Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிரமலை கள்ளர் சாதியை சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் செல்ல மகள். எது கேட்டாலும் என் அப்பா வாங்கிக் கொடுப்பார்.

 

அதே நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது என்கிற கடுமையான கட்டுப்பாடும் உண்டு. இந்த கட்டுப்பாடு எப்போது விதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. பிறந்தது முதல் இருந்தது போன்றுதான் உணர்கிறேன்.பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பொள்ளாச்சியில் அமைந்துள்ள பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் 2014ம் ஆண்டு பி.இ. முதலாம் ஆண்டு சேர்ந்தேன். அங்குதான் சங்கர் மூன்றாம் ஆண்டு பி.இ. படித்து வந்தான். சங்கர், பழனி அருகில் உள்ள கொமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்தவன். எப்போதும் துருதுருவென்றும் அதே நேரத்தில் கரிசனையும் அன்பும் கலந்த குணத்தோடு அவனது அணுகுமுறை இருக்கும். ஒரு நாள் சங்கர் என்னிடம் வந்து நீங்கள் யாரையாவது லவ் பண்றீங்களா? என்று கேட்டான். இல்லை என்றேன். உங்களை எனக்கு பிடித்திருக்கு என்றான். நான் அவனிடத்தில் நட்புடன் பழகலாமே, அதை கடந்து காதல் என்றெல்லாம் என்னிடம் பழக வேண்டாம் என்று கூறினேன். அவன் அமைதியாக சாரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.சங்கர் என்னிடம் காதலை சொல்லத்தான் வந்தான் என்று சொன்னாலும் அதை நான் மறுத்தபோது அவனிடம் தென்படாத அந்த கோபம் எனக்கு பிடித்திருந்தது. இருவரும் நட்புடன் பேசிக் கொள்வோம். ஒருநாள் அவனது குடும்பத்தை குறித்து விசாரித்தேன். அவனக்கு அம்மா இல்லை, அப்பாவும் இரண்டு தம்பிகளும் மட்டும்தான் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டேன். சங்கரிடம் ஒரு குணம் உண்டு. பெண் பிள்ளைகளிடம் ஒருவிதமான வரையறையுடன் மரியாதையுடன் பேசுவான் பழகுவான்.


சில நாட்கள் கடந்து மறுபடியும் சங்கர் என்னிடத்தில் நான் உங்களை ஹர்ட் பண்ணியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்றான். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். முதலில் மறுப்பு தெரிவித்த நான், இரண்டாவது முறை சங்கரிடத்தில் ஏன் மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தேன் என்பதை என்னால் உணர முடிந்தது. அவன் மீது அன்பை கடந்து ஒரு மரியாதையும் இருந்தது. கன்னியமான நடத்தைதான் காதலின் அணுகுமுறை என்று சங்கர் எனக்குள் உணர்த்தியிருந்தான்.


நட்புடன் பழகி வந்த நான் ஒரு கட்டத்தில் சங்கரின் காதலை ஏற்றுக் கொண்டேன். ஒரு நாள் அவனிடத்தில், என்னை ஏன் உனக்கு ரொம்ப பிடிக்கும்? என்றேன். நீ என் அம்மா போன்று இருக்கிறாய் என்றான். எனக்கு அப்போது வயது 17. அவன் என்மீது அன்பு ரீதியாக உணர்த்திய அந்த பொறுப்பினை தாங்கும் சக்தி கூட எனக்கு இல்லை. பேச்சு வரவில்லை. லேசாக கண்ணீர் எட்டி பார்த்தது.நானும் சங்கரும் காதலில் வரையறையை கடைபிடித்து வந்தோம். நேரில் குறைவாகத்தான் பேசிக் கொள்வோம். அலைபேசியிலும் குறுந்த தகவலிலும் அதிகமாக உரையாடியிருக்கிறோம். நான் பி.இ. படிப்பினை கடந்து ஜாப்பனிஷ் மொழி குறித்து தனியாக பயின்று வந்தேன். ஒரு நாள் வகுப்பு முடிய கால தாமதமாகிவிட்டது. இரவு 7.30 மணியிருக்கும் எனக்காக காத்திருந்த சங்கர் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை என்னுடன் பஸ்ஸில் வந்தான். அதை கவனித்த யாரோ என் அம்மாவிடம், உன் மகளோடு யாரோ ஒரு பையன் பேசி வருகிறான் என்று சொல்லிவிட்டார்கள்.என் அம்மா, சங்கர் குறித்து என்னிடம் விசாரித்தார். என் அம்மாவின் முதல் கேள்வி என்ன தெரியுமா? சங்கர் என்ன சாதி. பள்ளர் சமூகத்தை சேர்ந்தவன் என்றேன். அவனோடு நீ எப்படி நட்புடன் பழகலாம். அவனோடு நீ பேசுவது நம்ம சாதி ஆட்களுக்கு தெரிந்தால் நம் குடும்பதை கேவலமாக பேசுவார்கள் என்றார்.பேசுவதற்கே சாதி வன்மம் காட்டுகிற என் அம்மா, நான் சங்கரை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்பதை தெரிந்து கொண்டால் என்ன செய்வாரோ என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அதை வாட்ஸ்அப் மூலம் சங்கருக்கு தெரியப்படுத்தியிருந்தேன். சங்கர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். அந்த உணர்ச்சியில் கோபமில்லை. ஆழமான அன்பு இருந்தது. என் அம்மாவை இழந்தது போன்று உன்னையும் நான் இழந்துவிடுவேனா? என்று பதிலுக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.நான் சங்கரோடு பேசுகிறேன் பழகுகிறேன் என்பதை என் குடும்பத்தினருக்கும் என் நெருங்கிய உறவினர்களுக்கும் தெரிய வந்தது. சங்கரை சாதி ரீதியாக இழிவாக பேசினார்கள். என்னையும் இழிவுபடுத்தி தாக்கினார்கள். எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று பேசிக் கொண்டனர்.


