12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

சமவுடமை வாழ்க்கை – சமவுடமை சமுதாயம்

இன்னுமொரு சர்வதேச தொழிலாளர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாங்கள் உங்களை நாடி வந்திருப்பது பெரிய செய்தியொன்றின் ஆரம்பத்திற்காகத்தான்.

 

எமது நாட்டில் அநேகமானோர் சர்வதேச தொழிலாளர் தினத்தை மே தினம் என்றே அழைக்கின்றனர். தலைநகர் கொழும்பு வீதிகளை அதிரச் செய்யும் விதத்தில் மே முதலாம் திகதி நடக்கும் ஊர்வலங்கள் பிற்பகலில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சுக்களினாலும், அவற்றில் சில இசை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெறும். வாராந்திரப் பத்திரிகைகள், தினசரிப் பத்திரிகைகள் போன்ற அனைத்து பத்திரிகைகளும் மே தினத்திற்காக பல பக்கங்களை ஒதுக்குகின்றன. பெரும்பாலும் புறக்கோட்டையில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் தோழர்களின் துன்ப ரேகைகள் படர்ந்திருக்கம் முகங்களுடனான புகைப்படங்கள் அவற்றை அலங்கரிக்கின்றன. ஆனால் அந்த மே தின ஊர்வலங்களில் எப்போதாவது அந்த தோழர்களை நீங்கள் கண்டதுண்டா?

 

 

இன்று இலங்கையில் நடாத்தப்படும் மே தினத்தின் நோக்கம் என்னவென்று நாங்கள் உங்களிடம் கேட்டால் நீங்கள் தரும் பதில் என்ன? உண்மையிலேயே இந்த மே தினம் உழைக்கும் உங்களுடையதா? இல்லையாயின் அதை உங்களிடமிருந்து யாராவது பறித்துக் கொண்டார்களா? அவ்வாறு அபகரித்திருந்தால், மே தினத்தை உங்களதாக்கிக் கொள்வது எப்படி? வெறுமனே வருடாந்த நிகழ்வாக்கப்பட்டிருக்கும் மே தினத்திற்கு புதிய விளக்கத்தை கொண்டு வருவது எப்படி? உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான வெற்றியை பெற்றுக் கொடுக்கத் தேவையான பல விடயங்களோடு மே தினத்தையும் சம்பந்தப்படுத்திக் கொள்வது எப்படி? இவைதான் நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைகள்.

 

சர்வதேச தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் உரிமைகளை அடையாளப்படுத்தும் தினமாகும். இந்த உரிமைகள் வரலாறு பூராவும் போராடி பெற்றுக் கொண்ட உரிமைகளேயல்லாது ஆட்சியாளர்கள் விருப்பத்துடன் வழங்கியவைகளல்ல. அன்று ஹேமார்கட் சதுக்கத்தில் தமது நியாயமான கோரிக்கைகளை பெற்றுக் கொள்வதற்குச் சென்ற தொழிலாளர்களுக்கு சுட்டுப் பொசுக்கும் துப்பாக்கி வேட்டுக்களே பரிசாகக் கிடைத்தன. என்றாலும் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு தப்பி ஓடவில்லை.

 

அந்த மே முதலாம் திகதி செந்நாளாகியது அவர்களது உதிரத்தால் அவர்கள் அணிந்திருந்து உடைகள் அன்று நனைந்திருந்தமையால்தான். ஆகவேதான், இன்றும் கூட உலகம் பூராவுமுள்ள ஆண்களும் பெண்களும் செங்கொடியை உயரப் பிடித்து அந்த தீரமிக்க மக்களின் நெஞ்சுறுதிக்கும் ஒற்றுமைக்கும் மரியாதை செலுத்துகிறார்கள்.

 

ஆனால், இன்று உலகம் பூராவும், எமது நாட்டிலும் செங்கொடிகள் மட்டுமல்ல நீலம், பச்சை, மஞ்சள் வர்ண கொடிகளும் உயர்த்தப்படுகின்றன. உழைக்கும் மனிதனை விட அவர்களை மிதித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் மே தினத்தை நினைவு கூர்கிறார்கள். மே தின ‘நினைவு கூரலை” ஆட்சியாளர்களே ஏற்பாடு செய்து தருகிறார்கள். எனவே மே தினம் ‘ நினைவு கூரலுக்கு” மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அது வருடாந்த விழாவாக ஆகியிருக்கிறது. இது மே தினத்திற்கு மாத்திரம் நடந்த ஒன்றல்ல, ஏனைய அனைத்து விடயங்களுக்கும் நடந்ததுதான். தொழிலாளர் போராட்டத்தின் வடிவமும் முற்றாக மாறியிருக்கிறது. அது மட்டுமல்ல, தொழிலாளர்கள் உள்ளிட்ட சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின் அடக்குமுறையின் வடிவமும் மாறியிருக்கிறது. துப்பாக்கிகள் மட்டுமல்ல, துன்புறுத்தல் என்று கண்ணுக்குத் தெரியாதவற்றினாலும் நாங்கள் அடக்கப்பட்டுள்ளோம். மயக்கி அடிமைகளாக்கப்பட்டுள்ளோம். உழைக்கும் மக்களாக, இடதுசாரிகளாக கூறிக் கொண்ட சில கட்சிகள் இவற்றில் சிக்கிக் கொண்டதால்தான் சர்வதேச தொழிலாளர் தினம் ‘நினைவுகூரலுக்கு” ‘விழாக்களுக்கும்” மட்டுப்படுத்தப்படுகிறது.

