இருபத்துநான்கு மணிநேரமும்

இயந்திரத்துடன்

தொழிலாளரும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்

இன்னம் வேகத்தை அதிகரிக்குமாறு

நிர்வாகம்

அழுத்தம் கொடுக்கிறது

முடியாதென

மூச்சுவிட்டால் வேலைபறிபோகலாம்

 

 

எட்டு மணிநேரமென்பது

ஏட்டில் வரையப்பட்டிருக்கிறது

பன்னிரண்டு மணித்தியாலம்

இரண்டு சுற்றுக்களென்பது

படுலாபகரமானதாய் கணிக்கப்படுகிறது

உழுகிறமாட்டை

மாத்திப் பூட்டினால் நேரமினக்கேடாம்

 

வழிகிற வியர்வையை

துடைத்தால்

ஓடிக்கொண்டிருக்கும் விசைக்கு

ஈடுகொடுக்கமுடியாமல்

கைகள் தவறிவிடும்

தயாரிப்புகள் குவிந்துவிடும,;

அருகிருந்த சகதொழிலாளியிடம்

மேதினம் வருகிறதே என்றபோது

முதலாளிகட்கும் தரகர்கட்குமானதாய்

மாறிவிட்டதென்றபடி,

சிக்காக்கோவின் வீச்சு

கண்களில் பிளம்பாய் கொதித்தது!

 

-சுஜீவன்