எனக்கு வேறு வழி தெரியவில்லை. சங்கரை திருமணம் செய்யவில்லை என்றால் நம்மை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று பயந்தேன். சங்கர் படிப்பினை முடிக்க 9 மாதம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் தான் சங்கர் வேலைக்கு செல்ல முடியும். அதற்கு முன் திருமணம் செய்து கொண்டால் குடும்பத்தை எப்படி நடத்துவது? என்கிற கவலையும் வந்தது. இதுகுறித்தெல்லாம் நானும் சங்கரும் பேசிக் கொண்டோம். நான்தான் சங்கருக்கு தைரியம் சொன்னேன். நீ படி. நான் வேலைக்கு செல்கிறேன். நீ படித்து முடித்தவுடன் நீ வேலைக்கு போ எல்லாம் சரியாகிவிடும் என்றேன். சங்கர் உன்னை எப்படி நான் வேலைக்கு அனுப்புவது என்று கேட்டான். வேறுவழியில்லை என்று அவனுக்கு நிலைமையை புரிய வைத்தேன்.
சங்கரின் நண்பர்கள் திருமணம் நடத்தி வைக்கிறோம் என்று உறுதியளித்தனர். கடந்த 11.07.2015 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் என் வீட்டைவிட்டு வெளியேறினேன். சங்கர் எனக்காக காத்திருந்தான். நாங்கள் இருவரும் சங்கரின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றோம். ஒரு நாள் மட்டும் தங்குவதற்கு அனுமதி கேட்டோம். அவர்களும் அனுமதித்தனர்.

?

மறுநாள் 12.07.2015 அன்று காலை 6.30 மணியளவில் பழனி பாதவிநாயகர் கோவிலில் நானும் சங்கரும் திருமணம் செய்து கொண்டோம். சங்கரின் நண்பர்கள் 20 பேர் வந்திருந்தனர்.


