10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை

மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மானிடர்களின் பரிணாம வளர்ச்சி இயற்கையுடன் இயைந்ததாகவே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மானுட இயக்கத்திற்கும் இயற்கையும் இயங்கியலுக்குமிடையிலேயே மனித சமூகத்தின் படைப்பாக்கங்கள் நிகழ்ந்துள்ளன. மொழியின் உருவாக்கத்துக்கு முன்னர் வேட்டையாடி வாழ்ந்த மாந்த சமூகம் தனக்குள் ஊடாடுவதற்கும், காட்டினுள் தனது இயக்கத்தினை தனது சமூகத்திற்கு தெரிவிப்பதற்கானதுமான குறிகாட்டியாக ஓசையைக் கண்டறிந்திருக்கலாம். மனித வாழ்வியல் தொடர்ச்சியின் கண்டுபிடிப்புக்களில் இன்று இனத்தின் அடையாளமாகவும் உணர்வுத் தளத்தில் மக்களை ஒன்றிணைக்கக்கூடியதுமான இசைக்கருவியாக பறையினைக் குறிப்பிடலாம். பறை என்ற சொல் “பறைதல்” என்ற வேரினடியாகப் பிறந்திருக்கலாம்.  கல்தோன்றி மண்தோன்றி கடல்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழுக்கும் முன்தோன்றியது பறை என்று கூற முடியும். உலகின் தொல்குடிகள் அனைத்தினதும் வரலாற்றினை நோக்கின், அவர்களது வரலாற்றில் தோற்கருவியென்பது அவர்களின் அடையாளமாக இருக்கும். தொல்குடியான தமிழர்களின் வரழ்வியலிலும் “பறை” எனும் இசைக்கருவி தொல்கருவியாக இருந்து, சமூக இயங்கியல் மாற்றங்களுக்கு உட்பட்டு, இன்று தொன்மங்களின் எச்சங்களில் ஒன்றாகவும் மீளத்தேடப்படும் மரபுகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. தமிழினத்தின் அடையாளமொன்று இன்று வெறுமனே சாதிய அடையாளமாக மாற்றப்பட்டு அதன் ஆற்றுகை வெளியைக் குறைத்துள்ளது. இவ்வேளையில் பறை என்னும் இசைக்கருவி தமிழனின் வாழ்வியலில் எவ்வாறு ஒத்திசைந்திருக்கின்றது என்பதையும் இன்று அதன் அடையாளங்கள் உருமாற்றப்பட்டு ஒரு இனக்குழுமத்தின் அடையாளத்தை சிதைப்பதற்கான கருவிகளில் ஒன்றாக எவ்வாறாகக் கையாளப்படுகின்றது என்பதையும் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கின்றது.

பறை என்பது தமிழர் தொல்குடியின் இசைக்கருவிகளின் பொதுப்பெயர். தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலுக்கு ஏற்ற வகையிலேயே அவர்களது வாழ்வியல் இயங்குநிலை கட்டமைக்கப்பட்டிருக்கும். நிலமும் அதுசார்ந்த இயற்கையும் கண்டுபிடிப்புக்களுக்கான காரணிகளாக இருக்கின்றன. ஐந்துதிணைகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வியற்கோலம் அவர்கள் சார்ந்த திணைகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், “பறை” என்னும் பொதுப்பெயர் எல்லாத் திணைகளுக்கும் பொதுவினதாக தமிழர்களின் இசைக்கருவியாக இருந்திருக்கின்றது. சொல்லுதல், அறிவித்தல், கூறுதல் என்னும் பொருட்களில் காணப்படுகின்ற பறைதல் என்னும் சொல்லினடியாகவே பறை என்ற கருவியின் பயன்பாட்டினையும் நோக்குதல் வேண்டும்.

