தில்லையில் ஒடுக்கப்பட்ட தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து நிறுத்தும் பார்ப்பனிய சமஸ்கிருதம். கிளிநொச்சியில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவன் தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து நிறுத்துகின்றது வெள்ளாளியம்.


 இந்த வெள்ளாளிய இந்துத்துவம், இந்திய அனுசரணையுடன் காவிமயமாகும் அண்மையப் போக்குக்கு எடுத்துக்காட்டு.

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில், ஒரு மாணவனுக்கு நடந்தேறியது இந்த ஒடுக்குமுறை. இந்த வெள்ளாளிய சாதிய ஒடுக்குமுறையை ஆதரித்து - இதற்கு எதிர்வினையின்றி தன்னை முன்னிறுத்துவதே - வெள்ளாளிய தமிழ் தேசியம். தமிழன் என்று கூறி வாக்குகள் சேகரிக்கும் பாராளுமன்ற வாக்குக் கட்சிகள் முதல் விபூதிப் பட்டை நாமம் அடித்தபடி ஆதி மொழி "தமிழ்" பற்றி பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்கும் இனவாதக் கூட்டம் வரை, தமிழனைத் தமிழன் சாதி ரீதியாக ஒடுக்குவதை அங்கீகரிக்கின்றது.

தமிழன் "ஒற்றுமை", "தமிழ் தேசியம்", "துரோகிகள்" என்று, எதற்கெடுத்தாலும் கூச்சல் போடும் கூட்டத்தின் கள்ள மௌனம், வெள்ளாளிய சமூக ஒழுங்கையும் - அதன் அடிப்படையிலான ஒடுக்குமுறையையும் அங்கீகரிப்பது தான்.

புலிகள் தங்கள் காலத்தில் இந்த வெள்ளாளிய சமூக ஒடுக்குமுறையிலான ஒழுங்கை மீற முடியாத தண்டனை முறை மூலம் ஒடுக்கியதன் மூலம் - பேணிய அமைதியை - புலிகளின் சாதி ஒழிப்பாக பீற்றுகின்ற அரைவேக்காட்டு வெள்ளாளியத் தனத்தையே – அப்படியே இன்று வெள்ளாளியம் முன்னிறுத்துகின்றது. அதை மீறுகின்ற சிறுவனின் நடத்தையை - புலிகள் பாணியில் நியாயப்படுத்த வெள்ளாளிய கோயில் நிர்வாக சட்டங்கள் - ஒழுங்குகள் குறித்து, வெள்ளாளிய புலிகளைப் போல் பிதற்றி ஒடுக்கினர்.

தமிழகத்தில் முரளிதரன் முத்தையாவை "துரோகியாக" காட்டி, முன்னிறுத்திய தமிழ் சங்கிகளுக்கு, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் இந்த ஒடுக்குமுறை வெள்ளாளியமாக தெரிவதில்;லை. அவர்களுக்கு இது ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் ஒற்றுமையைக் குழப்பும் செயல். அவர்களைப் பொறுத்த வரை இந்த வெள்ளாளிய ஒடுக்குமுறையை கேள்வி கேட்பது "துரோகம்". தமிழனின் ஒற்றுமையை குலைக்கும் சிங்களக் கைக் "கூலித்தனம்". இது தான் வெள்ளாளிய தமிழ் தேசியம் பேசுகின்றவனின் அரசியல் நிலைப்பாடு. இதுதான் தமிழக தமிழ்ச் சங்கிகளின் நிலைப்பாடும் கூட.

கோயிலுக்குள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவன் பாடக்கூடாது என்பதை, தமிழ் மக்களை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதம் செய்யவில்லை. தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளியம் ஒடுக்குகின்றது.

கோயில்களில் வெள்ளாளிய சமூக ஒழுங்கைப் பேண நிர்வாகங்கள். கடவுளை வழிபடுபவன் தலையிட உரிமையில்லை என்று வாதிட, கடவுக்கும் வழிபடுவனுக்கும் இடையில் சாதி வெறி பிடித்த, "புனிதத்தை" முன்வைக்கும் வெள்ளாளிய ஒடுக்குமுறையாளர்கள். ஒடுக்கும் தங்கள் சாதியைச் சேர்ந்தவரை முன்னிறுத்தி, இதுதான் கோயில் ஒழுங்கு என்று வெள்ளாளியத்துக்கு "ஜனநாயக" பொழிப்புரைகள் வழங்குகின்றனர்.

நாங்கள் சாதி பார்ப்பதில்லை!, எங்கே சாதியம்?, எங்கே வெள்ளாளியம்? என்று மேலே அண்ணார்ந்து பார்த்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் கூட்டம், வெள்ளாளிய சமூக ஒடுக்குமுறைகள் அம்பலமாகும் போது சாதியப் பொந்துக்குள் ஒழித்துக் கொள்கின்றனர்.

"கருவறைக்குள் (மூலஸ்தானத்துக்குள்)" நுழைய முடியாது என்று புனிதம் பேசும் வெள்ளாளியக் கூட்டம் தான், வெள்ளாளிய சமூக அமைப்பின் அடித்தளம்;. அது சாதி அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. "புனிதம்" என்பது பிறப்பில் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது.

கோயில்களைச் சுற்றி செருப்பு அணிவதை தடுக்கும், மேற்சட்டையைக் கழட்டு என்று வில்லங்கமாக வில்லத்தனம் செய்யும் "புனிதங்களின்" பின் இருப்தெல்லாம் தடித்துப் போன வெள்ளாளியம் தான்.

தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகின்ற வெள்ளாளிய ஒடுக்குமுறைக்கான வடிவங்கள். இங்கு "புனிதம்" சுகாதாரத்தைக் குறிப்பதில்லை, பிறப்பைக் குறிக்கின்றது. எந்தச் சாதி என்ற அடிப்படையிலும், ஆண் பெண் என்ற வேறுபாட்டிலும் கட்டமைக்கப்படுகின்றது.

திருமணத்தில் கூட இரு நபர்கள் தங்கள் தனிமனித சுதந்திரம் என்ற சட்டமுறையை கொண்டு (வெள்ளாளிய சமூக முறையைக் கொண்டல்ல) மீறிவிட முடியும். கோயில்களில், இதன் கருவறைகளில் அதை மீறிவிட முடியாது. இந்த வெள்ளாளிய சமூக ஒழுங்கை கிளிநொச்சியில் பெரியபரந்தன் பிள்ளையார் கோயில் நடைமுறைப்படுத்த முனைந்து அம்பலமாகி இருக்கின்றது.

இன்று பல கோயில்களில் இது போன்ற பல வெள்ளாளிய சமூக ஒழுங்குகள் - தமிழனைத் தமிழன் ஒடுக்கும் ஒடுக்குமுறையாக தொடருகின்ற அதேநேரம் - இதைக் கடைப்பிடிக்காத இடங்களில் புதிய ஒடுக்குமுறையாக மாறியும் வருகின்றது.