பல்கலைக்கழக மாணவர்கள் ராஜபக்ச அரசின் நவதாரளவாத கல்விக் கொள்கைக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை மிக நீண்ட நாட்களாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மகிந்த அரசு போராடும் மாணவர்கள் மீத பல அழுத்தங்களை பிரயோகித்து மாணவர் போராட்டங்களை மழுங்கடிக்க தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்கின்றது. இனந்தெரியாத நபர்களை மாணவர்களின் வீட்டுக்கு அனுப்பி பெற்றோரை மிரட்டுவது முதல் மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கவது பல்கலைக்கழக பிரதேசங்களிற்கு அருகில் வருவதனை தடை செய்வது வரை அனைத்து பாசிச அடக்குமுறைகளையும் தொடந்து கொண்டிருக்கின்றது.

 

 

சுகாதார கற்கை நெறிக்கான காலத்தினை குறைத்தமைக்கு எதிராக கடந்த 150 நாட்களாக ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கொழுப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அனைத்து பல்கலக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது. பொலிசாரால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு நீதிமன்றத்தால் கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் மட்டுமே நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்று கூடிய மாணவர்கள் நீதிமன்ற உத்தரவினை மீறிக் கொண்டு ஊர்வலமாக ராஜபக்ஸாவின் உத்தியோக பூர்வ வாசஸ்த்தலமான அலரி மாளிகையினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடபடடனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மற்றும்  மாணவிகளை  அச்சுறுத்தும் நோக்கில் மகிந்த அரசின் படையினர் சிவில் உடையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவும் எடுத்தக்கொண்டனர்.