காட்டுமிராண்டி நிலையிலிருந்து வேட்டைச்சமூகமாக பரிணாம வளர்ச்சியடைகையில் திசையும் மொழியும் தெரியாத காலத்தில் பறை உருவாகியிருக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். பின்வந்த வேளாண் சமூகத்தில் ஆநிரை கவர்தலும் காத்தலும் என்ற திணைப்பொருளினடிப்படையில் மக்களை ஓரிடத்தில் சேர்ப்பதற்குரிய கருவியாக பறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தமிழரின் பிறப்பினை அறிவிப்பதிலிருந்து அவனது இறப்பு வரையிலும் பறைக்கும் அவனுக்குமான தொடர்பு ஒன்றுடனொன்று பின்னியுள்ளது எனலாம். அந்தப் பிணைப்பு இன்று நேற்று வந்ததல்ல. தொல்குடிச் சமூகமான தமிழர்களின் வாழ்வியல் அடையாளமாக தொன்றுதொட்டு நிலவிவருகின்றது. எமக்கான மரபுகளும் அதன் எச்சங்களும் இலக்கியங்களினடியாக அறியப்படலாம். அவ்வகையில் எம் மரபில் பறை அதன் இயங்கியலுடன் எவ்வாறு வந்திருக்கின்றது என்பதை நோக்கலாம்.

வேட்டைப்பறை, வேளாண் பறை, புறப்பறை, அகப்பறை, கலைப்பறை என்று பெரும் பிரிவுகளால் பறையின் நோக்கத்தின் அடிப்படையில் பிரிக்கப்படலாம். ஆரியப் பறை, ஆறிருப் பறை,உவகைப் பறை,சாப் பறை,வெற்றியின் பறை,மீன்கோற் பறை,. மருதநிலப் பறை,குரவைப் பறை, தடாருப் பறை,குறும் பறை,கேற் பறை,தடாரிப் பறை, நிசாளம் பறை,தலைப் பறை, பண்டாரப் பறை,பான்றிப் படை,. முருகியம் பறை,வெறியாட்டுப் பறை, வீரணம் பறை,  பஞ்சமாசதம் பறை போன்ற பல பறைகள் அவற்றினது நோக்கத்தினடிப்படையிலும் வடிவத்திலும் வேறுபடுத்தப்படுகின்றன.

புறத்தினைப் பேசும் புறநானூற்றில்,

செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி

வேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்

என்றவாறாக போர்ப்பறையைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. போரிற்குச் செல்லும் முன்னர் மன்னன் அத்திணைக்குரிய பூவினை வீரர்களுக்கு வங்குதல் மரபு. போரிற்கான அறைகூவல் முதல், போருக்கான தயார்ப்படுத்தலிலிருந்து படைகள் புறப்பாடு வரைக்கும் பறை ஒலியே வீரர்களை ஒருங்கிணைக்கின்றது. போரில் வெற்றி பெற்ற பின்னரும் கூட பறையைச் சார்ந்தே அவர்களது களவேள்வி அமைந்திருக்கும். அதாவது,

எடுத்தெறி ()னந்தற் பறைச்சீர் தூங்க

பருந்தருந் துற்ற தானையொடு… …” (புறநா. 62:5)

நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்

தணிபறை யறையு மணிகொ டேர்வழி” (புறநா. 68: 14)

இன்னிசைப் பறையொடு வென்றி நுவல” (புறநா. 225: 10)

போன்ற ஆதாரங்களினூடாக இதனை நிறுவலாம். வீரத்தில் பறை பேசப்பட்டிருப்பது போல அகப்பொருளிலும் பறை பதியப்பட்டிருக்கின்றது. உதாரணமாக ,

பறையறைந் தல்லது செல்லற்க! என்னா

இறையே தவறு உடையான்

அதாவது படைகள் வீதியால் வரும்போது மக்களை அறிவுறுத்துவதற்காக பறையறிவிப்பார்கள். ஆனால் நீ வரும்போது அதனைச் செய்யாது விடுத்த அரசனே தவறிதை;தவன் என்று தலைவன் தலைவியிடம் கூறுவது போல அமைந்திருக்கிறது இப்பாடல்.

பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் முக்கியம் வகித்த பறையானது, இன்று மனிதனின் இறுதிச் சடங்கில் பங்குபற்றும் இசைக்கருவியாகி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  நற்காரியங்களிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை,

“இறைவனர், நல்லாரை,ஆயர் முறையினால்,

நாள்மீன் வாய்சூழ்ந்த மதிபோல,மிடைமிசைப்

பேணி நிறுத்தார் அணி,

அவ்வழிப், பறைஎழுந்து இசைப்பப், பல்லவர் ஆர்ப்பக்,

குறையா மைந்தர் கோள்எதிர் எடுத்த

நறைவலம் செய்விடா இறுத்தன ஏறு,.. “ முல்லைக்கலி.)

