இலங்கை ஆளும் வர்க்கம் இனவாத மூலமாக மட்டும் மக்களை அடக்கியாள முடியாத நிலையில், இன்று புலி தேவைப்படுகின்றது. 30 வருடமாக புலியைக் காட்டி ஆண்டவர்கள், புலியை தோற்கடித்தன் மூலம் அரசியல் ரீதியாக தனிமைப்பட்டு விட்டனர். பெரும்பான்மையின மக்களுக்கு எதிரியை காட்டி ஏமாற்ற முடியதா நிலையில், அவர்கள் அரசிற்கு எதிராக அணிதிரண்டு போராட எழுவதனை தவிர்க்க, மீண்டும் புலி தேவைப்படுகின்றது. அதாவது மக்கள் தமது எதிரியாக அரசைப் பார்க்காமல் இருக்க வேண்டுமென்றால், மக்களுக்கு ஒரு எதிரியை உருவாக்கிக் கொடுக்க வேண்டி நிர்ப்பந்தத்தில் அரசு தடுமாறுகின்றது. புதிய புலி வேட்டை, இப்படித்தான் மேடையில் அரங்கேறியது.

 

இலங்கை ஆளும் வர்க்கத்தால் இன்று இதைத் தாண்டி எதையும் வழங்க முடியாது. தேர்தல் மூலம் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சி கட்டமைப்பு மாறுவதில்லை. இன்றைய இலங்கை ஆட்சி அதிகார கட்டமைப்பானது இனவாதம் மதவாதத்தை அடிப்படையாக கொண்டது. எனவே ஆட்சியாளர்களை மாறுவதால் இந்த ஆட்சி அதிகார கட்டமைப்பானது ஒழித்துவிடப் போவதில்லை. உலகமயமாகிவிட்ட ஒற்றைப் பொருளாதாரக் கொள்கைக்கு மாறாக, மக்களை ஆள்வதற்கு வேறு அரசியல் தெரிவு இந்த ஆளும் வர்க்கத்திடம் இன்று கிடையாது.

 

காலனியவாதிகளிடம் அதிகாரத்தைப் பெற்ற சுதேசிகள், தொடர்ந்து இனவாதம் மூலமே மக்களைப் பிரித்தாண்டனர். இந்த அரசியலின் விளைவாகவே, புலிகள் தோன்றினர். புலி-அரசும் கையாண்ட எதிர் எதிரான இனவாத அரசியலும், அதன் இராணுவாதமும் இணைந்து பாசிசத்தை தோற்றுவித்தது. இறுதியில் புலிகள் அழிக்கப்பட்ட போதும்

 

1.மக்களை ஒடுக்கியாளும் அரச பாசிசத்தையும், அந்த அரசியலையும் ஓழிக்க முடியவில்லை.

 

2.புலியை அழித்த பின்பு, அரசால் புலியின்றி மக்களை அடக்கியாள முடியாதுள்ளது.

 

3.இனவாதத்தைக் கைவிட்டு இனப்பிரச்சனைத் தீர்ப்பதன் மூலமும், மக்களை அடக்கியாள முடியாது உள்ளது.

 

இன்று ஆளும் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் தரப்புக்கு மட்டுமல்ல, தேர்தல் மூலம் புதிதாக ஆட்சிக்கு வரும் எந்த தரப்பினரும் இந்த இனவாத மதவாத அடிபபடையினை தாண்டி மக்களை ஆடசி செய்ய முடியாது. அதாவது ஆளும் வர்க்கத்தின் ஆட்சி பாசிசமாகிவிட்ட நிலையில், அரசு கட்டமைப்புக்கு தலைமை தாங்கி ஆள்பவர்கள் எவரது அரசியல் அடிப்படையும் இதுவாகவே இருக்க முடியும்.

 

இதை மூடிமறைக்க மீண்டும் புலியைத் தோற்றுவிக்க வேண்டிய நிலையில் அரசு இருப்பதுடன், இனப்பிரச்சனை தீர்க்க முடியாத வகையில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு காணப்படுகின்றது.