என் அப்பா சின்னசாமி, பழனி காவல்நிலையத்தில் சங்கர் என்னை கடத்திச் சென்றதாக புகார் கொடுத்திருந்தார். இந்த விபரம் எங்களுக்கு தெரிய வந்தது. நானும் சங்கரும் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு காலை 9.00 மணியளவில் சென்றிருந்தோம். எங்களோடு சங்கரின் நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் என் குடும்பத்தினரால் எனக்கும் என் கணவர் சங்கருக்கும் ஆபத்து இருக்கிறது என்று புகார் தெரிவித்தேன். போலீசார் சங்கரின் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் அலைபேசி மூலமாக தகவல் சொன்னார்கள். சங்கரின் அப்பா, உறவினர்கள் என்று அவனது தரப்பில் 20 பேர் வந்திருந்தனர். அதேபோன்று என் குடும்பத்தைச் சேர்ந்த என் அப்பா, அம்மா, என் பாட்டி கோதையம்மாள், என் அத்தைகள் வனிதா, உமா என்று சுமார் 15 பேர் வந்திருந்தனர். போலீசார் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அங்கிருந்த காவல் ஆய்வாளர் என்னைப் பார்த்து, உன் குடும்பத்தினரை விட்டு இப்படி திருட்டுத்தனமாக திருமணம் செய்திருப்பது நியாயமா? ஆசை 60 நாள், மோகம் 30 நாள். நீ வசதியுடன் வாழ்ந்த பெண். நீ கல்யாணம் செய்திருக்கிற அந்த பையன் வசதியில்லாதன். எப்படி வாழ்வாய் என்று கேட்டார். அதற்கு நான், நாங்கள் இருவரும் உறுதியுடன் இருக்கிறோம். எந்தவிதமான சிரமம் இருந்தாலும் வாழ்க்கை நன்றாக வாழ்வோம் என்று கூறினேன். என் அப்பா கோபமாக என் மகள் செத்துவிட்டாள். இனி அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லை என்றார். என் அத்தை என்னிடத்தில், உனக்கு நம்ம சாதியில பையன் வேண்டாம் என்றுதானே கீழ்சாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்ட. நாங்க உனக்கு போட்டிருக்கிற நகையெல்லாம் கழட்டிக் கொடு என்றார். நான் என்னுடைய செயின், வளையல், கொலுசு, புடவை, செருப்பு என்று அனைத்தையும் கழட்டிக் கொடுத்தேன். என் கணவர் சங்கர் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்து கொண்டேன். காவல்நிலையத்தில் ஒரு அறையில் என் குடும்பத்தினர் வாங்கிக் கொடுத்த உடைமைகளை கழட்டும் போது சாதி எந்த அளவிற்கு நம்மை அவமானப்படுத்துகிறது என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.நான் உறுதியாக இருந்ததனால் வேறு வழியில்லாமல் போலீசார் என் தந்தையிடம் இனிமேல் கௌசல்யாவிற்கும் சங்கருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். அவர்களது வாழ்க்கையில் குறுக்கீடு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கினார்கள். நான் என் கணவர் சங்கரோடு வீட்டிற்கு வந்தேன். சங்கரின் அப்பா எனக்கும் அப்பா. சங்கரின் தம்பிகள் எனக்கும் தம்பிகள் என்கிற உணர்வுதான் அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது இருந்தது. அது இன்றுவரை இருக்கிறது.பழனி காவல்நிலையத்தில் சங்கர் என்னை கடத்தியதாக என் அப்பா ஒரு புகார் கொடுத்திருந்தாரல்லவா, அந்த புகாரின் விசாரணைக்காக பழனி நீதிமன்றத்திற்கு 13.07.2015 அன்று நானும் சங்கரும் சென்றிருந்தோம். மாலை 4.30 மணியிருக்கும் நீதிமன்றத்தில் என் அப்பா, என் அம்மா, என் அத்தைகள் வனிதா, உமா, அப்பாவின் அம்மா அம்சவேணி, அப்பாவின் நண்பர் காளிதாஸ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அங்கு நின்றிருந்த போலீசாரிடம் என் குடும்பத்தினர் 5 நிமிடம் கௌசல்யாவிடம் பேசலாமா? என்று கூற, போலீசாரும் பேசுங்கள் என்று கூறினர். என் குடும்பத்தினர் எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு பள்ளப்பயல் கட்டிய தாலியை கழுத்தில் கட்டியிருக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா? மரியாதையாக எங்களோடு வந்துவிடு. இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவோம் என்று பேசினார்கள். நான் அமைதியாக திரும்பிக் கொண்டேன். ஆத்திரமடைந்த என் பாட்டிகளும், என் அத்தைகளும் என் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்திலும், மார்பிலும், முதுகிலும் தாக்கத் தொடங்கினார்கள். நான் நிலை தடுமாறு கீழே விழுந்தேன். சங்கர் பதட்டத்துடன் என் அருகில் வந்து என்னை காப்பாற்ற முயன்றான். போலீசாரும் உடனடியாக வந்து என்னை மீட்டனர்.நீதிமன்றத்தில் என் கணவரோடு செல்ல தான் எனக்கு விருப்பம் என்று கூறினேன். நீதிபதியும் நீங்கள் உங்கள் கணவரோடு வாழலாம் என்று கூறிவிட்டு என் அப்பா கொடுத்திருந்த புகாரினை தள்ளுபடி செய்தார்.என் குடும்பத்தினர் மோசமான சாதி வெறியோடு இருப்பதனால் நானும் சங்கரும் பயந்திருந்தோம். நீதிமன்றத்திற்கு சென்று வீட்டிற்கு வந்த நாங்கள் எங்கள் வீட்டில் படுக்காமல் சங்கரின் உறவினர்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குவோம்.சில நாட்கள் கடந்து என் தாத்தா ஜெயராமன் என்னை பார்க்க வந்தார். எப்படிமா இருக்கிறாய்? கவலைப்படாதே உன் அப்பன், ஆத்தாவுடைய கோபம் கொஞ்ச நாட்களில் போய்விடும் என்று கூறினார். பாசத்துடன் பேசினார். ஒரு நாள் முழுவதும் இருந்துவிட்டு சென்ற என் தாத்தா மறுநாள் கொஞ்சம் கறி எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். மது அருந்தியிருந்தார். தாத்தாவிற்கு உன் கையால சமைச்சு கொடு என்று கூறிவிட்டு திண்ணையில் படுத்துவிட்டார். நானும் சமைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பினேன். போதையில் இருந்த என் தாத்தா, நீ எங்கள் குலசாமி என்றெல்லாம் பேசி கண் கலங்கினார். ஆனால் கடுமையான போதையில் இருந்ததனால் அவரால் சாப்பிட முடியவில்லை. நானே அவருக்கு ஊட்டிவிட்டேன். அவர் கொண்டு வந்திருந்த ஸ்கூட்டி வாகனத்தை எங்கள் வீட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார்.அடுத்த நாள் 23.07.2015 அன்று காலை 11.30 மணியிருக்கும் என் தாத்தா மறுபடியும் வந்தார். என்னிடம் எனக்கு உடம்பு சரியில்லை மடத்துக்குளத்திலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நீயும் என்னுடன் வா என்றார். நான் அவரிடத்தில், நீங்களே போய் வாருங்கள் தாத்தா, எனக்கு வேலை இருக்கு என்றேன். தாத்தாவை சந்தேகப்படுகிறாயா? என்று உரிமையுடன் கோபிக்க வேறு வழியில்லாமல் நானும் சங்கரின் அக்கா முறையான மாரியம்மாள் என்பவரும் என் தாத்தாவோடு அந்த ஸ்கூட்டியின் பின் அமர்ந்து சென்றோம். மடத்துக்குளத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் என் தாத்தா சிகிச்சைக்காக உள்ளே சென்றார். வெளியே வருகிற போது என் தாத்தாவின் நண்பர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் நலம் விசாரித்த தாத்தா இது என் நண்பர். அவர் வீட்டிற்கு நம்மை அழைக்கிறார் என்று கூறிவிட்டு என்னைப் பார்த்து நீ என் ஸ்கூட்டியில் உட்காரு. மாரியம்மாள் என் நண்பரின் வண்டியில் உட்காரட்டும் என்று கூறினார். அதே போன்று நானும் மாரியம்மாளும் இரண்டு சக்கர வாகனங்களில் ஏறி அமர்ந்தோம். ஒன்றாக சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென்று ஒரு சாலையில் திரும்பி என் தாத்தா வேகமாக ஸ்கூட்டியை ஓட்டினார். எங்கு தாத்தா அழைத்துச் செல்கிறாய்? என்று கேட்டுக் கொண்டே வந்தேன். ஒரு காட்டுப்பகுதி போன்று இருந்தது. அங்கு ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் என் அப்பா, அம்மா, என் அப்பாவின் இரண்டு நண்பர்களும் இருந்தனர். அதை கவனித்த நான் ஸ்கூட்டியில் இருந்து கீழே குதித்து ஓட தொடங்கினேன்.


