பாரிஸ்-பிரான்ஸ் மேதின ஊர்வலத்தில் சிங்கள-தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சென்றதும், புலிகளின் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிகைக்கு நிகராக, சிங்கள - தமிழ் மக்கள் அணிவகுத்து சென்றதும், துரோகத்துக்குரியதாக கூறி, சிங்கள - தமிழ் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது.
தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து இலங்கை அரசுக்கு எதிரான வர்க்க ரீதியான கோசங்களைத் தாங்கிய பதாதைகளும், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமையை முன்னிறுத்திய கோசங்களும், பாரிஸ் மேதின ஆர்பாட்டங்களில் பங்கு கொண்ட லட்சக்கணக்கான உலக தொழிளார்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை எம்பால் திரும்ப வைத்தது. அத்துடன் புரட்சிகர பாரம்பரிய அடிப்படையில் கோசங்களை கைகளில் எந்திய எமது ஊர்வலம், இலங்கையை சேர்ந்தவர்கள் பங்கு கொள்ளும் ஊர்வலங்களின் வழமைக்கு மாறானதாகவும் இருந்ததனால், எம்முடன் அரசியல் அடிப்படையில் கருத்து ரீதியாக முரண்பாடு கொண்டவர்கள் கூட எம்முடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டனர்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வர்க்க ரீதியாக அணிதிரட்டப்பாடாத - லும்பன் தனமான -படுபிற்போக்கான தமிழ் தேசியம், தனது பழைய மாபியாப் பாணியில் எம்மை அணுகியது. பிற்போக்குத் -தமிழ் தேசியத்துக்குத் தெரிந்த அதன் ஒரேயொரு தேசிய மொழியான, தன் தாயையே இழிவுபடுத்தும் தூசணங்களை தூசித்த படி, பயமுறுத்தல், மிரட்டுதல் மற்றும் கைகலப்புக்கு வருமாறு அழைத்தல் மூலம் எமது தோழர்கள் மற்றும் எமது மேதின ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தனர். சொந்த இனத்துப் பெண்களையே இழிவுபடுத்தியபடி, அவர்களை கொச்சைப்படுத்தியபடி, அருவருக்கத்தக்க மொழியால், தாம் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டு எமது தோழர்-தோழிகள், சகோதர அமைப்பினர் மீது மொழிவழி - உளவியல் வன்முறையைப் பிரயோகித்தனர். இதன் மூலம் தமது "தமிழ் தேசிய ஜனநாயகப் பண்பாட்டை" தமது கீழ் தரமான நடத்தைகள் மூலம் பறைசாற்றினர் புலிகளின் ஆதரவாளர்களான வன்முறையாளர்கள்.
பாரிஸ் ஊர்வலத்தில் வைத்த உசுப்பி விடப்பட்ட இளைஞர்களின் பின்னால் ஜனநாயகம், மனிதவுரிமை பேசுகின்ற தமிழ் தேசியக் கனவான்களே செயற்படுகின்றனர். இவர்களே ஐ.நா வரை ஜனநாயத்தைக் கோரியபடி, இலங்கையில் மனிதவுரிமை மதிக்கப்படவில்லையென சர்வதேசங்களிடம் ஒப்பாரி வைக்கின்றவர்கள். புலிகள் ஆதிக்கம் இலங்கையில் இருந்த போது அனைத்து வகையான வன்முறைகளையும், மாபியாத்தனங்களையும் கையாண்ட இந்த தேசியக் கனவான்கள், தமது இனவாத அரசியலுக்கு எதிரானவர்களை "துரோகிகள்", "எதிரிகள்" என முத்திரை குத்தி வன்முறைகளை துண்டி விட்டவர்களாக இருந்தனர். புலியின் அழிவின் பின் அரசியல் அனாதைகளாகி விட்ட இவர்களுக்கு இந்தப் பச்சை இனவாத வன்முறையைத் தவிர வேறு ஒரு அரசியற் தெரிவுமில்லை.
