அளுத்காமவில் பொதுமக்களுக்கு இடையில் எற்பட்ட முறுகல்களை, இன-மத வன்முறையாக்கியது அரச ஆதரவு பெற்று இயங்கும் பொது பல சேனா. பொலிஸ் - இராணுவம் குவிக்கப் பட்டு ஊராடங்குச் சட்டம் அமுலிருந்த வேளையில், பல கடைகள் தீக்கிரையாகப்பட்டும், வீடுகள் தாக்கப்பட்டுமுள்ளது. முஸ்லிம் மக்கள் அடைக்கலங்  கோரி பொது இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.

 

 

இதை அடுத்து பலர் காயமடைந்தும், சிலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் மிகவும் கவனிக்கப் படவேண்டிய விடயமென்னவென்றால்  கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தூப்பாக்கிச் சூட்டுக்கு  உள்ளாகி இருப்பது தான். தங்கள் மீது இன-மத வன்முறைலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் தஞ்சம் கோரிய மக்கள் மீதே  துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.   அரசு ஆதாரவு பெற்ற இனக் கலவரங்கள் முதல் அரசு நடத்திய போர் குற்றங்கள்  வரை, சட்டத்தின் முன் கொண்டு வந்தது கிடையாது. அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் மேலான தொடர் வன்முறைகள் தொடக்கம்,  வழிபாட்டு தலங்களை பவுத்த புனிதபூமி என்ற பெயரில் அகற்றுவது வரை  அரசின் கொள்கையாகவே நடைமுறையில் இருந்த வருகின்றது.

இன்று சட்டபூர்வமான கூட்டங்களை நடத்துவதை தடுத்து நிறுத்தும் மஹிந்த அரசு, பொது பல சேனா போன்ற இன-மத வன்முறைக்  கும்பல்கள் கூட்டங்கள் மற்றும் ஆற்பாட்டங்களை நடத்தி காடைத்தமான. கொலைவெறியுடன் கூடிய வன்முறையை மக்கள் மீது பிரயோகிப்பதனை அனுமதிக்கின்றது.  அளுத்காம மற்றும் பேருவல சம்பவங்கள்  இவ்வாறன நிகழ்வுகளில்  தொடர்சியேயாகும்.  கடந்த வரலாற்றில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான இன ரீதியான கலவரங்கள் எதையும், எந்த அரசும் தடுத்து நிறுத்தியது  கிடையாது. குற்றங்களுக்காக யாரையும் தண்டித்தது கிடையாது. குற்றவாளிகளும், அவர்களின் குடும்பவாரிசுகளும் தொடர்ந்தும்  நாட்டை இன-மத பிளவுகளை  விதைத்து ஆளுகின்றனர்.

இதன் மூலம் நாட்டை ஆளுகின்றவர்கள், தொடர்ந்தும்  இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி மக்களைப்  பிரித்துவிட முனைகின்றனர். காலகாலமாக இணைந்தும் கலந்து வாழ்ந்த சமூகத்தை, மோத வைப்பதன் மூலம் அரசு தனது மக்கள் விரோத ஆட்சியைத்  தொடர முனைகின்றனர்.

மகிந்த குடும்பத்தின் ஆசி பெற்ற இனவாத - மதவாதச்  செயற்பாடுகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ கொள்கை வகுப்புக்கு இசைவாக   முன்தள்ளப்படுகின்றது. இந்தக்  குற்றங்களை முன்னெடுக்க கூடியதாக பொது பல சேனாவை  உருவாக்கி, அதன் செயற்பாட்டை ஆதரிக்கும் வண்ணம் பாதுகாப்பு செயலாளார் கோத்தபாய,  பொதுபல சேனாவின் தலைமையாக திறப்புவிழாவிலும்,  பகிரங்க நிகட்சிகளிலும் கலந்து கொண்டார்.  இதன் பின்னணியிலேயே தான் கோத்தபாயவின்  தலைமையிலான இராணுவ- பொலிஸ் படைகள், போதுபல சேனாவின் வன்முறை ஆதிக்கத்திற்கு தலை வணங்குகின்றன. நீதிமன்றங்களும், நீதி அமைச்சும்  பொது பல சேனா சட்டத்தைக் துரும்பாகவேனும் மதிக்காமல் வன்முறையில் ஈடுபடுவதைக் கண்டும் காணாமல் கள்ளமவுனம் சாதிக்கிறன. இத்தரைக்கும் இலங்கையில் சட்ட அமைச்சராக இருப்பது றாவுள் ஹக்கீம் - ஒரு முஸ்லீம் !

புலியை மிஞ்சி வண்ணம் பாரியளவிலான போர் குற்றத்தை முன்னின்று நடத்திய கோத்தபாய, இன்று இன- மத கலவரத்தை திட்டமிட்ட நடத்திக் காட்டுகின்றார். வடக்கு-கிழக்கில் இன ரீதியான இராணுவ ஆட்சியை நடத்தும் அதே அடிப்படையில், தெற்கிலும் அதைத் தோற்றுவிக்க முனைகின்றார்.

இலங்கையின் ஆளும்வர்கத்தின் ஆசியுடன் நடாத்தப்படும்  இந்த இனவாத -மதவாத  வன்முறைகளுக்கு  எதிராக, இனமத பேதமற்ற வகையில் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே, அரசின் இந்த திட்டமிட்ட தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளையும், கொடுங்கோன்மையையும்   தடுத்து நிறுத்த முடியும். இதுவே அளுத்கம மற்றும் பேருவல பிரதேசங்களில், முஸ்லீம் சகோதரர்கள் மீது பிரயோகிக்கப்படும்   இனவாத-மதவாத  வன்முறைகளுக்கு  எதிரான அறைகூவலாகட்டும்!

 

புதிய ஜனநயாக மக்கள் முன்னணி

16.06.2014