ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு சமவுரிமையை வழங்கக் கோரி ஒடுக்கும் இனங்கள் போராடுவதும், சமவுரிமையை வழங்கக் கோரும் இந்தப் போராட்டத்துடன் ஒடுக்கப்பட்ட இனங்கள் ஒன்றுபட்டு, சமவுரிமையை பெற்றுக் கொள்வதற்காக போராடுவதுமே சமவுரிமையின் அரசியல் சாரம்.
எந்த இனத்துக்கும் தனிச் சலுகை கிடையாது. ஒரு இனம் அனுபவிக்கக் கூடிய உரிமைகைள் அனைத்தும், எல்லா இனத்துக்கும் உண்டு என்பதே சமவுரிமையின் கொள்கை விளக்கம். தேசங்கள் கொண்டு இருக்கக் கூடிய தன்னாட்சியும் கூட, சமவுரிமையின் அடிப்படையிலானதே ஒழிய ஒரு இனத்திற்கான விசேட சலுகையின்பாலனதல்ல.
முதலாளித்துவ தேசியவாதிகள் தங்கள் வர்க்க நலன் சார்ந்து, சமவுரிமையை ஒரு நாளும் அங்கீகரிப்பதில்லை. ஜனநாயகப் பிரச்சனையான தேசியத்தை கையில் எடுக்கும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடு, சமவுரிமைக்காக போராடுவதா இல்லையா என்பது தான். அதாவது முரணற்ற ஜனநாயகத்துக்காக போராடுவதா இல்லையா என்பது தான்.
பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கைக்காகப் போராடுவதில்லை, மாறாக முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைக்காகவே போராடுகின்றது. முரணற்றதன் அர்த்தம், விசேட மற்றும் தனிவுரிமைகளை மறுத்து, அனைவருக்குமான பொதுவான ஒன்றுக்காக போராடுவது தான். முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையின் ஒருங்கினைந்த வர்க்க சாரம் தான், சமவுரிமையாக இருக்கின்றது. யாரெல்லாம் சமவுரிமைக்காக போராடுகின்றனரோ, அவர்கள் முரணற்ற ஜனநாயகத்துக்காக நிற்கின்றனர். யாரெல்லாம் சமவுரிமைக்காக போராடவில்லையோ, அவர்கள் முதலாளித்துவ ஜனநாயக் கோரிக்கையை முன்னிறுத்தி நிற்கின்றனர் என்பதே, இதன் வெளிப்படையான அரசியல் நடைமுறை சார்ந்த உண்மை.
இனப்பிரச்சனைக்கு மக்கள் போராட்டம் கொண்டு இருக்கக் கூடிய தீர்வு எதுவாக இருந்தாலும், அதை அடைவதற்கான அரசியல் நடைமுறை வடிவம் சமவுரிமைக்கான போராட்டம் தான்.
மக்கள் தமக்குள் தாம் ஒரு தீர்வை வந்தடைவது என்பது, சமவுரிமையின் பாலானது. இதற்கு வெளியில், மக்கள் தங்களுக்கான சொந்தத் தீர்வை வந்தடைய முடியாது. சுயநிர்ணய அடைப்படையிலான தன்னாட்சியை வந்தடைவது என்பது கூட, சமவுரிமையிலான தேசங்களுக்கு இடையிலானது. ஒடுக்கப்பட்ட இனத்தின் சமவுரிமையை ஒடுக்கும் இனம் அங்கீகரித்து, அதற்காக இணைந்து போராடுவது தான் மக்கள் போராட்டம். இந்த வகையில் அனைத்து இன மக்களும், ஒன்றிணைந்து தீர்வு காண்பதே உயர்ந்தபட்ச தீர்வாகும். இதைவிட உயர்வான தீர்வை எந்தக் கோட்பாடும், நடைமுறையும் முன்வைக்கவில்லை.