கூறுகின்றது. அதாவது, களவு மணம் புரிந்த காதலனுக்கு உற்றார் சுற்றியிருக்க பறை இசை முழங்க திருமணம் நிகழ்ந்ததை குறிப்பிடுகின்றது.

வேளாண் குடியில் வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையில் விலங்குகளிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் பயிரைக் காப்பதற்காக பறை வாத்திய ஒலி எழுப்பப்பட்டிருக்கின்றது என்ற குறிப்பும் காணப்படுகின்றது.

குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த

தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது

பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும் (நற்றிணை 4)

வரகுப் பயிர்களினிடையே வளர்ந்திருக்கும் களையைப் பிடுங்கும் போது பறை ஒலிக்கப்பட்டதாக அகநானூறு பதிவுசெய்திருக்கின்றது. கதிரறுக்கும் போதும் பறை இசைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறது. பறையானது தானியத்தின் அளவை அளக்கின்ற கருவியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுவர்.

கறங்கபறைச் சீரின் இறங்க வாங்கிக்

களைகால் கழீஇய பெரும்புன வரகின்(அகநா. 194: 7-9)

கழிசுற்றிய விளைகழனி

அரிப்பறையாற் புள்ளோப் புந்து (புறநா. 396)

திணைகளின் இயல்பு சார்ந்து ஒலித்த பறை ஒரு கலைப்படைப்பாகவும் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றன. இயலிசை நாடகம் என முத்தமிழ் வளர்த்தது சங்ககாலம். மக்கள் தமது வெற்றிகளைக் கொண்டாட ஆடலையும் பாடலையும் நிக்த்தியிருக்கிறார்கள். அந்த ஆட்டங்களில் பறையும் ஒலிக்கப்பட்டிருக்கின்றது என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு

மான்தோற் சிறுபறை கறங்கக் கல்லென

வான்தோய் மீமிசை அயரும் குரவை (மலைபடு. 320 – 322)

அதாவது, போருக்கு எந்த நாளில் நறவுக்கள்ளை ஊற்றித் தந்து அவர்களோடு சேர்ந்து மான்தோல் பறையை முக்கி கொண்டு கானவர் குரவை ஆடும் ஒலி என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து போரில் வெற்றி பெற்ற பின்னர் தேரினைச் சுற்றி ஆடுகின்ற குரவைக்கூத்திலே பறை இசைக்கப்படுகின்றது என்பதை அறியலாம்.

இவ்வாறு ஒவ்வொரு திணைக்கும் உரியதாக பறை என்னும் இசைக்கருவி தமிழர்தம் வாழ்வியலில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், இன்று அது தன்போக்கில் இயங்கியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு வடிவங்களில் பறை என்னும் பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் பிரதேச ரீதியாக பறை என்னும் பொதுப்பெயரில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்ட வடிவங்களில் பறை இசைக்கருவி இருப்பினும், இருபக்கமும் அடிக்கக்கூடிய இருபக்கப்பறையே பறை என அறியப்படுகின்றது. இரண்டுபக்கமும் ஒரே மாதிரியான வடிவமுடைய பறை பெரிய பறை மேளம் எனவும் ஒரு பக்கம் மட்டும் அடிக்கக்கூடிய சிறு பறை துந்துடி மேளம் எனவும் அழைக்கப்படுகின்றது. மரபுசார்ந்த கோவில்களிலும், சடங்கு சார் வழிபாடுகளிலும் இன்றும் பறையே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. தொன்மையான இசைக்கருவியொன்று இன்று இழிசொல்லாக மாற்றப்பட்டிருக்கிறது. பற தெமிழா என்று சிங்களவன் கூட அழைக்குமளவிற்கு அதன் உண்மைப்பொருள் திரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. பறை வாத்தியத்தை இசைத்த பறையர்கள் சங்ககாலத்தில் அதன் அரசுசார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள்.