என் அப்பாவும் அவர் நண்பர்களும் என்னை விரட்டி பிடித்து காரில் ஏற்றினார்கள். கார் எங்கெங்கோ சென்றது. பிற்பகல் 3.00 மணியளவில் ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஒரு சாமியார் இருந்தார். அவர் மந்திரித்து ஒரு மருந்தினை கொடுத்தார். அதை சாப்பிடச் சொல்லி என் அப்பாவும் அம்மாவும் தாக்கினார்கள். நான் சாப்பிட மறுத்தேன். அந்த சாமியார் என் அப்பா, அம்மாவிடம் உங்கள் மகளுக்கு மருந்து வைத்திருக்கிறார்கள். அதை எடுக்க வேண்டும் என்று கூறினார்.அதன்பிறகு என்னை அந்த காரில் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லில் உள்ள என் சித்தி ரேவதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு என் அப்பாவும் அம்மாவும் சித்தியும் பள்ளப்பயல கல்யாணம் பண்ணிக் கொண்டு இப்படி நிற்கிறாயே? தேவிடியா என்றெல்லாம் என்னை இழிவாகப் பேசினார்கள். நான் அணிந்திருந்த தாலி, மெட்டி, உடைகள் எல்லாவற்றையும் கழட்டச் சொல்லி அனைத்தையும் தீ வைத்து எரித்தார்கள். நான் மறுத்ததற்கு என் சித்தி என்னை கடுமையாக தாக்கினார். அன்று இரவு என் சித்தி வீட்டில் தங்க வைக்கப்பட்டேன்.


