"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கள் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்" என்றும் தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (medichl Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறும் வேண்டிக் கொண்ட அமெரிக்கரான வைத்தியக்கலாநிதி சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் போன்ற மனிதாபிமானிகள், கன்டி பேரின்பநாயகம், ஒரேற்றர் சுப்பிரமணியம், கார்த்திக்கேசன் போன்ற சமுக உணர்வும், கடமை உணர்ச்சியும் கொண்ட ஆயிரம், ஆயிரம் ஆசிரியர்கள் உருவாக்கிய பெருவிருட்சம் தமிழ்மக்களின் கல்வி. அர்ப்பணிப்பு என்ற ஒரு சொல் மட்டும்தான் அவர்களிடம் இருந்தது. அதைத் தவிர வேறெந்த வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அயராது உழைத்தார்கள். கல்வி வெள்ளம் தமிழ் சமுதாய வாழ்வு எங்கும் நிறைந்தது.

 

 

இன்று அந்தக் கல்லூரிகளில் படித்தவர்கள் வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் ஒன்றுகூடல்களை நடத்தி நிதி திரட்டி தங்கள் கல்லூரிகளிற்கு அனுப்புகிறார்கள். ஆனால் பழைய மாணவர்கள் கல்லூரியின் ஒன்றுகூடல் மட்டும் என்றால் வரமாட்டார்கள், காசு தரமாட்டார்கள் என்று காரணங்களை சொல்லிக் கொண்டு தென்னிந்திய சினிமா கோமாளிகளை பெரும்பணம் கொடுத்து கூப்பிட்டு கலைச்சேவையும், கல்விச்சேவையும் செய்கிறார்களாம்.

நூற்றி எழுபத்தைந்து வருடங்கள் பழமை வாய்ந்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் சினிமாக்காரர்களை கூப்பிட்டு பாட்டுக்கச்சேரி வைத்தால் தான் பழைய மாணவர்களிற்கு பழைய நினைப்பு வந்து பணம் தருவார்கள் என்று சொல்கிறது. நூறாண்டு பழைமை வாய்ந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் திண்டுக்கல் லியோனிக்கு இந்தியப் பணம் பல லட்சம் கொடுத்து கூப்பிட்டு வையகம் புகழ்ந்திட வைத்திருக்கிறது. லியோனியின் பொன் போன்ற இரண்டு மணித்தியால நிகழ்ச்சியிற்கு கொடுக்கப்பட்ட மிகச்சிறு தொகைதான் இந்த பல ஆயிரம் பவுண்டுகள். யாரோ படித்த பாட்டுக்களை தனது கர்ண கடூரமான குரலில் திருப்பிப் பாடுவதற்கும், சில அசட்டு ஜோக்குகளை சொல்லுவதற்கும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு அவரைக் கூப்பிட்டு இருக்கிறது மெத்தப்படித்த மேதாவிகள் கூட்டம்.

இந்த வெளிநாட்டு பழைய மாணவர்கள் சங்கங்கள் இந்த ஊதாரித்தனத்திற்கும், கோமாளித்தனத்திற்கும் சொல்லும் காரணம் இந்த நிகழ்ச்சிகளில் சேர்க்கப்படும் பணம் கல்லூரிகளின் வளர்ச்சிக்கு என்பது தான். ஆனால் பத்து லட்சம் சேர்ந்தால் அய்ந்து லட்சத்தை சினிமாக்காரர்களிற்கு கலைச்சேவைக்கு கொடுக்கிறார்கள். மேலும் சில லட்சங்கள் மண்டபத்திற்கும் மற்றச் செலவுகளிற்கும் போய்விடும். அரசியல்வாதி அடித்த பிறகு மிஞ்சும் அற்பப்பணம் அபிவிருத்தி வேலைக்கு போவது போல ஒரு சொற்பத்தொகை கல்லூரிக்கு போய்ச் சேர்கிறது.

வயலிலே வேலை செய்து விட்டு அவசரம் அவசரமாக ஓடி வரும் மாணவர்கள், எட்டியும் எட்டாத சைக்கிளில் வீடுகளிற்கு பால் கொண்டு போய் கொடுத்து விட்டு வரும் மாணவர்கள், கடற்கரைக்கு போய் தகப்பனிற்கு காலைச்சாப்பாடு கொடுத்து விட்டு வரும் மாணவர்கள் என்று தமிழ்ச்சமுதாயத்தின் சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களும் அன்றைக்கு எந்தப் பாடசாலையிலும் படிக்கக் கூடியதாக இருந்தது. ஏனெனில் கல்வி அன்றைக்கு உண்மையான இலவசக்கல்வியாக இருந்தது. பாடசாலை வசதிக் கட்டணம் என்று ஒரு தவணைக்கு பத்து ரூபா வாங்குவார்கள். அதைக் கூட கட்ட முடியவில்லை என்று ஏழைத்தாயோ, தகப்பனோ வந்து சொன்னால் "சரி வசதி வரும்போது கட்டுங்கள்" என்று அதிபர்கள் சொல்வார்கள். இன்றைக்கு அதே அரச பாடசாலைகளில் ஆயிரக்கணக்கில் பணம் கட்டினால் தான் ஆறாம் வகுப்பில் சேர்க்க முடியும். டொன் பொஸ்கோ போன்ற ஆரம்ப பாடசாலைகளில் பாலர் வகுப்பிற்கே பணம் வாங்கித் தான் சேர்க்கிறார்கள்.

இதற்கு பாடசாலைகள் சொல்லும் காரணம் அரசு சம்பளத்திற்கு மட்டுமே பணம் கொடுக்கிறது. எங்களிற்கு வேறு வழியில்லாமல் தான் பணம் வாங்குகிறோம். லியோனிக்கு இரண்டு மணித்தியாலத்திற்கு பல லட்சம் கொடுக்கும் பழைய மாணவர் சங்கங்கள் தமது கணித மூளையை பாவித்து இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்கலாம். தனது வாழ்க்கையை தமிழ்மக்களிற்கு அர்ப்பணித்த சிவகுமாரன் போன்ற தியாகிகளை உருவாக்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள் கோமாளிகளை பார்த்தால் தான் பணம் தருவார்கள் என்பது இந்த சங்கங்களின் நிருவாக குழுவினர் பழைய மாணவர்களிற்கு செய்யும் அவமரியாதை.

வன்னியிலே போரிலே அழிந்த பாடசாலைகள் மரத்தடியிலும், மாட்டுக்கொட்டகை போன்ற கட்டிடங்களிலும் நடக்கின்றன. பெற்றோரை இழந்த சின்னஞ்சிறு குஞ்சுகள் பட்டினியோடு பாடசாலைக்கு வருகிறார்கள். போர் தின்ற வாழ்க்கையிலிருந்து மீண்டு வர அபயக்குரல் எழுப்புகிறார்கள். தமிழ்ச்சினிமா குப்பைகளிற்கு பணத்தை கொட்டும் கூட்டங்களிற்கு இவர்களின் குரல் கேட்கவில்லையா!!