பாணன் “”பறையன்துடியன் கடம்பன்

இந்நான்(கு) அல்லது குடியும் இலவே

என்பது புறநானூறு.  அரச நெறிகளை அரசுக்கே “பறை”ந்த பறையர் என்ற இனம். இன்று சாதிய மேலாதிக்க மனப்பான்மையாலும் இந்துத்துவாவின் மேலாண்மையாலும் தீண்டத்தகாதவர்கள் என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். பறை என்ற தொன்மையான அடையாளமும் மெல்ல மெல்ல எம்மிடையே மருவிக்கொண்டு வர அதனது இடத்தை வேறு வாத்தியங்கள் பிடித்துக்கொள்ளத்தொடங்கியிருக்கின்றன. இது ஒரு சமூகத்தின் வீழ்ச்சியை மட்டுமல்ல ஒரு இனத்தின் அடையாளத்தையே அழிப்பதற்கான செயல்வடிவம் ஆகும். பறையின் அதிர்வலைகளில் மனித இயக்கத்தின் இயங்கியல் ஒன்றுபடுத்தப்படுகின்றது என்பது ஆய்வு.

தமிழகத்தில் சமூகம் சார்ந்த மாற்றத்தின் ஒலியாக பறையின் இசையானது இன்று சாதிய அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் தமிழர்களிடத்தே பரவலாக இசைக்கப்பட்டு வருகின்றது. அவர்களது பறையானது “தப்பு” எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும். ஈழமக்களின் தளத்தில் பறை என்பது வேறு வடிவம். ஒற்றைப் பக்க இசைத்தலுக்குரிய தப்பு அல்ல அது. இங்கே தான் சிக்கல் எழுகின்றது. தமிழர்களின் அடையாளம் என்ற பெயரில் “தப்பு” தமிழர் இருக்கும் இடமெங்கிலும் ஆற்றுகை செய்யப்படும் ஒரு வடிவமாக மாறிக்கொண்டிருக்கிறது. சமூக மாற்றம் வேண்டும்: ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களாய் பறை ஒலிக்கவேண்டும் என்ற கருத்தியல் “தப்பு” என்னும் பறையினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தினைப் பொறுத்தவரையில் அது தன் செயற்பாடு சார்ந்து சரியான வழியிலேயே சென்றுகொண்டிருக்கின்றது. ஒரே இனம் என்ற புள்ளியில் ஒன்றுபட்டாலும் ஒவ்வொரு குழுமத்திற்கும் அவர்கள் சார்ந்த மரபு அடையாளங்கள் தனித்தன்மையானவையாக இருக்கின்றன. திணை சார்ந்து மக்களின் வாழ்வியல் தனித்தனி அடையாளங்களுடன் கட்டமைக்கப்பட்டிருந்தது போல இன்றும் பிரதேசங்களினடிப்படையில் தொன்மையான பல மரபடையாளங்கள் பேணப்பட்டு வருகின்றன. ஈழமக்களிடையே பறை என்ற சொல்லானது தரும் அடையாளம் தப்பு என்னும் பறை அல்ல. ஆனால் இப்போது, தப்பு எனும் பறையும் தப்பாட்டம் என்னும் ஆற்றுகையும் பறையாட்டமாக ஈழத்திலும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஒடுக்கப்பட்டவர்களின் குரல் என்ற குறியீட்டுப்புள்ளியில் ஒன்றுசேர்பவர்களின் உணர்ச்சிநிலையைப் பயன்படுத்தி தப்பு இலகுவாக எம் மரபிலும் உள்நுழைந்திருக்கிறது.

வரலாற்றிலே பறையானது திணையினடிப்படையிலும் பயன்பாட்டினடிப்படையிலும் பலவகைப்பட்ட பெயர்களையும் வடிவங்களையும் கொண்டிருந்தாலும் தற்போது மிகச் சில பறைகளே எஞ்சியிருக்கின்றன. ஈழத்து மரபில் பல வடிவங்களினாலான பறைகள் இசைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று எமக்கு எஞ்சியிருப்பது பறைமேளமே. ஆனால் பறைமேளம் மட்டுமே எமது மரபாக இருந்திருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. தப்பு வகைப் பறை கூட எம் மரபில் இருந்து, பின்னர் ஆற்றுகை செய்வோரற்று இல்லாமல் போயிருக்கலாம். அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியவை.

ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களுக்காய் நாம் குரல் கொடுக்க வேண்டுமெனின், எம்மிடமிருக்கும் பறையை அந்த சமூகத்தினரோடு இணைந்து வெளிக்கொணர்வதாகும். அதை விடுத்து ,இன்னொரு பிரதேசத்தின் மரபினை எம் மரபு எனச் சொல்லி, இங்கே இருக்கும் மரபினை பொதுவான மரபிற்கு மடைமாற்றம் செய்வது அபத்தமானது. கொள்கை வகுப்புக்களும் சமூகக் கோட்பாடுகளும் குறிப்பிட்ட சமூகத்தின் ஆழத்திலிருந்து தோன்றுபவை. அவை அந்த சமூகத்திற்கே பிரதியிடப்பட முடியும்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தலும் அவர்களுக்காக போராடுவதும் அதனூடாக எமது அடையாளங்கள் மீட்கப்படுவதும் நிகழப்படவேண்டிய ஒன்றேயாகும். ஆனால் அந்தச் செயல்வாதத்தில் எமது அடையாளங்களை இன்னொரு அடையாளம் தின்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பது அவசியமாகின்றது. ஈழத்தைப் பொறுத்தவரையில் பறைமேளக்கூத்து என்னும் ஆற்றுகை வடிவம் வன்னியிலும் மட்டக்களப்பிலும் ஆற்றுகை செய்யப்படுகின்றது. ஆனால் அது குறிப்பிட்ட சமூகம் சார்ந்த ஆற்றுகையாக இருப்பதனாலும், அதன் மூலம் சாதிய அடையாளம் வெளிக்காட்டப்படுகின்றது என்னும் சமூகக் கொடுமையினாலும் மருவிக்கொண்டுவரும் ஆற்றுகையாக இருக்கின்றது. அடையாள மீட்பெனவும் பறையாட்டம் என தப்பாட்டத்தை ஆடுபவர்களும் பறைமேளக்கூத்தின் மீட்டுருவாக்கத்தினைப் பற்றி சிந்தித்தார்களா? ஆங்காங்கே ஒரு சில மீட்டுருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் முழுமூச்சாக அது நிகழவில்லை.

ஒவ்வொரு பிரதேசத்திலும் மொழியும் அதன் பயன்பாடும் அந்த சமூகத்தினைச் சார்ந்ததே. உதாரணமாக “தெருக்கூத்து” என்ற ஆற்றுகை வடிவம் தமிழகத்தில் சொல்லப்படும் போது பாரம்பரியக் கூத்து வடிவமாகவும், அதுவே ஈழத்தில் தெருவெளி நாடகங்களைக் குறிப்பதாகவும் இருக்கும். ஈழத்தில் தமிழக தெருக்கூத்து ஆற்றுகை செய்யப்படவேண்டுமெனின், அது தொடர்பான தெளிவு மக்களிடத்தில் கொண்டுசெல்லப்படவேண்டும். இல்லையெனில் தெருக்கூத்து பார்க்க வீதிகளில் மக்கள் குழுமுவார்கள். அதே போல தான் தப்பு எனப்படுகின்ற பறையும் குறிப்பிடப்பட வேண்டும். அந்த தெளிவுபடுத்தல்களுடன் ஆற்றுகைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் இப்போது ஈழத்தில் நடைபெறுகின்ற பயிற்சிப் பட்டறைகளிலோ ஆற்றுகைகளிலோ தப்பு என்ற பெயர் திட்டமிட்டு தவிர்க்கப்படுகின்றது. அவை சார்ந்த செய்திகளிலும் ஈழத் தமிழர்களின் அடையாளம் பறை என்ற தொனிப்பொருள் காணப்படுகின்றது.   தமிழகத்தில் ஏறுதழுவுதலின் தைப்புரட்சியில் தமிழக மக்களை ஒருங்கிணைத்ததில் தப்பின் பங்கு அளப்பரியது. தமிழன் என்ற உணர்வுடன் அனைவரையும் ஒன்றிணைத்தது. பெண்ணுடலின் அரசியல் என்பது இன மத மொழிகளைக் கடந்தும் இன்னமும் முழுமையாகக் கட்டவிழ்க்கப்படாத ஒரு கட்டமைப்பிற்குள்ளேயே இருக்கின்றது. சாதிய  விடுதலைக்கான பறை என்பதை தாண்டி, இன விடுதலைக்கான, பெண் விடுதலைக்கான ஒரு படிநிலையாகவே இதனை நோக்கலாம். பறை அடித்தால் சாதி குறைவு என்று எண்ணும் மனநிலையும் பெண் சிரித்தால் பிழை என்று நோக்கும் மனநிலையும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. இதையெல்லாவற்றையும் கடந்து இன்று பறையை எடுத்து ஆற்றுகை செய்வது என்பதை சாத்தியமாக்கியது அரங்க வெளி தான். அந்த ஒலியின் வீச்சம் தமிழரின் உயிரின் ஆழம் வரை சென்று ஆட்டுவிக்கக் கூடியது. தமிழக அரங்க வெளி அதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இப்போதெல்லாம் மக்கள் போராட்டங்களில் தப்பு என்னும் பறை முதன்மை பெற்றிருக்கிறது. அது அவர்களது சமூகத்தின் இயங்கியல். ஆனால் அதையே எமது ஈழ சமூகத்திற்கு பிரதிசெய்து, மக்கள் போராட்டங்களிலும் ஊர்வலங்களிலும் தப்பு முன்னிலை வகிக்குமாக இருப்பின், எமது மரபில் இசைக்கப்படும் பறை மறைந்துபோய்விடக்கூடிய அபாயம் உண்டு.