இனவாத தேசியம் மூலம் உசுப்பேற்றபட்ட வன்முறையில் பங்கேற்கின்றவர்கள், பகுத்தறிவற்ற அப்பாவிகள். தங்கள் செயல் மூலம் சாதிக்கப்போவது என்ன என்ற அடிப்படை அறிவு கூட அவர்களுக்குக் கிடையாது. எமது மேதின நிகழ்வில் பங்கு கொண்ட தமிழ் ஈழம் மற்றும் சுயநிர்ணய உரிமை தொடக்கம் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டுமென்பது போன்ற பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்ட - பல பத்து வருடங்கள் போராடும் சிங்கள சகோதர்கள் மீது மொழிசார் மற்றும் உளவியல் இனவாத வன்முறையைப் பிரயோகிப்பது, தவறான அரசியல் என்பதைக் கூட அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பெண் பாலியல் உறுப்பைக் கொண்டு வசைபாடத் தெரிந்த ஒரு கூட்டத்தை உருவாக்கும் தமிழ் தேசியம், லும்பன்களைத் தங்கள் எடுபிடிகளாக வளர்த்தெடுத்து வைத்திருகின்றது. இந்த பிற்போக்குத் தேசியவாத புலி அரசியல் தான், தமிழ் மக்களை முள்ளிவாய்கால் வரை நகர்த்தித் தோற்கடித்தது.
"சிங்களவனுடன் தமிழனுக்கு என்ன வேலை" என்று கேட்டபடி வன்முறையுடன் குதற முனைந்த அதே அடிப்படையில் தான், நாகரிகமான இடதுசாரிய வேடம் போட்டபடி, கீழ்த்தரமான குறுந்தேசிய வெறியைக் கக்கியபடி இணையங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் சிங்கள மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முனைகின்றனர் சில குறுங்குழுக்களும், ஆதிக்க சமூக - மேற்தட்டு வர்க்க அதிகார வெறி கொண்டோர்களும்.
இந்தப் புலம்பெயர் ஆதிக்க சமூக குறுங்குழுக்களும் மேற்தட்டு வர்க்க கனவான்களும் முன்வைக்கும் தமிழ் தேசியமும் அதன் உள்ளடக்கமும், மேற்படி வன்முறையாளர்களின் தேசியப் புரிதலுக்குமிடையில் - நடைமுறையில் எந்த வித வித்தியாசங்களும் இல்லை.
இந்த இரு பகுதிக்குமிடையிலுள்ளது ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே. புலிகள் சார்ந்த லும்பன்கள் போன்று - புலம்பெயர் ஆதிக்க சமூக - குறுங்குழுக்களும், மேல்வர்க்கக் கனவான்களும் தூசண வார்த்தைகளோ அல்லது உடல் வன்முறையோ செய்வதில்லை. மாறாக தத்துவம், கோட்பாடு, இடதுசாரியம், ஜனநாயகம், மக்கள் போராட்டம், தேசம், தேசியம், பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை என்பவை போன்ற சில சொற்களை முன்னிறுத்தி, நுணுக்கமான முறையில் (Sophisticated) மொழி சார்ந்த மற்றும் உளவியல் வன்முறையை நிகழ்த்துகின்றனர். தனிமனிதர்கள் பற்றிய அவதூறுகளைப் பரப்புதல், பாலியல் நிந்தனைகளை மறைமுகமாகக் கசியவிடல், தனிமனிதர்களையும் அவர்களின் உழைப்பையும் தவறாக வர்ணித்தல், தமது குறுகிய அரசியல் நலனுக்காக வளர்ந்துவரும் மக்கள் சக்திகளைப் பிரித்தாளுதல், பழைய இயக்கவாத சதி அரசியலைத் திட்டமிட்டு முன்னெடுத்தல், அரச எதிரிகளாகத் தம்மை முன்னிறுத்தியபடி மறுபுறத்தில் தமது அரசியல் எதிரிகள் என கருதப்படுபவர்களின் விபரங்களை இலங்கை அரசுக்குத் தெரியும் விதமாகத் பிரசுரித்தல் போன்ற "வேலை முறைகள்" இவர்களால் இன்று தமிழ் தேசியத்தின் பெயரால் முன்னெடுக்கப்படுகிறது.
புலிகளின் லும்பன் கும்பல்கள் தமிழ் தேசிய ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் யார், நண்பர்கள் யார் என விளங்கிக் கொள்வதை அவர்களுக்கு ஊட்டப்பட்ட இனவாத உணர்வு தடுக்கிறது. ஆனால் இந்த இடதுசாரியம் கதைக்கும் தமிழ் தேசியத்தின் - ஆதிக்கச் சமூகக் குறுங்குழுக்களும், மேற்தட்டு வர்க்கக் கனவான்களும் மிக மிக விபரமாகவே எதிரிகள் யார், நண்பர்கள் யார் எனத் தெரியும். ஆனால், தமது அரசியல் இருப்பைத் தங்க வைத்துக் கொள்வதற்காக- ஒன்றும் தெரியாதவர்கள் போல பாசாங்கு செய்தபடி - இன ஒற்றுமைக்காவும் - ஒடுக்கப்படும் தேசியங்களின் விடுதலைக்காகவும் போராடும் சகோதர இனமக்களை, போராட்டச் சக்திகளை இனவாதிகள் எனப் பிரச்சாரம் செய்கின்றனர்.
