வரலாற்றைப் புரட்டிப் போட்டால் வன்முறையும் – வெள்ளாளியத் தமிழ் தேசியத்தின் பெயரில் ஒடுக்கிய வக்கிரமுமே, வரலாறாக இருப்பதைக் காணமுடியும். அமைதிவழி, ஜனநாயகவழி போராட்டமெல்லாம் - வன்முறை அடிப்படைகள் மீதுதான் நடந்தேறுகின்றது.

அமைதிவழி ஜனநாயக போராட்டம் என்பது பித்தலாட்டங்களாலானது. ஹர்த்தால்களை செய்ய மறுத்தால், அதை எதிர்த்தால் துரோகியாக்கப்படும். இங்கு ஜனநாயகத்திற்கோ, அமைதிக்கோ இடமில்லை. மாறாக இவை துரோகமாகும். சுடும் அதிகாரம் இருந்தால், சுட்டுக்கொல்லப்பட வேண்டிய துரோகிகள்;. அந்த அதிகாரத்தையே தமிழ் தேசியத்தின் பெயரில் கோருகின்றனர், கடந்தகாலத்தில் அதை முன்னின்று செய்தவர்களை கொண்டாடவும் முனைகின்றனர். இதற்காக முன்னெடுக்கும் ஹர்த்தால்கள், கடந்தகால வன்முறை வரலாற்றுப் பின்னணியில் மேடையேறுகின்றது. இதற்கு பெயர் அமைதிவழி – ஜனநாயகவழி போராட்டம்.

தமிழ் மக்களைக் கொன்று அவர்களை ஓடுக்கியவனை கொண்டாட பேரினவாத அரசு அனுமதிக்க மறுப்பதால், ஒடுக்கப்

பட்ட தமிழன் அதை ஆதரிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயமானது. புலிகள் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கி அதன் தலைவர்களை கொன்றபடி, அரசு தம்மையும் மக்களையும் கொல்வதைக் காட்டியே பாசிசத்தை நிறுவினர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் போராட்டத்தை ஒடுக்கி, தாங்களும் அழிந்த வரலாற்றுக்கு நிகரானது, இன்றைய ஹர்த்தால்களின் அரசியல் பின்னணி.

மரணித்தவர்களை நினைவுகொள்ள முடியாதா என்று கேட்கின்றவர்கள் அறியாமையில் இருந்து அக் கேள்வியை முன்வைப்பதில்லை. மாறாக பார்ப்பனிய வழி வந்த யாழ்ப்;பாணிய வெள்ளாளியமானது, ஒடுக்கப்பட்ட தமிழனின் நினைவுகளை நினைவுகொள்வதை மறுத்து, ஒடுக்கியவனுக்கு நினைவு கொள்வதை ஏற்றுக்கொள்ளுமாறு கோருகின்றது. ஹர்த்தால் மூலம் பொது மக்களை மிரட்டுகின்றது. ஹர்த்தாலின் உள்ளடக்கம் இதுதான். திலீபன் உள்ளிட்ட கொலைகாரக் கும்பல், ஓடுக்கப்பட்ட மக்களை கொன்று குவித்ததைக் கொண்டாடக் கோருகின்றனர். "அசுரர்களை" கொன்ற "தேவர்கள்" பார்ப்பனியத்தின் வெற்றியாக எப்படி இன்று கொண்டாடப்படுகின்றனரோ, அப்படி வெள்ளாளியம் தன் வன்முறையிலான சமூக ஆதிக்கத்தை முன்னிறுத்த உதவிய கொலைகாரனைக் கொண்டாட முனைகின்றது.

தமிழ் மக்கள் மீதான அக்கறை உண்மையாக இருந்தால் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய ஒரு நினைவுநாளை பிரகடனம் செய்ய வேண்டும். அதை முன்னிறுத்தி எல்லா ஓடுக்குமுறையாளர்களையும் இனம் கண்டு, எல்லாவிதமான ஓடுக்குமுறைகளையும் எதிர்த்து ஓடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை பிரகடனம் செய்யவேண்டும். அதை செய்வதற்கு எந்த வெள்ளாளிய தமிழ் தேசிய தலைமையும் தயாராகவில்லை. ஒடுக்குபவனை கொண்டாடக் கோருகின்றது. அதை உரிமை போராட்டமாக முன்வைக்கின்றது.

இப்படி ஓடுக்கப்பட்ட தமிழ்மக்களின் நினைவுகளை நினைவுகொள்வதை மறுக்கும் வெள்ளாளியத் தமிழ் தேசிய அரசியல் வழியில், பேரினவாத அரசும் செயற்படுகின்றது.

ஹர்த்தால்களை மீளவும் தங்கள் சுயநல தேர்தல் அரசியல் நலனுக்காக, கடந்த வரலாற்றில் இருந்து மீளக் கொண்டு வருகின்றனர்.

ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசங்கள், தேசிய இனங்களின் நலன்களில் இருந்தல்ல ஹர்த்தால். தமிழனைத் தமிழனாய் நின்று ஒடுக்குகின்றவனின் ஒற்றுமையும், அவன் நடத்தும் ஹர்த்தால்களும் - தங்கள் தனிப்பட்ட தேர்தல் அரசியல் நலனுக்கானவை. 2020 தேர்தலில் தோற்றுப்போனவர்களும், இவர்களால் "துரோகியாக" கருதியவர்களின் தேர்தல் வெற்றிகளையும் - இனிவரும் அரசியலில் தோற்கடிக்க நடத்தும் சதியே – கொலைகாரன் தீலிபனுக்காக நடத்தும் அரசியல்.