இந்துத்துவாவும் பிராமணியமும் உட்புகாத ஆலயங்களிலும் காவடி போன்ற  நேர்த்திக்காகச் செய்யப்படும் ஆற்றுகைகளிலும் மக்களை “உரு” ஏற்றுவது எனப்படும் சடங்கு சார் வழிபாட்டு நிகழ்வுகளிலும் பறை இசை அதிர்ந்து ஒலிக்கிறது. செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களிலும் இன்றுவரை பறை ஒலியுடன் வழிபாடுகள் நிகழ்கின்றன.  ஆனால் ஆகமம் சாராத கோவில்கள் ஆகமம் சார்ந்தவையாக மாறிக்கொண்டிருப்பதனால் கோவிலின் உள்ளே பறை என்னும் இசைக்கருவியை அனுமதிக்காத ஆலயங்களாக மெதுமெதுவாக மாறிக்கொண்டிருக்கின்றன. தமிழனின் அடையாளம் இன்று மதம் என்னும் போர்வையில் தெருவில் நிற்கவிடப்படுகின்றது. மாற்றம் வருமா? ஆனால் அதைப்பற்றி எமக்குக் கவலை இல்லை.. தப்பு என்னும் பறையை அடித்தால் சாதியம் மறைந்துவிடும் என்ற எண்ணப்பாங்கில் எமது செயற்பாடுகளைக் கட்டியமைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு இசைக்கருவி.. ஒரு இனத்தின் அடையாளம்.. அதன் மண்ணிலேயே  இன்று தெருவில் நிற்பதற்கு யார் பொறுப்பு?

ஒடுக்கப்பட்டவர்களின் இசைக்கருவியாக தப்பு என்னும் பறையை ஆற்றுகை செய்ய முனைந்தவர்கள் ஏன் பறைமேளக்கூத்தினை ஆற்றுகை செய்ய முன்வரவில்லை? இங்கே தான் மேலாதிக்க சிந்தனையின் எச்சங்கள் தாக்கம் செலுத்துகின்றன. ஈழத்தில் பறை என்னும் இசைக்கருவி அதன் சமூகப் பின்னணி, இயல்பு, அதன் சமூகப்பெறுமானம் என்னும் அனைத்துத் தளத்திலுமாக உணரப்படும். அந்த சமூகத்தின் தளத்திலிருந்து தான் அந்த இசைக்கருவியையும் நோக்க முடியும். ஆனால், தப்பு எனும் போது, ஈழத்திலிருக்கும் ஒருவரால் அதன் சமூகப்பெறுமானத்தை அதன் பெறுதியோடு உணர முடியாது. ஒரு இசைக்கருவியாகவே பார்க்க முடியும். ஒடுக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுப்போம் என்ற சமூகக் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தப்பு என்னும் முகமூடிக்குள் நின்றுகொண்டு சமூகத்தையும் தன்னுடைய சுய உளவியலையும் ஒருங்கே திருப்திப்படுத்துகின்ற செயற்பாட்டையே செய்கிறார்கள். அதை அவர்கள் உணராமல் செய்வதுதான் இன்னமும் அபத்தம்.