பாட்டாளி வாக்கத்தின் வர்க்க கடமை என்பது சமவுரிமையை பெறுவதன மூலம், வர்க்கப் போராட்டத்துக்கான மிகச் சிறந்த சூழலை உருவாக்குவது தான். இதன் மூலம் பாட்டாளி வர்க்க அதிகாரத்தில், சுயநிர்ணய அடிப்படையிலான தன்னாட்சியையே சமவுரிமை கொண்ட தேசங்களுக்கு இடையில் அரசியல் தீர்வாக கொண்டுவருவதும் தான். சமவுரிமை கொண்ட தன்னாட்சியை மறுத்து, சமவுரிமை இயக்கம் செயற்படவில்லை.
இப்படி இருக்க சமவுரிமை போராட்டத்தை மறுத்து, பதிலாக கோருவது எதை?
1.அனைத்து தேசிய இன வாதத்துக்கு ஆதரவையும்
2.பிரிவினைக்கு அல்லது தனியரசுக்கு ஆதரவையும்
3.பிரிவினைவாத இன தேசியத்தை, பாட்டாளி வர்க்கம் தனது அரசியலாக முன்னெடுத்தல் வேண்டும் என்றும்
4.பரந்துபட்ட மக்கள் பிரிவினையாக புரிந்து கொண்டுள்ள சுயநிர்ணயத்தை முன்னிறுத்தக் கோரியும் நிற்கின்றனர்.
குறைந்தபட்சம் இதில் ஒன்றேயேனும் தீர்வுக்குரியதாக முன்னிறுத்தக் கோரி, சமவுரிமை இயக்கத்தை எதிர்க்கின்றனர். இதை முன்னெடுக்க மறுப்பதையே இனவாதம் என்கின்றனர். சமவுரிமையை மறுக்கின்ற அனைத்து தரப்பினது வாதமும், இதற்குள் எதோயொன்றை முன்னித்துகின்றது. இதை நிபந்தனை இன்றி ஆதாரிக்குமாறு கோருகின்றது. இதன் மூலம் முதலாளித்துவ தேசியவாதம், தனது சொந்த வர்க்கத்தின் நலனுக்கான அரசியல் உத்தரவாதத்தைக் கோருகின்றது.
பாட்டாளி வர்க்கத்தின் சமவுரிமை என்னும் செயல்பூர்வமான அரசியலை மறுக்கின்ற முதலாளித்துவ தேசியவாதிகள், "தனியரசு", "தனிநாட்டு" "இடைகால தீர்வு"... என்று தேசியவாதக் கோரிக்கைகளையே முன்வைப்பதையே தீர்வாகவும், செயல் பூர்வமானதாகவும் கருதுகின்றனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் முரணற்ற சமவுரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் ஆதாரிக்குமே ஓழிய, அதற்குரிய விசேட சலுகைகளை ஆதாரிக்காது. பாட்டாளி வர்க்கம் தன் வர்க்கப் போராட்டத்துக்குரிய ஒன்றை முன்னிறுத்தி போராடுமே ஒழிய, முதலாளித்துவத்தின் தனி ஆட்சிக்கான அதன் தேசிய கோரிக்கையை ஆதரிக்காது. இங்கு தீர்வு மற்றும் செயல்பூர்வமானதாக கருதும் அடிப்படைகள், இரண்டு நேர் எதிரான வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்துக்கான அரசியல் போராட்டத்துக்கான உள்ளடக்கமாகும்.
இங்கு பாட்டாளி வர்க்கத்தின் தன்னாட்சி அடிப்படையிலான சமவுரிமைக் கோரிக்கைக்கு பதில், முதலாளித்துவ கோரிக்கையான "தனியரசு" கோரிக்கையையே செயல்பூர்வமானதாகவும், இனப் பிரச்சனைக்கான தீர்வாகவும் முன்னிறுத்துகின்றனர். இதை பாட்டாளி வர்க்கம் ஆதாரிக்க வேண்டும் என்பதே, சமவுரிமையை எதிர்ப்பவர்களின் பொதுக் கோரிக்கை. தனியரசு அல்லாத எந்தத் தீர்வும், இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல என்பதே இதன் பின்னுள்ள அரசியல் சாரம். பாட்டாளி வாக்கம் இதை ஆதாரிக்காது என்பதும், சமவுரிமையை மறுக்கின்ற இந்த குறுகிய ஜனநாயக விரோதக் கோரிக்கையை எதிர்த்தும் போராடுவதுமே, பாட்டாளி வர்க்க நலனிலான செயற்பாட்டு அரசியலாகும்.
