இலங்கைப் பாராளுமன்றத்தில் "தேசம்" குறித்தும் - "சுயநிர்ணயம்" குறித்தும், யாழ் வெள்ளாளியப் பன்னாடைகள் தங்கள் அரசியல் பித்தலாட்டத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். காலாகாலமாக "தமிழனை" ஏமாற்றும் இந்த அரசியல் மோசடிகள் - புது வேசம் போட்டுக் கொண்டு பொம்மலாட்டமாக மேடை ஏறியிருகின்றது. மூச்சுக்கு மூச்சு தமிழ் இனவாதம் பேசும் கூட்டம், அதற்கு ஒளிவட்டம் போட்டு - கும்மி அடிக்கின்றது.

இன – தேச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது என்பது நடைமுறை சார்ந்தது. அதிலும் தேசம், சுயநிர்ணயம் என்று அரசியல் ரீதியான உள்ளடக்கத்துடன் போராடுவது என்பது, வர்க்க அடிப்படையிலானது.

இந்த வகையில் சுயநிர்ணயத்துக்கு உரிய தேசமானது, அடிப்படையில் அக ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுகின்ற – வர்க்க அரசியல் இயக்கமாகவே இருக்க முடியும். இதை விடுத்து வெற்றுக் கோசங்களைப் போடுவது என்பது அரசியல்ரீதியாக போலியானதும், புரட்டுத்தனமானதுமாகும்.

இங்கு இன ஒடுக்குமுறை தமிழ் மொழி சார்ந்ததாக இருக்க, யாழ் மையவாத தேர்தல் அரசியலோ, கூனிக் குறுகிய தமிழ் இனவாதமாக – புலி வேசம் போட்ட தேர்தல் வெற்றி மூலம் - பாராளுமன்றத்தில் பினாற்றுகின்றது.

தன்னால் ஒடுக்கப்படும் தனது சொந்த தேச - இன அக ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசாது, தான் ஒடுக்கப்படுவது பற்றி பேசுவது என்பது, யாழ் வெள்ளாளியத் தேர்தல் அரசியலாகும். இந்த பித்தலாட்டம் அரசியல் நவதாராளவாத ஒடுக்குமுறையை பற்றி வாய்திறக்காது, இவர்கள் பேசும் தேசம் - சுயநிர்ணயம் என்பது எல்லாhம் அரசியல்ரீதியாக சுத்த மோசடி.

இலங்கையில் இரு தேசங்கள் இருப்பதும், நான்கு தேசிய இனங்கள் இருப்பதும், தேசங்கள் சுயநிர்ணய அடிப்படையைக் கொண்டன என்ற அரசியல் வரையறை - இடதுசாரிய வர்க்க கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருபவை.

இந்த அடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்கு தீர்வு என்பது, பாராளுமன்ற தேர்தல் அரசியல் மூலம் சாத்தியமற்றது. வர்க்கப் போராட்டத்தின் மூலம் இன முரண்பாடுகளுக்கு தீர்வாக முன்வைக்கப்படும் - அரசியல் வரையறை.

இந்த வர்க்க அரசியலை தங்கள் பாராளுமன்ற கதிரை அரசியலுக்காக – நடைமுறையற்ற தங்கள் பிதற்றல்கள் மூலம் உசுப்பேற்றுகின்றதன் அரசியல் நோக்கம், தேசம் - சுயநிர்ணயம் கொண்டு இருக்கும் வர்க்க அரசியல் சாரத்தை உறிஞ்சிவிடுகின்ற வக்கிரத்தையே பாராளுமன்றத்தில் உளறியிருக்கின்றனர்.

தமிழனைத் தமிழன் ஒடுக்கும் அரசியல் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று பிழைக்கும் இந்த அரசியல் பொறுக்கிகள், தேசம் - சுயநிர்ணயம் கொண்டிருக்கக் கூடிய நடைமுறை உண்மைகளை அரசியல்ரீதியாக அழித்துவிடுகின்ற – அரசியலைத் தான் பாராளுமன்றத்தில் தொடங்கி இருக்கின்றனர்.

இன ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை மறுக்க, ஒடுக்கும் தமிழனின் தலைமையில் எதை கடந்த காலத்தில் செய்தனரோ - அதை மறுபடியும் தொடங்கி இருக்கின்றனர்.

கடந்தகாலத்தில் ஒடுக்கும் தமிழனின் தவறான அரசியலும்; - அதன் போராட்டமும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கோவணத்தைக் கூட விட்டுவைக்கவில்லை. இதுதான் வரலாற்று உண்மை. இதையே மறுபடியும் தொடங்கி இருக்கின்றனர்.