தப்பு என்னும் பறையை ஈழநாட்டினுள் வலிந்து திணிக்கும் வேலைத்திட்டத்தில் பல ஆற்றுகைக் குழுக்களும் ஈடுபட்டிருக்கின்றன. அவர்களின் பதிவுகளெல்லாம் தமிழர்களின் அடையாளம் பறை என்ற தலைப்பில் தப்பு என்னும் பறையை முன்னிறுத்துவனவாகவும் இருக்கின்றன.  அது இங்கே இருக்கும் ஒரு அடையாளத்தினை மடைமாற்றம் செய்வதற்கான இந்துத்துவாவின் திட்டம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே. ஈழ தேசத்திற்கு ஒவ்வாத, அல்லது பொருந்தாத  குறிகாட்டிகளாக பெரியார் வந்தார்.. தலித்தியம் வந்தது.. அதன் பின்னாலேயே தப்பும் வந்தது. அதில்கூட இந்துத்துவா தெளிவாக இருக்கின்றது. தப்பு என்னும் பறையை தமிழர்களின் அடையாளமாக ஊடுருவ வைக்கவில்லை. தலித்திய அடையாளமாகக் காட்டி, அதனையும் இனம் சார் அடையாளமென்ற நிலைப்பாட்டினின்றும் வழுவச் செய்கின்றது. இந்த அபத்தத்தை ஆற்றுகை வடிவம் என்னும் கலை நிலைப்பாட்டில் இந்தியம் முன்னெடுக்கின்றது. அந்த உள்ளர்த்தத்தை அறிந்தோ அறியாமலோ நாமும் எமது மரபைப் பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த அறியாமையில் தனித்துவ அடையாளங்கள் தம் நிலையை இழக்கின்றன. மலையக மக்களின் பறையையும் தூசி தட்ட ஆட்களில்லை. பெருமரபொன்று சிறு மரபுகளுக்குள் புகும்போது, அச்சிறு மரபுகள் அந்த பெருமரபிற்குள் அமிழ்ந்து போவதென்பது சமூக நியதியாகும். அதன் கீழ் மரபுகளும் அழியும் ஆபத்தும் இருக்கின்றது.

பறை எமது இனத்தின் பொது அடையாளம் என்ற கருத்தில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தொன்ம மரபினடிப்படையில் ஒவ்வொரு திணைக்கும் தனி மரபு இருந்திருக்கிறது. அந்த சுய மரபினை அதன் அடையாளத்தோடு கொண்டாடவேண்டும். அந்த மண்ணின் இயங்கியலிலிருந்து பிறக்கும் இசையில் தான் உயிர்ப்பு இருக்கும். அதில் தான் அவன் தனது மரபினை உணர முடியும். ஒவ்வொரு மரபும் அந்தந்த மண்ணில் அவரவர் வாழ்வியலில் சிறந்தவையே. ஒன்றுடனொன்று ஊடாடுவதும் தவறில்லை. ஆனால் ஒன்றையொன்று மேலாண்மை செய்வதென்பது மரபு அழிப்பிற்கு துணைநிற்பதற்கு ஒப்பாகும். தமிழரின் அடையாள இசைக்கருவியை இசைப்பவர்கள் என்ற காரணத்துக்காக ஓதுக்கப்பட்டவர்களாக மாற்றப்பட்டிருக்கும் பின்னணியின் சமூக அரசியலை உணர்ந்து, எம் தொல்குடியை, அதன் பெருமையை அதன் அடையாளத்துடன் பேண வேண்டியது தமிழராகிய ஒவ்வொருவரினதும் கடப்பாடாகும்.

தமிழர்கள் மத்தியில் “பறை” என்பது இசைக்கருவி என்பதற்கு அப்பால் ஒரு சாதியத்தின் குறியீடாக பார்க்கப்படுகின்ற மேல்மட்ட மனநிலையை உடைத்து  பறை இசை விடுதலைக்கான இசை,  ஒன்றுகூடலுக்கான இசை என்பதை நிரூபித்து, பல்லாயிரம் மக்களை “பொங்கு தமிழ்” என்னும் ஒரு புள்ளியில் இணைய வைத்தது பறை. முதன்முதலாக சாதிய வேலிகளைத் தாண்டி ஒரு ஆற்றுகைக்கருவியாக, போர்ப்பறையாக, எதிரிக்கான அறைகூவலாக வீதிதோறும் ஒலித்த பொங்குதமிழ் பறை இன்னமும் எமக்கு நினைவில் வரலாம்.