தேசியவாதிகள் சமவுரிமைக்கான போராட்டத்தை மக்களுக்கு எதிரானதாகவும், அரசின் கொள்கை என்று கூறுகின்றவர்கள், உண்மையில் சமவுரிமையை மக்களுக்கு மறுக்கின்றவராக இருக்கின்றனர். இனங்களுக்கும், மதங்களுக்கும் சமவுரியை மறுக்கின்றதன் விளைவு தான், இன முரண்பாடுகள், மற்றும் மத முரண்பாடுகள் என்பதை மறுத்து, தங்கள் வர்க்க நலனில் நின்று அதைத் திரித்துக் காட்ட முனைகின்றனர்.
சமவுரிமையை மறுக்கும் அரசின் கொள்கையை எதிர்த்துப் போராடதவர்கள், அரசின் செயற்பாட்டுக்கு தொடர்ந்து உதவுபவராகவே இருக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது, இனப்பிரச்சனையில் அரசின் அதே கொள்கையே என்று கூறுகின்ற அரசியல் கேலிக் கூத்துகள் மூலம், உண்மையில் சமவுரிமையை மக்களுக்கு மறுக்கின்றவாகளாக இருக்கின்றனர். சமவுரிமையை முன்வைக்கின்றவர்களின் கொள்கையும், அதை மறுக்கின்றவர்களின் கொள்கைக்கும் வேறுபாடுகள் இல்லை என்று காட்டுகின்ற அரசியல் என்பது, சமவுரிமையை மக்களுக்கு மறுப்பதன் மூலம் பிழைக்கின்ற தேசியவாத முதலாளித்துவ வர்க்கங்களின் குறுகிய இனவாத அரசியலாகும்.
இந்த குறுகிய இனவாதமே சமவுரிமைக்காக போராட ஒன்றுமில்லை என்ற அடிப்படையில் நின்று, இரண்டும் ஒன்று என்று கூறவைக்கின்றது. யார் சமவுரிமையை மறுக்கின்றனரோ, அவர்களே இரண்டும் ஒன்யென்று கூறுகின்றனர். இதன் மூலம் நேர்ரெதிரான அரசியல் வேறுபாட்டை மறுக்கின்றவர்கள், சமவுரிமைக்கான அரசியல் போராட்டத்தையே மறுக்கின்றனர். இதன் மூலம் சமவுரிமையற்ற இன்றைய அரசியல் சூழலை, தங்கள் முதலாளித்துவ தேசியவாதத்துக்கு அமைவாக அரசியல் ரீதியாக தொடர்ந்து பாதுகாக்க முனைகின்றனர்.
இன்று நீண்ட இடைவெளியின் பின் ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய ஆரம்ப செயற்பாடுகளும், அதன் அரசியல் எதார்த்தங்கள் மீதான சுரண்டும் வர்க்கங்களின் அச்சங்களுமே, சமவுரிமைக்கு எதிரான அதன் இன்றைய அரசியல் வெளிபாடு. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நடைமுறை வடிவமான சமவுரிமை இயக்கத்தையே, தாக்கி அழிக்க முற்படுகின்றனர்.
மக்களின் நடைமுறை சார்ந்த எந்தத் தீர்வும், சமவுரிமைக்கான போராட்டத்துக்கு வெளியில் சாத்தியமில்லை. சமவுரிமை மறுக்கப்படுவதும், சமவுரிமைகான போராட்டத்தின் மூலமாக தீர்வு கண்பதைக் கடந்தும், எந்தத் தீர்வும் மக்களுக்கானதாக இருக்காது. இலங்கை மக்களே தீர்வு காண வேண்டிய விடையம் என்பதும், அது சமவுரிமை அடிப்படையிலேயே என்பதுமே வெளிப்படையான உண்மை. சமவுரிமையைக் கடந்த தீர்வை, மக்கள் விரோதிகள் மட்டும் தான் முன்வைத்து செயற்படமுடியும்.
பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்க ஆட்சியில் இனப்பிரச்சனையை தீர்க்க முன்வைக்கும் தன்னாட்சியிலான சுயநிர்ணயம் கூட, சமவுரிமை அடைப்படையில் தான் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களுக்கு இடையில் முன்வைக்கின்றது. இன்று சமவுரிமையைக் கோரி ஒன்றினைந்து போராடும் தேசங்களே, தன்னாட்சி அடிப்படையிலான தேசங்களுக்கான தீர்வையே பாட்டாளி வர்க்க ஆட்சியில் சமவுரிமை அடிப்படையில் முன்னெடுக்க முடியும்.
இப்படி இருக்க சமவுரிமைக்கான போராட்டம் அரசுக்கு சார்பானது என்றும், இனப்பிரச்சனையில் கொள்கை அளவில் வேறுபாடற்றது என்ற பிரச்சாரம், அடிப்படையில் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சமவுரிமையிலான சுயநிர்ணய அடிப்படையிலான தன்னாட்சியை உரிமையை மறுக்கின்றது. அதற்கான இன்றைய நடைமுறை சார்ந்த வர்க்க போராட்ட அரசியலை முன்னெடுப்பதை அரசியல் ரீதியாக மறுக்கின்றதாகும்.
இன முரண்பாட்டில் வர்க்க ரீதியான தலையீட்டை அரசியல் ரீதியாக மறுப்பது, இன்று முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது. அனைத்து இன மக்களும் ஒன்றினைந்து சமவுரிமைக்கான போராட்டத்தை மறுக்கிறவர்கள், இன்று இரண்டு தரப்பாக பிரிந்து நிற்கின்றனர்.
1.அரசும், பேரினவாதிகளும்
2.குறுந்தேசிய இனவாதிகள்
இவர்கள் இருவரும் சுரண்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவராக, சுரண்டப்படும் மக்கள் ஒன்றினைந்து சமவுரிமைக்காக போராடுவதை மறுக்கின்றவராக இருக்கின்றனர். இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்தரப்பாக இருந்து கொண்டு, மக்களின் சமவுரிமையை மறுக்கின்றவராக, மக்களை பிளந்து ஒருவருக்கொருவர் எதிரியாக்கின்றவராக இருக்கின்றனர். இவர்கள் தான் சமவுரிமை இனப்பிரச்சனைகான தீர்வுக்குரிய ஒன்று அல்ல என்று கூறி, அதை மறுக்கின்றவராக அதற்கு எதிராக செயற்படுபவராக இருக்கின்றனர். இதன் மூலம் மக்கள் சமவுரிமை அடிப்படையில் ஒன்றினைந்து போராடுகின்ற அரசியல் எதார்த்தத்தை மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர்.
பாட்டாளி வர்க்கம் தன் வர்க்க நலன் அடிப்படையில் செயல்பூர்வமான ஒன்றாக சமவுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், தனது ஆட்சியில் சமவுரிமை அடிப்படையில் தேசங்களின் தன்னாட்சி அடைப்படையிலும் தீர்வைக் காண முனைகின்றது. இது தான் பிரிவினைவாதமல்லாத மார்க்சிய சுயநிர்ணயத்தின் அரசியல் உள்ளடக்கமும் கூட.
சமவுரிமைக்கான போராட்டம் தான் பாட்டாளி வர்க்க ஆட்சியை அமைப்பதற்கான நெம்பு கோல் மட்டுமல்ல, சுயநிர்ணய அடிப்படையில் தேசங்களின் தன்னாட்சியையும் நிலைநாட்டுதற்கான திறவுகோள். இதற்கு வெளியில் சுயநிர்ணயம் என்பது, மூடிமறைத்த அரசியல் சந்தர்ப்பவாதமே. அது சமவுரிமையை மறுக்கின்ற அரசியலாக இன்று தன்னை வெளிப்படுகின்றது.