மறுநாள் 24.07.2015 அன்று திண்டுக்கல்லில் உள்ள கேரளா பெண் சாமியார் வீட்டிற்கு என்னை என் அப்பா, அம்மா, என் தாய் மாமா பாண்டித்துரை ஆகியோர் அழைத்துச் சென்றனர். எங்களோடு என் மாமா பாண்டித்துரையின் மனைவி சுமதி, என் சின்ன தாய்மாமா விஜய் (லேட்) அவர்களின் மனைவி சித்ரா, மாமாவின் இரண்டு பசங்க ஆகியோரும் வந்திருந்தனர். அன்று 9.30 மணியளவில் ஏதேதோ பொருட்களை வைத்து அந்த பெண் சாமியார் பூஜை செய்தார்.கொஞ்ச நேரம் கடந்து நடந்த சம்பவத்தை எல்லாம் என் அப்பா, அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று இரவு 12.00 மணியிருக்கும் அந்த பெண் சாமியாருக்கு சாமி வந்தது. இன்னும் ஒரு நாள் உங்கள் மகள் சங்கர் வீட்டில் இருந்திருந்தால் உங்கள் மகளை உயிருடன் பார்த்திருக்க முடியாது என்று கூறினார். என் உறவினர்கள் எல்லோரும் சாமிதான் என் மகளை காப்பாற்றிவிட்டது என்று கூறினார்கள். அந்த கேரள சாமியார் என் கால் கட்டைவிரலில் ஒரு நூலை கட்டிவிட்டார். அந்த வீட்டின் ஒரு அறையில் என்னை படுக்க வைத்தார்கள். சிறிது நேரம் கடந்து என்னுடன் அந்த பெண் சாமியார் அருகில் படுத்துக் கொண்டார்.


என்னிடம் அந்த பெண் சாமியார், நீ நல்ல பெண். உன்னை அந்த பையன் திட்டம் போட்டு ஏமாற்றிவிட்டான். நீயும் சங்கரும் கணவன், மனைவி போன்று இருக்கிறீர்களா? நான் கேட்பது உனக்கு புரிகிறதா? என்றார். நான் அதற்கு ஆமாம் நானும் சங்கரும் கணவன், மனைவி. ஏன் கணவன், மனைவி போன்று இருக்க வேண்டும். நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்கிறோம். தயவுசெய்து நான் கடத்தப்பட்ட தகவலை என் கணவர் சங்கருக்கு தெரியப்படுத்த உதவி செய்யுங்கள் என்றேன். அந்த பெண் சாமியார் அப்படி எல்லாம் என்னால் செய்ய முடியாது. உன் குடும்பத்தினர் என்னை கொன்றே விடுவார்கள் என்றார்.மறுநாள் 25.07.2015 அன்று என் குடும்பத்தினரிடம் அந்த பெண் சாமியார் நான் அவரிடத்தில் சொன்ன தகவலை எல்லாம் கூறிவிட்டார். என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் கிறுக்கு பிடித்தது என்று தான் சொல்வேன். திடீரென்று அந்த பெண் சாமியாரிடம், ஒரு இடத்திற்கு சென்று வருகிறோம் என்று கூறிவிட்டு என்னை அழைத்துக் கொண்டு ஒரு கிராமத்திற்கு சென்றனர். அங்கிருந்த சாமியார் உங்கள் மகளுக்கு மை வைத்துள்ளனர். நான் எடுக்கிறேன் என்று எதோ மந்திரம் போட்டார். பாப்பாளி பழத்தில் உள்ள விதைகள் போன்று எங்கிருந்தோ வந்து கீழே விழுந்தது. பார்த்தீர்களா மருந்தை எடுத்துவிட்டேன் என்று அந்த சாமியார் கூறினார்.மாலை 3.00 மணிக்கு மறுபடியும் என்னை அந்த கேரள பெண் சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்த பெண் சாமியார் தனியாக என்னிடத்தில் எங்கே சென்றீர்கள்? என்று கேட்க, ஏதோ ஒரு சாமியாரிடத்தில் என்னை அழைத்துச் சென்றனர் என்று கூறினேன். அந்த பெண் சாமியார் என்னிடம், உங்கள் அப்பா, அம்மாவிற்கு என் மீது நம்பிக்கையில்லையா? என்று கேட்டார். நான் அமைதியாக இருந்தேன். அந்த பெண் சாமியார் என்ன நினைத்தாரோ, திடீரென்று உன் கணவனின் போன் நம்பர் கொடு என்று வாங்கிக்கொண்டு சங்கருக்கு போன் செய்து உன் மனைவி கௌசல்யா பாதுகாப்பாக இருக்கிறாள் என்று விபரத்தை சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.கேரள பெண் சாமியார் என் குடும்பத்தினரிடம் பட்டும் படாமல் பேசினார். இதனால் என் குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்னை அழைத்துக் கொண்டு என் சித்தி வீட்டிற்கே வந்தனர். அங்கு என் அப்பாவும் என் அத்தை சித்ராவும் என்னை அடித்தனர்.இரவு முழுவதும் என் உறவினர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தூங்காமல் என்னை கண்காணித்துக் கொண்டே இருந்தனர். விடிந்தது. வருசநாட்டில் ஒரு சாமியார் இருக்கிறார். அங்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பேசி முடிவெடுத்தனர். அதனடிப்படையில் 26.07.2015 அன்று என்னை வருசநாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அந்த சாமியார் ஒரு தாயத்து மாதிரி ஒன்றை கொடுத்தார். இதை வேப்பமரத்தில் கட்ட வேண்டுமென்று என் அப்பாவிடம் கூறினார். இன்னொரு சாமியார் மை போன்ற ஒரு கடினமான திரவத்தை என் நெற்றியில் பூசிவிட்டார். சிறிது நேரத்தில் அதை நான் அழித்துவிட்டேன். உனக்கு அந்த பள்ளப்பய உறவுதான் கேக்குதோ? நாங்களெல்லாம் உனக்கு வேண்டாமா? ஒரு கள்ளச்சி வயிற்றில ஒரு பள்ளப்பய குழந்தை வளர்ந்தா அவமானம் என்பது உனக்கு தெரியவில்லையா? உன்னை பெற்று வளர்த்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று என் அப்பா என்னை இழிவாகப்பேசினார். என்னை வருசநாட்டில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.வருசநாட்டில் இருக்கும் போது என் அப்பாவுக்கு மடத்துக்குளம் காவல்நிலையத்திலிருந்து ரமேஷ் என்கிற காவலர் பேசினார். என் அப்பா லவ்டு ஸ்பீக்கரில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த காவலர் ரமேஷ், உங்க மகளை இழுத்துக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுன அந்த பையனும் அவன் அப்பனும் புகார் கொடுத்திருக்காங்க. நிலைமை சீரியசாக இருக்கு உங்க பொண்ண அழைத்துக் கொண்டு வாங்க. ஆனாலும் நீங்க நினைச்சது நடக்கும், இன்ஸ்பெக்டருக்கு இருபதாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வாங்க, உங்க பொண்ணை நல்லா பிரைன் வாஸ் பண்ணி அழைத்துக் கொண்டு வாங்க, அந்த பையனோடு போக விருப்பம் இல்ல. என் அப்பா அம்மாவோடு போகத்தான் விருப்பம் என்று உங்கள் மகள் சொல்ல வேண்டும் என்று கூறினார்.