 

இன்று நாங்கள் நவ தாராளமய முதலாளித்துவ சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அன்று கார்ல் மாக்ஸ் சொன்னார் ‘அனைத்துலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்று. இன்று இந்த நவ தாராளமய வாழ்க்கை மனிதர்களை குறுகிய தனியார்மயத்திற்குள் மூழ்க வற்புறுத்துகிறது. தமது சகோதரனை தமது எதிரியாக பார்ப்பதற்கு, ஒற்றுமையை குழி தோண்டி புதைப்பதற்கு ஒற்றுமையைப் பற்றி பேசும் மனிதனை வேடிக்கை பார்ப்பதற்கே எமக்கு கற்றுத்தரப்பட்டுள்ளனது. துணிந்து போராடித்தான் வெற்றிபெற முடியுமென புகட்டப்பட்டுள்ளது. ஆனால் தனியாக போராடச் சென்ற அனைவரும் தோற்றுப் போனதை நாங்கள் அறிவோம்.

 

என்றாலும் நவ தாராளமய முதலாளித்துவத்தின் கொடுமையை அப்படி மூடி மறைக்க முடியாது. அது நீரில் அமுக்கிக் கொண்டிருக்கும் இறப்பர் பந்தைப் போன்றதாகும். அதற்கு தேவையானளவு உதாரணங்கள் இருக்கின்றன. தற்போதை முறைமை இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுக்க பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. முன்னேறியதாகக் கூறிக் கொண்ட ஐரோப்பிய நாடுகளில் கூட பொது மக்களின் வாழ்க்கை வேகமாக சரிந்து வருகிறது. வாழக்கை மீதான அவர்களது வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்த நெருக்கடியை நிவர்த்தி செய்ய தற்போதைய முறைமையினால் முடியாததினால் உழைக்கும் மக்களிடம் எஞ்சியிருக்கும் வாழ்க்கை நிலையை அபகரிப்பதற்கு ஆட்சி செய்வோர் முயல்கின்றனர். இலங்கையிலுள்ள மேன் பவர் - Man-Power நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகாது. அங்கே அடிமை முறை சட்ட திட்டங்களே செயற்படுகின்றன.

 

ஆனால், நவ தாராளமய முதலாளித்துவம் மிக சூசகமான முறையில் தமது இயலாமையை மறைத்துக் கொண்டுள்ளது. ஆகவே, இந்த முறைமை, தான் மக்களின் ஒடுக்குமுறையாளன் என்ற விடயத்தை மூடி மறைத்து விட்டது. மக்களின் உண்மையான ஒடுக்குமுறையாளன் மறைந்து நின்று போலி ஒடுக்குமுறையாளனை உருவாக்கிக் காட்டுகிறான். ஆதலால், மக்கள் தனது உண்மையான எதிரியோடு போராடுவதில்லை. தம்மைப் போன்றே ஒடுக்கப்பட்ட அப்பாவிகளோடே போராடுகிறார்கள். அடுத்ததாக, இன்று எமது நாட்டில் காணப்படும் தொழிலாளர் போராட்டங்களில் அநேகமானவை இறுதி இலக்கு இல்லாத போராட்டங்களாக மாறியிருக்கின்றன. இவை ஏதாவது சில கோரிக்கைகளை பெற்றுக் கொள்ள பிரயத்தனம் செய்யும் போராட்டங்களாக மட்டுப்பட்டிருப்பது அதனால்தான்.

 

கஷ்டப்பட்டு பெற்றுக் கொள்ளும் இந்த சொச்சங்களை ஒருகையால் கொடுத்து அதற்கும் அதிகமாக மறுகையால் அபகரித்துக் கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். அதனால்தான் எதையாவது பெற்றுக் கொள்ளும் போராட்டத்தோடு மட்டும் நின்று விடாது திருப்தியான வாழ்க்கையை பெற்றுக் கொள்ளும் சமவுடமை போராட்டத்தோடு இணைந்திட வேண்டியுள்ளது. சில அரசியல் கட்சிகள், தாம் முகம் கொடுக்கும் தேர்தல்களில் ஓரிரு ஆசனங்களை பெறுவதையே நோக்காகக் கொண்டுள்ளனர். இவர்கள் பலியாகியுள்ள பயனீட்டுவாதம் எந்தளவு பாரதூரமானதென்பது இதன் மூலம் விளங்குகிறது.