உதாரணமாக, இன்று இலங்கையில் தலை விரித்தாடும் பொதுபல சேனா போன்ற பௌவுத்த மத அடிபடைவாதிகளுக்கு எதிராகப் போராடுதல், பௌவுத்த சமய நிறுவனங்களின் சமூக அதிகாரங்களுக்கு எதிராகச் செயற்படுதல் போன்ற சமூகச் சீர்திருத்த வேலைகளிலும்- குறிப்பாக இனவாதத்திற்கு எதிராகவும் பல நூற்றுக்கணக்கான பிக்குகள் அதி தீவிரமாச் செயற்படுகின்றனர். அவர்கள் இடதுசாரிச் சக்திகளுடன்- சமவுரிமை இயக்கம் போன்ற வெகுசன இயக்கங்களில் இயங்குகின்றனர். இப் பிக்குகள் மக்கள் போராட்ட இயக்கம், சமவுரிமை இயக்கம் மற்றும் எமது சகோதரக் கட்சிகளுடன் இணைந்து இயங்குவதால், மேற்படி எமது வெகுசன அமைப்புகளையும்- சகோதரக் கட்சிகளையும் சிங்கள - பௌவுத்த இனவாத அமைப்புகளாக நிறுவுவதற்கு பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றனர்.
2009- யுத்த அழிவிற்குப் பின் மறுபடியும் - தமிழ் இனவாத ஆதிக்க சக்திகள், இடது - வலது எனப் பரந்துபட்ட வகையில் தமது மேலாதிக்க வர்க்க அரசியலின் ஆதிக்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியலையும், நடைமுறை வேலைகளையும் கருவறுக்க அனைத்து வகையான வன்முறையையும் கையிலெடுத்துள்ளனர்.
ஒடுக்கப்பட்ட சகோதர இன மக்கள் மத்தியில் இருந்து இனவாதத்துக்கு எதிராகவும், ஒடுக்கப்படும் தேசிய இனமக்களின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கப்படும் அரசியல்- நடைமுறைப் போராட்டங்கள் மட்டுமே தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிங்கள உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை உருவாக்குவதற்கான பாதையாகும். இதன் அடிபடையில், இலங்கை அரச இனவாதத்துக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் தமது விடுதலைக்காக சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராடுவதைத் தவிர ஒடுக்கப்படும் மக்கள் நலம் சார்ந்த வேறு எந்த மாற்று- குறுக்கு வழியும் கிடையாது. இவ்வகையில், ஐக்கியப்பட்ட இவ்வரசியலுக்கான முன் முயற்சி, முதற் காலடி அழுத்தமாக- உறுதியாக முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இதைக் கண்டு அஞ்சும் தமிழ் தேசியம் கூட்டம், இதை குலைக்க விரும்புகின்றது.
இதனடிப்டையில்:
*தமிழ் தேசிய ஒடுக்கப்பட்ட மக்களில் விடுதலைக்காகப் போராடும் மக்கள் சக்திகள் அனைவரையும், தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி நடாத்தப்படும் அனைத்து வகை வன்முறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!
*இடதுசாரிகள் என்ற போர்வையில் இயங்கும் ஆதிக்கச் சமூகக் குறுங்குழுக்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கக் கனவான்களாலும் முன்னெடுக்கப்படும்- தமிழ் இனவாத- சமூக மேலாதிக்கவாத வெறியையும், எம் மீது அவர்களால் நிகழ்த்தப்படும் அனைத்து வகை வன்முறைகளையும் நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்!
நிறைவாக, அரசியல் தவறுகள் கழைந்து- நடைமுறையை முன்னிறுத்தி, ஒடுக்கப்படும் அனைத்துத் தேசிய இன மக்களில் உரிமைக்கான ஒன்றிணைத்த போராட்டத்தில் மக்கள் சக்திகள் அனைவரையும் பங்கெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்!
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
02/05/2014