அன்றிரவு 11.00 மணியளவில் என்னை திருப்பூரில் உள்ள என் பெரியப்பா மோகன் வீட்டிற்கு என் அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் அழைத்துச் சென்றனர். அங்கு நான் தங்க வைக்கப்பட்டிருந்தேன். காலை 8.00 மணியிருக்கும் (27.07.2015) வழக்கறிஞர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் என்னை தனியாக அழைத்து உன் முடிவு என்னம்மா? என்று கேட்டார். நான் என் கணவர் சங்கரோடு செல்லத்தான் விருப்பம் என்றேன். இது உன் வாழ்க்கை பிரச்சனை, யோசித்து முடிவு சொல் என்றார். யோசிப்பதற்கு எதுவும் இல்லை. நான் என் சங்கரோடு தான் வாழ்வேன் என்றேன். அப்படியா என்று கூறிவிட்டு அந்த வழக்கறிஞர் என் அப்பாவை தனியாக அழைத்து ஏதோ பேசினார்.


என் பெரியப்பா மோகன் வீட்டிலிருந்து வேறொரு உறவினர் வீட்டிற்கு பிற்பகல் 12.30 மணியளவில் அழைத்துச் சென்றனர். என் அப்பாவும் என் அம்மாவும் என் தாத்தா ஜெயராமன், என் அப்பாவின் நண்பர்கள் எல்லோரும் உன் முடிவுதான் என்ன? எங்களோடு வரமாட்டாயா? என்று கேட்டனர். தயவுசெய்து என்னை சங்கரோடு வாழ விடுங்கள் என்று கெஞ்சி அழுதேன். என் அப்பாவும் என் அம்மாவும் உனக்கு விஷம் கொடுக்கிறோம். மரியாதையாக குடித்து செத்துப்போ என்று மிரட்டினார்கள். நான் அமைதியாக இருந்தேன். என் அப்பாவிற்கு தொடர்ந்து காவல்நிலையத்திலிருந்தும் வழக்கறிஞரிடம் இருந்தும் போன் வந்து கொண்டிருந்தது. தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தார்.