(ரெலோ இயக்கப் போராளிகளை சுட்டு தெருக்களில் ரயர் போட்டுக் கொளுத்திய களிப்பில் தனது கொலையாளிகளுடன் யாழ் பஸ் நிலையத்தில் திலீபன்)

இதையே 1970 களில் தேர்தலில் தோற்றபோது செய்தனர். தோற்றவர்கள் ஒன்றுபட்ட தமிழ் தேசியத்தை முன்வைத்து 1972.05.22 இல் "தமிழர் கூட்டணி" யை உருவாக்கி, தாம் அல்லாதவரை துரோகியாக அறிவித்து – அவர்களை கொல்லவும் செய்தனர். இன்று மீண்டும் அதைத்தான் தமிழ்தேசிய ஒற்றுமையின் பெயரால் - தமிழ் மக்களையே கொன்று குவித்த கொலைகாரன் திலீபனின் பெயரால் மீள அரங்கேற்ற முனைகின்றனர்.

ஹர்த்தால் அறிவித்து அதன் நடைமுறையை கடந்தகாலத்தின் துப்பாக்கி முனையில் மிரட்டிய வரலாற்றின் தொடர்ச்சியிலேயே மேடையேற்றுகின்றனர். மக்களை மிரட்டி ஓடுக்கிய கடந்நகால வரலாற்று அச்சத்தில் மக்கள் முடங்கி போகின்றனர். யாழ் பல்கலைக்கழக வரலாறு தெரியாத லும்பன்கள், தேர்தல் கட்சிகளின் சுயநலத்துக்காக - ஹர்த்தால் அழைப்பு விடுக்கின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தை அமைக்கக் கூடாது என்று தமிழ்தேசியத்தின் பெயரில் எதிர்த்தவர்கள், 1974 இதன் முதலாவது பீடாதிபதியான கைலாசபதிக்கு குண்டு வீசியவர்களும், குண்டு வீசியவர்களின் வாரிசுகள் ஹர்த்தால்களை நடத்துகின்றனர். 1986 களில் மக்களுக்கு எதிரான இயக்கங்களின் வன்முறையும், ஜனநாயக மறுப்பையும் எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராடியதும் - அதில் பலர் பின்னால் புலிகளால் கொல்லப்பட்ட வரலாற்றில் இருந்து, கற்றுக்கொள்ள முடியாத பல்கலைக்கழக கற்றுக்குட்டிகள் - சமூகத்தை குறித்து அக்கறை கொள்வதற்கு – அதனிடம் லெட்டர்கெட்டைத் தவிர - சொந்தமாக எதுவும் இருப்பதில்லை.

1970 களில் மாவை சேனாதிராசா பெயர் போன சதிகாரனாக அரங்கேற்றிய பக்கங்;களையே மீளவும் உருவாக்க முனைகின்றான்.

1965 இல் தமிழரசுக்கட்சியும், தமிழ் காங்கிரசும் யூ.என்.பி அரசில் மந்திரிப் பதவிகளை பெற்று கொண்டு – யாழ் மாவட்டத்தில் நடத்த சாதிய போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் ஓடுக்கினர். 1970 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் முன்னனித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும், தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலமும்; தோற்றுப் போக, பல தேர்தல் தொகுதிகளில் கடுமையான போட்டியின் மத்தியில் தான் வெற்றி பெற முடிந்தது.

எதிர்கால தேர்தலில் தோல்வியைத் தடுக்க ஒன்றுபட்ட கட்சியாக "தமிழர் கூட்டணியை" உருவாக்கிய, தாம் அல்லாதவர்களை துரோகியாக அறிவித்துடன் - அவர்களை கொன்றனர். இதை வழிநடத்திய அமிர்தலிங்கம் வழியில் வந்த பிரபாகரன், 1980 களில் தன் சிந்தனைமுறைக்கு முரணான அனைத்தையும் துரோகமாக்கி கொல்லத் தொடங்கினான்;.

1970 களில் அரங்கேறிய இந்த அரசியலை முன்னெடுத்தவர்களில் மாவை சேனாதிராசா முக்கியமானவன். வன்முறைக்காக 03.01.1973 இல் தமிழ் இளைஞர் பேரவை உருவானது. இது தேர்தல் அரசியல் நோக்கம் கடந்த வன்முறையை நாடிய போது, மாவை சேனாதிராசா அதை இழுத்துப் பிடித்து இடதுசாரிய சிந்தனை உள்ளவர்களை தனிமைப்படுத்தி ஒடுக்கிய வலதுசாரிய சதிகாரன். இதில் இருந்து விலகியவர்கள் 14.06.1975 இல் "தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை" தோற்றிய போது, அதையும் தன் தேர்தல் அரசியலுக்குள் வளைத்து அதை அழித்த பின்னணியில் மாவை சேனாதிராசா இருந்துள்ளான். தங்களை கேள்வி கேட்காத தனிநபர் வன்முறைக்கு பிரபாகரன் உருவாக்கப்பட்டான். தனிநபர் கொலையாளியைக் கொண்டு வரலாற்றை உருவாக்கிய பின்னணியில் மாவை சேனாதிராசா இயங்கினான். இன்று மீளவும் அதை – தன் மகனின் வாரிசு அரசியலுக்காக மீள கையில் எடுத்துள்ளான். தன் மகனுக்காக ஹர்த்தாலை நடத்தி முடித்திருக்கின்றான்.