமயமாக்கல் இந்த தேர்தல் முடிவுகளையொட்டி சிந்தனைரீதியாக நடந்தேறி வருகின்றது. சம வாக்கு உரிமை என்பது ஒடுக்கும் இயல்புடையவனின் மனநிலைக்கு முரணாகி இருக்கின்றது. சம வாக்குரிமை கேள்விக்குள்ளாகி இருக்கின்றது.

உலகெங்கும் இதேயொத்த ஆட்சியாளர்களின் வழியில் அமெரிக்கா காலடி எடுத்து வைத்திருக்கின்றது. அமெரிக்காவில் யார் வெல்லவேண்டும் என்பதை, உலகளவில் பாசிச கருத்தியலைக் கொண்ட அரசுகள், கட்சிகள், மதங்கள்.. தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளது, உலகையும் இரண்டாக்கி இருக்கின்றது.

தேர்தல் முடிவுகள் வருமுன்பே தாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்றும், தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க மட்டோம் என்றும் போடும் கூச்சலானது - இனி தேர்தல் ஜனநாயக மூலம் ஆட்சி மாற்றங்களுக்கு இடமில்லை என்பதையும் - எதிர்காலத்தில் நடக்க இருக்கும் இது போன்றவற்றுக்கு முன்னுதாரணமாகி இருக்கின்றது.

இன்று ஆட்சிகளில் இருக்க, நீடிக்க அரசியல் அமைப்பை மாற்றுவது, தேர்தல் முறைகளில் தில்லுமுல்லுகளை கையாள்வது, பணத்தைக் கொண்டு வாக்குகளை வாங்குவது, நீதிமன்றங்களில் தமக்கு ஆதரவானவர்களை நியமிப்பது, தேர்தல் உறுப்பை தமக்கு ஏற்ப உருவாக்குவது, வன்முறை மூலம் மிரட்டுவது, வாக்களிப்பை தடுப்பது, வாக்குரிமையை இல்லாதாக்குவது .. என்ற எண்ணற்ற வடிவங்களில், தேர்தல் ஜனநாயகத்தை தூக்கில் போடுவதும், அதை பின்பற்றி உலகம் பயணிப்பதும் எங்கும் நடந்தேறி வருகின்றது.

இன்று இனவாதம், மதவாதம், நிறவாதம், பிரதேசவாதம், சாதியம் .. என்பது எல்லா தேர்தல் கட்சிகளின் கொள்கையாகிவிட்ட சூழலில், தேர்தல் வெற்றி என்பது தில்லுமுல்லும், ஆட்சியை அடாத்தாக வைத்திருப்பது அல்லது குறுக்கு வழியில் கைப்பற்றுவது தான்; - ஒரே தேர்வாக மாறிவிட்டது. மாற்றுப் பொருளாதார திட்டத்தை முன்வைக்க முடியாத உலக ஒழுங்கில், தேர்தல் ஜனநாயகத்தை தூக்கில் போடுவதையே ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனநாயகம் பற்றிய கற்பனைகளை எல்லாம் தகர்க்கும் வண்ணம், இம் முறை டிரம்ப் தன்னை முன்னுதாரணமாக்கி இருக்கின்றார். அதை ஆதரிக்கும் வலதுசாரிய பாசிசக் கும்பலைக் கொண்டு, அதிகாரத்தை கைப்பற்ற எல்லா குறுக்குவழிகளையும் கையாளுகின்றது. 1930 களில் ஜெர்மனியில் கிட்லரின் நாசிக் கட்சி தேர்தல் வழிமுறை மூலம் ஆட்சிக்கு வந்த போது, அதை கையாண்ட குறுக்குவழிகளையே இன்று அமெரிக்காவில் காணமுடியும்.

பாசிசம் எப்படி தேர்தல்முறை மூலம் ஆட்சிக்கு வரமுடியும் என்பதையும், பாசிசம் மக்களின் சிந்தனைமுறையில் எப்படி உருவாக முடியும் என்பதை, டிரம்ப் நடைமுறையில் நிறுவிக் காட்டி இருக்கின்றார். பாசிசம் தேர்தல்முறை மூலமும், தேர்தல் ஜனநாயக வடிவிலும் இருக்க முடியும் என்பதையும், இன்று பல நாடுகளில் இதுவே ஆட்சிமுறையாக மாறி இருப்பதை காட்டுகின்றது. இதில் ஏற்படும் சில பண்பு மாற்றங்கள் போதும், கிட்லரின் ஆட்சிமுறைமைக்கு நிகராக மாறுவதற்கு. அமெரிக்க தேர்தல்; முடிவுகள் - இதையொட்டி தான் உலகை இரண்டுபட வைத்துள்ளது.