கொஞ்ச நேரம் கடந்ததும் என் அப்பா என்னிடத்தில், நீ அந்த கீழ்சாதி நாயோடு வாழ்ந்து எப்படியாவது செத்துப்போ, நாங்கள் உன்னை தலைமுழுகிவிட்டோம். வழக்கறிஞர் வருவார் உன்னை அழைத்துச் செல்வார் என்று கூறினார்.மாலை 5.45 மணியளவில் என்னை மடத்துக்குளம் காவல்நிலையத்திற்கு வழக்கறிஞர், அவரது நண்பர், என் தாத்தா ஆகியோர் அழைத்து வந்தனர். வருகின்ற போது வழக்கறிஞர் என்னிடத்தில், உன்னை யாராவது கடத்தினார்களா? என்று போலீசார் கேட்பார்கள். யாரும் என்னை கடத்தவில்லை. தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை அதனால் சென்றேன் என்று கூற வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு சங்கரோடு வாழ வேண்டுமே தவிர யாரையும் பழிவாங்க வேண்டுமென்பது என் நோக்கமல்ல. நீங்கள் சொல்வது போன்றே சொல்கிறேன் என்றேன். அதே போன்று காவல்நிலையத்தில் கூறினேன். என்னை சங்கரோடு போலீசார் அனுப்பி வைத்தனர்.என் தாத்தா ஜெயராமன் என்னை கடத்தியலிருந்து சங்கரும் அவனது அப்பாவும் கொமரலிங்கம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம் ஆகிய காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். நான் கடத்தப்பட்டு தங்க வைக்கப்பட்ட 5 நாட்களில் சங்கர் பல இடங்களில் என்னை மீட்க முயற்சி செய்திருக்கிறான். போலீசார் என்னை சங்கரிடத்தில் ஒப்படைக்கும்போது அவனது முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி இருந்தது.சங்கர் சில மாதங்களில் வேலைக்கு சென்றுவிடுவான் அதுவரை குடும்பத்தை நடத்த வேண்டுமே என்ன செய்வது என்று முடிவெடுத்து ஒரு மில்லில் வேலை கேட்டேன். அங்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு டைல்ஸ் கம்பெனியில் கணக்கு வேலை கிடைத்தது.சில நாட்கள் கடந்து என் பாட்டி கோதையம்மாள் என்னை சந்திக்க வந்தார். எனக்கும் சங்கருக்கும் ஒன்றும் புரியவில்லை. எங்கள் இருவரிடமும் என் பாட்டி அன்புடன் பேசினார். அதில் ஏதும் சூழ்ச்சி இருக்காது என்று நானும் சங்கரும் நம்பினோம். ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல பல நாட்கள் தொடர்ந்து என் பாட்டி வரத் தொடங்கினார். என்னையும் சங்கரையும் அழைத்துக் கொண்டு பேக்கரிக்கு செல்வார். அங்கு தேனீர் ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். போகின்ற போது எனக்கு ரூ.200 அல்லது ரூ.500 என்று செலவுக்கு கொடுப்பார். நான் வந்து போவது உன் அப்பா, அம்மாவுக்கு தெரியாது என்பார். பாட்டியை நானும் சங்கரும் நம்பினோம்.