 

ஊலகமயமாதலின் கீழான உலகப் பொருளாதாரம், ஒற்றைப் பொருளாதாரமாகி விட்டது. நாடுகளின் பொருளாதாரக் கொள்கை தேசம் சார்ந்தாகவோ, சுயதீனமானதாகவோ இருக்க முடியாது. உலமயமதாலின் ஒற்றைப் பொருளாதார கொள்கைகளையே தனிப்பட்ட எந்த நாடுகளும் கொண்டிருக்க முடியும். அதே நேரம், ஆள்வோர் அதற்கு எற்ப வேஷம் போட்டுக் காட்ட மட்டுமே முடியும். இந்த ஒற்றைப் பொருளாதார கொள்கை அடிப்படையில் ஆட்சிக்கு வருபவர்கள் அதையே முன்னெடுப்பதுடன், அதற்கு விதம் விதமாக மூகமுடியைப் போட்டு ஆடிக் காட்டவே முற்படுகின்றனர்.

 

ஒவ்வொரு நாடும் உலகமயமதலிலான ஒற்றைப் பொருளாதார கொள்கையை அமுலுக்கு கொண்டு வரும் வடிவங்களும் வேஷங்களும் தான் இன்று வேறுபடுகின்றன. இந்த வகையில் இலங்கையில், இனவாதம் - யுத்தம் - பாசிசம் என்ற மூன்று பிசாசுகள் மூலம் கொண்டு வரப்பட்டு, இன்று முன்னெக்கப்படுகின்றது.

 

இதில் உள்ள அவலம் என்னவென்றால், இதற்கு மாற்றான புதிய வழியில் இதைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாதுள்ளதே. அத்துடன் ஆளும் வர்க்கத்தின் இந்த கொள்கைக்கு மாற்றான வேறு பொருளாதாரக் கொள்கைக்கு இனி இடமில்லை.

 

அதேநேரம் இலங்கை அரசு இனவாதமற்ற, பாசிசமற்ற, இராணுவமற்ற ஒரு ஆட்சியைக் கொண்டு, இன்றைய உலகமயமாதலின் ஒற்றைப் பொருளாதார அமைப்பை பாதுகாக்க முடியாது. இதன் அர்த்தம், இந்த பொருளாதாரக் கொள்கை அடிப்படையாகக் கொண்ட எந்த ஆட்சியாளர் ஆட்சிக்கு வந்தாலும், இது தான் இலங்கையின் நடைமுறையாகும்.

 

இன்று இலங்கையில் பொருளாதாரம் நவதாரளமயமாகி, மக்களுக்கு எதிரானதாகவே பயணிக்கின்றது. இதை தனது கொள்கையாக கொண்ட அரசு, அன்னிய மூலதனத்துக்கே சேவை செய்கின்றது. இதன் விளைவால் மக்கள் தங்கள் வாழ்கை நெருக்கடிகள் சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் ஆட்சியாள்களிற்கு எதிராக போராடமல் இருக்கவே, மீண்டும் புலியை அரசு கொண்டு வருகின்றது.

 

இந்த வகையிலேயே வடக்கு-கிழக்கில் தொடரும் கைதுகள், சுற்றிவளைப்புகள் அனைத்தும், மீண்டும் யுத்த கால நிலைமையை அமுலுக்கு கொண்டு வரும் அரசின் விருப்பத்தை எடுத்துக் காட்டுகின்றது. உள்நாட்டில் அரசியல் நெருக்கடியை வைத்திருப்பதன் மூலமே, மக்களை பிரித்தாளுவதற்கும், மேற்கு நலன் சார்ந்த அழுத்தத்தில் இருந்து மக்களை திசை திருப்பவும் முடியும் என்ற நிலையிலேயே, அரசின் இத்தகைய மக்கள் விரோத செயற்பாடுகள் காலத்துக்கு காலம் அமுலுக்கு வருக்கின்றது.

 

வடக்கு-கிழக்கில் சுதந்திர நடமாட்டங்களை கட்டுப்படுத்துதல், வீதிச்சோதனைகள், அடையாள அட்டையைக் கோருதல், சுதந்திரமாக தொழில் செய்வதைத் தடுத்தல் என்று இராணுவ கெடுபிடிகள் மூலம், தமிழ் சமூகத்தின் குரல்வளையே அரசு மீண்டும் நெரிக்கின்றது. அதே நேரம் புலம்பெயர் அமைப்புகளின் முதல் தனிநபர்கள் வரையான தடைகள் மூலம், தனது இனவிரோதக் கொள்கையை மீண்டும் மூர்க்கமாகியுள்ளதைக் காட்டுகின்றது. இன ரீதியான கெடுபிடிகள் மூலம், முரண்பாட்டை ஆழப்படுத்துகின்றது. ஒடுங்கியும் ஒதுங்கியும் போன ஒரு சமூகம் அமைதியாகக் கூட வாழ முடியாது என்பதையே, மக்களின் முகத்தில் அறைந்து கூறுகின்றது.