இதற்காகவே அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களையும், பல்லின மக்களையும் தங்கள் எதிரியாக காட்டியது. மக்களுடன் கூடிவாழும் அமெரிக்க கலாச்சாரங்களை வெறுக்கும் பிரச்சாரம் தூண்டிவிடப்பட்டது. மதம், இனம், பால், நிறம் .. என்று எல்லாவிதமான குறுகிய மனப்பாங்குகளும் கிளறிவிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவ பாலியல் கோட்பாட்டை மீறிய பாலியல் உறவை எல்லாம், கிறிஸ்துவத்துக்கு எதிரானதாக முன்னிறுத்தி இருக்கின்றது. இதை அடிப்படையாகக் கொண்ட தேர்தல்முறையும், இதற்காக வாக்களிக்கும் மனநிலையும், ஜனநாயகமாக போற்றப்பட்டு – அதற்கு வாக்களிக்க கோரப்பட்டது. இது தோற்றுப் போவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று, மனித நாகரீகத்துக்கு அடிப்படையான ஜனநாயகத்தை சவாலுக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

இதுதான் அமெரிக்க மேலாதிக்க மனநிலை என்று கருதுமளவுக்கு, வர்க்க ரீதியான அமெரிக்க உலக மேலாதிக்கமே உலக ஒழுங்கு என்று கூறுமளவுக்கு – பிறநாடுகளின் சுயாதீனத்தை மறுதளிக்கும் உரிமையை அமெரிக்கா கொண்டுள்ளது என்பதையே - அமெரிக்கத் தேர்தல் வாக்களிப்பு முறையிலும் வெளிப்படுத்தியுள்ளது.

உலகில் அமெரிக்க மேலாதிக்கத்தை தொடர்ந்து பாதுகாக்கவும் – இதற்காக அமெரிக்கா கையாளும் கெடுபிடியான இராணுவக் கொள்கைகளை, அதை எந்த வழியில் கையாளுவது என்பது இந்த தேர்தல் முடிவுகளுடன் பொருந்தி வெளிப்படுகின்றது. அமெரிக்க நலன் சார்ந்து உருவாகி வந்த கெடுபிடியான பிராந்திய நாடுகளின் யுத்த சூழல்கள், அமெரிக்க தேர்தல் முடிவுகளுடன் இணைந்ததே.

அமெரிக்காவின் ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, உலக மக்களையும் அச்சுறுத்தும் அமெரிக்க கொள்கைகளே, தேர்தல் முடிவுகளாக பிரதிபலிக்கின்றது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடியாக மாறி வரும் சந்தையானது, இராணுவ வழிகளில் நகர்வதை இன்றைய உலக ஒழுங்கு துரிதமாக்கி இருக்கின்றது. இது சீனாவுடன் மட்டுமல்ல, மேற்குடன் கூட அமெரிக்கா உடன்பாடு காண முடியாத நெருக்கடிக்குள், அமெரிக்க மூலதனம் சிக்கி இருக்கின்றது.

நாளைய மனித அவலங்கள் எந்தளவுக்கானது என்பதை, அமெரிக்காவில் அதிகாரத்துக்கு யார், எந்த ஜனநாயக வடிவத்தில் வருகின்றனர் என்பதே தீர்மானிக்க இருக்கின்றது.

பின் குறிப்பு

அமெரிக்க தேர்தல்முறையே, ஜனநாயக அறிவியல் அடிப்படையில் மோசடியானது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அது நிராகரிக்கப்படுகின்றது. மாறாக பிராந்திய பிரதிநிதிகளே யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கின்றனர். இந்தப் பிரதிநிதிகள் தெரிவே ஜனநாயக முறைமைக்கு முரணானது. அதாவது சிறுபான்மை பெற்ற வாக்குகளுக்;கான பிரதிநிதித்துவத்தை மறுதளித்து, அதை பெரும்பான்மைக்கு கொடுக்கப்படுகின்றது. அதாவது வாக்குகள் மூலம் பெரும்பான்;மை பெறமுடியாத சிறுபான்மைக்கு, எந்தப் பிரதிநிதித்துவமும் கிடையாது. இவர்கள் தான் ஜனாதிபதியை தெரிவு செய்கின்றனர்.