உடுமலைப்பேட்டைக்கு கடந்த ஜனவரி மாதம் 2016ல் பொருள் வாங்குவதற்காக நானும் சங்கரும் சென்றோம். எங்களுடன் பாட்டியும் வந்தார். கவிதா சீனிவாசன் என்கிற மருத்துவமனை அருகே நாங்கள் மூவரும் நடந்து சென்றபோது, ஒரு ஸ்கார்பியோ கார் எங்கள் முன்பு வந்து நின்றது. அதில் என் அப்பா, அம்மா, அத்தை உமா உள்ளிட்ட சிலர் இருந்தனர். நான் உடனே சங்கரிடத்தில், டேய் ஓடுடா நம்மை பிடிக்கத்தான் வருகிறார்கள் என்று கூறினேன். நாங்கள் இருவரும் ஓடத் தொடங்கினோம். என் அப்பாவும் அவருடன் வந்தவர்களும் எங்களை விரட்டி வந்தனர். என்னை பிடித்து காரில் கடத்த முயன்றபோது நான் என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினேன். பொது மக்களும் அங்கு கூடிவிட்டனர். போலீஸ் வந்தார்கள். என்னையும் சங்கரையும் மீட்டுக் கொண்டு உடலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்றார்கள். இதற்கிடையில் என் அப்பா, என் அம்மா உள்ளிட்ட என் உறவினர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். என் பாட்டி கோதையம்மாள் தான் திட்டம்போட்டு என் குடும்பத்தினரை வரவைத்து எங்களை கடத்த முயற்சி செய்தனர் என்பது தெரிய வந்தது. அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் எங்களிடத்தில், உங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்க முடியாது. இந்த பகுதியை விட்டு எங்காவது சென்று குடியிருங்கள் என்று அறிவுத்தினார்கள்.இந்த சம்பவம் நடந்து 2 மாதம் கடந்து மார்ச் 2016 முதல் வாரத்தில் என் அப்பா, என் அம்மா, பாட்டி, உறவினர்கள் என்று சிலர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். மரியாதையாக நீ எங்களோடு வரவேண்டுமென்று என்னை மிரட்டினர். இது என் கணவர் வீடு இங்குதான் நான் வாழ்வேன் என்று கூற, சங்கரின் அப்பாவிடம், 10 இலட்சம் தருகிறேன் என் மகளை அனுப்பி வையுங்கள் என்று என் அப்பா கூறினார். அதற்கு சங்கரின் அப்பா, பெற்ற மகளுக்கு யாராவது விலை பேசுவார்களா? என்று கேட்டார். சந்தையில் பேரம் பேசுவது போன்று என் அப்பா நடந்து கொண்ட விதம் என்னை பாதித்தது. என் அப்பாவிடம் 10 கோடி கொடுத்தாலும் என் புருசனை விட்டு வரமாட்டேன் என்றேன். நம்ம உறவினர்கள் எல்லோரும் உன் மீது கோபமாக இருக்கிறார்கள். உன்னையும் உன் புருசனையும் கொல்லுவார்கள். அதனால் சொல்கிறேன் மரியாதையாக எங்களோடு வந்துவிடு என்றார். நானும் சங்கரும் உறுதியாக இருந்ததனால் என் குடும்பத்தினர் எங்களை சாதி ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினர்.சம்பவம் நடந்த 13.03.2016 அன்று காலை 8.00 மணிக்கு சங்கர் என்னிடத்தில் நாளை கல்லூரி ஆண்டு விழா எனக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடு பாப்பா என்றான். கண்டிப்பாக எடுத்துக் கொடுக்கிறேன். சட்டை எடுக்க உடுமலைப்பேட்டை போகலாம் என்றேன். சங்கர் வெளியே சென்று முடி வெட்டிவிட்டு வந்தான்.பிற்பகல் 1.00 மணியளவில் நானும் சங்கரும் வீட்டிலிருந்து புறப்பட்டோம். உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருவரும் வந்திறங்கினோம். துணிக்கடைக்கு சென்று சங்கருக்கு ஒரு சட்டை வாங்கிக் கொடுத்தேன். கடையை விட்டு வெளியே வரும்போது கடை பொம்மையில் அணிவிக்கப்பட்டிருந்த சட்டை அழகாக இருந்தது. நான் சங்கரிடம் நான் எடுத்த சட்டையைவிட இந்த சட்டை அழகாக இருக்கிறது, மாற்றிவிட்டு வரலாம் என்று கூறினேன். அதேபோன்று நாங்கள் எடுத்த சட்டையை கொடுத்துவிட்டு வேறு சட்டையை வாங்கி வெளியே வந்தோம். அங்கிருந்த கூழ் கடையில் இருவரும் கூழ் குடித்தோம். நான் சங்கரிடத்தில் கையில் ரூ.60 மட்டும்தான் இருக்கிறது, பார்த்து செலவு செய்ய வேண்டும். இந்த மாதத்தை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்றேன். சங்கர் சிரித்துக் கொண்டே கவலைப்படாதே பாப்பா சிக்கனமாக இருக்கலாம். நான் இன்று சப்பாத்தி மாவு வாங்கி உனக்கு சப்பாத்தி சுட்டுக் கொடுக்கிறேன் என்று கூறினான். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தோம்.பிற்பகல் சுமார் 2.00 மணி இருக்கும். திடீரென்று 5 பேர் கொண்ட கும்பல் என்னையும் சங்கரையும் சுற்றி வளைத்து கீழே தள்ளியது. அரிவாளால் சங்கரை வெட்டியது. என்னையும் அந்த கும்பல் வெட்டியது. லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவிடியா மகனே என்று கூறிக் கொண்டே சங்கரை அந்த கும்பல் வெட்டியது.சங்கர் இறந்து போய்விட்டான். படுகாயத்தோடு சிகிச்சை பெற்று நடைபிணமாக உட்கார்ந்திருக்கிறேன். சங்கரின் இறப்புக்கு அவனது நண்பர்கள் எவரும் வரவில்லை. சங்கரையும் என்னையும் அந்த கும்பல் வெட்டியதை சிசிடிவி கேமரா மூலம் இந்த உலகமே பார்த்தது. என்னையும் சங்கரையும் கொல்ல என் தாத்தாவையும் பாட்டியையும் என் குடும்பம் பயன்படுத்தியதை நினைத்து நடுங்கிப்போய் நிற்கிறேன்.என் அப்பாவும் என் குடும்பத்தினரும் என் மீது வைத்திருந்தது பாசம் என்று நம்பினேன். அது சாதிக்கான பாசம் என்று தெரிகிறது. கூலிப்படையை வைத்து மகளையும் மருமகனையும் கொல்லும் குடும்பத்தை குடும்பம் என்று சொல்ல முடியுமா? எனக்கு அரசு கல்வி கொடுக்க வேண்டும், வேலை கொடுக்க வேண்டும், பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்கின்றனர். அவர்களது அன்பிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இவையெல்லாம் எனக்கு கிடைக்கலாம். அது மறுவாழ்வுதான். ஆனால் வாழ்வை இழக்கச் செய்த சாதியை என்ன செய்வது....?

Haut du formulaire