 

யுத்தத்தில் வென்ற அரசு, அதை கொண்டு தொடர்ந்து தன்னை முழு நாட்டினதும் ஆட்சியளராக முன்னிறுத்தியது. தொடர்ந்து இனப்பிரச்சiனைக்குத் தீர்வு காண்பதை மறுப்பதன் மூலம், தங்கள் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சித்து. ஆனால் அது தொடர்ந்து கைகொடுக்காத என்ற உண்மை நிலையிலேயே, மீண்டும் புலியை தோற்றுவித்துள்ளது. மாகாணசபையுடன் பெருபான்மையான தமிழ் மக்கள் திருத்தியடைந்து அமைதியாகி விடுவார்களோ என்ற அரசின் அச்சமே, அதை இயக்கவிடாது தடுக்கின்றது. அரசு புலியைத் தோற்றுவிப்பது மட்டுமல்ல, மாகாண சபையையும் முடக்குவதன் மூலம், இனவாதத்தை ஆணையில் வைக்கின்றது. அதே நேரம் மீண்டும் புலி மீள வந்து விட்டதாக காட்டுகின்றது.

 

புலியும் அதன் அரசியலுமே தமிழ் மக்களை இன்றைய அவலத்துக்கு இட்டுச் சென்றது. இந்த உண்மை, வடக்குகிழக்கு மக்கள் அனைவரதும் சொந்த அனுபவம். மீண்டும் புலியையும், அதன் மக்கள் விரோத கூறையும், தங்கள் அரசியல் தெரிவாக கொண்டு இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் இன்றில்லை.

 

மக்கள் இன்று விரும்புவது அமைதியையே. இன முரண்பாட்டுக்கு தீர்வு மூலம், இலங்கையின் அனைத்து மக்களுடன் ஒன்றிணைந்த வாழ்வையே விரும்புகின்றனர். அதாவது இலங்கையின் அனைத்து மக்களும் சமவுரிiயை பெற்று வாழ்வதே, மக்களின் பொது விரும்பமும், தெரிவுமாகும்.

 

இப்படி எதார்த்தம் இருக்க அரசு மக்கள் புலியை விரும்புவதாகவும், மீள தோற்றுவிப்பதாகவும் இட்டுக்கட்டி காட்ட முற்படுகின்றது. 2005களில் புலிகள் தமிழ் மக்கள் யுத்தத்தைக் கோருவதாகவும் விரும்புவதாகவும் கூறி யுத்தத்தை நடத்தியதன் மூலம், மக்களின் அமைதியான சமாதான விருப்பதை மறுத்தன் மூலம் இனத்தையே இனவழிவுக்கு உட்படுத்தினர். இதே போன்று தான் இன்று அரசு மக்களின் சமதானமான சமவுரிமையிலான தீர்வையும், அமைதியான வாழ்வையும் மறுத்து, கெடுபிடிகளை மூலம் மக்களை ஆள மீண்டும் புலியை தோற்றுவிக்கின்றது.

 

ஒருபுறம் தங்கள் இராணுவக் கெடுபிடியான அழுத்தங்கள் மூலம், தனிநபர் வன்முறையினை தூண்டி அதை அறுவடை செய்ய முனைகின்றது அரசு. ஆனால் அதற்கான மனநிலையில், இந்த அரசியலில் வளர்க்கப்பட்ட முன்னாள் புலிகள் கூட இன்று தயாரகவில்லை. இந்த அரசியல் உண்மை தான், அரசுக்கு அச்சத்தைக் கொடுக்கின்றது. தங்கள் விரும்பிய ஒன்றை உருவாக்க முடியாத நிலையில், அரசே புலியைத் தோற்றுவிக்கின்றது. கைதுகள், தேடுதல்கள் மூலம் புலி மீளவும் தோன்றி விட்டதாக, இட்டுக்கட்டி படம் காட்ட முற்படுகின்றது.

 

மக்கள் விரும்புவது அமைதியான வாழ்வையும், அதை உருவாக்கக் கூடிய சமவுரிமையையும் தான். இதை உயர்த்தி நிற்பதன் மூலம், அரசை தோற்கடிப்பதே இன்றைய அரசியல் அறைகூவலாகட்டும்.