 

நாங்கள் சிறிய உதாரணமொன்றை உங்களுக்கு கூறுகிறோம். இலங்கையின் இடதுசாரிகள் எனக் கூறிக்கொண்டு ஒரு கட்சி கடந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களின்போது புதுமையான கோஷமொன்றை கொண்டு வந்தது. உற்பத்திக்கு இலாபமில்லை, தொழிலாளிக்கு சம்பளமில்லை என. அந்த கோஷத்தின்படி பார்த்தால், தொழிலாளர்கள் அழுத்தத்தால் நசுக்கப்படுகிறார்கள், தொழிலாளரின் அழுத்தத்திற்கு காரணமான உற்பத்தியும் அழுத்தத்தால் நசுக்கப்படுகிறது. எனவே, இந்த கோஷத்தின்படி இருசாராரும் ஒற்றுமையாகவும் அமைதி;யாகவும் இருக்கக் கூடிய முறையொன்றுதான் தேவைப்படுகிறது. ஆகவே இந்த முதலாளித்துவ முறை பிரச்சிணையில்லை. இருசாராரும் துன்பப்படுவது ராஜபக்ஷ அரசாங்கத்தின் மோசமான வரிக் கொள்கையினால்தான் என்று சொல்கிறார்கள். அப்படியல்லாது, இந்த நாறிக் கிடக்கும் முதலாளித்துவ முறையினால் அல்ல. ஏனெனில், அவர்களுக்கு தொழிலாளர்களினதும் அவர்களை சுரண்டித் தின்னும் உற்பத்தியாளனிதும் வாக்குகளை ஒரே நேரத்தில் பெற வேண்டுமென்பதால்தான் அப்படியான பொய் கோஷங்களை கொண்டு வருகிறார்கள். அப்படியானால், இந்த முறைமையோ, அரசாங்கங்களோ அல்ல. இடதுசாரிகள் எனக் கூறிக்கொண்ட அரசியல் கட்சிகளும் சேர்ந்துதான் உழைக்கும் மக்களை ஏமாற்றும் அரசியலை செய்கின்றன. இனி, இம்மாதிரி;யான போலி கோஷங்களினால் மறைக்கப்பட்டிருக்கும் உண்மையான வெற்றிக்கான போராட்டத்தை நாங்கள் எப்படி தோற்றுவிப்பது?

 

தரப்படுத்தல் பேதம் ஒட்டுமொத்த தொழிலாளர் இயக்கத்தையுமே நாசப்படுத்திவிடும் புல்லுருவியாக ஆகியிருக்கிறது. ஒரே தொழிலில் ஈடுபடுபவர்களும் தர பேதம் காரணமாக கோபமடைந்துள்ளார்கள். ஜனநாயகத்திற்கு முரணாக இன்று அநேக தொழிலாளர் போராட்டங்கள் நீதிமன்ற உத்தரவின் ஊடாக அடக்கப்படுகின்றன. குழுக்களாக பிரிந்து நிற்கும் வரை இந்த அடக்குமுறையை தோற்கடிக்க எங்களால் முடியாது. ஒருவருக்கொருவர் எதிராக அல்ல ஒவ்வொருவருக்காகவும் போராடும் கலாச்சாரத்தை கட்டியெழுப்பாமல் எம்மால் வெற்றி பெற முடியாது. அப்படியான கூட்டுப் போராட்டத்தின் மூலமாக மாத்திரமே வாழ்க்கையில் சந்தோசத்தை கொண்டுவர முடியும். அவ்வாறான மகிழ்ச்சி நிறைந்த சமவுடமை சமுதாயத்தை கட்டியெழுப்புவதன் ஊடாகத்தான் சமவுடமை வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும்.

 

உழைக்கும் தொழிலாளர் வர்க்க மக்களே,

 

இந்த மே தினத்தை முன்நிறுத்தி உங்களோடு உரையாட முன்னிலை சோஷலிஸக் கட்சியினராகிய நாங்கள் உங்களைத் தேடி வருகிறோம். நாட்டின் பல்வேறு இடங்களில் மே தினத்திற்கு முன்னர் கருத்தரங்கு வரிசையொன்றை நடத்துகிறோம். வேலைத்தல மட்டத்தில் சிறு கலந்துரையாடல்கள் நடத்துகிறோம். தொழிற்சங்க எல்லைகளை தகர்த்தெறிந்து தர பேதத்திலிருந்து விடுபட்டு தொழிலாளர், விவசாயிகள், மாணவர்கள், மாதர்கள் போன்ற சக்திகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நாளாக இம்முறை மே தினத்தை ஆக்கிக் கொள்வோம்.

 

இது குறித்து நாங்கள் அதிகமதிகமாக கதைப்போம். புதிய பயனீடொன்றை அதனூடாக பெற்றுக் கொள்வதற்கு பாடுபடுவோம். இலங்கை தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்குள் புதிய அத்தியாயத்தை எழுதுவோம்.

 

(வாசித்துவிட்டு மற்றவருக்கும் கொடுக்கவும்)

முன்னிலை சோஷலிஸக் கட்சி

2014.04.20

இது தொடர்பாக மேலும் கலந்துரையாட முன்னிலை சொசலிச கட்சியினை தொடர்வு கொள்ளவும்

41/32, கந்தவத்தை பாதை, தேபானம, பன்னிபிட்டிய.

தெலைபேசி: 0112837422

E-mail- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். web-www.flsocialistparty.com


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்