நிகழ் சூழலில் ஈழத்தமிழரின் மரபியலின் தனித்துவ அடையாளங்களை தமிழரின் பிற அடையாளங்களிற்குள் உள்ளீர்த்து, ஒருவகையான திட்டமிடப்பட்ட மரபு மடைமாற்றம் செய்யும் நிகழ்ச்சிநிரலினால் சூழப்பட்டிருக்கிறோம்.  அந்த நிகழ்ச்சி நிரலினுள் ஈழத்தவரின் பயன்பாட்டில் தற்போதுள்ள பறையினை தப்பு எனப்படும் பெரு மரபிற்குரிய பறை வடிவம் வல்வளைப்பு செய்வதாக ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தப்பு என்னும் இசைக்கருவியை பயிலுவதோ அல்லது தப்பாட்டம் என்னும் ஆற்றுகையை பயின்று ஆற்றுகை செய்வதோ தவறல்ல. அது தமிழரின் அடையாளங்களில் ஒன்று. ஆனால் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று தலித்தியத்  தொனியில் “தப்பு” என்கின்ற பறையை குறியீடாக வைத்திருப்பது என்பது எமக்கான  மரபொன்றினை, அதன் மரபுத்தொடர்ச்சியை திசைதிருப்பும் செயலாகும்.  அத்துடன் இங்கேயிருக்கும் பறை ஆற்றுகைக் கலைஞர்களின் தொடர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கி, இழிநிலைக்கான வடிவமாக பறைமேளம் நோக்கப்படுவதும் மாற்றத்திற்கு உட்படாத ஒன்றாகவே போகும். மாற்றங்கள் நிழவேண்டிய இடங்களில் மாற்றங்கள் நிகழாதபோது மாற்றங்களுக்கான குரல்களுக்கு என்ன பொருள் ? ஒடுக்கப்பட்டவர்களின் குரல் என்ற பொருளில் பொதுவெளியில் தப்பு என்னும் பறையை ஆற்றுகை செய்வது என்பது, இங்குள்ள ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அமையுமா? தப்பு என்னும் வடிவமும் சாதிய மறுப்புக்கான குறியீடாக மட்டும் மாறிவிடப்போகும் ஆபத்தும் இருக்கின்றது.இங்கே இருக்கின்ற அடையாளங்களினூடாகவே சாதி மறுப்பு என்பது பேசப்பட வேண்டும். அப்போதுதான் அதன் சமூகப் பெறுதி சமூகத்தால் உணரப்படும். இசைக்கருவியாக அறியப்படுகின்ற தப்பு என்னும் பறை ஒலிக்கும்போது, அங்கே கலை என்ற கருத்தே பதியப்படும். அதுவே, பயன்பாட்டிலிருக்கும் பறையினூடாகப் பேசும்போது, அதன் கருத்தியல் அதன் சமூகப் பின்னணி,வலிகள், அடக்குமுறைகள் என்பனவற்றின் பின்னணியில் வலிதான கருத்துருவாக்கத்தைச் செய்யக்கூடியதாக இருக்கும். தலித்தியப்போர்வையில் வரும் தப்பு எனும் பறையைச் சாடவேண்டிய புள்ளியும் அதுவேயாகும். தமிழர் மரபுகளில் ஒன்று என்ற அடையாளத்துடன் தப்பு ஒலிக்கும்போது அதற்குரிய தளம் வேறானதாக இருக்கும். அது இன்னொரு மரபில் ஏறியும் நிற்காது.   சாவுப்பறையாக மட்டும் சுருங்கிக்கொண்டிருக்கும் தமிழர் மரபுகளில் ஒன்றான பறையை மீட்டெடுத்து, தமிழர்களுக்கான ஒலியை சாதிய மறுப்புக்கான ஒலியாக குறுக்கிவிடுகின்ற ஆபத்தினை கடந்து, எமக்கான இசைக்கருவியை எமது பொதுக்குரலாக எப்போது ஒலிக்கச்செய்யப்போகிறோம்?

செல்வி

21-05-2017

http://www.kaakam.com/?p=721

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்